Saturday, September 18, 2021

பிரான்சிஸ் பிரான்சிஸ் உன்னை ஏன் நீ கைவிட்டாய்?

 


உன் சிலுவையுடனே
மரித்துப்போனாய்
பிரான்சிஸ்

உன்னை எடுத்து
மடியில் போட்டுக்கொண்டு
உலகத்துத் துக்கத்தையெல்லாம்
தன்னுடையதாக்கிக்கொள்ளும்
உன் மரியன்னையும்
ஆணியிறங்கிய காயங்களுடனான
உன் பாதங்களைத்
தன் கண்ணீரால் கழுவுவதற்கு
உன் மரியாள் மகதலேனாவும்
வரவில்லை

ஆனால்
யூதாஸுக்கு முப்பது வெள்ளிக்காசுகள் கொடுத்து
உன்னைக் காட்டிக்கொடுக்க
நீயே அனுப்பிவிட்டிருந்தாய்

உனக்கொரு முத்தம் கொடுத்து
அவன் காட்டிக்கொடுக்கும்முன்
பொறுமையின்றி
மரணத்திடம்
நீயே உன்னைக்
காட்டிக்கொடுத்துவிட்டாய்

உனக்குத் தெரியாது
எல்லோரும் உன்னை மெசியாவென்றும்
மீட்பரென்றும்
ரட்சகரென்றும் கூறியதெல்லாம்
நீ கூடவே தூக்கித் திரிந்த
உன் சிலுவையைப் பார்த்துதான் என்பது

நீ தச்சன் மகனாகவே
இருந்திருக்கலாம்
மீட்பரென்ற சித்திரத்தைவிட
அழகியது அது

ஆனால்
யாருக்கோ சிலுவை செய்வதை
ஒருபோதும் நீ
தேர்ந்திருக்க மாட்டாய்

விண்ணகத்து ஒளி
கணநேரம் பளிச்சிட்டு
மின்னலென உன் குருதியை
ஆழ உழுத இன்பத்திற்குப் பிறகு
எஞ்சிய வாழ்நாளை
கல்வாரி நோக்கித்
திருப்பிக்கொண்டாயோ?

அப்படி என்ன ஒளி
அது
உன் நெஞ்சின் ஒளியையெல்லாம்
உறிஞ்சிக்கொள்ளுமளவுக்கு

வாழ்க்கை உன்னை
வழிதவறிய ஆட்டுக்குட்டியாக்க
மரணம் உன்னை
உனது மீட்பராய்
ஆக்கிவிட்டது

அவரவர் சாத்தான்
அவரவருடனேதான் பிறக்கும்
உன்னுடன் பிறந்த சாத்தானை
குறுக்கும் நெடுக்குமாக
அறுத்துப்போட்டு
நீ செய்துகொண்ட சிலுவையைத்தான்
இத்தனை காலமாய் சுமந்துகொண்டிருந்தாய்

அதில் உன்னை நீயே
அறைந்துகொண்டபின்
நீ பேசியிருக்க வேண்டிய
இறுதி வார்த்தைகளை
உன்னிடம் நான் கேட்கிறேன்

 'பிரான்சிஸ் பிரான்சிஸ்
உன்னை ஏன் நீ கைவிட்டாய்?’

    18-09-21

No comments:

Post a Comment