Thursday, June 29, 2017

கும்பலாட்சி!

கிராஃபிக்ஸ்: ரெமோ

    மனஷ் ஃபிராக் பட்டாச்சார்ஜீ
      (‘தி இந்து’ தமிழ் நாளிதழில் 29-06-2017 அன்று என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)

பிரெஞ்சு தத்துவ மேதை சார்த்தர் இப்படிச் சொன்னார்: “பாசிஸம் என்பது அதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கொண்டல்ல, அவர்களை எந்த விதத்தில் அது கொல்கிறது என்பதை வைத்துத்தான் வரையறுக்கப்படுகிறது.” இந்தியாவின் பொதுவெளிகளைக் கும்பல்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. கும்பல் கொலை என்பது அரசியல் கருத்து வெளிப்பாடுகளின் மிகக் கொடூரமான வடிவம். சமீபத்திய சம்பவம், மதுராவுக்குச் செல்லும் ரயிலில் கடந்த 22-ம் தேதி நடந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை வரவிருந்த ரம்ஜானுக்கென்று புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக டெல்லிக்குச் சென்றுவிட்டு வீடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஹஃபீஸ் ஜுனைத் என்ற 16 வயது முஸ்லிம் பையன் ஒரு கும்பலால் கொல்லப்பட்டான். அவனது மூன்று சகோதரர்களும் தாக்கப்பட்டார்கள். அந்த நான்கு முஸ்லிம் இளைஞர்களிடமும் அவர்கள் உட்கார்ந்திருந்த இருக்கைகளைத் தங்களுக்குத் தரும்படி 15 பேர் அடங்கிய கும்பல் ஒன்று கேட்டதாகத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இருக்கைகளைத் தர மறுத்ததால் மதரீதியிலான வசைகள் அவர்கள் மீது வீசப்பட்டிருக்கின்றன. மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் என்று அவர்கள் வசைபாடப்பட்டிருக்கிறார்கள்.

கடுமையாகத் தாக்கப்பட்டு, ரயில் நிலையம் ஒன்றுக்குள் ரயில் நுழைந்தபோது வெளியேயும் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள். உடன் பயணிக்கும் பயணிகளே மூர்க்கமான வன்முறைக் கும்பலாக மாறும்போது பயணம் என்பதன் அர்த்தமே நாசமாகிறது. பாசிஸ அரசின் வருகையைவிட ஒரு சமூகமே பாசிஸச் சமூகமாக மாறுவதுதான் மிகவும் மோசமான தார்மீகப் பிரச்சினை. பாசிஸ அரசாங்கத்தை ஒரு சமூகம் எதிர்த்துப் போராட முடியும். ஆனால், ஒரு பாசிஸ சமூகத்தை எப்படி எதிர்த்துப் போராடுவது?

பிரச்சினையில் குறுக்கிட்டுத் தங்களைக் காப்பாற்றுமாறு போலீஸ்காரர்களிடம் தான் கெஞ்சியும் அவர்கள் கேட்கவில்லை என்று இந்தக் கொலைவெறித் தாக்குதலில் உயிர் தப்பிய பையன்களில் ஒருவன் பத்திரிகையாளர்களிடம் சொல்லியிருக்கிறான். இந்தச் சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜாஃபர் ஹுசைன் என்ற சிபிஐ (எம்.எல்.) இயக்கத்தைச் சேர்ந்த 55 வயது செயல்பாட்டாளர் உள்ளூர் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். திறந்த வெளியில் மலம் கழித்துக்கொண்டிருந்த பெண்களை - அவரது மனைவி, மகள் உட்பட - அந்த அதிகாரிகள் படம் எடுத்துக்கொண்டிருந்ததைத் தடுத்ததற்காக அவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். ‘தூய்மை இந்தியாபிரச்சாரத்தைச் சேர்ந்த அதிகாரிகளான அவர்கள், அங்குள்ள பெண்களை அவமானப்படுத்துவதன் மூலம் பொதுக் கழிப்பறைகளை அவர்கள் பயன்படுத்துவதற்கு ஊக்குவிப்பதற்காகப் படம் எடுத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து வெளியிட்ட ட்வீட்டுகளில் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவும் உதய்பூரின் காவல்துறைத் தலைவரும் ஜாஃபரின் படுகொலையைஜாஃபரின் மறைவுஎன்றே (டிமைஸ்) குறிப்பிட்டிருந்தார்கள். “கிடைத்திருக்கும் அறிவியல்பூர்வமான தடயங்கள் ஏதும் கொலை நடந்திருப்பதாகக் குறிக்கவில்லைஎன்று காவல் துறைத் தலைவர் ட்விட்டரில் சொல்லியிருக்கிறார். ஆய்வகத்தில் தயாரிக்கப்பட முடியாததான மனித சாட்சியம் சொல்வதோ வேறு ஒன்றை.

துயரமானது, விரும்பத்தகாதது

முஸ்லிம்கள், தலித்துகள் மீது தொடர் தாக்குதல்கள் கும்பல் கொலைகள் விஷயத்தில் அதிகாரத் தரப்பு பட்டும் படாமலும் நடந்துகொள்வதென்பது புதிய விஷயமல்ல. 2015 செப்டம்பர் மாதம், தாத்ரி என்ற ஊரில் முகம்மது அக்லக் என்பவர் பசுவைக் கொன்றுவிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில், ஒரு கும்பல் அவரை அடித்துக் கொன்றது. அக்லக்கின் படுகொலை, ‘துயரமானது, விரும்பத்தகாததுஎன்று பல நாட்கள் கழித்து பிரதமர் மோடி குறிப்பிடுகிறார். மத்திய அரசுக்கும் அதற்கும் எந்தப் பங்கும் இல்லை என்றும் உடனடியாக விளக்கம் தந்துவிடுகிறார். எந்தப் பங்கும் இல்லை என்பதும், எந்தப் பொறுப்பும் இல்லை என்பதும் வேறு வேறு அல்லவா! “போலி -மதச்சார்பின்மையை பாஜக எப்போதுமே எதிர்த்துவந்திருக்கிறது. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான ஒரு பிரச்சினையை நாம் எதிர்கொண்டிருக்கும் இன்று, அதே விவாதம் மறுபடியும் மேலெழுந்திருக்கிறது. விவாதங்கள் மூலம்தான் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்என்றும் இது குறித்து பிரதமர் பேசினார்.

முன்னுக்குப் பின் முரணாக அவர் பேசியிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அவர் வருத்தம் தெரிவித்திருக்கும் தொனியின் அளவுக்கு, பிரச்சினையைத் தீர்ப்பது குறித்துப் பேசியிருக்கும் தொனி அவ்வளவு இயல்பாக இல்லை. இந்தப் பிரச்சினை வெறுமனே துரதிர்ஷ்டவசமானது அல்ல; ஆனால் அரசியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டது; மேலும் இது வெறுமனே ஒரு நிலைமை அல்ல, ஒரு குற்றம். குற்றவாளிகளைத் தண்டிப்பது குறித்து மௌனம்தான் நிலவுகிறது.

போலி-மதச்சார்பின்மை

கும்பல் கொலை என்பது விவாதத்துக்குரிய சம்பவம் மட்டுமல்ல, நீதியும் நம்பிக்கையுறுதியும் வழங்கப்பட வேண்டியதும்கூட. பசுப் பாதுகாப்பு என்ற பெயரில்சமூக விரோத நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடுவது குறித்த தன் கருத்தை 2016 ஆகஸ்ட் மாதம் பிரதமர் வெளியிடவும் செய்தார். ஆயினும், பசு குண்டர்கள் ஒரு புனிதச் சட்டத்தைக் காப்பாற்றும் தார்மீகக் கண்காணிப்பாளர்களாகத் தங்களைக் கருதிக்கொண்டிருப்பது போல்தான் தோன்றுகிறது. அரசும் அவர்களுடைய கற்பனையைக் கலைப்பதற்கு ஏதும் செய்ததைப் போலத் தெரியவில்லை. ‘போலி - மதச்சார்பின்மைகுறித்து பிரதமர் முன்பு குறிப்பிட்டது இந்தச் சூழலில் சற்றே குழப்பம் ஏற்படுத்துவது போல் இருக்கலாம். ஆனால், பிரச்சினையின் அடிநாதத்தை அது சொல்லிவிடுகிறது.

சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நடுநிலைமை என்ற நிலைப்பாட்டைத் தாண்டியும் சிந்தித்திருப்பதால்தான் இந்தியாவின் மதச்சார்பின்மை என்ற கருத்தாக்கத்தின் நோக்கம் பலராலும் பாராட்டப்படுகிறது. ஆனால், தீவிர வலதுசாரி இந்துக்களைப் பொறுத்தவரை அதுதாஜா செய்வதற்கான’ ‘போலி மதச்சார்பின்மையின் கோட்பாடு. இதற்கு மாறாக, மதச்சார்பின்மை குறித்த மதச்சார்பின்மை அல்லாத கோட்பாடு ஒன்றை பாஜக முன்வைக்கிறது. அதிகாரத்துக்கு வந்ததிலிருந்து பாஜக அரசு, பெரும்பான்மைவாத அரசியலுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படும் பல ஆபத்துகளைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. மாணவர்கள், எழுத்தாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் என்று அரசாங்கத்தின் சித்தாந்தத்துக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்துபவர்கள் எல்லாம்தேச விரோதமுத்திரை குத்தப்படுகின்றனர். பிரிவினைக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டார். சரியாக ஓர் ஆண்டுக்குப் பிறகு, டெல்லி பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் நடத்திய மாணவர்கள் மீதும் ஆசிரியர்கள் மீதும் ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் நிகழ்த்தினார்கள்; அமைதியாக நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியையும் வன்முறையைப் பிரயோகித்துக் கலைத்தனர்; பேராசிரியர் - மாணவர் என்று யாரையும் விட்டுவிடாமல் அச்சுறுத்தவும் தாக்கவும் செய்தனர். இவையெல்லாம், பொதுவெளியில் பரவும் கும்பல்-கொலை மனோபாவத்தின் தெளிவான அறிகுறிகளே.

சட்டத்தின் இடத்தில்

தேசவிரோதமுத்திரையைப் பலர் மீது குத்தி அவர்களை அவதூறு செய்வது, பீதியையும் வெறுப்பையும் தீ போலப் பரவச் செய்து, கும்பல் மனப்பான்மை வளர்வதற்கு உந்துவிசையாகவும் ஆகிவிடுகிறது. கும்பல் கொலை என்பது பழங்குடித்தன்மையின் நவீன வடிவமாகிறது. மதம், இனம், சாதி, சித்தாந்த அடிப்படைகளில் எதிரிகள் அழிக்கப்படுவதற்காகக் கட்டம் கட்டப்படுகிறார்கள். பொதுமக்கள் அரசாங்கமாகவும் சட்டமாகவும் ஒரே சமயத்தில் மாறி, யாரை ஏன் எப்படிக் கொல்வதென்று அவர்களே முடிவுசெய்துகொள்ளும் அச்சுறுத்தும் சூழல் இது!

சட்டத்தின் இடத்தில் உணர்வுகள், நம்பிக்கைகள் போன்றவை ஆட்சிசெய்கின்றன. ஜூன் 23-ம் தேதி நகரில் ஜாமியா மசூதிக்கு அருகே முஹம்மது அயூஃப் பண்டித் என்ற காவல் துறை துணைக் கண்காணிப்பாளர், கும்பல் ஒன்றால் கொல்லப்பட்டதும்கூட தற்போதைய மோசமான சூழலின் இன்னொரு எதிர்வடிவம்தான். மக்கள் தங்கள் தார்மீகப் பிரக்ஞையையே இழந்துவிட்டார்கள். நம்பிக்கைகள், உணர்வுகள் போன்றவற்றுக்கும் குற்றத்துக்கும் இடையிலான வேறுபாட்டை ஒரு சமூகம் அழித்துவிடுமானால், அது மிக விரைவாகத் தன்னைத் தானே மூர்க்கமாக ஆக்கிக்கொள்ளும் சமூகமாக மாறிவிடும்.

கண்காணிப்பு விளையாட்டு

கும்பல் கொலை என்பது ஒரு கண்காணிப்பு விளையாட்டாக ஆகிவிட்டது என்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2016 மார்ச் மாதத்தில், கால்நடை வியாபாரிகளான இரண்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டு ஒரு மரத்தில் தொங்க விடப்பட்டிருந்தனர். பசு குண்டர்கள்தான் அப்படிச் செய்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அதே ஆண்டு ஜூலை மாதத்தில் குஜராத்தின் உனா மாவட்டத்தில், இறந்துபோன பசுவின் தோலை உரித்தார்கள் என்று ஏழு தலித்துகளைப் பசு குண்டர்கள் மூர்க்கமாக அடித்து நொறுக்கினார்கள். மிகச் சமீபத்தில், இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம், பசு மாடுகளைக் கொண்டுசென்றார் என்று சொல்லி, ராஜஸ்தான் மாநிலத்தில் பெஹ்லூ கான் என்பவரை ஒரு குழு தாக்கியது. படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் பத்திரிகையாளர்களிடம் இப்படிச் சொல்கிறார்: “பசு மாடுகளை வாகனங்களில் கொண்டுசெல்வது சட்டவிரோதம்; ஆனால், மக்கள் இதை அலட்சியப்படுத்துவதால் பசுப் பாதுகாவலர்கள் இதுபோன்ற கடத்தல் செயல்பாடுகளைத் தடுக்க முயல்கிறார்கள்.” அவர் பேசியிருப்பதன் தர்க்கம் நம்மை உறையச் செய்கிறது: கும்பலால் கொல்லப்பட்டவர்கள் சட்டத்தின் தவறான முனையில் நிற்கிறார்கள். படுகொலை செய்த கும்பலோ, சட்டத்தைக் காப்பவர்கள். சட்டத்தைக் காக்க வன்முறையைப் பயன்படுத்துவது சட்டபூர்வமானது. நம் தேசத்தின் புனித உடலைப் பசு அடையாளப்படுத்துகிறது. ஆகையால் சந்தேகத்துக்கு இடமான வகையில் யாரும் நடந்துகொள்வதாகத் தோன்றினால்கூட அவர்களுக்கு எதிராகச் சட்டத்துக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அமைச்சரின் தீர்ப்பானது, சட்டத்தின் அனைத்துக் கருதுகோள்களையும் தலைகுனியச் செய்திருக்கிறது. ஒரு கொலைப் பழியிலிருந்து தங்களை அரசு காப்பாற்றும் என்பதை மக்கள் உணர்வார்களென்றால் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும் துணிச்சல் அவர்களுக்கு வந்துவிடுகிறது. “சட்டத்தின் மூலம் என்னை நேசிக்கும்படி ஒருவரைச் செய்துவிட முடியாது என்பது உண்மைதான்; ஆனால் அவர் என்னைக் கொன்றுவிடாதபடி சட்டத்தால் தடுக்க முடியுமல்லவா!” என்று 1963-ல் மேற்கு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோது மார்ட்டின் லூதர் கிங் சொன்னார்; அதுபோல்அறத்தைச் சட்டமாக்கிவிட முடியாது. ஆனால், ஒருவருடைய நடத்தை என்பது கட்டுப்படுத்தக்கூடியதே.”

அராஜக நிலையே சட்டபூர்வமானதா?

முஸ்லிம்களுக்கும் தலித் மக்களுக்கும் எதிரான தொடர் தாக்குதல்கள் நமக்குச் சொல்வதென்ன? “அடிமை என்பவர் ஒரு மனிதர் என்ற வரையறைக்குள்ளேயே வர மாட்டார் என்று ரோமானியச் சட்டம் அறிவித்தது. ரோமானிய மதமோ இந்தக் கோட்பாட்டை ஏற்க மறுத்ததுஎன்றுதீண்டப்படாதவர்கள் அல்லது இந்தியச் சேரியின் குழந்தைகள்என்ற நூலில் அம்பேத்கர் குறிப்பிட்டிருப்பார். மேலும் சொல்கிறார், “தீண்டப்படாதவரை இந்து மதச் சட்டம் ஒரு மனிதராய்க் கருதுவதில்லை என்பதால், அவரை நட்புறவுக்குத் தகுதியான ஒரு மனித உயிராகப் பார்க்க இந்து மதம் மறுத்தது.” ஒருவரை ஒரு நபராய் அங்கீகரிக்க மறுப்பது என்பது கும்பல் கொலையின் மைய அம்சம்.

கொல்லப்படுபவரின் உடலுக்கு எந்தவிதமான தார்மீகச் சாராம்சமும் மறுக்கப்படுகிறது, உரிமைகள் அபகரிக்கப்படுகின்றன; இலகுவாகத் தாக்கப்படக்கூடிய விலங்கின் உடல் போல அவருடைய உடல் வெகு சாதாரணமாக ஆக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தார்மீக உணர்வை மறுப்பதுபொது மனசாட்சிஅல்லதுசமூக மனசாட்சிகுறித்த உணர்வை இந்துக்கள் வளர்த்துக்கொள்ள முடியாமல் தடுத்துவிடுகிறது. ஆகவே, கும்பல் கொலை போன்ற குற்றங்களெல்லாம் குற்றவுணர்வு என்பது துளியும் இல்லாமல் நிகழ்த்தப்படுகின்றன. அம்பேத்கரின் வார்த்தைகளில் சொல்வதென்றால்இதுபோன்ற அராஜக நிலையே சட்டபூர்வமானது என்பதுபோல்அவர்களெல்லாம் நடந்துகொள்கிறார்கள். இந்தக் கும்பல் கொலையின் தேசியத்தில் முஸ்லிம்கள்தான் புதிய தீண்டப்படாதவர்கள். அவர்களின் வாழ்க்கையும் சித்தாந்தங்களும்தானே இந்து தேசிய செயல்திட்டத்தோடு முரண்படுவதோடு எதிர்க்கவும் செய்கின்றன.


இந்த ஆண்டின் மே மாதத்தில் டெல்லி போலீஸார் டெல்லி உயர் நீதிமன்றத்தால் கடுமையான கண்டனத்துக்கு உள்ளானார்கள். டெல்லி பல்கலைக்கழகத்தின் தலைமைப் பேராசிரியரான வேத குமாரியை ஏபிவிபி செயல்பாட்டாளர்கள் அச்சுறுத்தி, அவமானப்படுத்திய பின்னும் அவரது அலுவலகத்திலேயே ஒரு பணயக் கைதிபோல மாணவர்களால் அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோதும் காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாகத்தான் நீதிமன்றம் அப்படிக் கண்டித்தது. “நீங்கள் அவளை ஓநாய்களிடம் தூக்கியெறிந்திருக்கிறீர்கள். ஆடுகளிடமிருந்து பிரித்துவைக்காமல் அந்த ஓநாய்களுக்கு நீங்கள் தீனி போடுகிறீர்கள்என்ற விவிலிய வாசகங்கள்தான் இப்போது நினைவுக்கு வந்து நம்மை எச்சரிக்கின்றன. கொலைவெறிக் கும்பல்கள் ஓநாய்களைப் போலக் குழுவாகவே பதுங்கிப் பதுங்கி வேட்டையாடுபவை. தேசியவாதம் என்பது டார்வின் கோட்பாடு போன்றதொரு சக்தியாக இருந்து ஓநாய்களுக்குச் சாதகமாக விதியை ஆக்கும் என்றால், ஆடுகளைப் பொறுத்தவரை அது நீடித்த அச்சத்தையும் மரண பயத்தையும் உறுதிப் படுத்துகிறது என்றே அர்த்தமாகும். தனது பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்றபேரில் சட்டமும் அரசும் தேசத்தின் ஆடுகளைப் பலியிட்டுவிடக் கூடாது!
- நன்றி, ‘தி இந்து’, ‘தி வயர்’

No comments:

Post a Comment