Thursday, June 29, 2017

விழியற்றோரின் ரயில் நிலையம்



மனஷ் ஃபிராக் பட்டாச்சார்ஜீ

(‘தி இந்து’ தமிழ் நாளிதழில் என் மொழிபெயர்ப்பில் 29-06-2017 அன்று வெளியான கவிதை)

நான் பொய்சொல்லவில்லை. அப்போது 200 பேர் இருந்தார்கள்
-          அசோக், ஒரு கடைக்காரர்

அவர்கள் எதையும் காணவில்லை.
உடல்முழுக்க ரத்தம்பூசிய
அவ்விரு உடல்களையும் அவர்கள் கண்டிருக்கவில்லை.
அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட
அவ்விரு உடல்களையும் அவர்கள் கண்டிருக்கவில்லை.

தாம் கண்டதை அவர்கள் கண்டிருக்கவில்லை.
தாம் காணாததை அவர்கள் கண்டனர்.
அவர்களின் உறைந்த விழிகள்
ரகசிய கேமராக்களாயின.,
குற்றம் நடந்த இடத்திலிருந்து ஒளித்துவைக்கப்பட்டனவாய்,
வெளிச்சத்திலிருந்து ஒளித்துவைக்கப்பட்டனவாய்.

200 பேர் அதைக் காணாமல் இருந்ததற்கு
ஒரு காரணம்கூட இருக்க முடியாது.
ஒட்டுமொத்தமாய் எல்லோரும் பார்வையற்றவர்களாய் ஆகிவிடும்
சாத்தியம் தவிர.

அங்கே 200 உள்நோக்கங்களும்
ஒரே ஒரு ரகசியமும்
பார்வையற்றுப்போய்விடுவதென்ற முடிவும்.
ராட்சத ஸ்விட்ச் ஒன்றை யாரோ அணைத்துவிட்டார்கள்
மேடையையும்
ரத்தத்தின் நிறத்தையும்
மேலும் இருட்டாக்க.

தாம் கண்டதை அவர்கள் நம்பவில்லை
தாம் கண்டதிலிருந்து தப்ப முடியுமென்பதற்காக.

க்ளிக் செய்தவற்றைப் பத்திரப்படுத்தி வைப்பார்கள்
ஒரு இருட்டறையில்
தங்கள் குற்றவுணர்வை உயிர்ப்போடு வைத்திருக்க
அங்கே ரகசியமாக வந்து பார்ப்பார்கள்.

கண்ணைக் கட்டிக்கொண்ட 200 புகைப்படக்காரர்கள்
தங்கள் கண்களை விற்றுவிட்டார்கள்
சூரியனைக் கொன்ற
கைகளிடம்.
 - தமிழில்: ஆசை, நன்றி: ‘தி இந்து’ தமிழ் நாளிதழ்

1 comment:

  1. வேதனையின் உச்சத்தை வெளிப்படுத்தும் வரிகள். மொழிபெயர்ப்பு என்று கூறமுடியாத அளவில் அருமையாக உள்ளது.

    ReplyDelete