க்ரியா ராமகிருஷ்ணனின் மூன்றாவது நினைவு நாள் இன்று! இந்த நாளை ஒட்டி என் வாழ்வின் முக்கியமான ஓர் அறிவிப்பு இதோ. ‘மாயக்குடமுருட்டி’ என்ற தலைப்பில் நான் எழுதிவரும் நெடுங்காவியத்தின் பெயரை ‘காவிரியம்’ என்று மாற்றியிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் எல்லோருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். ‘காவிரியம்’ நெடுங்காவியத்தின் முதல் நூலாக ‘மாயக்குடமுருட்டி’ வெளிவரும். எப்போது வெளிவரும் என்ற தகவல் பிறகு அறிவிக்கப்படும்.
**
என் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியவரும் முக்கியமான விழுமியங்களை எனக்குக் கற்றுத்தந்தவருமான ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மறைந்து இன்று மூன்று ஆண்டுகாள் நிறைவடைகின்றன. 20 ஆண்டுகால நட்பு எங்களுடையது. இதில் 10 ஆண்டுகாலம் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். செய்யும் செயலையே முக்கியமானதாகக் கருதி, தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர் அவர். தினசரி அவரிடம் படித்த பாடங்கள் எவ்வளவோ. ஒருமுறை ‘க்ரியா’ அலுவலகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ராமகிருஷ்ணன் எடுப்பதற்கு முன்பு நான் எடுத்துவிட்டேன். மறுமுனையில் ஏதோ கேட்டதற்கு நான் ‘என் பாஸ் ராமகிருஷ்ணனைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்’ என்று பதில் அளித்தேன். நான் பேசியதை கவனித்த ராமகிருஷ்ணன். மதியம் சாப்பிட்ட பிறகு பால்கனியில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தபோது (இறப்புக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே சிகரெட்டை நிறுத்திவிட்டார்) என்னை அழைத்தார். ‘ஆசைத்தம்பி, இனிமே யார் கேட்டாலும் என்னை பாஸ் (முதலாளி) என்று சொல்லாதீர்கள், Colleague (சக பணியாளர்) என்று சொல்லுங்கள்’ என்றார். இது ஒரு பானை சோற்றில் ஒரு பதம்தான். அவருடன் எத்தனையோ விஷயங்களில் நான் வேறுபட்டிருக்கிறேன். சண்டை போட்டிருக்கிறேன். எங்கள் ரசனையிலும் நிறைய மோதல் உண்டு. என்றாலும் வாழ்க்கைக்கான முக்கியமான படிப்பினைகள் பலவற்றையும் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். வாழ்க்கை குறித்த, கலை, இலக்கியம் குறித்த என் பார்வைகளை விரிவுபடுத்தியிருக்கிறார். அதே நேரத்தில் அவருடைய தாக்கத்திலிருந்து உரிய இடங்களில் உரிய நேரத்தில் விடுபடுவதும் என் ஆளுமை வளர்ச்சிக்கு அவசியம் என்று விடுபட்டும் வந்திருக்கிறேன்.
எனக்கு 24 வயது நடக்கும்போதே என் மீது நம்பிக்கை வைத்து முக்கியமான பதிப்புப் பணிகளிலும் அகராதிப் பணியிலும் அவர் என்னை ஈடுபடுத்தியது எனக்கு ரொம்பவும் பெரிய விஷயம். சிறிய ஊரிலிருந்து சென்னைக்கு வந்து, தாழ்வு மனப்பான்மையால் பீடிக்கப்பட்டு எங்கும் செல்லாமல் யாருடனும் பழகாமல் இருந்த ஒருவன் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துப் பெரும் பொறுப்புகளை ஒப்படைத்தது எனக்குப் பெரிய உந்துசக்தியாக இருந்தது. ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (2008-ம் பதிப்பு), ‘A Handbook of Tamil Verbal Conjugation’ (2009) ஆகிய பெருநூல்களின் ‘துணை ஆசிரியர்’ பொறுப்பை எனக்கு வழங்கினார். இத்தனையும் எனது முப்பது வயதுக்குள். என் கவிதைகள் மீது என்னை விட அதிக நம்பிக்கை கொண்டிருந்தவர் அவர்.
அவர் மறைந்ததை என் ஆழ்மனம் ஏற்றுக்கொள்ளவேயில்லை. அவர் இன்றும் என்னுடன் இருப்பதுபோன்ற உணர்வுதான். ஆனாலும், அவரை நேரில் பார்க்க முடியவில்லையே, அவர் குரலைக் கேட்ட முடியவில்லையே என்ற ஏக்கமும் சூழ்ந்துகொள்கிறது. தமிழ்ச் சமூகத்துக்குப் பெரும் பணியாற்றிவிட்டுச் சென்றிருக்கும் அவரை வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும்!
‘காவிரியம்’ (மாயக்குடமுருட்டி) நெடுங்காவியம் நோக்கி நான் வந்திருப்பதில் அவருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஆகவே, அதற்குப் பெயர் சூட்டுவதற்கு அவருடைய நினைவுநாளான இன்றைய நாளைவிட மிகவும் பொருத்தமான ஒன்று வேறெதுவும் இருக்காது. ‘காவிரியம்’ விரியும்!
No comments:
Post a Comment