Wednesday, April 3, 2019

மகேந்திரனின் விஜயனும் இயொனெஸ்கோவின் காண்டாமிருகங்களும்





ஆசை

(இயக்குநர் மகேந்திரனின் மறைவையொட்டி 'இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கத்தில் 03-04-2019 அன்று வெளியான அஞ்சலிக் கட்டுரையின் சற்றே விரிவான வடிவம்) 

இந்தியாவையும் தமிழகத்தையும் பொறுத்தவரையில் எழுபதுகளின் இறுதிப் பகுதி எப்படி இருந்தது என்பதை தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்தால் கிட்டத்தட்ட தெரிந்துகொள்ளவே முடியாது. அவ்வளவு அரசியலற்றதன்மையைத்தான் நம் படங்கள் கொண்டிருந்தன. இத்தனைக்கும் இந்தியாவையே தலைகீழாக மாற்றிப்போட்ட நெருக்கடி நிலை முடிவுக்கு வந்து எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட ஆரம்பித்திருந்த நிலை. எல்லோரும் அஞ்சியது எங்கோ மையமாக ஒரு இடத்தில் இருந்துகொண்டு எல்லோர் மீதும் ஒடுக்குமுறையைச் செலுத்திக்கொண்டிருந்த ஒரு சர்வாதிகாரியைக் கண்டல்ல. தன்னிடமும் சக மனிதர்களிடமும் உறங்கிக்கொண்டும் வெளிப்பட்டுக்கொண்டுமிருந்த சர்வாதிகாரியைக் கண்டுதான். அந்தக் காலகட்டம் முடிவுக்கு வந்தபோது வெளியாகிறதுஉதிரிப்பூக்கள்திரைப்படம். மகேந்திரனின் படங்களும் பெரும்பாலும் அரசியலற்றவை என்றாலும் இப்போது திரும்பிப் பார்க்கும்போதுஉதிரிப்பூக்கள்படம் மிக முக்கியமான அரசியல் ஒன்றை உள்ளடங்கிப் பேசுவதாகவே தோன்றுகிறது.

தன் மனைவி அஸ்வினி உயிரோடு இருக்கும்போதே மனைவியின் தங்கையைத் திருமணம் செய்துகொள்ள நினைக்கும் பாத்திரம் விஜயனுடையது. அது நடக்காமல் போகிறது. அவருடைய மனைவி இரு குழந்தைகளை விட்டுவிட்டு இறந்துபோகிறார். விஜயனும் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். இதற்கிடையே விஜயனின் மச்சினிக்கும் பள்ளிக்கூட ஆசிரியரான சுந்தருக்கும் காதல் மலர்ந்து திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்துக்கு முதல் நாள் விஜயன் வீட்டுக்குச் செல்லும் மச்சினி மது மாலினி தன் அக்காவின் குழந்தைகள் இரண்டையும் தன்னிடம் கொடுக்குமாறு கேட்கிறார். மது மாலினியை நிர்வாணமாக்கி, அதையே தன் ஆசிர்வாதமாக வைத்துக்கொள்ளும்படி விஜயன் அனுப்பிவிடுகிறார். தான் அவளைப் பாலியல் பலாத்காரம் ஒன்றும் செய்துவிடவில்லை என்றும் சொல்லிக்கொள்கிறார். விஜயன் செய்த காரியம் ஊரில் உள்ளவர்களுக்குத் தெரிந்துவிட அவருடைய வீட்டை முற்றுகையிட்டு அவரைப் பிடிக்கின்றனர்.

விஜயனுக்குத் தண்டனை கொடுப்பதற்காக அந்த ஊரில் உள்ள ஆற்றை நோக்கி அவரை அழைத்துச் செல்கிறார்கள். தனக்கு நீச்சல் தெரியாது என்பதற்காகவே ஊரில் உள்ள மற்றவர்களை நீச்சல் கற்றுக்கொள்ள விடாமல் தடுத்த விஜயனை ஆற்றில் இறக்கிவிடுவதற்காகக் கொண்டுசெல்கிறார்கள். ஏதோ விளையாட்டு இது என்று அந்தக் குழந்தைகளும் அவர்களோடு நாமும் அந்த அமைதியான காட்சியைப் பின்தொடர்கிறோம். ஆற்றில் இறக்கிவிடப்படுவதற்கு முன்பு அந்த ஊராரைப் பார்த்து விஜயன் இப்படிச் சொல்வார்: “நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க. ஆனா, இன்னைக்கு உங்க எல்லாரையும் என்னைப் போல மாத்திட்டேன். நான் செஞ்ச தவறுகள்லேயே பெரிய தவறு அதுதான்.”

யூழேன் இயொனெஸ்கோ

இன்று எந்த சர்வாதிகாரியும் இதுபோன்ற ஒரு மனம் திருந்தலை முன்வைக்க மாட்டார் என்றாலும் மக்களாகிய நாம் என்னவாகிக்கொண்டிருக்கிறோம் என்பதை மகேந்திரன் அந்தக் காட்சியின் மூலம் மிக அழகாகச் சொல்லியிருப்பார். கூடவே, யூழேன் இயொனெஸ்கோவின்காண்டாமிருகம்என்ற நாடகத்துடன் இந்த இறுதிக் காட்சியை ஒப்பிடத் தோன்றுகிறது எனக்கு. (தமிழில்க்ரியாவெளியீடாக வந்திருக்கிறது).


1959-ல் மேடையேற்றப்பட்ட அந்த பிரெஞ்சு நாடகம் நாஜிக்களின் காலகட்டம் ஏற்படுத்திய தாக்கத்தை மறைமுகமாக உணர்த்துவது. ஒரு ஊரில் காண்டாமிருகங்களின் தாக்குதல் ஆரம்பிக்கிறது. போகப் போக ஒவ்வொருவரும் காண்டாமிருகமாக ஆக ஆரம்பிக்கிறார்கள். யாரெல்லாம் உறுதியான காண்டாமிருகம் எதிர்ப்பாளர்கள் என்று நினைத்தோமோ அவர்களெல்லாம் மாற்றமடைகிறார்கள். கதாநாயகன் பெராஞ்சர் மட்டுமே அத்தனை பேருக்கும் நடுவில் மனிதனாக எஞ்சுகிறான்.

நாஜிக்களின் காலகட்டத்தில் எத்தனையெத்தனை மகத்தான எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவுஜீவிகள், தத்துவவியலாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாஜிக்களின் ஆதரவாளர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கு இன்று அதிர்ச்சியாக இருக்கிறது. மனித வாழ்க்கை குறித்தும் அன்பு, அறம் போன்றவை குறித்தும் அவர்களின் படைப்புகள் நமக்கு அவ்வளவு சொல்லியிருக்கின்றன. ஆனால், அவர்கள் இறுதியில் ஹிட்லரிடம் போய் நின்றார்கள். ஒருவேளை, ‘உதிரிப்பூக்கள்விஜயன் போன்று ஹிட்லருக்கு இறுதி நேரத்தில் ஞானம் வாய்த்திருந்தால் ஜெர்மானிய மக்களையும் நாஜிக்களையும் தனக்கு ஆதரவளித்த படைப்பாளிகளையும் பார்த்து இப்படிச் சொல்லலாம்: “நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க. ஆனா, இன்னைக்கு உங்க எல்லாரையும் என்னைப் போல மாத்திட்டேன். நான் செஞ்ச தவறுகள்லேயே பெரிய தவறு அதுதான்.”

மகேந்திரன் இயொனெஸ்கோவைப் படித்திருப்பாரோ, இல்லையோ; ஆனால், இயொனொஸ்கோ பிடித்த இழையை அவரளவுக்கு அரசியலுடன் சொல்லாமலேயே எளிய வாழ்க்கையின் சித்திரங்கள் மூலம் அழகாகஉதிரிப்பூக்கள்விஜயன் மூலம் சொல்லியிருக்கிறார்.

இயொனொஸ்கோவின் பெராஞ்சர் மாதிரியான இரண்டு பாத்திரங்கள்உதிரிப்பூக்கள்இறுதிக் காட்சியில் வெளிப்பட்டிருக்கும். அது மதுமாலினியைத் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ஆசிரியர் பாத்திரமும் அவருடைய நண்பர் பாத்திரமும்தான். யாரேனும் விஜயன் மீது மிகுந்த கோபம் கொண்டிருக்க வேண்டுமென்றால் அது அந்த ஆசிரியர்தான். ஆனால், ஆற்றை நோக்கி இறங்கிக்கொண்டிருக்கும் விஜயனைத் தடுப்பதற்கு அந்த ஆசிரியரும் அவருடைய நண்பரும்தான் முயல்வார்கள். ஆனால், அவர்களிருவரையும் ஊரார் தடுத்து நிறுத்திவிடுவார்கள். கும்பல் வன்முறை, கும்பல் கொலைகளுக்கு நடுவே ஒற்றை நபர்களாய்ச் சிலர் துடித்துக்கொண்டிருப்பதை நம் காலத்தில் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். சமீபத்தில் ஒரு போலீஸ்காரரைக்கூட அதற்கு நாம் பலிகொடுத்துமிருக்கிறோம். அந்தப் பாத்திரங்கள்தான் நாம் என்றும் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று நமக்குச் சொல்லும் பாத்திரங்கள். குற்றவாளி, அவர் எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் அவருக்கு நாம் தீர்ப்பெழுதிவிட முடியாது என்பதைஉங்களில் யார் எந்தப் பாவமும் செய்யாதவர்களோ அவர்களே இந்தப் பெண் மீது கல்லெறியுங்கள்என்று இயேசு சொல்லி இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. கிறித்தவரான மகேந்திரனுக்கு விஜயன் வசனம் பேசும் இறுதிக் காட்சியின் உந்துதல் இயேசுவிடமிருந்துகூட கிடைத்திருக்கும் என்று நம்பலாம். ஆனால், ஒரு முரண்நகை என்னவென்றால் அதுபோன்றதொரு வசனம் இந்தப் படத்தில் ஒரு சாத்தானிடமிருந்து வெளிப்படுகிறது. நம்மிடம்தான் இயேசுவும் இருக்கிறார், சாத்தானும் இருக்கிறார் என்ற முடிவுக்குத்தான் மகேந்திரனும் அந்த இறுதிக் காட்சியில் வருகிறார். அப்புறம், விஜயன் இறங்கிய பிறகான ஆறு, அதன் போக்குக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. அவருடைய பிள்ளைகள் இருவரும் அப்பா குளித்துவிட்டு வருவார் என்று நினைத்துக்கொண்டு விளையாட்டு நினைப்போடு போய்க்கொண்டிருக்கிறார்கள். பின்னாலேயே ராஜாவும் நம்மோடு கைகோக்கிறார்.

அவரது இன்னொரு சிறந்த படைப்பும், ரஜினி தான் நடித்ததிலேயே தனக்கு மிகவும் பிடித்த படமாககக் கருதுவதுமானமுள்ளும் மலரும்கூட வேறொரு அதிகாரத்தைப் பற்றிப் பேசுவதுதான். அன்பின் அதிகாரம் அது. அன்புக்குக் கூட அதிகாரம் வருமென்றால் அது நம் வாழ்க்கைக்கு அவ்வளவு பெரிய தடைக்கல்லாகத்தான் மாறிவிடும் என்பதை உணர்த்தும் படம் அது.


இறுதிக் காட்சியில், தன் அண்ணன் ரஜினியின் விருப்பத்துக்கு மாறாகத் தன் காதலன் சரத்பாபுவுடன் சென்றுகொண்டிருக்கும் தங்கை ஷோபா, கையறு நிலையுடன் நின்றுகொண்டிருக்கும் அண்ணனை நோக்கி ஓடிவந்துவிடுவார். காதலைக் கைவிட்ட முடிவல்ல அது. தன் மேல் அளப்பரிய அன்பை வைத்திருக்கும் இன்னொரு ஜீவனைத் தன் அன்பினால் நெகிழ்த்துவிடத் துடிக்கும் துடிப்பின் விளைவு அது. அந்த நெகிழ்த்துதல்தான் ஷோபாவை அவருடைய காதலனுடன் சேர்த்துவைக்கும் முடிவை ரஜினி எடுக்கக் காரணமாகிறது.

அன்பையும் அறத்தையும் பற்றிப் பேசிக்கொண்டே அவற்றையும் அதிகாரமாக நாம் ஆக்கிக்கொண்டிருக்கும் காலம் இது. அதிகாரத்தின் தரப்பையல்ல, அன்பின் தரப்பில் உருவாகும் அதிகாரத்தைப் பற்றி எளிமையும் இனிமையும் கொண்ட காட்சிகளுடனான படங்களை உருவாக்கியவர் மகேந்திரன்.

நாம் காண்டாமிருகங்களாகவும் விஜயன்களாகவும் ஆகிவிடாமல் இருக்க ஒவ்வொரு காலத்துக்கும் இயொனெஸ்கோ மாதிரியான மகேந்திரன் மாதிரியான படைப்பாளிகள் தேவை. அவர்கள் என்றுமே உதிராத பூக்களாக நம்மிடையே இருப்பார்கள்.
-நன்றி: ‘இந்து தமிழ்’ நாளிதழ்

1 comment:

  1. அவர்கள் உதிராத பூக்களாக நம்மிடையே இருப்பார்கள் என்பது உண்மையே. இக்காலத்தேவை இவர்களைப் போன்ற படைப்பாளிகளே.

    ReplyDelete