Saturday, April 2, 2016

பெர்த்தா காசிரீஸ் படுகொலை எழுப்பும் சுற்றுச்சூழல் கேள்விகள்



ஆசை

('தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 12-03-2016 அன்று வெளியான கட்டுரை) 

ஹோண்ட்யூரஸ் நாட்டைச் சேர்ந்த சூழலியல் போராளி பெர்த்தா காசிரீஸ் கடந்த மார்ச் 3-ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடன் இருந்த மெக்ஸிக சூழலியல் போராளி குஸ்தாவோ கேஸ்ட்ரோ சோத்தோ இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்திருக்கிறார். பெர்த்தாவின் படுகொலை உலகெங்குமுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கோபத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. பூர்வகுடி மக்களுடைய உரிமைகளுக்கும் அவர்கள் மீது அக்கறை காட்டுபவர்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே இந்தப் படுகொலை கருதப்படுகிறது.

ஹோண்ட்யூரஸில் மார்ச்-4, 1971-ல் பிறந்தவர் பெர்த்தா காசிரீஸ். லென்கா என்ற பூர்வகுடியைச் சேர்ந்தவர் அவர். செவிலியராக இருந்த அவரது தாயும் ஒரு செயல்பாட்டாளரே. சிறு வயதிலிருந்து  லத்தீன் அமெரிக்க நாடுகளின் கொந்தளிப்பான காலகட்டத்தில் வளர்ந்தவர் பெர்த்தா. பிற லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து ஹோண்ட்யூரஸில் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு மருத்துவரீதியில் உதவியவர் பெர்த்தாவின் தாய். நலிவடைந்தோருக்கு உதவுதல் என்ற இயல்பை இப்படித் தன் தாயின் மூலம் சிறுவயதிலேயே பெற்றிருந்தார் பெர்த்தா.


மாணவப் பருவத்தில் உத்வேக மிக்க சமூகப் போராளியாக உருவான பெர்த்தா 1993-ல் ‘சி.ஓ.பி.ஐ.என்.எச்’ என்ற சூழலியல் உரிமை அமைப்பை நிறுவினார். அத்துமீறி மரங்களை வெட்டுபவர்களிடமிருந்தும், பெருந்திட்டங்களுக்காக வனங்களை ஆக்கிரமித்து அங்குள்ள பூர்வகுடிகளைத் துரத்துபவர்களிடமிருந்தும் லென்கா பூர்வகுடிகள் உள்ளிட்டோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம் அது.

அமைதி-விரும்பி நாடு என்று அழைக்கப்படும் இந்தியாவிலேயே தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் பழங்குடியினரும் சூழலியல் போராளிகளும் வேட்டையாடப்படுகிறார்கள், புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றால் கொந்தளிப்பான நாடுகளுள் ஒன்றான ஹோண்ட்யூரஸைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 2009-ன் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து புதிய அரசு அமைந்த பிறகு ஹோண்ட்யூரஸில் சுற்றுச்சூழல் பேரழிவு புது வேகம் பெற்றது. மிகுதியான கனிம வளத்தைக் கொண்ட அந்த நாட்டில் 30 சதவீத நிலங்களில் கனிமச் சுரங்கங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டன. இந்த நிலங்களில் பெரும்பாலானவை பூர்வகுடி மக்கள் வசிக்கும் வனப் பகுதிகள். அதுமட்டுமல்லாமல், இந்தச் சுரங்கங்களுக்குத் தேவையான மின்சாரத்துக்காக நூற்றுக்கணக்கான அணைத்திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டங்களுக்காக அந்த தேசத்தின் நதிகளையும் தனியார்மயமாக்கியிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட திட்டங்களுள் ஒன்று அகுவா ஜர்கா அணைத்திட்டம். ஹோண்ட்யூரஸின் கட்டுமான நிறுவனம் ஒன்றும் உலகிலேயே பெரிய அணைக் கட்டுமான நிறுவனமான சினோஹைட்ரோ என்ற சீன நிறுவனமும் சேர்ந்து மேற்கண்ட அணைக் கட்டுமானத்தை மேற்கொள்ள ஆரம்பித்தன. லென்கா மக்களால் புனிதமானது என்று கருதப்படும் குவால்கார்க் நதியில்தான் இந்த அணை கட்டப்படுகிறது. அணைகள் போன்ற பெருங்கட்டுமானங்களை மேற்கொள்ளும்போது சர்வதேச நெறிமுறைகளின்படி ஒரு பிரதேசத்தில் வசிக்கும் பூர்வகுடிகளின் சம்மதம் பெறுவது மிகவும் அவசியம். ஆனால், இதுபோன்ற வழிமுறைகள் எதையும் பின்பற்றாமல் அணைக் கட்டுமானத்தை ஆரம்பித்துவிட்டார்கள். லென்கா மக்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்கு முழுக்க முழுக்க அந்த நதியைத்தான் சார்ந்திருக்கிறார்கள். அந்த நதியில் செய்யும் குறுக்கீட்டால் அவர்களது எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியிருக்கிறது.

இங்குதான் பெர்த்தாவும் அவரது அமைப்பும் வருகிறார்கள். பூர்வகுடி மக்களை ஒருங்கிணைத்து அவர்கள் நடத்திய போராட்டங்களால் சீனக் கட்டுமான நிறுவனம் பின்வாங்கியது. இதனால் தற்காலிகமாக அணைக்கட்டுமானம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இது பெர்த்தாவுக்கும் அவரது அமைப்புக்கும் பூர்வகுடி மக்களுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. இதற்காகக் கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் பணிகளுக்காக வழங்கப்படும் ‘கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது’ பெர்த்தாவுக்கு வழங்கப்பட்டது.

தனது போராட்டத்தில் பெர்த்தாவுக்கு சில வெற்றிகளும் அங்கீகாரங்களுள் கிடைத்தாலும் அவரது பயணம் அவ்வளவு சுலபமானதாக இல்லை. தனது உயிரைப் பணயம் வைத்துதான் அவர் இந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். இது போன்று போராடுபவர்களை அரசாங்கம் வெகு எளிதாக வேட்டையாடிவிடும். அவரையும் அப்படித்தான் அச்சுறுத்தியது. இதில் அரசு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள், மாஃபியாக்கள், அமெரிக்க உதவி பெற்ற காவல் படை, ராணுவம், தனியார் நிறுவனப் படைகள் போன்றோரின் அச்சுறுத்தலையும் தாக்குதல்களையும் பெர்த்தாவும் அவரது சகாக்களும் லென்கா மக்களும் தொடர்ந்து எதிர்கொண்டுவந்தனர். 2013-ல் நடந்த போராட்டமொன்றில் பெர்த்தாவின் நண்பர் தோமஸ் கார்ஸியா சுட்டுக்கொல்லப்பட்டார்.

2010-க்கும் 2014-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஹோண்ட்யூரஸில் சூழலியல் போராளிகள் 101 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று குளோபல் விட்னெஸ் என்ற கண்காணிப்பு அறிக்கை கூறுகிறது. நாடுகளின் அளவையும் கொல்லப்பட்ட சூழலியலாளர்களின் எண்ணிக்கையையும் வைத்துப் பார்த்து, சூழலியலாளர்களுக்கு உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடு ஹோண்ட்யூரஸ் என்று அந்த அமைப்பு கூறுகிறது. (2002- 2014-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியாவில் கொல்லப்பட்ட சூழலியலாளர்களின் எண்ணிக்கை 7.) இந்த எண்ணிக்கைகளெல்லாம் அதிகாரபூர்வமாகத் திரட்டப்பட்டவை. கணக்கிலேயே வராமல் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கலாம். இது போன்ற படுகொலைகளின் சமீபத்திய அத்தியாயம்தான் பெர்த்தா கொல்லப்பட்டது.

பெர்த்தாவின் படுகொலை, சூழலியல் போராளிகளுக்கும் மக்களுக்கும் பயத்தை ஏற்படுத்தும் என்று படுகொலையை நிகழ்த்தியவர்கள் எண்ணியிருந்தால் அது பெரும் பிழை. பயமல்ல, மன உறுதிதான் மக்களுக்கும் போராளிகளுக்கும் அதிகரித்திருக்கிறது என்பதை பெர்த்தாவின் இறுதிச் சடங்கு உணர்த்துகிறது. தங்கள் போராட்டம் இன்னும் தொடரும் என்று அவர்கள் சூளுரைத்திருக்கிறார்கள்.

பெர்த்தாவின் படுகொலை முன்வைக்கும் கேள்விகள் பல. மக்களின் நன்மைக்காக, வளர்ச்சிக்காக என்றெல்லாம் சொல்லித்தான் பெருங்கட்டுமானத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், அவை யாவும் ஒரு பிரதேசத்தின் பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரங்களையும் உரிமைகளையும் அழித்தே மேற்கொள்ளப்படுகின்றன. 24 மணி நேரம் மின்சேவையை மற்ற மக்கள் அனுபவிப்பவதற்காக தங்கள் இருப்பிடம், பூர்வ நிலம், பூர்வ வனம், வாழ்வாதாரம், வாழ்க்கையை இழந்தவர்களின் எண்ணிக்கை உலகங்கும் பல கோடி. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் எந்த மக்களின் நலனுக்காக இவையெல்லாம் செய்யப்படுகின்றனவோ அந்த மக்களுக்கு அந்த பலன்களில் பாதியளவுகூட சென்றுசேர்வதில்லை. இடையில் உள்ள பெருநிறுவனங்கள், அதிகாரத் தரப்பு போன்றவை பசியாறிவிட்டுப் போடும் மிச்சம்தான் மற்ற மக்களிடம் வந்துசேர்கிறது.

இதுபோன்ற ஆதாரமான பிரச்சினைகளை ஒருவர் சுட்டிக்காட்டினால் அவருக்கு பெர்த்தாவின் கதிதான், உலகெங்கும். நம் ஊரில் ஆற்று மணல் கொள்ளையைத் தட்டிக்கேட்டதால் எத்தனை தாசில்தார்கள் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டிருப்பார்கள்! ஆற்று மணலுக்கே இப்படியென்றால் ஒரு வனம் முழுவதும், மலை முழுவதும் கொள்ளையடிக்கப்படுவதைத் தட்டிக்கேட்பவர்களின் நிலை!?


வளர்ச்சி வேண்டும்தான். ஆனால், அந்த வளர்ச்சிக்குப் பின்னால் யாருடைய ரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது, யாருடைய உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒரு கணம் வளர்ச்சியின் பயனாளிகள் சிந்திப்பார்கள் என்றால் பெர்த்தா போன்ற போராளிகள் சிந்திய ரத்தத்துக்கு அர்த்தம் கிடைக்கும்!

 - நன்றி: ‘தி இந்து’, ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/Z3iuPI 

1 comment:

  1. பெர்த்தா காசிரீஸைப் பற்றி தங்களின் இப்பதிவு மூலமாகத் தான் அறிந்தேன். சமூகப் பிரக்ஞையுள்ளவர்களுக்கு ஏற்படுகின்ற இவ்வாறான முடிவுகள் வேதனையைத் தருகின்றன.

    ReplyDelete