ஆசை
(பிரமிளின் பிறந்த நாளை முன்னிட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘தி இந்து’ தமிழில் முழுப்பக்க நினைவுகூரல் செய்திருந்தோம். அதில் நான் எழுதிய கட்டுரை இது)
பொது வாசகருக்கு பிரமிளை அறிமுகப்படுத்துவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. பொது வாசகருடைய மனோபாவம், எளிமை என்ற ஒற்றை அளவீட்டை மையப்படுத்தியே இருப்பதால்தான் இந்தப் பிரச்சினை.
தமிழின் சாதனைகளாக நாம் முன்வைக்கும் சங்கப் பாடல்களிலிருந்து ஆரம்பித்து, திருமந்திரம், கம்பராமாயணம், திவ்யப்பிரபந்தம், சித்தர் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், பாரதியார் கவிதைகள் வரை எல்லாவற்றிலும் எளிமையான கவிதைகளைப் போலவே எளிமை இல்லாத, சிடுக்குகள் அதிகம்கொண்ட கவிதைகளும் ஏராளம் என்பதை நாம் உணர வேண்டும்.
வாசகரின் தளத்தைத் தாண்டி, ஒரு கவிஞர் எங்கெங்கோ பாய்ந்திருப்பார் அல்லவா? அந்தப் பாய்ச்சலைப் பின்தொடரும் வாசகருக்கு மட்டுமே அந்தக் கவிஞருக்கு நிகரான அனுபவங்கள் சாத்தியமாகுமே ஒழிய, படைப்பைத் தனது அறிவின் அளவுகோலைக் கொண்டு அளந்துபார்க்கும் வாசகருக்கு அது சாத்தியம் ஆகாது. பிரமிளைப் போன்ற ஒரு கவிஞரை அணுகும்போது ஒரு வாசகர் மனதில் கொள்ள வேண்டியது அதுதான்.
ஆங்கிலக் கவிதைகளையும் விமர்சனக் கவிதைகளையும் தவிர்த்து, 131 கவிதைகளை மட்டுமே பிரமிள் எழுதியிருக்கிறார். ஆனாலும், பாரதிக்குப் பிறகு நவீனத் தமிழ்க் கவிதையில் மிக முக்கியமான கவிஞராகக் கருதப்படுகிறார். சங்கக் கவிதைகள், கம்பராமாயணம் போன்றவற்றைப் படித்த ஒருவர் பாரதியை அந்த அளவுக்கு வைக்க மாட்டார் எனினும் பாய்வதற்குத் தயாரான புலி என்ற அளவிலாவது பாரதியைக் கருதுவார்.
பாரதியின் காலத்துக்குப் பிந்தைய தமிழ்க் கவிதை, பாய்வதைப் பற்றிய சிந்தனைகளை விடுத்து சிறு நடையில் திருப்திப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த வகையில் பார்த்தால், பிரமிள் ஒருவர்தான் தனித்து நிற்கிறார். பாய்வதைப் பற்றிய சிந்தனைகளைக் கொண்டிருந்தவர் அவர் ஒருவர்தான்.
‘காலம் விரித்த திரையா?/ வாழ்வு ஓடும் படமா?’ என்பது போன்ற மேலோட்டமான தத்துவக் கவிதைகளை ஆரம்பத்தில் பிரமிள் அதிகம் எழுதினார். சிறிது காலம் கழித்து அவர் எழுதிய E=MC2 என்ற கவிதை அவருடைய வேகம் கூடுவதை உணர்த்தியது. ‘ஒளியின் கதியை/ ஒளியின் கதியால்/ பெருக்கிய வேகம்/ ஜடத்தைப் புணர்ந்தால்/ ஜடமே சக்தி!’ என்ற வரிகள் மூலம் ஐன்ஸ்டீனின் E=MC2 கோட்பாட்டுக்குக் கவிதை உருக் கொடுத்தார் பிரமிள். தமிழில் அறிவியல் கவிதை என்ற வகைமைக்கு அநேகமாக இந்தக் கவிதையை மட்டுமே சிறந்த எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
அதற்குப் பிறகு நவீனத் தமிழின் முக்கியமான கவிதைகள் சிலவற்றை எழுதினார். எண்ணிக்கை என்ற அளவீட்டில் வைத்துப் பார்க்காமல், அந்தக் கவிதைகள் பறந்திருக்கும் உயரத்தை மட்டுமே வைத்துப் பார்க்க வேண்டும். 24 சிறுகதைகளை மட்டுமே எழுதியிருக்கும் மௌனியை நாம் மகத்தான சாதனையாளராகக் கருதுவதைப் போல பிரமிளையும் நாம் கருத வேண்டும். அசாதாரணமான நடை, தொனி ஆகியவற்றின் காரணமாக பிரமிளை ‘கவிதையுலகின் மௌனி’என்றுகூடச் சொல்லலாம். பிரதியெடுக்க முடியாத நடைக்குச் சொந்தக்காரர்கள் தமிழில் இந்த இருவர் மட்டும்தான்.
சொல்வளம்
ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு கருவி இருப்பதுபோல படைப்புக்கான கருவி மொழிதான். ஆனால், அந்தக் கருவி எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதைப் பெரும்பாலான கவிஞர்களிடம் எளிதில் நாம் கண்டுணர முடியும். சாதாரணக் கவிஞர்கள், ஏற்கெனவே இருக்கும் சொற்களைப் பயன்படுத்திப் பயன்படுத்தித் தேய்த்துவிடுவார்கள் என்றால், மகத்தான கவிஞர்கள் புதிய சொற்களையும் சொற்சேர்க்கைகளையும் உருவாக்குவார்கள். ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் உருவாக்கிய சொற்களுக்காக அகராதிகளெல்லாம் உண்டு.
20-ம் நூற்றாண்டைப் பொறுத்தவரை, தமிழில் புதிய, அழகிய சொற்சேர்க்கைகளை உருவாக்கிய கவிஞர்களென்று பாரதி, கண்ணதாசன், பிரமிள் ஆகிய மூவரை மட்டுமே குறிப்பிட முடியும். ‘காலநடை, நிலவூறித் ததும்பும் விழி, நெஞ்சிற் கனல் மணக்கும் பூக்கள், அக்கினிக் குஞ்சு’ என்று பாரதியின் பல்வேறு சொற்சேர்க்கைகள் அழகும் வீச்சும் கூடியவை.
பிரமிளின் சொற்சேர்க்கைகளும், சொற்களின் பயன்பாடுகளும் அப்படித்தான். ‘மனோவேளை, உதரக்கோது, காற்றின் குருட்டு விரல்கள், காலாதீதம், விடிகாலையின் வெற்றுமணல், தலைகீழ்க் கருஞ்சுடர், கைப்பிடியளவு கடல், காற்றின் தீராத பக்கங்கள், கணத்தின் மொக்கு, அணுத் தான்யத்தின் பகிரங்கம், மின்நதி, சர்ப்பச் சுருணை, தானற்ற வெண்மை, துயிலற்ற மௌனம், இமை கொட்டாத இக்கணம்’ என்று அவரது சிறிய படைப்புலகத்துக்குள்ளும் ஏராளமான சொற்சேர்க்கைகள் சிதறிக்கிடக்கின்றன.
இந்தச் சொற்சேர்க்கைகள் வலிந்து உருவாக்கப்படுபவையல்ல. கவித்துவத்தின் தெறிப்புதான் இவை. உரைநடையில் ஒரு சில வரிகள் நீளும் விஷயங்களை, உணர்வுகளை இந்தச் சொற்சேர்க்கைகள் சுருக்கமாகவும் ஆழமாகவும் உணர்த்திவிடுகின்றன. மேலும், சப்தநயத்தால் இந்தச் சொற்சேர்க்கைகள் கவிதைக்கு அழகு சேர்க்கின்றன.
ரத்தினங்கள்
பிரமிளின் முக்கியமான கவிதைகள் பலவும் விளக்க முடியாதவை. உணர்ச்சியின் தீவிரத்தில் அடுக்கடுக்கான படிமங்களையும் சொற்பிரயோகங்களையும் கொண்டவை. எனவே, தீவிரம் கூடியவை. ஆரம்ப நிலை வாசகருக்கு அந்தக் கவிதைகள் பெரும் சிரமத்தைக் கொடுக்கக் கூடியவை.
சற்று முயன்றால் அவர்களுக்கு அற்புதங்களைப் பரிசளிக்கக் கூடியவை அந்தக் கவிதைகள். எளிய வாசகர்களையும் ஈர்க்கும் விதத்திலான கவிதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். அவற்றிலிருந்து எடுத்துக்காட்டாகச் சில வரிகள்: ‘நக்ஷத்ரங்களைவிட/ நிறையவே பேசுவது/ அவற்றின் இடையுள்ள/ இருள்’ (ஊமை), ‘சொற்கள் நிலவு வட்டம்/ ஊடே/ சூரியனாய் நிலைத்(து) எரியும்/ சோதி ஒன்று வருகிறது’(அறைகூவல்), ‘விரல்கள் வில் நீத்த அம்பாய் நடுங்க/ பரிதியின் விரித்த கையிலிருந்து/ ஒரு மழைத்துளி பிறக்கிறாள்./ முகத்தில் வைரத்தின் தீவிரம். அவள் மூளையில் ஒரு வானவில். (அற்புதம்), ‘திசையெங்கும்/ ஒரே ஒரு மலர்/ பூக்கும் பேரோலி.’ (கோதம-இந்ரம்).
பிரமிள் தன் கவிதைகளைப் பற்றிச் சொல்லும்போது ‘விலை மதிக்க முடியாத ரத்தினங்கள்’என்று குறிப்பிட்டார். ஆனால், இந்த ரத்தினங்கள் லௌகீக மதிப்பு இல்லாதவை என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். கவிஞர் தேவதேவனின் கூற்றுக்கொப்ப கவிதையால் லௌகீகத்தை மதிப்பிட முடியும். ஆனால், லௌகீகத்தால் கவிதையை ஒருபோதும் மதிப்பிட முடியாது. இதற்கு பிரமிளின் ரத்தினங்கள்தான் எடுத்துக்காட்டு!
- நன்றி: ‘தி இந்து’
பிரமிள் கவித்துவம் குறித்த கட்டுரை, பிரமிக்க வைக்கிறது. மோனை வார்தைக்காகச் சொல்லவில்லை.
ReplyDeleteமரபுக் கவிதையோ, புதுக்கவிதையோ, நவீன கவிதையோ, நனிநவீன கவிதையோ எதுவாக இருந்தாலும் கவிதைதான். யாருக்கு எது விருப்பமோ அதை அவர்கள் ஆராதிக்கலாம். ஆனாலும் தேய்பாதையிலேயே கவிதை சுற்றிவரக் கூடாது என்பதைக் கவிஞர்கள் உணர வேண்டும். பிரமிள் பெயர் தெரியாத பெருங்கவிஞர் கூட்டம் இங்கு உள்ளது. அப்படியானால் அவருக்குச் சாதாரண வாசகர்கள் யார் இருப்பார்கள்?
கவிதை குறித்துப் பல கட்டுரைகளில் ஆசை அவர்கள் கவியவிழும் நுட்பங்களைச் சொல்லிவருகிறார். நவீன கவிநுட்பங்களை அறிய விரும்புகிறேன். அதை ஆசை அவர்களிடம் கற்றுக்கொள்ள முயல்கிறேன்.
புதிய சொற்சேர்க்கை செய்தவர்கள் என்ற பட்டியலில் கண்ணதாசனையும் குறிப்பிட்டுள்ளீர்கள். பிறருக்கு எடுத்துக்காட்டுகள் தந்த நீங்கள், கண்ணதாசனுக்கு எடுத்துக்காட்டுகள் காட்டவில்லையே! அவரின் புதுச்சொற்சேர்க்கை எதுவும் என் நினைவுத்துழாவில் சிக்கவில்லை
எளிமையான கண்ணதாசன் பாடல்கள்கூட, நேயர்களை எல்லை தாண்டி எங்கெங்கோ அழைத்துச் செல்லக் கூடியவைதாம். சிடுக்கு நிறைந்த கவிதைகளில் புதிர் அவிழ்க்கவும், புதுக்கண்டுபிடிப்புகள் நிகழ்த்தவும் ஆராய்ச்சிக் குழுக்கள் அமைக்க வேண்டும்போல் உள்ளது. அவர்களும் கண்கட்டிக் கொண்டு ஒருவர் ஒருவரை இடித்துக்கொண்டு கட்டிப் புரள்வார்களோ என்னவோ? சிடுக்கு நிறைந்த கவிதைகளுக்கு வாசகர்களாய் அத்திப் பூக்களாய்ச் சிலர்தாம் இருக்கக் கூடும் தங்களைப் போல! எனினும் எழுதிய கவிஞனின் எண்ணத்தைத் தாண்டியும் கவிதையை விரித்துக் கொள்வது நவீன கவிதைகளில் அதிக சாத்தியம். கவிதை ரசிப்புக்கு அதர்க்கம் கூடாது என்ற உங்கள் கருத்தை நான் ஏற்கனவே ஏற்றுப் பாராட்டி இருக்கிறேன்.
பழகிய சூழலோ... பெருகிய வயதோ... எதுவோ எனக்கு நவீன கவிதை பிடிபடாமல் போயிருக்கலாம். ஆசையைப் படித்துப் படித்து நானும் நவீன கவிஞன் ஆவதே எனக்கு ஆசை.
அறியாமையால் நான் ஏதும் தவறாகச் சொல்லி இருக்கலாம். வாசிப்புப் பரப்பும் யோசிப்புச் சிறப்பும் எனக்கு மிகக்குறைவே.
அன்புடன்
கோ. மன்றவாணன்

மனம் நெகிழ்கின்றது
ReplyDeleteமனம் நெகிழ்கின்றது
ReplyDelete