ஆசை
(‘தி இந்து’ நாளிதழில் 22-11-2017 அன்று வெளியான எனது கட்டுரையின் மிக
விரிவான வடிவம்)
வெகுஜன இலக்கிய வரலாற்றில் டான் ப்ரவுனின் ‘தி டா வின்சி கோடு’ (2003) நாவலுக்கு இணையாகப் பரபரப்பையும் சர்ச்சையையும் சமீப காலத்தில் எழுப்பிய வேறொரு நாவலை நாம் சொல்லிவிட முடியாது. கிறிஸ்தவ மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக அந்த நாவல் கடுமையான எதிர்ப்புக்குள்ளானது. அந்த எதிர்ப்பே அந்த நாவலை நம்பவே முடியாத அளவுக்குப் பிரபலமாக்கியது. இதுவரை எட்டு கோடிக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்றிருக்கிறது. அந்த நாவலுக்குப் பிறகு எழுதிய ‘தி லாஸ்ட் சிம்பல்’ (2009),
‘இன்ஃபெர்னோ’ (2013) ஆகிய நாவல்களில் சர்ச்சையான விஷயங்களை டான் பிரவுன் தொடாததால் எதிர்ப்பு, விற்பனை இரண்டிலும் ‘த டா வின்சி கோடு’ நாவலை நெருங்க முடியவில்லை. தற்போது, மீண்டும் ‘தி டா வின்சி கோடு’ காலத்துக்குத் திரும்ப அவருக்குள் ஆவல் எழுந்திருக்கிறது போல. சமீபத்தில் வெளியாகியிருக்கும் அவரது ‘ஆரிஜின்’ (தோற்றுவாய்) நாவலைப் படித்த பிறகு அப்படித்தான் தோன்றுகிறது.
இந்த நாவலில் குறிப்பிட்ட ஒரு மதம் என்றில்லாமல் எல்லா மதங்களையும் எல்லாக் கடவுள்களையும் டான் குறிவைத்திருக்கிறார். கதை நடைபெறும் இடம் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் ஸ்பெயின் என்பதால் டான் பிரவுனின் அம்புகள் கிறிஸ்தவத்தை நோக்கியே அதிகம் பாய்ந்திருக்கின்றன.
டான் பிரவுனின் பிரத்யேக நாயகரான ‘குறியியல்’ துறை பேராசிரியர் ராபர்ட் லாங்டனுக்கு
(Robert Langdon) ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள அவசர அழைப்பு வருகிறது. அழைப்பு விடுத்தவர் ராபர்ட்டின் முன்னாள் மாணவர் எட்மண்ட் கிர்ஷ் (Edmond Kirsch). 40 வயதாகும் எட்மண்ட் கிர்ஷ் இளம் வயதிலேயே ஸ்டீவ் ஜாப்ஸ் போல சாதனைகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரராக ஆகிவிட்டவர். எதிர்காலவியல் நிபுணர். தொழில்நுட்பத்தில், குறிப்பாக, கணினித் தொழில்நுட்பம், செயற்கை அறிவுத் தொழில்நுட்பம் போன்றவற்றில் எதிர்காலத்தில் நிகழவிருப்பவற்றை முன்கூட்டியே துல்லியமாகக் கணித்துக் கூறியவர்.
நிகழ்வு நடைபெறும் இடமான ஸ்பெயின் நாட்டின் பில்பாவ் நகரிலுள்ள க்யுகென்ஹெய்ம் நவீனக் கலை அருங்காட்சியகத்துக்கு ராபர்ட் செல்கிறார். வழக்கமாக டான் பிரவுனின் நாவல்களில் கொலையோ, திடுக்கிடச் செய்யும் பிற நிகழ்வுகளோ நாவலின் தொடக்க அத்தியாயங்களிலேயே நிகழ்ந்துவிடும். இந்த நாவலில் அப்படிப்பட்ட ஒரு சம்பவத்துக்காக 100 பக்கங்களை டான் பிரவுன் செலவழித்திருக்கிறார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னால் அந்த அருங்காட்சியகத்திலுள்ள நவீன ஓவியங்களையும் சிற்பங்களையும் பார்த்துக்கொண்டே வருகிறார். அந்த ஓவியங்களைப் பற்றி அவருக்கு விளக்குவதற்கு அவர் கன்னத்தில் ஒட்டிக்கொண்ட அதிநவீன ஒலிக்கடத்தி மூலம்
துணைபுரிவது வின்ஸ்டன் என்ற பெயர் கொண்ட ஒரு செயற்கை நுண்ணறிவுச் சாதனம் (Artificial Intelligence
Technology). இந்த நாவலின் மிக முக்கியமான பாத்திரங்களுள் ஒன்று வின்ஸ்டன். ஒரே நேரத்தில் அந்த அருங்காட்சியகத்துக்கு வந்திருக்கும் அனைவருக்கும் பிரத்யேகமாக வின்ஸ்டன் வழிகாட்டுவதுதான் இதில் விசேஷம்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் எட்மண்ட் தனது முன்னாள் ஆசிரியரான ராபர்ட்டை ரகசிய இடத்தில் சந்திக்கிறார். இந்த உலகத்தையே புரட்டிப்போடக்கூடிய ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை இன்று தான் அறிவிக்கப்போவதாகச் சொல்கிறார் எட்மண்ட். ‘எங்கிருந்து நாம் வந்தோம்?’ ‘நாம் எங்கே செல்வோம்?’ என்ற இரண்டு கேள்விகளுக்கும் விடையைத் தான் கண்டுபிடித்திருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பை வெளியிடும்போது மதங்களின் இடமும் கடவுள்களின் இடமும் தகர்க்கப்படும் என்று எட்மண்ட் குறிப்பிடுகிறார்.
அந்த அருங்காட்சியகத்தின் இயக்குநரும் ஸ்பெயினின் வருங்கால மன்னரைத் திருமணம் செய்துகொள்ளவிருப்பவருமான ஆம்ரா பீடல் நிகழ்ச்சியை அறிமுகம் செய்து தொடங்கிவைக்கிறார். தன் கண்டுபிடிப்புகளைப் பற்றிப் பேசத் தொடங்கும்போது,
ஓய்வுபெற்ற கப்பற்படை வீரர் ஒருவரால் எட்மண்ட் சுட்டுக்கொல்லப்படுகிறார். கொலையாளி தப்பி ஓடிவிடுகிறார்.
தன் மாணவர் கொல்லப்பட்டதை அடுத்து அவரின் கண்டுபிடிப்பை இந்த உலகத்தின் முன் வெளிப்படுத்தும் பொறுப்பை ஏற்கும் ராபர்ட், ஆம்ரா பீடலுடன் அங்கிருந்து தப்பிச்செல்ல காவல்துறையின் சந்தேகப் பார்வை ராபர்ட் மீது விழுகிறது. எட்மண்டின் ரகசிய அலுவலகத்தில் உள்ள கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் அவரது கண்டுபிடிப்பின் கோப்பைத் திறக்கும் 47 எழுத்துக் கடவுச்சொல்லை (அது ஒரு கவிதை வரி) கண்டுபிடிப்பதற்காக ஸ்பெயினின் கட்டிடக் கலைக்குப் புகழ்பெற்ற சில கட்டிடங்கள் வழியாக ராபர்ட்டும் ஆம்ரா பீடலும் தேடல் வேட்டை நிகழ்த்தி இறுதியில் கடவுச் சொல்லைக் கண்டுபிடிக்கிறார்கள். நாவலின் போக்கில் கதாசிரியர் டான் பிரவுனும், கதாநாயகர் ராபர்ட் லாங்டனும் மத அமைப்புகள், அறிவியல் தகவல்கள், நவீன - மரபு கட்டிடக் கலை, ஓவியங்கள், ஸ்பெயின் வரலாறு போன்றவற்றைப் பற்றி பாடம் நடத்துகிறார்கள்.
இதற்கிடையே காவல்துறை துரத்தல், கொலையாளியின் குறுக்கீடு, சில கொலைகள் என்று கதை செல்கிறது. கொலைகளுக்குக் காரணம் யார் என்று இறுதியில் தெரியவரும்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின்மீது நமக்குப் பெரும் அச்சம் தோன்றுகிறது.
எட்மண்டின் கோப்பைத் திறந்த பிறகு அதை உலகெங்கும் இணையத்தில் அதிக அளவிலான பார்வையாளர்களிடம்
கொண்டுசேர்க்கும் பணியை வின்ஸ்டன் செவ்வனே செய்கிறது. எட்மண்டின் கண்டுபிடிப்பு இந்த உலகையே புரட்டிப்போடப் போதுமானதாக இருக்கிறதா, இல்லையா என்பதை இறுதியில் வாசகர்கள் அறிந்துகொள்கிறார்கள்.
இரண்டு கேள்விகள்
‘எங்கிருந்து வருகிறோம்?’ ‘நாம் எங்கே செல்லப்போகிறோம்?’
விடையை நாவலின் இறுதிப் பகுதியில் எட்மண்டின் பல்ஊடக விளக்கம் கூறுகிறது. பிரபஞ்சத் தின் மைய நோக்கமே வெப்ப ஆற்றல் பரவலும் ஒழுங்கின்மையும்தான். ஒழுங்குபடுத்திக் குவிக்கப்பட்ட ஆற்றலைக் கொண்டு இந்தப் பிரபஞ்சம் தன் ஒழுங்கின்மையை விரித்துக்கொண்டே செல்கிறது. வெப்ப ஆற்றலைப் பரப்பும் வேலையை மிகவும் திறமையாகச்
செய்யக்கூடியவை உயிரினங்கள். இந்தத் தேவை காரணமாகத்தான் உயிரினங்கள் தோன்றின என்று
பல்வேறு அறிவியலாளர்களின் பேட்டிகளுடன் செல்கிறது எட்மண்டின் காணொலி. டார்வினின் கோட்பாடு பரிணாமக் கொள்கையை விளக்குகிறது என்றால் இந்தக் கோட்பாடு உயிர்கள் உருவான விதத்தை விளக்குகிறது. ஆக, உயிர்களின் தோற்றத்தில் கடவுளுக்குப் பங்கு இல்லை என்கிறார் எட்மண்ட்.
அடுத்து, ‘எங்கே செல்லப்போகிறோம்?’ என்ற கேள்விக்கான பதில். எட்மண்டின் ‘நிகழ்போலி’ (simulation) விவரிப்பு விலங்கினப் பரிமாணத்தின் 10 கோடி ஆண்டுகளைக் காட்டுகிறது. வெவ்வேறு காலகட்டத்தில் எந்தெந்த உயிரினங்கள் இந்த
பூமியை ஆக்கிரமிப்பு செலுத்தின என்பதை விவரிப்பின் வரைபடம் காட்டுகிறது. 6.5 கோடி ஆண்டுகளுக்கு
முன்பு பூமியை டைனசோர்கள் ஆக்கிரமித்திருந்ததை திரையில் தெரியும் வரைபடத்தில் குமிழ்குமிழான
புள்ளிகள் நமக்குக் காட்டுகின்றன. அப்படியே வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு உயிரினங்கள்.
மனித இன ஆக்கிரமிப்பு என்பது 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குவதை நீலநிறக் குமிழ்கள்
தெரிவிக்கின்றன. கடந்த 2000-வது ஆண்டுவரையும் அந்த ஆதிக்கம் அப்படியே தொடர்கிறது. கி.பி.
2000-லிருந்து சிறிய கரும் புள்ளி திரையில் தோன்றுகிறது. 2050-க்கு, அதாவது எதிர்காலத்துக்கு
நகர்த்தும்போது திரை முழுக்க அந்தக் கருநிறம்தான் ஆக்கிரமித்திருக்கிறது. அது மனித
இனத்தை அழித்துவிடவில்லை; உட்கிரகித்துக்கொண்டிருக்கிறது. அது என்ன புதிய உயிரினம்
என்று கேட்கிறீர்களா? துல்லியமாகச் சொல்லப்போனால் அது உயிரினம் இல்லை, தொழில்நுட்பம் (Technium). உயிரினங்களை விட வேகமாக அதுவும் பரிணாமமடைகிறது. ஆற்றலை உட்கிரகித்துக்கொண்டு ஆற்றலை வெளியிட்டு ஆற்றல் பரவலுக்கு உதவுகிறது. ஆக, இயற்கையில் இதுவரை அறியப்பட்டுள்ள
ஆறு பெரும் உயிரினப் பிரிவுகளுடன் ஏழாவதாக ‘தொழில்நுட்பம்’ என்ற பிரிவும் சேர்ந்திருக்கிறது
என்கிறார் எட்மண்ட். பலரும் இதைக் கணித்திருந்தாலும் தான்தான் அதன் ‘மாதிரி’யை உருவாக்கியதாக
எட்மண்ட் கூறுகிறார். மனித இனமும் தொழில்நுட்பம் என்ற இனமும் இரண்டறக் கலந்துவிடும்
என்கிறார் எட்மண்ட். எப்போதும் கைபேசி, காதில் இசையொலிக்கருவி, கண் முன் கணினி என்று
நமக்கு வெளியில் தொழில்நுட்பத்தை வைப்பது மட்டுமல்ல. நம் மூளையில் கணினிச் சில்லுகளைப்
பொருத்தத் தொடங்கியிருக்கிறோம். இன்னும், கொழுப்பை அகற்றும் விதத்தில் ரத்தத்தில் செலுத்தி
நமக்குள்ளேயே நிரந்தரமாகத் தங்கும் ‘நானோபோட்’கள், மரபணு செம்மையாக்கம் என்று தொழில்நுட்பம்
நமக்குள் ஊடுருவுவதைப் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் எட்மண்ட் கூறுகிறார்.
பிரகாசமான எதிர்காலம்?
ஹாலிவுட்டில் எடுக்கப்படும் ‘டிஸ்டோபியன்’ படங்களைப் போல ஒரு எதிர்காலத்தை எட்மண்ட்
சொல்லப்போகிறார் என்று நினைத்தால் அதற்கு மாறாக, பிரகாசமான ஒரு எதிர்காலத்தை எட்மண்ட்
முன்வைக்கிறார். எதிர்காலத் தொழில்நுட்பம் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாட்டை ஒழித்து, அனைவருக்கும் உணவு, குடிநீர், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களற்ற நிலை, சூழலை மாசுபடுத்தாத எரிசக்தி போன்றவற்றைத் தரும் என்று எட்மண்ட் வாயிலாக டான் பிரவுன் நம்பிக்கையளிக்கிறார். கடும் உழைப்பிலிருந்து தொழிலாளர்களை விடுவிக்கும் என்கிறார். இப்படியெல்லாம் நடந்தால் நல்லதுதான். ஆனால், மனித குல வரலாற்றிலேயே தொழில்நுட்பத்தில் உச்சநிலையை அடைந்திருக்கும் கடந்த நூறு ஆண்டுகளாகத்தானே உலகில் வறுமை, ஏற்றத்தாழ்வு, சூழல் மாசுபாடு போன்றவை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்திருக்கின்றன! மதங்களும் கடவுள்களும் மனித குலத்தை விடுவிக்கவில்லை என்பதும் பேரழிவுகளுக்குக் காரணமாகவும் இருந்திருக்கின்றன. ஆனால், மதங்களின், கடவுள்களின் இடத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் வந்து உட்கார முயலும் தொழில்நுட்பமும் (அதாவது அறிவியல்) அதையேதானே செய்கிறது. மதமும் அறிவியலும் முதலாளித்துவத்துக்கான கருவிகளாக இங்கு மாற்றப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை டான் பிரவுன் கண்டுகொள்ளவே இல்லை.
தொழில்நுட்பம் குறித்த சிறிய அளவிலான விமர்சனம் என்பது செயற்கை நுண்ணறிவுத்
தொழில்நுட்பம் குறித்து நாவலில் வெளிப்படும் அச்சம் மட்டுமே. ஆனால், இதையெல்லாம்
ஸ்டான்லி குப்ரிக்கின் ‘2001- எ ஸ்பேஸ் ஒடிஸி’ உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான அறிவியல்
புனைகதைகளிலும் நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.
“இந்த பூமியையே அழித்துவிடக்கூடிய பல்வேறு தொழில்நுட்பங்கள் நம்மிடையே உள்ளன; எனினும் நாம் இன்னும் அப்படிச் செய்யவில்லைதானே. இந்த உலகில் வெறுப்பைவிட அன்பு அதிகமாக இருக்கிறது; அழிவுச் சக்தியை விட ஆக்க சக்தி அதிகமாக இருக்கிறது… வெறுப்பைவிட அன்பு பல்கிப்பெருகிக்கொண்டே இருக்கிறது, ஆனால் அதை வெளிப்படுத்தும் வழிமுறையைத்தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும்” என்று ஒரு பேட்டியில் டான் பிரவுன் கூறியிருப்பது நெகிழ்ச்சியூட்டுகிறது. இதுவரை பூமியைத் தொழில்நுட்பம் துடைத்தழித்துவிடவில்லை என்றாலும் அந்த சாத்தியம் இன்னும் இருந்துகொண்டிருக்கிறதுதானே! மதம், அறிவியல் இரண்டையும்விட மேலானது மட்டுமல்ல, அவற்றுக்கு அடிப்படையாக இருக்க வேண்டியதும் ‘அறம்’ அல்லவா!
மேலும், கடவுளின் இடத்தைத் தகர்த்துவிடுபவை என்று எட்மண்ட் முன்வைக்கும் கண்டுபிடிப்புகளைப் பார்த்து மத அடிப்படைவாதிகள் சிரிக்கக்கூடும். வெப்ப ஆற்றல் பரவலுக்காகத்தான்
உயிர்கள் தாமாகத் தோன்றின என்றால் அந்தச் சூழலை உருவாக்கியது யார் என்ற கேள்வியைத்தான் ‘கடவுள் படைத்த உலகு’ (Creationism) கோட்பாட்டுக்காரர்கள் இயல்பாகவே முன்வைப்பார்கள். கடவுளை மறுப்பதற்கான பல மடங்கு வலுவான ஆதாரங்களை அறிவியலாளர்கள் எத்தனையோ பேர் முன்வைத்திருக்கிறார்கள். கோப்பர்நிக்கஸ், கலீலியோ, டார்வின் போன்றோரின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னும் மதங்களின், கடவுளர்களின் செல்வாக்குக்குக் குறைவு ஏற்பட்டிருக்கிறதா என்ன? மேலும், மதங்களோ அறிவியலோ இரண்டும்
நிறுவனமயமாவதில்தான் சிக்கலே இருக்கிறது. நாட்டார் தெய்வங்களால் பேரழிவுப் போர்கள்
ஏற்பட்டதாகச் சரித்திரம் இல்லையல்லவா! மேலும், (நான் உட்பட) எவ்வளவுதான்
பகுத்தறிவின், அறிவியலின் முக்கியத்துவத்தைப் பேசினாலும் இந்த உலகில் மனித இனம்
இருக்கும்வரை ஆன்மிகத் தேவை இருக்கத்தான் செய்யும். அந்த இடத்தை அறிவியலால் தகர்க்கவே
முடியாது.
தோற்றுவாயின் தோற்றுவாய்
உயிர்களின் தோற்றத்துக்கு வெப்ப ஆற்றல் பரவல்தான் காரணம் என்ற கருதுகோளை ஜெரெமி இங்கிலாந்து என்ற இளம் அறிவியலாளர் சமீப காலமாக முன்வைத்துவருகிறார். இன்னும் நிரூபிக்கப்படாத ஒரு கருதுகோளை எட்மண்ட் தன் கண்டுபிடிப்பாக, அதுவும் உலகையே புரட்டிப்போடும் கண்டுபிடிப் பாக முன்வைப்பதுபோல் டான் பிரவுன் எழுதியிருப்பது வேடிக்கை! ‘எங்கு செல்கிறோம்?’ என்பதற்கான பதிலும் அப்படித்தான். எதிர்காலவியல் நிபுணர் கெவின் கெல்லி முன்வைத்த கோட்பாட்டைத்தான் எட்மண்ட் வாயிலாக டான் பிரவுன் முன்வைக்கிறார்.
ஆக, கதை நெடுக டான் பிரவுன் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை அவர் அளிக்கும் விடைகள் பூர்த்திசெய்யவில்லை என்பதே உண்மை. டான் பிரவுனின் நாவல்கள் விற்பனையில் அடைந்திருக்கும்
உச்சத்தின் சிறு உயரத்தையாவது அவரது கற்பனை எட்டிப்பிடிக்காததன் விளைவுதான் ‘ஆரிஜின்’
நாவல். உலகத்தையே புரட்டிப்போடும் கண்டுபிடிப்பை முன்வைப்பதற்கு இரண்டு சாத்தியங்கள்தான் இருக்கின்றன. ஒன்று, கலீலியோ, நியூட்டன், டார்வின், ஐன்ஸ்டைன் போன்றோருக்கு நிகரான ஒரு விஞ்ஞானியாக டான் பிரவுன் இருக்க வேண்டும்; இல்லையென்றால், அசாத்தியமான கற்பனையைக் கொண்ட படைப்பாளியாக இருக்க வேண்டும். இந்த இரண்டிலும் சேராத ஒரு மூன்றாவது சாத்தியத்தைத்தான் டான் பிரவுன் தேர்ந்துகொண்டிருக்கிறார்: கெட்டிக்காரத்தனம்!
தி டா வின்சி கோடு X ஆரிஜின்
‘தி டா வின்சி கோடு’
நாவலுக்கும் ‘ஆரிஜின்’ நாவலுக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. எந்த
ஆதாரங்களை வைத்துக்கொண்டு ‘தி டா வின்சி கோடு’ நாவலைத் தான் எழுதியதாக டான்
பிரவுன் கூறினாரோ அந்த ஆதாரங்களில் சில போலியானவை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.
ஆயினும், அதில் சொல்லப்பட்டிருந்த ஏனைய விஷயங்கள் வாசகர்கள் மத்தியில் பெரும்
ஆச்சரியத்தை ஏற்படுத்தின. ரகசியக் குழுக்கள், சடங்குகள் போன்றவற்றைத் தாண்டி
‘புனிதப் பெண்மை’ குறித்து அந்த நாவல் பேசியது மிகவும் முக்கியமானது. நிறுவனமயமாக்கப்பட்ட
கிறிஸ்தவம் (அதாவது இயேசு கிறிஸ்துவின் கிறிஸ்தவம் அல்ல) எப்படிப் பெண்ணைப்
பாவத்தின் மூலாதாரமாகப் பார்க்கிறது, காலகாலமாகப் பெண்ணை எப்படி ஒடுக்கிவருகிறது
என்பதைப் பற்றிய தீவிரமான விவாதங்களை ‘தி டா வின்சி கோடு’ எழுப்பியது. வெகுஜன,
பரபரப்பு நாவல்தான் என்றாலும் டான் பிரவுனின் கற்பனையானது அந்த நாவலில் பல்வேறு
புள்ளிகளை இணைத்து, வாசகர்களுக்கு சுவாரசியமான அனுபவத்தையும் கொடுத்தது. ‘ஆரிஜின்’
நாவலிலோ கற்பனையை விடுத்துவிட்டு உண்மையான அறிவியல் கருதுகோள்கள்களின்
அடிப்படையில் புள்ளிகளை இணைக்க டான் பிரவுன் முயன்றிருக்கிறார். அதற்காக, ஏராளமான
பரபரப்பையும் சேர்த்திருக்கிறார். புள்ளிகளைக் கற்பனை கொண்டு அல்லாமல் தகவல்களைக்
கொண்டு இணைக்க முயன்றதால் வெகுஜன வாசிப்பு அளவுகோல்களிலும் நாவல்
வீழ்ந்துவிடுகிறது.
‘தி டா வின்சி கோடு’ நாவல் அளவுக்கு எதிர்ப்பு உருவாகும் என்ற கற்பனையில் டான் பிரவுன் இந்த நாவலை எழுதியிருக்கக்கூடும் என்று சர்வநிச்சயமாகத் தெரிகிறது! ஆனால், இணையம் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் நீக்கமற வியாபித்திருக்கும் இன்றைய உலகில் இன்னும் விக்கிபீடியா தன்மையில் தன் நாவல்களை டான் பிரவுன் எத்தனை காலம் எழுதிக்கொண்டிருக்கப்போகிறார் என்பதுதான் தெரியவில்லை.
-நன்றி: ‘தி இந்து’ தமிழ்.
இந்த மதிப்புரையை வாசிக்கும்போது, அவர் வாசகர்களின் எண்ணங்களுக்கேற்ப தன் நிலையை மாறி எடுத்திருக்கலாமெனத் தோன்றுகிறது.
ReplyDelete