Tuesday, April 12, 2016

பெருவிண்மீன் வெடிப்பின் துகள்கள் நாம்!


ஆசை

('தி இந்து’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் 12-04-2016 அன்று வெளியான கட்டுரை)

சூப்பர்நோவா!
பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான வாணவேடிக்கை! ஆனாலும், வெறுங்கண்களுக்கும் தொலைநோக்கிகளுக்கும் அந்தப் பிரம்மாண்டம் எளிதில் அகப்படாது. சூப்பர்நோவாவைப் பற்றிய இருவேறு தகவல்கள் அறிவியலாளர்கள் மத்தியில் தற்போது உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அவற்றைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் சூப்பர்நோவாவைப் பற்றிப் பார்ப்போம்.
நமது சூரியனை விடப் பல மடங்கு பெரியதாக இருக்கும் விண்மீன் ஒன்று தனது ஆயுளின் முடிவில் வெடித்துச் சிதறுவதற்குத்தான் சூப்பர்நோவா (Supernova) என்று பெயர். தமிழில் ‘பெருவிண்மீன் வெடிப்பு’ என்று பெயர் வைக்கலாம். பெருவிண்மீன் வெடிப்பின்போது ஒரு விண்மீன் தனக்குள்ளே குலைவுற்றுப் பின் பிரம்மாண்டமாக வெடித்துச் சிதறுகிறது. அப்போது வெளிப்படும் ஆற்றல் பத்தாயிரம் கோடி சூரியன்களின் ஆற்றலுக்கு இணையானது. ஆற்றல் மட்டுமல்ல அப்போது வெளிப்படும் ஒளியும் அந்த விண்மீன் இருக்கும் ஒட்டுமொத்த விண்மீன் மண்டலத்தின் (galaxy) ஒளியைவிடப் பிரகாசமாக இருக்கும்.

இவ்வளவு ஆற்றலுடன் வெடிக்கும் பெருவிண்மீன் வெடிப்பால் நமது பூமிக்கும் சூரிய மண்டலத்துக்கும் ஏதாவது ஆபத்து நிகழுமா என்ற கேள்வி நமக்கு எழுவது இயல்பானதே. சூரியக் குடும்பத்துக்குக் கிட்டத்தட்ட 30 ஒளியாண்டுகள் தொலைவுக்குள் பெருவிண்மீன் வெடிப்பு நிகழ்ந்தால் நாம் ‘சூரியக் குடும்பத்தோடு கைலாசம்’தான். நல்லவேளை நமக்கு அவ்வளவு ‘அருகில்’ பெருவிண்மீன் வெடிப்பு நிகழ்வதற்கு வாய்ப்புள்ள விண்மீன்கள் ஏதுமில்லை.
வெடிப்பின் எச்சங்கள்
பெருவிண்மீன் வெடிப்பின் எச்சங்களை சமீபத்தில் கடல் அடியில் உள்ள படிவங்களிலிருந்து கண்டறிந்திருக்கிறார்கள். அந்தப் படிவங்களிலிருந்து அரிய வகை ஐசோடோப் ஒன்றைக் கண்டறிந்திருக்கிறார்கள். இரும்பு-60 என்ற அந்த ஐசோடோப் பெருவிண்மீன் வெடிப்பிலிருந்து மட்டுமே உருவாகக்கூடியது. பூமியிலிருந்து 300 ஒளியாண்டுகள் தொலைவில், இருவேறு காலங்களில் நிகழ்ந்த இரண்டு பெருவிண்மீன் வெடிப்புகளின் எச்சங்கள்தான் அந்த ஐசோடோப்புகள்.
பிரபஞ்சம் உருவானபோது, அதாவது சுமார் 1,300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற லேசான தனிமங்கள்தான் உருவாயின. ஆனால், சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பூமியில் உயிர் வாழ்க்கை உருவாவதற்கு அடிப்படையானவை கடினமான தனிமங்கள். அந்தத் தனிமங்கள் எங்கிருந்து வந்திருக்கும் என்ற கேள்வி நெடுங்காலமாக இருந்துவருகிறது. பெருவிண்மீன் வெடிப்புகள், பூமியின் மீதான வால் நட்சத்திரங்களின் மோதல், மாபெரும் எரிமலை வெடிப்புகள் போன்ற ஐந்து நிகழ்வுகள் பூமியின் மீது ஏற்படுத்திய தாக்கத்தால் பூமியில் உயிர்கள் தோன்றியிருக்கலாம் என்று இதற்கு விடை சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில், மேற்கண்ட இரண்டு பெருவிண்மீன் வெடிப்புகளுக்கும் பூமியில் உயிர் தோன்றியதற்கும் தொடர்பில்லை. உயிர்கள் தோன்றியதற்குப் பிறகுதான் இந்த வெடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. 23 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெருவிண்மீன் வெடிப்பும், 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெடிப்பும் நிகழ்ந்திருக்கின்றன. மேலும், பூமிக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் தொலைவில் இவை நிகழவில்லை. எனினும், இவற்றின் எச்சங்கள் கிடைத்திருப்பதைப் பார்க்கும்போது இதேபோல் பூமியின் ஆரம்ப காலத்தில் ஏதாவது பெருவிண்மீன் வெடிப்பு பூமியின்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்ற கருத்து உறுதிப்படுகிறது.
அதிர்வலைகள் கண்டுபிடிப்பு
இன்னொரு முக்கியமான கண்டுபிடிப்பு, முதன்முறையாகப் பெருவிண்மீன் வெடிப்புக்கு முந்தைய அதிர்வலைகளை (shock waves) கெப்ளர் தொலைநோக்கி பதிவுசெய்திருப்பது!
தற்போது பாதியளவு பழுதடைந்திருக்கும் கெப்ளர் தொலைநோக்கி 2011-ல் சேகரித்திருந்த தகவல்களை சர்வதேச வானியலாளர்கள் அலசிப்பார்த்தபோது இரண்டு பெருவிண்மீன் வெடிப்புகளை, அவை நிகழ்வதற்கு முன்பிருந்து கெப்ளர் உற்றுநோக்கியிருந்ததைக் கண்டறிந்தனர். பெருவிண்மீன் வெடிப்புக்கு முன்பு விண்மீனுக்குள் அதிர்வலைகள் ஏற்பட்டு வெடிப்பு நிகழும் என்று முன்பே அறிவியலாளர்கள் கணித்திருக்கிறார்கள். ஆனால், அந்த அதிர்வலைகளைத் தொலைநோக்கிக்கூடாகப் பார்த்திருப்பது இப்போதுதான். ஆனாலும் ஒரு சிக்கல்! ஒரு பெருவிண்மீன் வெடிப்புக்கு முன்புதான் அதிர்வலைகள் காணக் கிடைத்தன, இன்னொன்றில் அதிர்வலைகள் புலப்படவில்லை.
இருப்பினும் இந்த முரண்பாட்டால் அறிவியலாளர்கள் நம்பிக்கை இழந்துவிடவில்லை. ஒன்றில் அதிர்வலைகளைக் காண முடிந்து, இன்னொன்றில் காண முடியவில்லை என்றால் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஏதோ ஒரு விஷயம் இதில் இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது என்கிறார் இந்தக் கண்டுபிடிப்பு பற்றி எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையொன்றின் ஆசிரியரான பிராட் டக்கர்.
அதிர்வலைகள் புலப்படாத விண்மீன் மிகவும் பெரியது. நமது சூரியனை விட 500 மடங்கு பெரியது. ஆக, அதிர்வலைகள்கூடத் தப்பிச் செல்ல முடியாத அளவுக்கு அதன் ஈர்ப்பு விசை மிகமிகச் சக்தி வாய்ந்ததாக இருந்திருக்கும் என்கிறார் பிராட் டக்கர்.
வேறுசில காரணங்களையும் அவர் முன்வைக்கிறார். ஏதாவது படலங்கள் மறைத்துக்கொண்டால் கூட அந்த அதிர்வலைகளை கெப்ளர் தொலைநோக்கியால் பார்க்க முடியாமல் போயிருக்கும். அல்லது, மற்றொரு பெருவிண்மீனை விட இந்தப் பெருவிண்மீன் 2,000 மடங்கு தொலைவில் இருந்ததால் அதன் அதிர்வலைகளின் கண்சிமிட்டலை கெப்ளர் தவறவிட்டிருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
எண்ணற்ற சாத்தியங்களின் பிரபஞ்சம்!
பெருவிண்மீன் வெடிப்பு என்பது அடிக்கடி நிகழக்கூடிய ஒன்றல்ல பல ஆண்டுகளுக்கு ஒருமுறை, பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடியது. அப்படிப்பட்ட அரிதான ஒரு நிகழ்வின் இரண்டு வகைகளை நம் தொழில்நுட்பத்தால் உள்வாங்க முடிந்திருக்கிறது என்பது பெரும் சாதனை. இந்த இரண்டு நிகழ்வுகளும் வெவ்வேறு கதைகள் சொல்லியிருப்பது நம் பிரபஞ்சத்தின் எண்ணற்ற சாத்தியங்களின் ஓர் அடையாளம்தான் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களுக்குச் சொந்தமான பெருவிண்மீன் வெடிப்புகளும், கெப்ளர் பார்த்த பெருவிண்மீன் வெடிப்புகளும் வேறு வேறு. என்றாலும் அவை சொல்லும் சேதி ஒன்று! ஆம், ரோஹித் வெமுலா சொன்னதுபோல் நாமெல்லாம் விண்மீன்களின் துகள்கள்தான். ரோஹித் வெமுலாவின் ஆதர்ச நாயகரான கார்ல் சகானும் இதையேதான் சொல்லியிருக்கிறார்:
“நமது டி.என்.ஏவில் உள்ள நைட்ரஜன், நம் பற்களில் உள்ள கால்சியம், நம் இரத்தத்தில் உள்ள இரும்பு, நாம் உண்ணும் ‘ஆப்பிள் பை’யில் உள்ள கார்பன் எல்லாமே, வெடித்துச் சிதறும் விண்மீன்களின் உட்பகுதியில் உருவானவை. நாமெல்லாம் விண்மீன் துகள்களால் உருவானவர்கள்.”
- ‘தி கார்டியன்’ இதழில் வெளியான 
இரு கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
நன்றி: ‘தி இந்து’, ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/Uf1jR5

1 comment: