ஆசை
(’தி இந்து’ சித்திரை மலர்-2017-ல் வெளியான நேர்காணலின் சுருக்கமான வடிவம். இந்தச் சுருக்கமான வடிவம் ‘தி இந்து’ நடுப்பக்கத்தில் 14-052017 அன்று வெளியானது. முழு நேர்காணலை ‘தி இந்து’ சித்திரை மலர் 2017-ல் படிக்கலாம்)
மைக்கேல் நிக்ஸன் பாதி தென்னாப்பிரிக்கர்; பாதி சென்னைக்காரர். தென்னாப்பிரிக்காவில் காந்தி தொடங்கிய டால்ஸ்டாய் பண்ணையில் இருந்த இந்தியர்களிடம் புல்லாங்குழல் கற்றுக்கொண்டார். 1977-ல் சென்னைக்கு வந்து இங்கேயே சில ஆண்டுகள் தங்கி கர்னாடக இசை கற்றார். வீணை தனம்மாளின் சிஷ்யை சாவித்ரி ராஜனிடம் வீணை கற்றுக்கொண்டார். ‘சம்பிரதாயா’ அமைப்பை நிறுவியவர்களில் ஒருவர் நிக்ஸன். கேப்டவுன் பலகலைக்கழகத்தில் இந்திய இசை மரபுகள், உலக இசைகள் மரபுகள் போன்றவற்றைப் பயிற்றுவிக்கும் மைக்கேல் நிக்ஸன் ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காகச் சமீபத்தில் இந்தியா வந்திருந்தபோது அவருடன் உரையாடியதிலிருந்து…
‘சம்பிரதாயா’ அமைப்பை எப்போது தொடங்கினீர்கள்?
‘சம்பிரதாயா’அமைப்பைத் தொடங்க வேண்டுமென்று யோசனை கூறியது என் ஜெர்மானிய நண்பர் லுத்விக் பிஷ்தான். செய்தித்தாள்களில் அஞ்சலி பகுதியில் ‘மாபெரும் இசைக் கலைஞர் இறந்துபோனார், அவருடன் அவரது இசைச் சொத்தும் சம்பிரதாயமும் மறைந்துபோனது’ என்ற குறிப்புகளை அடிக்கடி நாங்கள் பார்க்க நேரிட்டது. அவ்வளவு பெரிய கலைஞர்கள் என்று எழுதியிருக்கிறார்கள்; ஆனால், அந்தக் கலைஞர்களின் இசைப் பதிவுகளின் தொகுப்போ அவர்களது வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளோ அவர்களைப் பற்றிய ஆவணமாக்கலோ ஏதுமே கிடைக்காது. அவர்கள் வாழ்நாளில் இறுதி முப்பது ஆண்டுகளில் அவர்களின் கச்சேரிகளைப் பற்றிய எந்தத் தகவலும் கிடையாது. அப்பேர்ப்பட்ட இசைக் கலைஞர்களின் இசை, அவர்களின் இறுதி ஆண்டுகளில் எப்படி இருந்திருக்கும்? இவை பற்றிய எந்தத் தகவலும் இங்கே கிடையாது. இப்படிப்பட்ட நிலையில் சிறிய மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மாக்ஸ்முல்லர் பவனின் உறுதுணையுடன் என் நண்பர் லுத்விக் பிஷ்ஷும் நானும் உருவாக்கிய அமைப்புதான் ‘சம்பிரதாயா’. அந்த அமைப்பின் சார்பில் இசைக் கலைஞர்களை மாக்ஸ்முல்லர் பவனுக்கு வரச் செய்து, அவர்களைப் பேட்டி எடுத்து, குறிப்பேடுகள், நாட்குறிப்புகள் முதலான அவர்களின் ஆவணங்களை அவர்கள் அனுமதியோடு ஆவணக்காப்பு செய்தோம். அவர்களது கச்சேரியையும் பதிவுசெய்து எங்கள் ஆவணக் காப்பகத்தில் வைத்துக்கொண்டோம். இப்போது ‘சம்பிரதாயா’ கலாக்ஷேத்ராவின் வசம் இருக்கிறது.
உலக இசை மரபை உங்கள் கல்லூரியில் போதிக்கிறீர்கள் அல்லவா?
நாங்கள் எங்கள் பல்கலைக்கழகத்தில் ‘உலக இசை’ என்ற பெயரில் இசைக் கல்வியைக் கற்றுக்கொடுப்பதில்லை. ‘இசையின் உலகங்கள்’ என்ற பெயரில்தான் எங்கள் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறோம். இசை பயிலும் மாணவர்களுக்கு ஸ்பானிய இசை, பிரெஞ்சு இசை ஆகியவை பற்றித்தான் அதிகம் தெரியும். எங்கள் மாணவர்களுக்கு லத்தீன் அமெரிக்க இசையைச் சொல்லித்தருகிறோம். சிலி, பிரேசில், அர்ஜெண்டினா போன்ற நாடுகளின் பாரம்பரிய நாட்டார் இசை, ஃப்ளாமெங்கோ நடனம் போன்றவற்றையும் சொல்லித்தருகிறோம். யாரும் அதுவரை இந்த வடிவங்களைப் பொருட்படுத்தியதில்லை. இவற்றைச் சொல்லித்தரும்போது, அவை தொடர்பான கலாச்சாரங்கள், வரலாறு குறித்து விளக்குகிறோம்.
இது மாதிரியான விஷயங்களை நீங்கள் மேற்கொள்ளும்போது, உங்கள் பல்கலைக்கழகம் எப்படி எதிர்கொள்கிறது?
பாடத்திட்டத்தைப் பல்கலைக்கழகம் தீர்மானிப்பதில்லை; ஆசிரியர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். மாணவர்களை வெவ்வேறு விதமான இசை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச்செல்வோம். அதுவரை அறிமுகமே இல்லாத இசையை நேரடியாக மாணவர்களைக் கேட்கச்செய்வோம். வெவ்வேறு கலாச்சாரங்களின் இசை அனுபவங்களை அவர்களுக்குக் கொடுப்போம். அவர்களின் கருத்துகளில் நாங்கள் குறுக்கீடு செய்வதில்லை. சுயமாகக் கருத்துருவாக்கும் திறனை நாங்கள் முக்கியமாக மதிக்கிறோம்.
உங்களின் தற்போதைய இந்திய வருகையின் காரணம் என்ன?
ஒரு மாபெரும் திட்டத்தின் பகுதியே எனது இப்போதைய வருகை. ஆப்பிரிக்காவுக்கும் இந்தியா, சீனா ஆகிய ஆசிய நாடுகளுக்கும் இடையிலான இசைரீதியிலான பரிவர்த்தனைகளைப் பற்றிய ஆய்வுதான் இந்தத் திட்டம். இந்த ஆய்வின் காலகட்டம் காலனியாதிக்கக் காலத்துக்கு முந்தையது என்பதுதான் இதில் மிகவும் முக்கியமான விஷயம்.
காலனியாதிக்கக் காலத்துக்கு முந்தைய ஆப்பிரிக்கா என்பது இருண்ட கண்டம் என்றுதான் பரவலாகக் கருதப்பட்டுவருகிறது. அந்தக் காலகட்டத்து ஆப்பிரிக்கா, வரலாற்றில் இடம்பெறுவதே இல்லை. அப்படி இருண்ட காலகட்டம் என்று கருதப்படும், குறிப்பாக, கி.பி. 7-ம் நூற்றாண்டுக்கும் கி.பி. 15-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதிதான் ஆய்வுப் பரப்பு. இந்தக் காலப் பகுதியைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள், இலக்கியப் பதிவுகள் கிட்டத்தட்ட கிடைக்கவே இல்லை என்பது இந்த ஆய்வை மிகவும் கடினமானதாகவும் சுவாரசியமாகவும் ஆக்குகிறது. இந்தக் காலப் பகுதியில் ஆப்பிரிக்காவுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இடையில் இசைப் பரிமாற்றம் நிகழவே செய்திருக்கிறது. இசைக் கலைஞர்கள் இரண்டு தரப்பிலிருந்தும் பரஸ்பரம் இந்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். கிடைக்கும் மிகக் குறைவான ஆவணங்கள், பதிவுகளிலிருந்து எங்கள் ஆய்வைக் கட்டமைத்துக்கொண்டிருக்கிறோம்.
இந்த ஆய்வைச் செய்வதற்கு இசை குறித்த தேடல் மட்டுமே போதாது. அந்தந்தப் பிரதேசங்களில் இசை, சமூகவியல், மானுடவியல், இலக்கியம், வரலாறு, மதச் சடங்குகள் என்று கிட்டத்தட்ட எல்லாத் துறைகளையும் துருவிப் பார்க்க வேண்டியிருக்கிறது. பிரம்மாண்டமான ஆய்வு! இதற்கு எங்களுக்குத் தொல்லியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள், இசை வரலாற்றாய்வாளர்கள், பன்மொழி வல்லுநர்கள் போன்றோரின் உதவி தேவைப்படுகிறது.
இதற்கான தரவுகள் ஏதேனும் கிடைக்கின்றனவா?
ஒன்றுமே இல்லை என்பதுபோல் தோன்றினாலும் உண்மையில் நிறைய ஆவணங்கள் இருக்கின்றன. ஆனால், அவை வெவ்வேறு மொழிகள், நாடுகளைச் சேர்ந்த நூலகங்களின் மூலைமுடுக்குகளில் ஒளிந்து கிடக்கின்றன. 7-ம் நூற்றாண்டில் கேரளத்துக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து நிறையவே நிகழ்ந்திருக்கிறது. கடல்சார் வரலாற்றாய்வாளர்களிடமிருந்து இப்படிப்பட்ட தகவல்கள் நிறைய கிடைக்கின்றன. இது சம்பந்தமாகத் தமிழில் துருவிப் பார்த்தால் இங்கே முறையான இசை வரலாறே இல்லை என்பது தெரியவருகிறது.
அரபு மொழியில் இசை குறித்த நிறைய பதிவுகள் இருக்கின்றன. அரபுப் புத்தகங்களிலிருந்து சிறிது வெளிச்சம் பிறந்திருக்கிறது. பாக்தாதில் அந்தக் காலத்தில் ஏராளமான அடிமைப் பெண்கள் சிறந்த நடனக் கலைஞர்களாகவும் இசைக் கலைஞர்களாகவும், கவிஞர்கள், ஓவியர்கள் என்று பல்வேறு கலைகளில் சிறந்தவர்களாகவும் மதிக்கப்பட்டிருக்கிறார்கள். இஸ்லாமியப் பெண்களை அடிமைகளாக வைத்திருக்க முடியாது. ஆகவே, இந்தியா, ஆப்பிரிக்கா, ரஷ்யா, சீனா என்றெல்லாம் உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் அடிமைப் பெண்களை வரவழைத்திருக்கிறார்கள்.
வேறு என்னென்ன கண்டுபிடித்திருக்கிறீர்கள்?
செய்ய வேண்டிய காரியங்கள் கண் முன்னே மலைபோல் குவிந்து கிடக்கின்றன. எனது தரப்பில், இசை-நடனம் தொடர்பான தொல்சிற்பங்கள், தொல்பொருட்களை ஆராய்கிறேன். தொல்சிற்பங்களில், ஓவியங்கள் கிடைத்தால் அவற்றில் கிடைக்கும் விவரங்களைக் கொண்டு ஒரு வரைபடத்தை உருவாக்குகிறோம்.
சீனாவின் பிரபலமான யுன்கான் குகைகளில் சீனம், தமிழ், சம்ஸ்கிருதம், பாரசீகம், அரபி, சிங்களம், ஒரியா போன்ற பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கான பிரதிகள் அந்தக் குகைகளின் சுவர்களில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றை மொழிபெயர்த்தால் கலாச்சார, வரலாற்று ஆய்வுக்குப் பெரும் பங்களிப்பாக இருக்கும்.
- நன்றி: ‘தி இந்து’ தமிழ் நாளிதழ்
No comments:
Post a Comment