Monday, August 4, 2014

ஐன்ஸ்டைன்: ஒளியின் கடவுள்

ஐன்ஸ்டைன் பிறந்த நாள் அன்று (14.03.2014) ‘தி இந்து’ நாளிதழில் வெளியான தலையங்கம்


ஒளிக்கு இணையாகப் பயணித்தோம் என்றால், அப்போது ஒளி எப்படித் தோற்றமளிக்கும்?’ என்ற சந்தேகம் 16 வயது ஐன்ஸ்டைனுக்கு ஏற்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தச் சந்தேகம் அவர் மனதைப் போட்டு அரித்துக்கொண்டிருந்தது.

1905-ம் ஆண்டில்தான், அதாவது தனது 26-ம் வயதில், இந்தச் சந்தேகத்துக்கு விடையை அவரே கண்டுபிடித்தார்: ‘ஒளியின் வேகத்தை யாரும் எட்டிப்பிடிக்க முடியாது; ஒளிதான் இந்தப் பிரபஞ்சத்திலேயே உச்சபட்ச வேகத்தைக் கொண்டது; ஒளியின் வேகத்தில் ஒருவர் பயணிக்கிறார் என்று கற்பனையில் வைத்துக்கொண்டால், அவருடைய உருவம் மிகமிக நுண்ணியதாகிவிடும்; ஆனால், அவருடைய நிறையோ எல்லையற்று அதிகரித்துவிடும். அதுமட்டுமல்லாமல் அவருடைய காலமும் உறைந்துவிடும்.’
1905-ம் ஆண்டு என்பது ஐன்ஸ்டைனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அறிவியல் வரலாற்றிலும் அற்புத ஆண்டுகளுள் ஒன்று. மிகமிக முக்கியமான நான்கு ஆய்வுக் கட்டுரைகளை அந்த ஒரே ஆண்டில் ஐன்ஸ்டைன் வெளியிட்டார். இதையெல்லாம் ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துகொண்டு, பிரம்மாண்டமான ஆய்வுகளுக்குப் பிறகு வெளியிடவில்லை அவர்.
உண்மையில், தனது காலத்திய அறிவியல் அறிஞர்களின் தொடர்பற்று, சுவிட்சர்லாந்து நாட்டில் ஒரு காப்புரிமை அலுவலகத்தில் கீழ்நிலை ஊழியராகப் பணிபுரிந்துகொண்டே நிகழ்த்தியவைதான் அந்தக் கண்டுபிடிப்புகள். இன்று உலகமே கொண்டாடும் மாபெரும் அந்த அறிவியல் மேதை அந்தக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்குச் சிறிது காலத்துக்கு முன்பு, பணிஉயர்வு வேண்டி எழுதிய கடிதம் நிராகரிக்கப்பட்டிருந்தது.
ஆய்வுக் கட்டுரைகள் வெளியான பிறகும் உலகம், முக்கியமாக அறிவியல் உலகம் உடனடியாக அவரைக் கண்டுகொள்ளவில்லை. மாக்ஸ் பிளாங்க் என்ற மாபெரும் அறிவியல் அறிஞர்தான் (குவாண்டம் கோட்பாட்டின் தந்தை) இந்தக் கண்டுபிடிப்பாளரைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தார்.
அப்படி என்ன அற்புதங்களை அந்த ஆய்வுக் கட்டுரைகள் நிகழ்த்தின? அந்தக் கட்டுரைகளில் இரண்டு சார்பியல் தொடர்பானவை. முதல் கட்டுரை, நியூட்டனின் சிம்மாசனத்தை அசைத்துப்பார்க்கிறது. காலம், இடம் (வெளி) இரண்டும் அறுதியானவையோ, எல்லோருக்கும் ஒரே மாதிரியானவையோ அல்ல என்கிறார் ஐன்ஸ்டைன். அவரவர் அல்லது அந்தந்தப் பொருட்களின் இயக்கத்தைச் சார்ந்து இரண்டுமே வேறுபடும் என்கிறார். காலமும் வெளியும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதது என்ற சொல்லி, வெளியையும் காலத்தையும் ஒன்றுசேர்த்து, காலம்-வெளி என்ற ஒரு கருத்தை அதில் முன்வைக்கிறார்.
அடுத்த கட்டுரை, முதல் கட்டுரையின் தொடர்ச்சி. இதில்தான் உலகப் புகழ்பெற்ற E=mc2 என்ற சமன்பாட்டை ஐன்ஸ்டைன் முன்வைக்கிறார். நிறையும் ஆற்றலும் வெவ்வேறானவை அல்ல என்றும் நிறையை ஆற்றலாக மாற்ற முடியும் என்றும் சொல் கிறது இந்தச் சமன்பாடு. அது மட்டுமல்ல, ஒவ்வொரு நிறையும் அளப்பரிய ஆற்றலைத் தனக்குள் வைத்திருக்கிறது என்றும் அந்தச் சமன்பாடு சொல்கிறது. இந்த உண்மையை ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் சந்தேகமறத் தெரிந்துகொண்டது உலகம்.
மூன்றாவது கட்டுரையும் மிக முக்கியமானது. அதுநாள்வரை அணு என்பதை ஒரு கருதுகோளாகவும் கற்பனையாகவுமே அறிவியல் உலகம் கருதிவந்தது. ஆனால், ஐன்ஸ்டைனின் இந்தக் கட்டுரை தெளிவாக அணுக்களின் இருப்பை நிரூபித்தது.
இந்த மூன்று ஆய்வுக் கட்டுரைகளும் உலகையே புரட்டிப் போடுவதற்குப் போதுமானவை என்றாலும், ஐன்ஸ்டைன் அத்துடன் நிற்கவில்லை. ஒளி என்பது அடிப்படையில் அலை வடிவத்தில் பயணிக்கிறது என்பதுதான் அதுவரையிலான நம்பிக்கை. ஆனால், உண்மையில் நுண்மையான தோட்டாக்கள் போன்ற கொத்துக்களாகத்தான் ஒளி பயணிக் கிறது என்று நான்காவது கட்டுரையில் நிறுவினார் ஐன்ஸ்டைன். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் குவாண்டம் கோட்பாட்டின் முன்னோடிகளில் ஒருவராக ஆனார் ஐன்ஸ்டைன்.
ஒருசில ஆண்டுகளில் ஐன்ஸ்டைனின் மேதமையை உலகம் அங்கீகரிக்க ஆரம்பித்தது. பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணிபுரிவதற்கான அழைப்புகள் அவருக்கு வந்தன. 1908-ம் ஆண்டு பெர்ன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் வேலை கிடைத்தது. அதற்குப் பிறகு ஒளியின் வேகத்தில் பயணிக்க ஆரம்பித்தது அவருடைய புகழ்.
தனது 1905-ம் வருடத்திய ‘சிறப்பு சார்பியல் கோட்பாட்’டில் ஈர்ப்புவிசை விளக்கப்பட வில்லை என்பது அவருக்கு உறுத்திக்கொண்டிருந்தது. சரியாக 10 ஆண்டுகள் கழித்து 1915-ல் ‘சார்பியலின் பொதுக் கோட்பாடு’ என்ற இன்னொரு அற்புதம் அவரிடமிருந்து வெளிவந்தது. வெளி, காலம் இரண்டின் வளைவால் ஏற்படும் விளைவே ஈர்ப்புவிசை என்றார் அவர். பெரும் நிறை கொண்ட ஒரு பொருளைக் கடந்துசெல்லும்போது ஒளி வளையும் என்றார். இவையெல்லாம் அறிவியல் அறிஞர்கள் பலராலும்கூட உள்வாங்க முடியாத அளவுக்கு இருந்தன.
இந்தக் கோட்பாடுகளும் முந்தைய கோட்பாடுகளும் காலப்போக்கில் தெளிவாக நிரூபிக்கப்பட்டன. இந்தக் கோட்பாடுகளின் விளைவாக இயற்பியல், வானியல் போன்ற துறைகளில் பெரும் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன/நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஐன்ஸ்டைன் ஆரம்பித்த இடத்திலிருந்து இன்றைய அறிவியல் பயணித்திருக்கும் தூரம் மிகமிக அதிகம். ஆனால், இதற்கான மாபெரும் வித்துக்கள் விதைக்கப்பட்ட ஆண்டுகள்தான் 1905-ம் ஆண்டும் 1915-ம் ஆண்டும்.
தன் வாழ்நாளின் இறுதி 25 ஆண்டுகளில் ஐன்ஸ்டைன் தனது சக்தி முழுவதையும் குவாண்டம் கோட்பாட்டை மறுப்பதில் செலவிட்டார் (இந்தக் கோட்பாட்டின் முன்னோடிகளில் ஐன்ஸ்டைனும் ஒருவர் என்பது விந்தை). குவாண்டம் கோட்பாடு எல்லாவித சாத்தியங்களையும் அங்கீகரிப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஓர் இலக்கை நோக்கி எலக்ட்ரான் ஒன்று செலுத்தப்பட்டால், அது குறிப்பிட்ட ஒரு பாதையில்தான் பயணிக்க வேண்டுமென்பதில்லை.
அது பயணிக்கும் பாதையின் சாத்தியங்கள் எண்ணற்றவை. அதேபோல், அணுவில் ஒரு எலக்ட்ரான் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் இருக்க முடியும். இப்படியெல்லாம் குவாண்டம் கோட்பாடு சொன்னதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “கடவுள் இந்தப் பிரபஞ்சத்தைப் பகடைக்காயாக உருட்டி விளையாடவில்லை” என்று அவர் குறிப்பிட்டார். வெவ்வேறு சாத்தியங்களின் கூட்டுத்தொகையாக அவர் பிரபஞ்சத்தைப் பார்க்கவில்லை. இந்தப் பிரபஞ்சத்துக்கு அடிப்படையாக அழகான, சீரான ஒரு தத்துவம் இருக்கிறது என்று அவர் நம்பினார். தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் மூலம் குவாண்டம் கோட்பாடு நிரூபிக்கப்பட்டதால், ஐன்ஸ்டைன் தனது தோல்வியை வேறுவழியின்றி ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.
அதன் பின்னர், தனது இறப்புவரை இன்னொரு பெருமுயற்சியில் ஈடுபட்டார். பிரபஞ்சத்தின் சாராம்சத்தை விளக்கக்கூடியதும், சார்பியல் கோட்பாடு, குவாண்டம் கோட்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியதுமான ‘ஒருங்கிணைந்த கோட்பாடு’ ஒன்றை உருவாக்க அவர் முயன்றார். இறுதிவரை அது நடக்கவில்லை. இந்தப் பாதையில் இன்று பல்வேறு அறிவியலாளர்களும் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். எனினும் இன்னும் யாருக்கும் வெற்றி கிட்டவில்லை.
அறிவியலை ஆன்மிகச் செயலாகவே அவர் கருதினார். அறத்தை விடுத்த அறிவியலை அவர் வெறுத்தார். அவருக்கு ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால், ஐன்ஸ்டைனுடைய கடவுள் மதரீதியான கடவுள் அல்ல. இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படையான சக்திதான் அவருடைய கடவுள். ‘ஒருங்கிணைந்த கோட்பாடு’ என்பது அந்தக் கடவுளின் முகத்தைப் பார்ப்பதற்கான முயற்சியாகக்கூட இருக்கலாம்.
ஐன்ஸ்டைனின் பெயருடன் அணுகுண்டின் கண்டுபிடிப்பு பிணைக்கப்பட்டுவிட்டது. இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக, வேறு வழியின்றிதான், அணுகுண்டு தயாரிக்கும்படி அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கு ஐன்ஸ்டைன் கடிதம் எழுதினார். அதன் விளைவை நாமெல்லோரும் அறிவோம்.
ஆனாலும், ஹிரோஷிமாமீது குண்டுவீசப்பட்ட தகவல் கிடைத்ததுமே அணு ஆயுதங்களுக்கு எதிரான தனது போரை அவர் தொடங்கிவிட்டார். தன் வாழ்நாளின் இறுதிவரை உலக அமைதிக்காகக் குரல்கொடுத்தார். ‘20-ம் நூற்றாண்டின் மனித’ராக ஐன்ஸ்டைனை 1999-ம் ஆண்டு ‘டைம்’ பத்திரிகை தேர்ந்தெடுத்துச் சிறப்பித்தது (காந்திக்கு இரண்டாம் இடம்). இந்தப் பிரபஞ்சத்தின் புதிர்களுள் சிலவற்றை அவிழ்ப்பதில் வெற்றி பெற்றவரும் நவீன காலத்தின் மகத்தான மேதைகளில் ஒருவருமான ஐன்ஸ்டைனுக்கு அவருடைய பிறந்த நாளாகிய இன்று நம்முடைய நன்றியும் வணக்கமும் உரித்தாகட்டும்.

                        - ‘தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்தத் தலையங்கத்தைப் படிக்க: ஐன்ஸ்டைன்: ஒளியின் கடவுள்

No comments:

Post a Comment