Wednesday, June 17, 2015

எனது உடல் உயிருள்ள உடல்!

ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் 08-02-2015 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம்)

குற்றங்களில் பல வகை உண்டு. நேரடியாக ஒரு குற்றத்தைச் செய்தல், குற்றத்தைத் தூண்டுதல், குற்றத்துக்கு உடந்தையாக இருத்தல், குற்றத்தைக் கண்டும்காணாமலும் இருத்தல். இந்தக் குற்றங்களைத்தான் குற்றங்களாக நாமும் சமூகமும் அங்கீகரித்திருக்கிறோம்.இந்தக் குற்றங்களுக்காகத்தான் நாம் குற்றவுணர்வு கொள்வோம். ஆனால், இன்றைய இணைய யுகத்தில் குற்றங்கள், குற்றவுணர்வுகளின் எல்லைகள் எல்லாம் மங்கலாக்கப்பட்டுவிட்டன. ஒரு பெண்ணின் அல்லது ஒரு ஜோடியின் அந்தரங்கத்தைக் குற்றவுணர்வின்றி இணையத்தில் பார்த்துவிட்டு மற்ற எல்லாக் குற்றங்களுக்கும் எதிராக நாம் குரல்கொடுப்போம். அந்தப் பெண்ணை நாம் எந்த வகையிலும் தொடவோ, பலாத்காரம் செய்யவோ இல்லை. நாம் பார்ப்பதும் அந்தப் பெண்ணுக்குத் தெரியாது. மேலும், இது காட்சிதானே. அதாவது, திரையில் தெரிவது டிஜிட்டல் பிம்பம்தானே. அதற்கு உயிர் கிடையாது. உணர்வு கிடையாது. இப்படியெல்லாம் நமக்குள் பல சமாதானங்கள். இந்தச் சமாதானங்கள் நமது குற்றவுணர்ச்சியை மெல்ல முதுகில் தட்டித் தட்டித் தூங்க வைத்துவிடுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, யாருக்கும் எந்தத் தீங்கும் இல்லாமல் நமக்கு இன்பம் கிடைக்கிறதே. இதில் என்ன தவறு?

இப்படியெல்லாம் ஆண்களாகிய நாம் நினைப்போமென்றால் டேனிஷ் பத்திரிகையாளர் எம்மா ஹோல்ட்டென் சமீபத்தில் வெளியிட்ட காணொலியைப் பார்த்தாக வேண்டும் (http://www.theguardian.com/commentisfree/video/2015/jan/21/naked-pictures-this-is-what-i-did-revenge-porn-emma-holten-video).அவரது நிர்வாணப் புகைப்படங்களை யாரோ 'ஹேக்' செய்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் உலவ விட்டிருக்கிறார்கள். அன்றிலிருந்து இன்று வரை ஹோல்ட்டெனுக்கு கணக்கற்ற மின்னஞ்சல்களும் ஃபேஸ்புக் செய்திகளும் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன. ‘நீ ஒரு வேசி என்பது உன் வீட்டுக்குத் தெரியுமா?’ என்பதில் தொடங்கி ‘உனது நிர்வாணப் புகைப்படங்களை இன்னும் நிறைய அனுப்பிவை, இல்லையென்றால் என்னிடம் உள்ள உனது புகைப்படங்களை உனது மேலதிகாரிக்கு அனுப்பிவிடுவேன்’ என்றெல்லாம் அந்தச் செய்திகளில் இருந்தன.
‘தவறான பெண்’ணென்றால் சரியா?
ஒரு பெண்ணின் உடல் ஆணுக்குக் கிளர்ச்சி ஏற்படுத்துவது இயற்கை. அதில் தவறு ஏதும் இல்லை. கண்ணைக் கவரும் வகையில் ஒரு பெண் உடையணிந்து சாலையில் செல்கிறார் என்றால் அவர் அப்படித்தான் தன்னைப் பொதுவெளிக்கு முன்வைக்கிறார். அந்த அளவில் தான் பார்க்கப்படுவதில் முழு சம்மதத்தை அந்தப் பெண் எல்லோருக்கும் வழங்குகிறார் என்பதற்கான அறிக்கைதான் அந்த உடை. ஆனால், அதே பெண் அதே உடையிலும்கூட சற்றே எசகுபிசகான கோணத்தில் தான் பார்க்கப்படுவதை விரும்பவே மாட்டாள். ஆனால், கண்ணைக் கவரும் வகையில் அந்தப் பெண் உடையணிந்ததே அப்படியெல்லாம் எசகுபிசகாகப் பார்க்கப்படுவதற்கு அவள் தரும் மறைமுகச் சம்மதம் என்றே ஆண் சமூகம் கருதுகிறது. கவர்ச்சியான உடையில் மட்டும்தான் இந்தப் பிரச்சினை என்றல்ல. சேலை கட்டிக்கொண்டு வரும் பெண்களிடமும் எசகுபிசகான கோணங்களை எதிர்பார்ப்பவை ஆண்களின் கண்கள். என்றால், ஆண்களே தவறு யாரிடம் இருக்கிறது? ஒரு பெண்ணை மோசமான கோணத்தில் நேரில் பார்ப்பதே குற்றம் எனும்போது அந்தப் பெண்ணின் நிர்வாணக் கோலத்தை இணையத்தில் உலவ விடுவதும், நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட அந்தப் பெண் ‘தவறான பெண்’ணாகத்தான் இருப்பாள், ஆகவே, அதைப் பார்ப்பது தவறில்லை என்ற சமாதானத்துடன் அதைப் பார்ப்பதையும் என்னவென்று சொல்வது?
உடலுக்கு உயிர் கொடுத்த எம்மா
இந்தக் கேள்விகளைத்தான் எம்மா கேட்கிறார். இணையம் மனித பிம்பங்களில் உள்ள மனிதத்தை உறிஞ்சியெடுத்துக்கொண்டுவிடுகிறது (டீஹ்யூமனைசேஷன்). அதனால்தால், அந்தப் பிம்பங்களுக்குச் சொந்தக்காரர்களான பெண்களுக்கும் இன்பம், துன்பம், வலி, வேதனை, அவமானம் எல்லாம் இருக்கும் என்ற விஷயங்களை இணையம் நமக்கு மறக்கடித்து, அந்தப் பிம்பங்களால் நமக்குக் கிடைக்கும் இன்பத்தை மட்டுமே பிரதானப்படுத்துகிறது.

இந்த விவகாரத்தால் பெரிதும் புண்பட்ட எம்மா கடைசியில் ஒரு காரியம் செய்தார். புகைப்படக் கலைஞர் (அவரும் பெண்தான்) ஒருவரை அழைத்து நிர்வாணப் புகைப்படங்கள் எடுப்பதைக் குறித்து விவாதித்தார். ஆண்களின் காம இச்சையையும் காமப் பார்வையையும் தவிர்க்கும் விதத்தில் பெண்ணின் நிர்வாண அழகைப் படமெடுப்பது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை என்றார் அந்தப் புகைப்படக் கலைஞர். எனினும், தனது நிர்வாண உடலுக்குள் ஒரு மனம் இருக்கிறது என்றும், அதற்கு வலிக்கும் என்றும் உணர வைப்பதற்காக எம்மா தன்னை நிர்வாணமாகப் புகைப்படம் எடுக்கச்செய்து காணொலியாக வெளியிட்டார்.அந்தக் காணொலிதான் சமீபத்திய சூறாவளி. தனது வலிகளைப் பற்றி அதில் குமுறியிருக்கிறார் எம்மா. அதன் தொடர்ச்சியாக அவரது அரை நிர்வாணப் புகைப்படங்கள் வருகின்றன. “நீங்கள் என் உடலைப் பொருளாக மாற்றினீர்கள். நான் உயிராக மாற்றியிருக்கிறேன்” என்று ஆண்மனதாய் விஸ்தரித்திருக்கும் சமூகத்தின் முகத்தில் பளாரென்று ஓர் அறை விடுகிறார்.
முதல் குற்றவாளி!
இந்த விவகாரத்தில் முதல் குற்றச்சாட்டை நாம் எம்மாவின் மீதுதான் வைப்போம், “நீ எப்படி நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்?” அதேபோல் டெல்லி பாலியல் சம்பவத்தில் பலியான பெண்மீதும் ஒரு கேள்வியை சமூகம் வீசியது: “ஒரு ஆணுடன் இரவு நேரத்தில் நீ எப்படி வரலாம்?” இந்தக் கேள்வியை நீட்டிக்கொண்டே போனால், ‘நீ எப்படிப் பெண்ணாக இருக்கலாம்?’, ‘நீ எப்படிப் பெண்ணாகப் பிறக்கலாம்?’ என்ற கேள்விகள் வரை நம்மைக் கொண்டுபோய் விட்டுவிடும். இப்படியாக, பெண்கள் மீதான வன்முறைகளில் பெண்களையே முதல் குற்றவாளிகளாக ஆக்கிவிடுவது நமது இயல்பு. ஒரு பெண் இரவு நேரத்தில் ஒரு ஆணுடன் வரும் செயல் அவள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையை நியாயப்படுத்திவிடுமா? எம்மா நிர்வாணமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது தவறென்றே வைத்துக்கொண்டாலும் இணையத்தில் அந்தப் படங்களைப் பார்த்து நாம் இன்புறுவதை அந்தப் பெண்ணின் ‘தவறு’ நியாயமாக்கிவிடுமா?
அந்தப் பெண் தனது அந்தரங்கத்தை இந்தச் சமூகம் மதிக்கும் என்ற உள்ளார்ந்த நம்பிக்கையில், தன் அந்தரங்கம் கசிந்துவிடாது என்ற நம்பிக்கையில், தனது அன்புக்குரியவரின் முன்னால் செய்த விஷயம் இன்று உலகம் முழுவதும் பரவிவிட்டது. அவள் இந்த உலகத்தை நம்பியதுதான் இதற்கெல்லாம் காரணம். ஆகவே ஆண்களே, இந்த உலகத்தை நம்பிய ஒரே குற்றத்துக்காக அந்தப் பெண்ணையே குற்றவாளியாக ஆக்கிவிட்டு நம் குற்றவுணர்வை மறுபடியும் தூங்க வைத்துவிடுவோம்!
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in 

No comments:

Post a Comment