Tuesday, April 4, 2017

பாகீரதி: அற்புதங்களின் இதிகாசம்!


ஓவியம்: றஷ்மி
ஆசை

(‘தி இந்து’ நாளிதழில் 01-04-2017 அன்று வெளியான கட்டுரையின் மிக நீண்ட வடிவம் இது. கிட்டத்தட்ட ஆறு மடங்கு பெரியது.)
  
தமிழில் மகத்தான நாவல்கள் என்று சொல்லப்படுபவை பலவும் உண்மையிலேயே சாத்தியமுள்ள உயரத்தில் பறக்காமல் பாதுகாப்பான உயரத்தில் பறந்துகொண்டிருப்பவை என்றே தோன்றுகிறது. கீழே விழுந்தாலும் கவலையில்லை, எட்டும் வரை பறந்துபார்ப்போமே என்று முயன்றுபார்த்த நாவல்கள் வெகு குறைவு. அப்படிப்பட்ட நாவல்களின் மிகச் சிறிய பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது பா. வெங்கடேசனின் சமீபத்திய நாவலானபாகீரதியின் மதியம்’. மற்ற தமிழ் நாவல்களைவிட பல மடங்கு உயரத்தில் பறந்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.

இதுவரை இரண்டு கவிதைத் தொகுப்புகளும் ஒரு சிறுகதைத் தொகுப்பும், ஒரு குறுநாவல் தொகுப்பும், ‘பாகீரதியின் மதியம்நாவலுடன் சேர்த்து இரண்டு நாவல்களும் பா. வெங்கடேசன் எழுதியிருக்கிறார். இலக்கிய வட்டத்துக்குள் குறிப்பிடத் தகுந்த அளவில் கவனம் பெற்றிருந்தாலும்பாகீரதியின் மதியம்நாவலின் மூலம் தன்னை மிக முக்கியமானதொரு இலக்கிய நிகழ்வாக அறிவித்துக்கொள்கிறார்.

பெரியாரின் தொண்ணூற்றைந்தாவது பிறந்த நாளில், 1974-ல் கதை தொடங்குகிறது. மதுரையில் தீப்பொறி ஆறுமுகத்தின் கூட்டம் நடக்கும் வழியில் அந்தக் கூட்டத்தைக் கடக்க முடியாமல் போய் எரிச்சலில் பெரியாரை விமர்சிக்க ஆரம்பிக்கும் வாசுதேவன் என்ற பிராமண இளைஞனுக்கும் உறங்காப்புலி என்ற பெரியார்-திமுக தொண்டனுக்கும் இடையில் வாக்குவாதம் முற்றிப்போய், வாசுதேவனின் குடுமியை உறங்காப்புலி அறுப்பதில் போய் முடிகிறது. இந்தப் புள்ளியில் தொடங்கும் நாவல் கிளைவிரிக்கும் திசைகள் மாயாஜாலமானவை. தொடர்ச்சியான கொக்கிகளைப் போல சம்பவங்களும் பாத்திரங்களும் ஒன்றில் ஒன்று மாட்டிக்கொண்டு கதையை இழுத்துச்செல்கின்றன.


குடுமியை அறுத்துவிட்டு ஓடும் உறங்காப்புலிக்கும் வாசுதேவனின் மனைவி பாகீரதிக்கும் இடையில், அவளது மதிய உறக்கத்தின் கனவில் நிகழும் நிஜ சந்திப்பு. பாகீரதியின் பிரிய ஓவியர் ஜெமினியின் பாத்திரத்தை ஏற்கும் உறங்காப்புலி ஜெமினியைத் தேடி ஒசூர், கல்கத்தா, பேராச்சாப்பா போன்ற இடங்களில் மேற்கொள்ளும் பயணம், தன் இளம் வயதில் தான் பார்க்காமலேயே தவறவிட்ட பேரழகியை பாகீரதியின் புகைப்படத்தில் கண்டு அவளைத் தேடி மனநல மருத்துவரும் தன்னை டிராகுலாவாக நினைத்துக்கொண்டிருப்பவருமான அரங்கநாதன் நம்பி கிட்டத்தட்ட உறங்காப்புலியைப் போலவே  மேற்கொள்ளும் பயணம், முதலில் ஜெமினியையும் பிறகு வஞ்சம் தீர்ப்பதற்காக உறங்காப்புலியைத் தேடியும், சிறையிலிருந்து தப்பிச்சென்ற பிறகு மற்றுமொரு முறை உறங்காப்புலியைத் தேடியும் வாசுதேவன் நிகழ்த்தும் பயணம் என்று 700 பக்கங்களுக்கும் மேல் நீள்கிறது இந்த நாவல். இந்தியாவின், தமிழகத்தின் முக்கியமான சரித்திர நிகழ்வுகளுள் சிலவற்றையும் கதைப் போக்கில் நாவல் தொட்டுச் செல்கிறது. பெரியார், காந்தி, சாரு மஜூம்தார், ஓவியர் ஆதிமூலம் ஆகியோரின் பிரசன்னம்  கணிசமான இடங்களில் இருக்கிறது.    

காலமும் களமும்
இந்த நாவல் பல்வேறு காலப் பகுதிகளை உள்ளடக்கினாலும் பிரதானக் கதை நிகழ்வது சுதந்திர இந்திய வரலாற்றின் மிகக் கொந்தளிப்பான காலகட்டமான நெருக்கடி நிலையை ஒட்டிய ஆண்டுகள். தேசத்துக்கு மட்டுமல்லாமல் வாசுதேவன்-பாகீரதி-உறங்காப்புலி ஆகியோரின் வாழ்க்கையிலும் மிகவும் கொந்தளிப்பான காலகட்டம். பின்னோக்கிய வரலாற்றில் இடம்பெறும் காலப் பகுதிகள் முப்பதுகளையொட்டியவை, 1940-களின் இறுதிப் பகுதி, இந்தி எதிர்ப்புப் போராட்டம், நக்ஸலைட் எழுச்சி போன்றவை நடந்த 60-கள். எனினும், 1974-லிலிருந்து 1976 வரையிலான காலகட்டத்தில்தான் நாவல் பிரதானமாகப் பயணிக்கிறது.

மதுரைதான் இந்த நாவலின் பிரதான களம். தமிழகத்தில் ஒசூர், மெட்ராஸ், காருக்குறிச்சி ஆகிய ஊர்களும் நாவலின் போக்கில் இடம்பெறுகின்றன. நாவலின் பிற்பகுதியில் கணிசமான பக்கங்களை கல்கத்தாவும் பேராச்சாப்பா கிராமமும் எடுத்துக்கொள்கின்றன. இந்த ஊர்களுக்கும் பிரதேசங்களுக்கும் பயணிப்பதன் ஊடாக இந்தியச் சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் ஒரு கணிசமான பரப்பளவை நாவல் உள்ளடக்குகிறது.

அரசியலும் காதலும்
இலக்கியத்தில் காதலுக்கும் அரசியலுக்கும் ஏழாம் பொருத்தம். எனினும் ஒரே நேரத்தில்பாகீரதியின் மதியம்தமிழின் மிகச் சிறந்த காதல் நாவல்களுள் ஒன்றாகவும் மிகச் சிறந்த அரசியல் நாவல்களில் ஒன்றாகவும் உருவாகியிருப்பது பெரும் சாதனை.  அது மட்டுமல்லாமல் இந்த நாவலின் பிற்பகுதியில் சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு பிரக்ஞை மிக ஆழமாகவும் படைப்பூக்கத்துடனும்  இடம்பிடித்திருக்கிறது. ஓவியக் கலை இந்த நாவலின் அடிப்படைகளுள் ஒன்று. ஓவியங்களையும் ஓவியக் கருத்தாக்கங்களையும் கொண்டு பா. வெங்கடேசன் திறக்கும் பிரதேசங்கள் மிகவும் மர்மமானவை, அழகுகூடியவை. பிராமணர், பிராமணரல்லாதார், தலித், பழங்குடி என்று எல்லாத் தரப்புகளிலும் ஊடுருவிப் பாயும் அன்பு இந்த நாவலை மிக முக்கியமான சமூக ஆவணமாக ஆக்குகிறது.



பாகீரதி வந்தாள்
கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் தமிழ் வாசகர்களின் உள்ளத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டிருந்தமோக முள்யமுனாவின் இடத்தைப் பங்குபோட ஒருத்தி வந்துவிட்டாள். அவள்தான் பாகீரதி. தி. ஜானகிராமனின் ‘மோக முள்நாவல் வாசிக்கப்பட்ட அளவுக்குபாகீரதியின் மதியம்வாசிக்கப்படுமென்றால் பாகீரதி நிச்சயமாகப் பலரையும் பித்துபிடிக்க வைப்பாள். பாகீரதி கிட்டத்தட்ட ஒரு தேவதை போலப் படைக்கப்பட்டிருந்தாலும் யமுனாவுக்கும் பாகீரதிக்கும் மிக முக்கியமான வேறுபாடு ஒன்றுண்டு. யமுனா என்ன நினைக்கிறாள் என்பதை நம்மால் அநேகமாகத் தெரிந்துகொள்ள முடியாது. தூரத்தில் வைத்து ஆராதிக்கப்படுபவளாகத்தான் யமுனா இருக்கிறாள். ஆனால், பாகீரதி அப்படியல்ல. அழகு மட்டுமல்லாமல் அறிவும் நிரம்பியவள். எதையும் ஆழமாக விவாதிப்பவள். சிலப்பதிகாரம், மகாபாரதம் போன்ற காவியங்களை முன்வைத்து அதில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட இடத்தைக் கேள்வி கேட்பவள். உறங்காப்புலி மீதான காதல் குறித்துத் தான் குற்றவுணர்ச்சி கொள்ளத் தேவையில்லை என்று தன் கணவன் வாசுதேவனிடம்  தீர்க்கமாக வாதிடுபவள். சிறிதளவாவது அரசியல் பேசுபவள். உறங்காப்புலி என்ற ஜெமினி தன் முன் நீட்டிய நேசம் நிராகரிக்கப்பட முடியாத நேசம் என்றும் அதை நிராகரித்தால் வாசுதேவன் மீது தான் கொண்ட நேசத்தையே நிராகரித்ததுபோல் ஆகிவிடும் என்றும் சொல்கிறாள் பாகீரதி. மாதவியின் காதலைக் காரணம் காட்டிப் பேசுகிறாள். “ஒரு தாசியாக இருந்தும் வேறு ஆண்களைத் தேர்ந்துகொள்ளாத அளவிற்கு மாதவியின் மனதையும் அவளுடைய பிழைப்பிற்கான தொழிலையும்கூட மாற்றிவிடும் நேசத்தைக் கொடுக்க முடியுமானால் கோவலன் செய்தது தண்டனைக்குரிய குற்றமே அல்ல என்பதுதான் என் வாதம்என்கிறாள் பாகீரதி. காதலின் தவிர்க்க முடியாமை பற்றிப் பேசுகிறாள். காதலைப் பற்றிப் பேசும்போதுஅது மனிதர்களுடைய ஏதோவொரு கனவிற்கு நிஜ வடிவம் கொடுக்கிறது. அல்லது, அதுவே ஒரு கனவாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதனால்தான் மனிதர்களால் அதைத் திட்டமிடவோ கட்டுப்படுத்தவோ முடிகிறதில்லைஎன்கிறாள்.

பாகீரதிக்கு உறங்காப்புலி என்ற ஜெமினியின் மீது ஏற்பட்டிருக்கும் காதல் காரணமாக, தன் கணவன் வாசுதேவன் மீதான காதல் எள்ளளவும் குறையவில்லை என்கிறாள். சமூகம், மரபு போன்றவற்றைக் கொண்டு அளந்துபார்க்க முடியாத விசித்திரம் இது. சொல்லப்போனால், உறங்காப்புலியின் காதலைத் தான் மறுத்தால் வாசுவின் காதலைத் தான் மறுத்ததுபோல் ஆகிவிடும் என்கிறாள் பாகீரதி. “உங்களுடைய குறைகளல்ல வாசு இன்னொருவர்மீது நான் அன்பைப் பொழியக் காரணம், அன்பு பதிலிகளை ஏற்பதில்லை, அது பகிர்ந்தளிக்கவே விரும்புகிறது, அந்த வகையில் ஒருவேளை உங்கள் மட்டற்ற அன்பேதான் என் அன்பிற்காக ஓர் ஆண் கையேந்தி நிற்கையில் அதை மனமுவந்து அளிப்பதற்கான முன்னுதாரணத்தை எனக்கு அளித்ததோ என்னவோஎன்கிறாள் பாகீரதி.   

எனினும், இந்த நாவலின் மிகச் சிறந்த காதல் உரையாடல், பாகீரதிக்கும் உறங்காப்புலிக்கும் இடையிலோ, வாசுதேவனுக்கும் பாகீரதிக்கும் இடையிலோ, ஜெமினிக்கும் சவீதாவுக்கும் இடையிலோ நிகழவில்லை.  ஒருவருக்கொருவர் காதலர்கள் அல்லாத உறங்காப்புலி (வயது 28), சவீதா (வயது அறுபதுகள்) ஆகியோருக்கு இடையில் நிகழ்கிறது. ஜெமினியின் மரணத்துக்குப் பிறகு பிரமைகளால் பீடிக்கப்பட்ட சவீதா தன்னைச் சிறு வயதிலிருந்து உயிருக்கு உயிராக காதலிக்கும் விபின் பாஸ்வானாக உறங்காப்புலியைக் கண்டு பேச, சவீதாவின் மனதில் உள்ளதை வெளியில் கொண்டுவருவதற்காக மனதில் பாகீரதியை நினைத்துக்கொண்டு, ஆனால் பாகீரதியின் பெயர் தெரியாததால் பிரமீளா என்ற பெயரைச் சொல்லி உறங்காப்புலி உரையாடல் நிகழ்த்துகிறான்.

அந்த உரையாடலில் பாகீரதி பௌதீக ரூபத்தில் இல்லையேயொழிய, உறங்காப்புலியின் உரையாடல் முழுவதும் பாகீரதியை நோக்கியே நிகழ்த்தப்படுகிறது. அவனுக்கும் பாகீரதிக்குமான முதல் சந்திப்பைக் குறித்து இந்த உரையாடலில் சொல்லும்போது, ‘…பிரமீளா, மதிய நேரத்து உறக்கத்திலிருந்து தன்னையறியாமல் விழித்துக்கொண்டவளாக உன்னை நான் கண்டபோது ஒரு பெண் என்கிற உன் இயற்கையான அடையாளத்தை அழிக்கும் வலிமை கொண்டதாக உன்மேல் எந்த பந்தத்தின் அடையாளங்களையும் என்னால் உணர முடியவில்லை, அந்தக் கணத்தில் நம் காதல் நாம் சந்திப்பதற்கு முன்பிருந்தே நம்மிடையே நிலவிக்கொண்டிருந்தது என்பதே என்னுள் சுரந்த உணார்வாய் இருந்தது’ என்கிறான் உறங்காப்புலி. தன் காதல் கணவன் ஜெமினி உயிரோடு இருந்தபோது அவனுக்குத் தெரிந்தே தன்னைக் காதலித்த விபினைப் பற்றி முன்னுள்ள உறங்காப்புலியிடம் (பிரமை விபினிடம்) சவீதா இப்படிச் சொல்கிறார் “ஆம் விபின், நிஜ ஜெமினியை நான் கைப்பற்றிய பின் என் கனவுகளின் ஜெமினியை நீ எனக்குக் காட்டத் தொடங்கினாய், எனக்கு அந்த ஆச்சரியமும் சந்தோஷமும் திகட்டவேயில்லை, எனவேதான் உன்னை என்னால் தவிர்க்க முடியவில்லை, எந்தப் பெண்ணாலும் அது முடியாதென்றும் எனக்குத் தோன்றுகிறது.” திருமணம் என்ற வரையறையை மீறிய இந்தக் காதல்கள்தான் எவ்வளவு அற்புதமானவை. கணவர்களால் இந்தக் காதல்களின் தூய்மையை, அபூர்வத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறது என்பதுதான் இதிலுள்ள பேரழகு. “தம்பதிகளின் நேசம் எத்தனை உன்னதமாகவேயிருந்தாலும் அது காதலின் இலக்கணத்திற்குள் வருவதேயில்லை, ஏனென்றால் இலட்சியமும் யதார்த்தமும் பௌதீக ரீதியாகவே ஒருபோதும் இணைய முடியாதவை… சரியாகச் சொல்லவேண்டுமானால் திருமணத்திற்குப் பிறகுதான் ஒரு மனம் காதலின் உலகத்திலிருந்து தான் என்றென்றைக்குமாக வெளியேற்றப்பட்டுவிட்டோமென்பதைத் தெரிந்துகொள்கிறது, அந்த வகையில் பிரமீளா, நாமிருவரும் எந்தப் பிறவியிலும் காதலர்களென்றால் அதை நீ இன்னொருவனைத் திருமணம் செய்துகொண்டுதான் உறுதிப்படுத்தியாக வேண்டும்…” என்று உறங்காப்புலி சொல்வது காவியத்துக்கே உரிய உரையாடல்! தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் உலக இலக்கியத்திலேயே மிகவும் அரிதான பகுதிகளுள் ஒன்று இது.

பேராபுடீமாவும் பாகீரதியும்
நாவலின் பிற்பகுதியில் கூக் இனத்தினரின் குலதெய்வமான பேராபுடீமா வருகிறாள். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, மன்னன் ஒருவன் வல்லுறவு செய்வதற்காகத் துரத்தியபோது தன் கழுத்தை அறுத்துக்கொண்டு இறந்துபோன தெக்கூ என்ற பெண்ணுக்குத்தான் பேராபுடீமா என்ற பெயர் சூட்டப்படுகிறது. பித்யா நதிக்கரையில் கோயில் கொண்டிருக்கும் பேராபுடிமாவுக்கு அநூபா என்ற காவல் தேவதை துணை. காலப்போக்கினாலும் தேசப் பிரிவினையாலும் கவனிப்பாரற்ற நிலையில் இருக்கும் பேராபுடீமா, முதலாளி ஒருவரின் கனவில் வந்து முறையிடுகிறாள். அதையடுத்து பேராபுடீமா, பழங்குடி இனத்தின் தெய்வம் என்ற நிலையிலிருந்து பினித்ரா தேவி என்ற பிராமணப் பெயர் சூட்டப்பட்ட பெருந்தெய்வமாக உருவெடுக்கிறாள். முதலாளித்துவ யுகம் பழங்குடி தெய்வத்தை எப்படிப் பெருந்தெய்வமாக மாற்றுகிறது என்பதற்கான உதாரணமாக இதைக் கொள்ள முடியும். அப்படி மாறுவதை, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பழங்குடி இனத்தினரும் ஏற்றுக்கொள்கிறார்கள். பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையிலிருந்து புறப்பட்ட உறங்காப்புலியோ, சிறுதெய்வத்தையும் அது சார்ந்த கலாச்சாரத்தையும் முதலாளித்துவம் அபகரிக்கப்பார்க்கிறது என்று கடுமையாக எதிர்க்கிறான். பகுத்தறிவின் எல்லையைத் தாண்டி அவனுக்குள் பேராபுடீமாவின் தோழி தெய்வம் அநூபா இறங்குகிறாள் அல்லது அப்படி உறங்காப்புலி வரித்துக்கொள்கிறான்.

பேராபுடீமாவின் தொன்மம் பின்னிணைப்பிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. தனி நாவலாக விரித்துச் செல்லக்கூடிய சாத்தியங்களைக் கொண்ட கதை அது. எதைக் கண்டாலும் அஞ்சி ஒடுங்கக்கூடிய, தூக்கத்தின் மீது பெருவிருப்பம் கொண்ட விசித்திர தெய்வம் அவள். முதலாளித்துவ யுகத்தின் வன்மங்கள், உள்நோக்கங்கள் பற்றியெல்லாம் அவளுக்குத் தெரியாது. மக்கள் கூட்டத்தால் தான் கவனிக்கப்பட வேண்டும், தனக்குக் குறைவில்லாமல் வழிபாடுகள் நடக்கவேண்டும் என்றெல்லாம் அப்பாவித்தனமான சுயநலம் கொண்டவள் அவள். பேராபுடீமாவின் கதையும் பாகீரதியின் கதையும் சில ஒற்றுமைகளைக் கொண்டு இணைகோடுகளாக எதிரெதிர் திசையில் பயணிக்கின்றன. இருவருக்கும் தூக்கம் என்பது மையப்புள்ளி. ஆனால், பேராபுடீமா பழங்குடி தெய்வம் என்ற நிலையிலிருந்து பெருந்தெய்வம் என்ற நிலையை அடைகிறாள். பிராமணக் குடும்பத்துப் பெருந்தெய்வமான பாகீரதி அந்த அடையாளத்திலிருந்து விலகிப் பழங்குடி தெய்வ நிலைக்குரிய குணங்களை அடைகிறாள். சுருக்கமாகச் சொல்வதென்றாள் நாவலின் இறுதியில் பாகீரதி பேராபுடீமா ஆகிறாள். தேவதை நிலையிலிருந்து தொன்ம நிலையை அடைகிறாள். திரும்பத் திரும்ப நிகழும் சுழல் காலத்தின் மாயங்களுள் ஒன்றாக இது நிகழ்கிறது!

சிறுதெய்வம் பெருந்தெய்வமாவதன் முதலாளித்துவக் கோணம் நாவலில் அழகாகக் காட்டப்பட்டிருக்கிறது. வழக்கமான,  ‘முதலாளித்துவச் சதி’ என்ற ஒற்றைப்படைத் தன்மையில் இல்லாமல் பல்வேறு சாத்தியங்களை உள்ளடக்கும் கோணத்தில் காட்டப்பட்டிருக்கிறது. பேராபுடீமாவுக்குத் தன் தொழிற்சாலை வளாகத்தில் கோயில் எழுப்பவிருக்கும் உபேந்திர நாத் தத்தாவின் கனவில் உண்மையில் பேராபுடீமா வந்ததாக இங்க்ளய்யா நம்புகிறார், உறங்காப்புலி நம்பவில்லை. வாசகர் இதில் எந்தக் கோணத்தையும் வரித்துக்கொள்ளலாம். ஆனால், பேராபுடீமா முதலாளித்துவச் சொல்லாடல்கள் குறித்து ஏதும் அறியாத சிறுதெய்வம். அநூபா விவரமறிந்தவள். அவள் உறங்காப்புலிக்குள் இறங்கி(?), பேராபுடீமா பினித்ரா தேவியாக ஆக்கப்படுவதை எதிர்க்கிறாள்.  
 

விவாதங்கள், உரையாடல்கள்
சாகசம் போன்றதொரு புனைவின் பரப்பில் மாபெரும் உரையாடல்களை இந்த நாவல் உள்ளடக்கியிருக்கிறது. நாவலின் தொடக்கத்தில் நிகழும் பெரியாரிய X பிராமணிய உரையாடல்தான் ஒட்டுமொத்த நாவலுக்கும் விதைபோடுகிறது. குடுமியறுக்கப்படும் வாசுதேவனுக்கும் ஒரு பெரியாரியப் பின்னணி இருக்கிறது. அவனது தந்தை ஹாலாஸ்யம் பெரியாரை மானசிகத் தலைவராகக் கொண்டு தன் பிராமண அடையாளங்களைத் தூக்கியெறிந்தவர். வாசுதேவனோ குடுமியுட்பட, தன் தாத்தாவின் ஆச்சார அனுஷ்டானங்களைப் பின்பற்றும் நவீன யுக இளம் சனாதனி.

சிறு வயதிலிருந்தே பாகீரதியை வாசுதேவன் மனதில் விதைத்த ஹாலாஸ்யம், பாகீரதியைத் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வாசுதேவன் கூறும்போது பாகீரதி குடும்பத்தின் ஒழுக்கத்தை சந்தேகிக்கிறார். அந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்துவதற்காகப் பெரியாரை ஒரு முகமூடியாகப் பயன்படுத்துகிறார். வாசுதேவனுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்துவித்துத் தன் குடும்பத்தில் ஒரு புரட்சியைச் செய்வதுதான் தன் நோக்கம் என்று ஹாலாஸ்யம் வாதிடுகிறார். “… அன்பு தற்செயலாக ஒத்த சாதிக்குள் தோன்றிவிட்டால் ஒரே சாதியென்பதற்காகவே அதை வலிந்து பிரித்து மனதிற்குப் பிடிக்காத பெண்ணையோ ஆணையோ வேறொரு சாதியில் பார்த்துக் கல்யாணம் செய்து வைத்துச் சாதியை ஒழிக்க வேண்டுமென்றா அவர் (பெரியார்) சொல்கிறாரென்கிறீர்கள்,…?” என்று வாசுதேவன் வாதிடுகிறான்.

உண்மையான சாதி ஒழிப்பு நோக்கத்தைவிட பாகீரதியை வாசுதேவன் மணப்பதைத் தடுப்பதற்காக பெரியாரிய முகமூடியைத் தான் அணிந்துகொள்ள நேரிட்டதை எண்ணி உள்ளுக்குள் வெட்கிக் குமைகிறார் ஹாலாஸ்யம். ‘… அதுவரையிலான காலம் முழுவதும் ஒரு போலியாகவே தான் வாழ்ந்து முடித்திருப்பதைப் போலவும் பிராமணன் நம்பத்தக்கவனல்லன் என்று பெரியார் சொல்வதைக் கடைசியில் தானே உண்மையென்று நிரூபித்துவிட்டதைப் போலவுமான ஒரு பிரமையும் கூடவே தலையிலடிக்க அவர்இடிந்துபோய்விடுகிறார்.

வாசுதேவன் முன்வைக்கும் வாதங்களில் பலவற்றை ஏற்றுக்கொள்ள முடியாவிடினும், எல்லோரும் தங்களுக்கென்று ஒரு பெருமைமிகு வரலாற்றைக் கட்டமைக்க விரும்பும் இன்றைய காலகட்டத்தில் (அதாவது நாவல் நிகழும் காலத்துக்குப் பிறகான தற்காலத்தில்), தலித் மக்களும் தங்களைப் பயன்படுத்திக்கொண்டு எழுப்பப்பட்ட வரலாற்றையும் வரலாற்றுச் சின்னங்களையும் தங்களுடையதாக ஏன் மீட்டுக்கொள்ளக் கூடாது என்று வாசுதேவன் கேட்பதைப் பற்றி நிச்சயம் விவாதிக்கலாம். “சாதிகளை ஒழிக்கிறேனென்று இனக் குழுக்களின் வரலாற்றையும் அறிவுச் சேகரத்தையும் அழிக்க முயலாதீர்கள்என்கிறான் வாசுதேவன். நமது இலக்கியம், வரலாறு, கலைகள் உள்ளிட்ட யாவும் சாதியச் சமூகத்தின் அம்சங்களுடன் பின்னிப் பிணைந்தவையாக இருக்கும்போது சாதியை ஒழிக்கும் முயற்சிகளில் அவற்றை அடியோடு புறந்தள்ளிவிட முடியாதல்லவா! சாதியம் என்ற பெயரில் ஒரே துடைப்பாக எல்லாவற்றையும் துடைத்துத் தள்ளுவது மனித அறிவின் பரிணாம வளர்ச்சியின் முக்கியான காலகட்டத்து அறிவுச் சேகரங்களை அழிக்கும் செயலாக ஆகிவிடுமல்லவா! இப்படியே, வர்க்கம், நிலவுடைமைவாதம் போன்ற வாதங்களை முன்னிட்டு ஒழிக்க ஆரம்பித்தால் உலக இலக்கியங்கள், கலைகள் போன்றவற்றில் அநேகமாக ஏதும் மிஞ்சாதே! உலக வரலாற்றின் தலைசிறந்த விஞ்ஞானியாக மதிக்கப்படும் நியூட்டன் மதம் சார்ந்தும், மறைஞானம் சார்ந்தும் ஆற்றிய செயல்பாடுகள்தான் 75 சதவீதத்துக்கும் அதிகம். மீதமுள்ளவைதான் அறிவியல் சார்ந்த பணிகள். ஆக, நியூட்டனை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நமக்கு உவப்பாக இல்லையென்றாலும், அவரது ஒட்டுமொத்தப் பணிகளை முன்வைத்தே பார்க்க வேண்டும். நம் வரலாற்றின், கலைகளின், அறிவுச் சேகரத்தின் தொண்டையில் சிக்கிக்கொண்ட சாதியம், வர்க்கப் பிரச்சினைகள் போன்றவையெல்லாம் உயிரையே பறிக்கும் முட்கள்தான். எனினும், அந்த முட்களை அகற்றுவதிலோ, இனி முட்கள் நிகழாதவாறு பார்த்துக்கொள்வதிலோதான் இருக்கிறது நாம் முன்செல்லும் திசையின் சாகசம்.

பெரியாரிய X பிராமணிய உரையாடலுக்கு அடுத்ததாக நாவலில் நிகழும் பெரிய அரசியல் உரையாடல் பழங்குடியினரான இங்க்ளய்யாவுக்கும் பெரியாரின் தொண்டனான உறங்காப்புலிக்கும் இடையிலானது. தங்கள் இனத்தின் முன்னேற்றத்துக்காக முதலாளித்துவத்தைப் பயன்படுத்திக்கொள்வது தவறில்லை என்று வாதிடுகிறார் முன்னாள் மாவோயிஸ்ட்டான இங்க்ளய்யா. தன் அடையாளங்களை அழித்துக்கொண்டு முதலாளித்துவத்துக்குத் துணைபோவதையும் சிறுதெய்வம் பிராமணிய தெய்வமாக மாற்றப்படுவதையும் கடுமையாக எதிர்க்கிறான் உறங்காப்புலி. இந்த வகையில் பெரியாரிய பிரக்ஞையிலிருந்து பழங்குடிப் பிரக்ஞையை நோக்கி நகர்கிறான் உறங்காப்புலி. ஒட்டுமொத்த சமூகத்துக்கும் மிக அவசியமான, இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் நிகழக்கூடிய, பெரும் நகர்வு இது.

இங்க்ளய்யாவுக்கும் உறங்காப்புலிக்கும் இடையிலான உரையாடல் மேலும் மேலும் புதிய தளங்களை நோக்கி விரிகிறது. இந்த உலகின் பிரச்சினையாக மேற்கில் வர்க்கத்தையும் கிழக்கில் சாதியையும் கட்டமைத்திருப்பதைக் குறித்துத் தனது கடும் விமர்சனங்களை வைக்கிறார் இங்க்ளய்யா. இரண்டுமே மனிதனை மட்டும் பொருட்படுத்தும் பகுத்தறிவுவாதம் என்றும் விலங்குகளின் குரல்களையும், மரங்களின் பெருமூச்சுகளையும் இந்தக் கருத்தாக்கங்கள் பொருட்படுத்துவதில்லை என்கிறார். மார்க்ஸைப் படித்த நீங்களே இப்படிப் பேசலாமா என்று உறங்காப்புலி கேட்பதற்குகண்டிப்பாக சாதியும் வர்க்கமும் ஒழிக்கப்பட வேண்டியவைதான், ஆனால் அவற்றின் வேர்க் காரணம் நகரங்களிலும் கிராமங்களிலும் இல்லை, வனங்களில் இருக்கிறது, வனங்களில் அழிப்பில் இருக்கிறது, தொழிற்சாலைகளும் விளைநிலங்களும் இருக்கும்வரை இந்த இரண்டுமே ஒழியப்போவதேயில்லைஎன்கிறார்.

நவீனத்துவமும் நகரமயமாதலும் முதலாளித்துவமும் உலகமயமாதலும் சாதியை அழிக்கும் அல்லது குறைந்தபட்சம் சாதியின் எல்லைகளை மங்கலாக ஆக்கும் என்ற நம்பிக்கை நிலவும் சூழலில் நகரம், கிராமத்தை விடுத்து வனங்களைப் பாருங்கள் என்கிறார் நாவலில் உறங்காப்புலியுடன் 70-கள் காலகட்டத்தில் உரையாடும் இங்க்ளய்யா. ஹாலாஸ்யத்திடம் வாசுதேவன் முன்வைக்கும் வாதங்களும் உறங்காப்புலியிடம் இங்க்ளய்யா முன்வைக்கும் வாதங்களும் சாதியம் குறித்த சில முக்கியமான பார்வைகளைக் கொண்டிருந்தாலும், சற்றே நழுவினாலும் சாதி ஒழிப்பெனும் இலக்கைச் சற்றே முனைமழுங்கச் செய்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. சாதி ஒழிப்பு குறித்து முற்போக்காகத் தோன்றும் கருத்துகளை உண்மையில் ஒரு சனாதனியாகவே வாசுதேவன் தன் தந்தையிடம் முன்வைக்கிறான். ஆனால், நாவலின் இறுதியில் நமக்குக் காணக் கிடைக்கும் வாசுதேவன், சாதி, மரபு எல்லைகளை எந்த உரையாடலுமின்றிக் கடக்கிறான். அதுதான் மிகவும் முக்கியமானது. அதேபோல், பகுத்தறிவுவாதத்தையும் கடந்து  உறங்காப்புலி அடையும் பரிணாமமும் மிக முக்கியமானது.

இந்த நாவலில் திராவிட X பிராமணியம், விவசாயி X முதலாளி, சமவெளி (அனைத்து சாதிகளும் முதலாளித்துவமும் உள்ளடங்கியது) X பழங்குடி, பெண் X ஆண், சுற்றுச்சூழல், பழங்குடிதெய்வம் X பெருந்தெய்வமாக்கல் போன்றவற்றைப் பற்றிய ஆழமான உரையாடல்கள், விவாதங்கள் நடைபெறுகின்றன. இவையாவும் மந்திரம் போன்றதொரு கதைசொல்லலுக்குள் இழைந்து, இயைந்து பரவியிருப்பதுதான் மற்ற அரசியல் நாவல்களிலிருந்து இந்த நாவலைப் பிரித்துக்காட்டுகிறது. மாயாஜாலப் புனைவுக் கம்பளத்தில் அச்சிடப்பட்ட உருவங்களாக இந்த அரசியல் உரையாடல்கள் நாவலில் இடம்பெறுகின்றன. 20, 21-ம் நூற்றாண்டுகளில் உலக அளவிலும் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் தீவிரமாக நடைபெற்ற இந்த உரையாடல்களை நாவலும் அருமையாகப் பிரதிநிதித்துவம் செய்கிறது. எனினும், தலித்திய உரையாடல் இந்த நாவலில் போதிய அளவு இடம்பெறாதது முக்கியமான விடுபடல். நாவலின் மைய இழையான ஜெமினி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தில் தன் கிராமத்தின் சாதிய ஒடுக்குதலிலிருந்தும் சங்கிலி என்ற தன் பெயரிலிருந்தும் விடுபட்டு வங்கத்துக்கு ஓடிச் சென்ற அவரை முன்னிட்டு விரிவான ஒரு உரையாடலை நாவலுக்குள் நிகழ்த்தியிருக்க முடியுமென்றே தோன்றுகிறது.


பாகீரதியும் இந்தியாவும்
பாகீரதிக்கும் இந்தியாவுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆகஸ்ட் 15 அன்று பாகீரதி பிறந்தாள் என்ற தகவல் தற்செயலானது அல்ல. நெருக்கடி நிலையை ஒட்டிய காலகட்டம் இந்தியாவுக்கு மட்டுமல்ல பாகீரதிக்கும் மிகவும் கொந்தளிப்பான காலகட்டமாகவே இருக்கிறது. பகற்கனவில் நடக்கும் பாகீரதி, வாகனங்கள் ஸ்தம்பித்து ஒலியெழுப்பும் நடுவீதியில் திடுக்கிட்டு விழிப்பதைப் போல தேசமும் மிக மோசமான ஒரு பகற்கனவில் ஆட்பட்ட காலம். எல்லோரையும் எல்லாவற்றையும் வேறொன்றாக மாற்றிய, காட்டிய நெருக்கடி நிலைக் காலத்தைப் போல பாகீரதியின் கனவும் அந்தக் கனவிலிருந்து நீட்சி பெறும் நாவலும் ஒவ்வொருவரையும் வேறொருவராக, ஒவ்வொரு காலத்தையும் வேறொரு காலமாக ஆக்குகிறது. ஒவ்வொருவரிலும் வேறொருவர். ஒவ்வொன்றிலும் வேறொன்று. போர்ஹேவைப் படிப்பது போல் இருக்கிறது. போர்ஹே இந்தியாவில் பிறந்திருந்தால், நாவல் எழுதும் எண்ணம் அவருக்கு இருந்திருந்தால், நெருக்கடி நிலை காலகட்டத்தில் இப்படி ஒரு நாவலைத்தான் எழுதியிருப்பார்.


நிகழ்ந்ததன் மீதே…
காலத்துக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஏன் இந்த பின்னிப் பிணைதல் என்ற கேள்விக்கு நாவலிலேயே பதில் தரப்படுகிறது. “எதுவும் எதற்கு முன்பும் நிகழவில்லை. எதுவும் எதனாலும் தூண்டப்பட்டு அதைப் பின்தொடரவுமில்லை. நிகழ்ந்ததெல்லாம், நிகழ்ந்த பொழுதிலல்ல, மாறாக நிகழ்ந்ததன் மீதே நிகழ்ந்தது. மற்றும் நிகழ்த்திக்கொண்டிருந்ததுஎன்கிறார் கதைசொல்லி. ஜெமினியின் தொடர்ச்சியாக அல்ல, ஜெமினியின் மீதே நிகழ்கிறான் உறங்காப்புலி. அரங்கநாதன் நம்பி தவறவிட்ட சிவகாசி நாடார் பெண்ணின் தொடர்ச்சியாக அல்ல, அவள் மீதே நிகழ்கிறாள் பாகீரதி. பாலியல் தொழிலாளியான பிரமீளா மீதும் ஓவியர் ஜெமினியின் மனைவி சவீதா மீதும் பாகீரதி அவ்வாறே நிகழ்கிறாள். உறங்காப்புலி மீது விபின் பாஸ்வானும் அநூபாவும் கூட நிகழ்கிறார்கள். காலம், இடம் குறித்த தர்க்கங்களை வைத்து இவற்றை அணுக முடியாது. ஒரு உதாரணம், தான் 26 ஆண்டுகளுக்கு முன் (1948-ல்) பார்க்காமலேயே தவறவிட்ட சிவகாசி நாடார் பெண்தான் தற்போதைய (1974-ல்) பாகீரதி (வயது 28) என்று நம்பும் அரங்கநாதன் நம்பி மனநலம் பாதிக்கப்பட்டவரல்ல. நம் தர்க்கத்துக்கு உட்பட்டு எந்த வகையிலும் சிவகாசி பெண்ணாக பாகீரதி ஆக மாட்டாள். அவளுடைய பெண்ணாகவோ, அல்லது அவள் இறந்து எடுத்த அவதாரமாகவோ ஆவதற்கும் ஒரு வாய்ப்பும் இல்லை. தன்னை அரங்கநாதன் நம்பி மணக்க வேண்டும் என்று அவரது வீட்டு வாசலில் சிவகாசிப் பெண் வந்து நின்ற காலத்துக்கும் முன்பே பாகீரதி பிறந்துவிட்டாள். அப்படி இருப்பின் சிவகாசிப் பெண்ணும் பாகீரதியும் ஒன்றுதான் என்று அரங்கநாதன் நம்பி அவ்வளவு தீர்க்கமாக நம்பினார். நம்பியதோடு மட்டுமல்லாமல் பாகீரதியைத் தேடி, மதுரையிலிருந்து கல்கத்தா, மீண்டும் மதுரை என்று முடிவில்லாத ஒரு பயணத்தை, டிராகுலாவைப் போல ஏன் அவர் மேற்கொள்ள வேண்டும்? இந்தப் புதிரைத் திறப்பதற்கான சாவி, ‘நிகழ்ந்ததெல்லாம், நிகழ்ந்த பொழுதிலல்ல, மாறாக நிகழ்ந்ததன் மீதே நிகழ்ந்ததுஎன்ற வரிகளில் இருக்கிறது. காலத்தை ஆறுபோல், அம்பு போல் பாய்வதாகக் கற்பனைசெய்துகொள்வது பழம் மரபு. ஆனால், இந்த நாவலில் காலம் பிடித்துவைத்த பிள்ளையார் போல் இருக்கிறது. ‘திரும்பிப் பார்க்கும்போது காலம் ஒரு இடமாகக் காட்சியளிக்கிறதுஎன்ற நகுலனின் கவிதை வரிகளின் நாவல் வடிவம் போல் காட்சியளிக்கிறதுபாகீரதியின் மதியம்’.

மிதக்கும் வண்ணங்களின் நாவல்

இந்த நாவலின் அடிப்படைகளில் ஒன்றுமிதக்கும் வண்ணங்கள்எனும் ஓவியக் கோட்பாடு. ஜெமினியின் மனதில் தோன்றி, அவர் வாழ்நாள் முழுக்கத் தேடிக்கொண்டிருக்கும், விரித்துக்கொண்டிருக்கும் கோட்பாடு. இந்தக் கோட்பாடு அதன் பெயருக்கேற்ப, கெட்டிப்பட்ட ஒரே ஒரு விவரணையைக் கொண்டிராமல் நாவல் முழுவதும் வெவ்வேறு அர்த்தங்களைக் காட்டியபடி சுமந்து மிதந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு அர்த்தம் காட்டுகிறதுமிதக்கும் வண்ணங்கள்’. ஓவியர் ஹரேன்தாஸைப் பொறுத்தவரைஉக்கியோயீஎன்பதுமிதக்கும் வண்ணமாக இருக்கிறதென்றால் ஜெமினிக்கு வேறுவிதமான, திட்டவட்டமாகத் தெரியாத ஒரு கோட்பாடாக இருக்கிறது. ஜெமினியின்மிதக்கும் வண்ணங்கள்அவரது காதல் மனைவி சவீதாதான் என்கிறார் விபின் பாஸ்வான். அதற்கு இடமளிக்கும் வகையில் ஜெமினி, சவீதாவுக்கு இடையிலான முதல் சந்திப்பு நிகழ்கிறது. சவீதா, சசாங்க் என்ற நண்பனின்  தோள்களில் ஏறித் தன்னை மிதத்திக்கொண்டிருந்தபோதுதான் முதன்முதலில் அவரை ஜெமினி சந்திக்கிறார். எனினும், ஜெமினியின்மிதக்கும் வண்ணங்களாக உறங்காப்புலி கண்டடைந்தது வேறொன்றை. ‘மிதக்கும் வண்ணங்கள்என்ற உயரிய கலைக் கருத்தாக்கத்தின் அடிநாதத்தை பித்யா நதியின் சாயக்கழிவுகள் மீது இரவில் நிலவு பிரதிபலித்ததால் ஏற்பட்ட வர்ண ஜாலத்தில் உறங்காப்புலி கண்டுகொள்கிறான். இப்படி ஒரு அடிப்படையை, அழகின் உன்னதமாகக் கொண்ட கலையை வெறுத்துதான் ஜெமினி வரைவதை நிறுத்தியிருக்கக் கூடும் என்று எண்ணுகிறான். ஊட்டி, வால்பாறை போன்ற இடங்களுக்குச் செல்லும் ஒருவர் அங்கே தென்படும் தேயிலைத் தோட்டங்களின் விரிந்த வெளியின் பச்சை நிறத்தில் தன்னை இழப்பார். இயற்கையை அழித்த அந்த அழகைத் தனது கலைக்கு ஒருவர் ஆதாரமாக எடுத்துக்கொள்வாரென்றால் எவ்வளவு விபரீதம் அது. காலம் காலமாக நடந்துவரும் கலை குறித்த விவாதங்களுக்கு உறங்காப்புலி மிக முக்கியமான ஒரு பங்களிப்பைத் தனது கண்டறிதல் மூலம் முன்வைக்கிறான்.  இந்த சாத்தியத்தை மறுக்கும் விபின் பாஸ்வானிடம், தனதுதேடல் கண்டுபிடிப்புகளை நோக்கியதல்ல, சாத்தியங்களைப் பரிசீலிப்பதுஎன்கிறான் உறங்காப்புலி. எனினும் கடைசிவரை, ஜெமினியின்மிதக்கும் வண்ணங்கள்என்னவென்று நமக்குத் தெரியாமல் போகிறது. அது வாசகரின் கற்பனைக்கு அளிக்கப்பட்ட சவால் அல்லது சுதந்திரம்.

மிதக்கும் வண்ணங்கள்என்ற இழை இந்த நாவலின் வெவ்வேறு சம்பவங்கள், மனிதர்கள், கோட்பாடுகளை இணைக்கும் விதத்தில் பா. வெங்கடேசன் அசாதாரணமான ஒரு கலைஞர் என்பது நமக்குப் புலனாகிறது. இந்த நாவலைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், ‘மிதக்கும் வண்ணங்களால் ஆன நாவல்என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இதன் கதாபாத்திரங்கள் நீரில் வெவ்வேறு நிறங்களைக் கொட்டினால் மிதந்துகொண்டே ஒவ்வொன்றும் இன்னொன்றோடு விளிம்பில்லாமல் இணைந்து வேறொன்றாக ஆவதுபோல் மாறுகின்றன. பாகீரதியின் கனவெனும் பேராற்றில் எல்லா வண்ணங்களும் மிதக்கின்றன. தூரத்தில் பார்க்கும்போது நிலவொளியில் மினுங்கும் பேரழகாகத் தோன்றும் மிதக்கும் வண்ணங்கள் அருகில் வந்துபார்த்தால் தொழிற்சாலைக் கழிவுகள் என்று உறங்காப்புலிக்குத் தோன்றுவது நாவலின் மகத்தான தருணங்களில் ஒன்று. கடைசியில் மிதக்கும் வண்ணங்களின் வெளியாக உறங்காப்புலி தன்னுடலை மாற்றிக்கொள்ளும் தருணமும் அபாரமான கற்பனை வீச்சு. விரிந்து பறக்கும் கற்பனைத் திறனொன்றினால்தான் இதெல்லாம் சாத்தியமாகும்.


என்னவாக இருக்கிறோம் என்பதைவிட நம் அண்மையைப் பிறர் என்னவாக உணர்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறதுஎன்று ஒரு இடத்தில் வருகிறது. இது மிதக்கும் வண்ணங்கள் கோட்பாடுக்கும், மிதக்கும் வண்ணங்களின் வெவ்வேறு நிறங்களாக இருக்கும் இந்த நாவலின் கதாபாத்திரங்களுக்கும் பொருந்துகிறது. ஜெமினியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உணர்வதை இதனுடன் ஒப்பிட முடியும். இப்படி ஒட்டுமொத்த நாவலும் மிதக்கும் வண்ணங்களின் அரூப பிரசன்னமாகவே காட்சியளிக்கிறது. இந்த அரூபப் பிரசன்னம் மௌனியின் ‘மனக்கோட்டை’ உள்ளிட்ட சில கதைகளை நினைவுபடுத்துகிறது. சிறுமி பாகீரதியைப் பற்றி அவள் தந்தை தனது மேலதிகாரியான ஹாலாஸ்யத்திடம் வாய் சலிக்காமல் சொல்லிச் சொல்லி, ஹாலாஸ்யம் பாகீரதியைப் பற்றிய ஒரு சித்திரத்தைத் தனது குடும்பத்தில் உருவாக்கிவிடுகிறார். நேரில் பார்த்தேயிராமல் அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாக பாகீரதி சிறுவயதிலேயே இடம்பிடித்துவிடுகிறாள். இதுபோன்ற அரூபப் பிரசன்னமாக நாவலின் பல பாத்திரங்கள் வெளிப்படுகின்றன.

மிதக்கும் வண்ணங்களின் தேசம்

கலைக் கோட்பாடாகவோ புனைவுக் கோட்பாடாகவோ மட்டுமல்ல. சமூகக் கோட்பாடாகவும் நாவலுக்குள்ளேயே துலக்கம் பெறுகிறதுமிதக்கும் வண்ணங்கள்கோட்பாடு.
பிராமணர்-திராவிடர்-தலித்-பழங்குடியினர் இந்த அடுக்குகள் மிதக்கும் வண்ணங்கள் போல- திணை மயக்கம் போல, எல்லா அரசியல் நிலைப்பாடுகளையும் தாண்டிபாகீரதியின் மதியம்எனும் காலப் பேராற்றில் குழைந்து, மாறி, மாறித் தோற்றம் கொண்டு மினுக்குகின்றன.

சாதியின் ஆதிக்கம் கொண்ட இந்தியாதான்! ஆனால் மற்ற தரப்புகளுடன் உறவு கொள்ளவும் மாறவும் சிறிதளவாவது தயாராக இருக்கும் இந்தியா. அதன் ஆதர்ச அறமாக ஜெமினி இந்த நாவலில் இழையோடுகிறார். அந்த அறம் உறைந்துபோன அறம் அல்ல, மிதக்கும் வண்ணங்களால் ஆன அறம். பகுத்தறிவை ஆதர்சமாகக் கொண்ட உறங்காப்புலி பழங்குடி மனநிலைக்கு மாறுகிறான், காந்தியை ஆதர்சமாகக் கொண்ட அரங்கநாதன் நம்பி டிராகுலாவாக மாறுகிறார். சனாதனத்தை ஆதர்சமாகக் கொண்ட வாசுதேவன் சனாதானத்துக்கு எதிரான தரப்புகளின் ஆதர்சங்களை நோக்கி நகர்கிறான். மார்க்ஸை ஆதர்சமாகக் கொண்ட இங்க்ளய்யா, பழங்குடி மக்களின் முன்னேற்றத்துக்கு முதலாளித்துவத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் மனநிலைக்கு, முதலாளித்துவம் தனது அடையாளத்தை அழித்துவிடும் என்றும் அதன் பயன்பாடு தற்காலிகமானது என்றும் அறிந்தே, மாறுகிறார். இப்படி மிதக்கும் வண்ணங்களாலான ஆதர்சங்கள் நிகழும் கனவு வெளியாக இந்தியாவாகிய பாகீரதி இருக்கிறாள். இந்த ஆதர்சங்கள் கறுப்பு-வெள்ளை தர்க்கத்தை மீறி மிதக்கும் வண்ணங்களாக மாறுவது இந்தியாவின் அடிப்படை இயல்பை உணர்த்துவதாகவே இருக்கிறது. ஒற்றைப்படைத் தன்மைக்குள், ஒற்றை வண்ணத் தன்மைக்கும் இந்தியாவைப் பொருத்திவிட முடியாது என்பது மட்டுமல்ல, திட்டவட்டமான  நிற எல்லைகளைக் கொண்ட வண்ணமாகவும் இந்தியாவைப் பார்த்துவிட முடியாது என்பதையும்  உணர்த்துகிறது.


அற்புதங்களின் புனைவு வெளி
ஒரே ஒரு அற்புதத் தருணம் ஒரு நாவலை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றுவிடும். ஆனால், ‘பாகீரதியின் மதியம்நாவலில் கிட்டத்தட்ட பக்கத்துக்குப் பக்கம் அதுபோன்ற தருணங்கள் நிரம்பி நம்மை மூச்சு முட்டவும் செய்கின்றன. பாகீரதி கனவு கண்டுகொண்டே நடந்துவந்து உறங்காப்புலியை ஜெமினியாக சந்திக்கும் இடம் இந்த நாவலில் அற்புதங்களின் தொடக்கம். ஜெமினியை சந்திப்பதற்காக அவரது அறைக்கு ஆதிமூலமும் அவரது நண்பர்களும் சந்திக்கச் செல்வதைப் பற்றி அவர் வாசுதேவனிடம் விவரிக்கும் இடமும் அப்படியே. “… அறையினுள்ளிருந்து அவர் தன் கைகளை வரவேற்கும் முகமாக நீட்டியபடியே தங்களை நோக்கி எழுந்து வந்த நிமிடத்தில் ஓட்டு விதானத்தில் மாட்டப்பட்டிருந்த டங்ஸ்டன்  இழை விளக்கு மேலேயிருந்து செங்குத்தாகப் பொன்னிறத் தூசிபோல் உதிர்த்துக்கொண்டிருந்த மஞ்சள் நிற ஒளியில் அவர்மேல் அரைகுறையாகக் கவிந்த நிழல் இன்னொரு தனித்த, புதிரான வன விலங்கைப் போல அவரிடமிருந்து பிரிந்து அவர் கூடவே, ஆனால் தன்னிச்சையாக எழுந்து முன்னே வந்த காட்சிஓர் உதாரணம். உறங்காப்புலிக்கும் சவீதாவுக்கும் இடையில் நடைபெறும் அசாதாரணமான உரையாடலும் அப்படியே.

நாவலில் இடம்பெறும் முதல் சந்திப்புகள் பலவும் அசாதாரணமாகவே நிகழ்கின்றன. அல்லது சாதாரண சந்திப்பில் ஒளிந்துள்ள அசாதாரணத்தை பா. வெங்கடேசன் கண்டுபிடித்து நமக்குத் தருகிறார். 1933 பிஹார் நிலநடுக்கத்தில் குலைவுற்ற மதுபானி கிராமத்தில் ஒளிந்துகிடந்த ஓவிய பொக்கிஷங்களைத் தீராத தாகத்துடன் அள்ளிப் பருகிக்கொண்டிருந்த பில் துரையுடன் ஜெமினி நின்றுகொண்டிருக்கும்போது, தன் நண்பர் ஒருவரின் தோளின் மேல் ஏறியுட்கார்ந்து தன்னை மிதத்திக்கொண்டிருந்தபடி, “துரை, இதென்ன பிரமாதம், எங்கள்  ருத்ரப்பூர் சேரிக்கு வாருங்கள், இதைவிடப் பிரமாதமான புலி, காளிஎல்லாம் பார்க்கலாம், வருகிறீர்களாஎன்று சவால் விடும் பெண்ணாக சவீதாவை முதன்முதலில் சந்திக்கிறார் ஜெமினி. உறங்காப்புலியும் மூதாட்டி சவீதாவும் முதன்முதலில் சந்திக்கும்போது அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழும் உரையாடலும் வசீகரம் பொருந்தியது. மலர்விழிக்கும் அவரது காதலருக்கும் இடையில் நடக்கும் முதல் சந்திப்பும் சினிமா பாணியில் மிகவும் கவித்துவமானது.  

நிகழ்ந்த சந்திப்புகள் மட்டுமல்ல நிகழாத சந்திப்புகளும் இந்த நாவலில் அற்புதமானவை. அரங்கநாதன் நம்பியைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று அவரது வீட்டு வாசலில் சிவகாசிப் பெண் ஒருத்தி, பேரழகி, வந்து நிற்கிறாள் என்றும் நம்பியின் பெற்றோர் அவளை நிராகரித்தும்கூட அவள் நகராமல் அங்கேயே நிற்கிறாள் என்றும், தவறவே விடாத பேரழகியான அவளை உடனே வந்து பார் என்றும் சாம்புவைய்யர் அரங்கநாதன் நம்பியிடம் கூறுகிறார். ஆரம்பத்தில் உதாசீனப்படுத்தினாலும் பிறகு வீட்டுக்கு வந்து பார்க்கிறார். அதற்குள் அந்தப் பெண் போய்விடுகிறாள். அவளின் நினைவாக ஒரு மல்லிகைப் பூ மட்டும் அரங்கநாதன் நம்பியிடம் எஞ்சுகிறது. எப்படிப்பட்டவளை நீ இழந்திருக்கிறாய் தெரியுமா என்று திரும்பத் திரும்ப சாம்புவய்யர் நம்பியிடம் புலம்பிப் புலம்பி முகமறியாத அந்தப் பெண்ணின் காதலை நம்பிக்குள் ஆழமாகப் பதிக்கிறார். இருபத்தியாறு ஆண்டுகளுக்குப் பிறகு, தன் மனைவியின் விசித்திரமான மதிய உறக்கக் கனவுப் பழக்கத்தைப் பற்றிய முறையீட்டுடன் நம்பியைச் சந்திக்க வரும் வாசுதேவன் காட்டும் புகைப்படத்தில் இருந்த பாகீரதியைப் பார்த்துவிட்டு இவள்தான் அவள் என்ற முடிவுக்கு வருகிறார். அப்படியும் பாகீரதியைச் சந்திக்க முடிகிறதா என்றால் நாவலின் பரப்புக்குள் இல்லை. ஜெமினி இறந்து சில ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகு, அது தெரிந்தே, ஜெமினியைத் தேடி உறங்காப்புலி பயணம் மேற்கொள்கிறான். இப்படி, நிகழாத சந்திப்புகளும் சேர்ந்து இந்த நாவலின் புனைவெல்லையை விரித்து அழகாக்குகின்றன.

அற்புதங்கள் வறண்டுபோன வாழ்வுக்கு இந்த நாவல் அளிக்கும் அற்புதங்களின் கொடை மிகவும் அதிகம். அற்புதங்கள் வறண்டுபோனதற்குக் காரணம், அற்புதங்கள் நிகழவில்லை என்பதல்ல, நிகழும் அற்புதங்களை உணர முடியாமல் நம் புலன்கள் மழுங்கிப்போனதும், நிதர்சனத்தை, யதார்த்தத்தை அற்புதங்களாக விரிக்கும் சக்தி நமக்கு இல்லாமல் போனதும்தான். இந்த நாவல், யதார்த்த வாழ்க்கைக்கே அப்பாற்பட்ட அற்புதங்களின் புனைவு அல்ல. யதார்த்த வாழ்வின் இடைவெளிகளை, அதன் அனைத்து அரசியல்-சமூக ஊடாட்டங்களுடன், அற்புதமாக்கும் புனைவு. காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலில் இருப்பதுபோல இங்கு எந்தப் பாத்திரத்தின் தலைமீதும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள் பறக்கவில்லை. வானிலிருந்து வரும் கம்பளத்தில் ஏறிப் பேரழகி பாகீரதி விண்ணேகவில்லை. எனினும், அன்றாட வாழ்வின் நிகழ்வுகளே அற்புதங்களாக உருவெடுக்கின்றன. யதார்த்தத்தை மற்றொரு யதார்த்தத்தோடு பொருத்தும் ஒழுங்கில் பா. வெங்கடேசனின் மாய யதார்த்தம் பிறப்பெடுக்கிறது எனலாம். ஜெமினி உறங்காப்புலியாக, அரங்கநாதன் நம்பி டிராகுலாவாக, மிதக்கும் வண்ணங்கள் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாக என்று நாவலில் பாத்திரங்களையும் சம்பவங்களையும் ஒன்றன்மீது ஒன்று அடுக்கும் விதத்திலேயே புனைவின் மாயம் நிகழ்கிறது. ‘ப்ரீடெஸ்டினேஷன்’ என்ற படத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கணவன், மனைவி, போலீஸ்காரர், குற்றவாளி என்று அந்தப் படத்தில் வரும் அனைத்துப் பாத்திரங்களும் ஒருவர்தான் என்பது இறுதியில் தெரியவரும்; மாறுவேடங்களல்ல, காலப் பயணங்களில் வெவ்வேறு காலக்கிளைகள் விரிந்ததன், அவை சந்தித்துக்கொண்டதன் விளைவு அது. அதைப் போலவே ஜெமினி என்ற பாத்திரம்தான் அத்தனை பாத்திரங்களாகவும் உருவெடுத்திருக்கிறதோ என்ற கேள்வியும் வாசகருக்கு ஏற்படுகிறது. ஜெமினி மட்டுமல்ல, மற்ற பாத்திரங்களும் மற்றவர்களாய் அவதாரமெடுக்கிறார்கள்.

அல் முடாஸிமும் ஜெமினியும்

ஜெமினியைத் தேடியும் பாகீரதியைத் தேடியும் உறங்காப்புலியைத் தேடியும் இந்த நாவலில் மேற்கொள்ளப்படும் பயணங்களை போர்ஹேவின் ‘அப்ரோச் டூ அல் முடாஸீம்’ என்ற சிறுகதையுடன் பொருத்திப் பார்த்தால் ‘பாகீரதியின் மதியம்’ நாவலுக்கு முற்றிலும் வேறொரு பரிமாணம் கிடைக்கிறது. ஒரு நாவலின் மதிப்புரை போன்று எழுதப்பட்டிருக்கும் அந்தச் சிறுகதையின் நாயகன் ஒரு முஸ்லீம். மதக் கலவரத்தில் ஒரு இந்துவைக் கொன்றுவிட்டுத் தப்பித்துச் செல்கிறான். அவன் பல்வேறு நபர்களைச் சந்திக்கிறான். அவர்கள் பலரும், எவ்வளவு வெறுக்கத் தக்கவர்களாகவும், கீழ்மை கொண்டவர்களாகவும் இருந்தாலும், ஒரு மகத்துவத்தின் சிறு பிரதிபலிப்பை அவர்களிடத்தில் நாயகன் காண்கிறான். அந்த மகத்துவம் அவர்களிடம் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை என்று கருதும் நாயகன், ‘இந்த உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு மனிதன் இருக்கிறான். அவனிடமிருந்துதான் இந்தத் தெளிவு, இந்தப் பிரகாசம், வெளிப்படுகிறது; இந்த உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் இந்த பிரகாசத்துக்கு இணையான ஒரு மனிதன் இருக்கிறான்’ என்ற முடிவுக்கு வருகிறான். அந்த மனிதனைத் தேடிச்செல்வதுதான் கதை. ஒவ்வொரு பிரதிபலிப்பாக நூல்பிடித்துக்கொண்டு கிட்டத்தட்ட அந்த மனிதனை நெருங்கிவிடுகிறான் நாயகன். அந்தப் பிரகாசத்துக்குச் சொந்தக்காரன் பெயர் அல் முடாஸிமின் அறைக்குள்ளிலிருந்து கதைநாயகனை உள்ளே வரச் சொல்லி ஒரு குரல் கேட்கிறது. திரையை விலக்கிக்கொண்டு நாயகன் உள்ளே நுழைவதுடன் அந்தச் சிறுகதையில் விமர்சிக்கப்படும் நாவல் முற்றுப்பெறுகிறது.

இந்த நாவலில் அந்த மூல மகத்துவமாக ஜெமினி இருக்கிறார். எல்லோரும் ஜெமினியையோ ஜெமினியின் பிரதிபலிப்புகளையோ தேடிக்கொண்டு செல்கிறார்கள். தேடிக்கொண்டு செல்பவர்கள் யாருக்கும் ஜெமினி அகப்படவில்லை; ஆனால், தேடிச்செல்பவர்கள் ஜெமினியாக உருமாற்றம் அடையும் மாயவிந்தை நிகழ்கிறது. பல் அடுக்குகளையும் இழைவுகளையும் கொண்ட உருமாற்றம் இது. ஒரு மகத்துவத்தின் தொடர் பிரதிபலிப்புகளில் ஒன்றாக பா. வெங்கடேசனை வந்தடைந்திருக்கும் பாகீரதியின் மூல மகத்துவத்தைப் பற்றியும் ஒரு வாசகரால் நினைத்துப் பார்க்காமல் இருக்கவே முடியாது. ஆகவே, அந்த மூல மகத்துவத்தைத் தேடிக் கண்டடைய விரும்பும், ஏற்கெனவே யமுனாவைக் கண்டறிய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும், வாசகர்கள் ‘பாகீரதி யார் சார்? எங்கே இருக்கிறாள் சார்’ என்ற கேள்விகளைக் கேட்டு இனி பா. வெங்கடேசனின் ஆயுள் முழுக்க அவரைச் செய்யும் தொந்தரவிலிருந்து அவரால் தன்னை விடுவித்துக்கொள்ளவே முடியாது. பாகீரதியின் மகத்துவம் அப்படி. இந்த நாவல் வெளியீட்டு விழாவின்போது, நாவலை எழுதி வெளியிட்டதால் பாகீரதியைப் பிரிந்தது குறித்து பா. வெங்கடேசன் பேசிய வீடியோவில் கண்கலங்குகிறார். ‘பாகீரதியின் மதியம்’ நாவலைப் படித்து முடித்தவர்களால்தான் பா. வெங்கடேசனின் கண்ணீரைப் புரிந்துகொள்ள முடியும், பகிர்ந்துகொள்ள முடியும். பிரியவே தோன்றாத ஓர் அற்புத ஆன்மா பாகீரதி! எனவே, பாகீரதியால் அலைக்கழிக்கப்படும் விருப்பமும் துணிவும் கொண்டவர்கள் மட்டும் இந்த நாவலைத் தொடலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறார்கள். 

டிராகுலாவுக்கு டிராகுலா சொன்ன கதை

நம் நேசிப்புக்கும், இன்னும் தீவிர வாசிப்புக்கும் உரியதொரு அரூபப் பிரசன்னம் ‘டிராகுலா’. டிராகுலாவை இந்த நாவலுடன் பா. வெங்கடேசன் இணைத்தது அவர் கற்பனை எந்த அளவுக்குப் பறக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம். என்னைப் பொறுத்தவரை இந்த நாவலிலேயே மிகப் பரிதாபமான ஒரு ஆன்மா, தன்னை டிராகுலாவாகக் கருதிக்கொண்ட காந்தியவாதியான அரங்கநாதன் நம்பிதான். அவரே கதைசொல்லியாக இருப்பது தற்செயலான ஒன்றாக எனக்குத் தோன்றவில்லை. உண்மையில், அந்தப் பரிதாபத்துக்குரிய டிராகுலா வேறு யாருமில்லை; இந்த நாவலை வாசிக்கும் வாசகர்தான். அவருக்குத்தான் இந்த நாவலின் அதிசயங்கள் ஏதும் நிகழாது; எவ்வளவு பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் பாகீரதி கிடைக்க மாட்டாள்; ஆனால், வாழ்நாள் முழுவதும் பாகீரதியைத் தேடிக்கொண்டிருக்க வேண்டும். ஆகவே, வாசகரைப் படைப்பின் ஆதாரக் கருவியாக்கும் விதத்தில் கூட்டாளியாக்கும் விதத்தில் டிராகுலா பாத்திரம் இங்கே மிகச் சிறப்பாகத் தொழிற்பட்டிருக்கிறது. நாவலின் இறுதி வாக்கியத்தில் அரங்கநாதன் நம்பியின் வீட்டை செங்குத்தாக நிறுத்திவைக்கப்பட்ட சவப்பெட்டியாக உருவகித்திருப்பது விநோதமான முடிச்சை நம்முள் அவிழ்த்துவிடுகிறது.        

ஜெமினி என்கிற காந்தி

தலித் சமூகத்தைச் சேர்ந்த சங்கிலி என்ற இயற்பெயரையுடைய ஜெமினியை ஆதிமூலம் ஏன் காந்தியாக்க வேண்டும் என்ற கேள்வி நம்மை காந்தியின் ஆன்மாவுக்கு இட்டுச்செல்லக் கூடியது. ஜெமினி போலவே ஒருவிதத்தில் ‘மிதக்கும் வண்ணங்க’ளின் கோட்பாட்டைத் தேடியவர்தானே காந்தி! உறங்காப்புலி என்ற ஜெமினியைப் போலவே பழங்குடி பிரக்ஞை நோக்கி நகர்ந்தவர்தானே அவர். ஆக, இனம்புரியாத ஒரு இழைபோல் காந்தியும் நாவல் முழுக்கக் கூடவே வருகிறார். அந்த இழையை ஆழமாக ஆழமாகப் போய்ப் பார்த்தால் இன்னும் எத்தனையோ தரிசனங்களை இந்த நாவல் நமக்கு முன்வைக்கும் என்று தோன்றுகிறது.    


தாயம் முடிவின்மை
வரலாற்றில் தாயம் உருட்டிப் பார்ப்பது பா. வெங்கடேசனுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது; சாரு மஜூம்தாருக்கும் ஜெமினிக்கும் இடையில் உள்ள உறவு; ஆதிமூலத்துக்கும் ஜெமினிக்கும் இடையில் உள்ள உறவு; ஜெமினியின் உருவத்தைதான் காந்தி என்ற பெயரில் தான் வரைந்ததாக ஆதிமூலம் சொல்வது; இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடிப்பதன் பின்னணியில் தனி மனித விரக்தி ஒன்றைக் காரணமாக வைத்தது என்றெல்லாம் வரலாற்றில் புனைவின் தாயத்தை உருட்டிப் பார்த்திருக்கிறார் பா. வெங்கடேசன். அவர் உருட்டிய தாயக் கட்டைகளில் ‘முடிவின்மை’ என்ற எண் விழுந்து இந்த நாவலைத் திறந்த சாத்தியங்களின் நாவலாக ஆக்குகிறது.


பொலிட்டிக்கல் கரெக்ட்னஸின் சடலத்தின் மீது…

நாவலின் நுழைவாயிலில் இரண்டு மேற்கோள்களில், ‘பெண்ணின் வாய் எப்போதும் சுத்தமானது’ என்ற மனுவின் மேற்கோள் இடம்பெற்றிருக்கிறது. பொலிட்டிக்கல் கரெக்ட்னெஸ் உணர்வுள்ள யாருமே இதைச் செய்ய மாட்டார்கள். மனுவின் மேற்கோளைக் காட்டுவது சித்தாந்தத் தற்கொலை செய்துகொள்வதற்கு இணையானது. இதன் நோக்கம் என்ன? இருவகையில் யோசிக்கலாம். ஒன்று, பொலிட்டிக்கல் கரெக்ட்னெஸைக் காலி செய்துவிட்டுப் படைப்புக்குள் வாசகரை நுழையச் செய்வதற்கான உத்தி என்று கருதலாம். இன்னொன்று, நாவலில் இடம்பெற்றிருக்கும் பெண்கள் அனைவருமே தூய்மையானவர்களாக (அதாவது தேவதைக் குணங்களுடன்) வெகுளித்தனம் கொண்டவர்களாக (அறியாமை அல்ல) காட்டப்பட்டிருக்கிறார்கள். சவீதா, பாகீரதி, மலர்விழி, உறங்காப்புலியின் அம்மா, பேராபுடீமா, பிரமீளா என்று உதாரணங்களைக் காட்டலாம். எனினும் இரண்டு காரணங்களும் ஒரே நேரத்தில் இருக்கவும் சாத்தியம் இருக்கிறது. வாசுதேவன் – ஹாலாஸ்யம், வாசுதேவன் – பாகீரதி, இங்க்ளய்யா-உறங்காப்புலி ஆகியோருக்கு இடையிலான உரையாடல்களில் வெளிப்படும் பொலிட்டிக்கல் இன்கரெக்ட்னெஸைக் கண்டு பொலிட்டிக்கலி கரெக்ட் வாசகர்கள் திடுக்கிட்டுப் போகலாம், அல்லது எரிச்சலுறலாம், ஆசிரியர் ஒரு இந்துத்துவவாதி, சாதியவாதி, பெரியார் எதிர்ப்பாளர், மார்க்ஸிய வெறுப்பாளர் என்று தங்களுக்கு வசதியான ஒரு முத்திரையை (மாற்றுத் தரப்பை அடித்து வீழ்த்துவதற்கு இந்த முத்திரைகளைவிட வலுவான, சிறந்த ஆயுதங்கள் உண்டா என்ன?) ஆசிரியர் மீது சுமத்தலாம். ஆனால், படைப்புக்குப் பிரதான எதிரிகளுள் ஒன்று பொலிட்டிக்கல் கரெக்ட்னெஸ். அது படைப்புக்கு வெளியில் இருப்பது, பிரக்ஞைபூர்வமானது. மனிதர்கள் இயல்பிலேயே ஒன்று பொலிட்டிக்கலி இன்கரெக்ட்டாக இருப்பார்கள், இல்லையென்றால் இயல்பான அறத்துடன் இருப்பார்கள். அந்தத் தன்மைகளுடன் பாத்திரங்களை வெளிப்பட அனுமதிப்பதே படைப்புக்குச் செய்யும் உபகாரமாக இருக்கும். பொலிட்டிக்கல் கரெக்ட்னெஸ் பிரக்ஞைக்காக ஒரு மேலான படைப்பாளி பாத்திரங்களையும் தன்னையும் பரிசுத்தமாகக் காட்டிக்கொள்ள மாட்டார். படைப்பின் விந்தைகள் பொலிட்டிக்கல் கரெக்ட்னெஸ், இன்கரெக்ட்னஸ் போன்றவற்றுக்கெல்லாம் அப்பாலானவை. இப்படிச் சொன்னால் அவர்கள் அப்படிச் சொல்வார்கள் என்ற எண்ணத்துடன் படைப்பை எழுதினால் அது பிரச்சாரப் பிரசுரமாகத்தான் இருக்கும்.

வாசக சுதந்திரம்
இந்த நாவல், நாவலாசிரியர், கதைசொல்லி, எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறார்கள். ஆனால், இது ஒரு மேல்தோற்றமே. சொல்லாமல் விட்டு, உணர்த்துவது ஒரு கலை, உத்தி என்றால், எல்லாவற்றையும் சொல்லி - அதன்மூலம் சொல்லப்படாதவற்றை உணர்த்துவது பா. வெங்கடேசனின் உத்தி. வாசக சுதந்திரத்துக்கு மதிப்பளித்து இடமளிப்பது என்ற சமீபத்திய பிரக்ஞையை மீறிவாசகர்களுக்கு எல்லாவற்றையும் பா.வெங்கடேசனே கொடுக்கிறார். இதுதான் நியதி, இதுதான் உயர்ந்த கலை என்று எழுந்துவந்திருக்கும் சமீபத்திய பிரக்ஞையை பா. வெங்கடேசன் உடைக்கிறார். மவுனமாக இருந்து மவுனத்தை உணர்த்தும் உத்திக்கு நேரெதிராகதொணதொணவென்று பேசி அதன்மூலம், அலாதியான மவுனத்தை உருவாக்குகிறார். கரையைத் தொட்டு ஓடும் ஆற்று நீர் ஓஹோவென்ற ஓசையை எழுப்பினாலும் அதன் தோற்றம் அமைதியை உணர்த்துவதுபோல். இந்த நாவலின் முடிவே வாசக சுதந்திரத்துக்கென்று, வாசகர்களின் கற்பனைக்கென்று திறந்துவிடப்பட்ட பெரும் வெளிதான். அங்கிருந்து அவரவருக்கான பாகீரதி-வாசுதேவன் – உறங்காப்புலி-ஜெமினி-அரங்கநாதன் நம்பி-விபின் பாஸ்வான் -  சவீதா உருவாகிறார்கள்.      

நாவலின் வடிவம்

‘துப்பறியும் நாவல் போல விறுவிறுப்பாகச் செல்கிறது’ என்று வழக்கமாகச் சொல்லப்படுவதுண்டு. அது இந்த நாவலுக்கு முழுக்கவும் பொருந்துகிறது. இந்த நாவலில் ஜெமினிக்குப் பதிலாக ஒரு குற்றவாளியைப் பொருத்திப் பார்த்தால் மகத்தான துப்பறியும் நாவல் போல ‘பாகீரதியின் மதியம்’ உருவெடுக்கிறது. உறங்காப்புலி, வாசுதேவன், அரங்கநாதன் நம்பி மூவரும் வேறு வேறு புள்ளிகளில் தங்கள் தேடலைத் தொடங்கி ஒரே புள்ளியை நோக்கி நகர்கிறார்கள். வாசுதேவனும் உறங்காப்புலியும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். அரங்கநாதன் நம்பி தன் ஆதர்ச நாயகன் டிராகுலாவைப் போல இன்னும் ஒரு ஜென்மமோ அல்லது பல ஜென்மங்களோ காத்திருக்க வேண்டிய நிலையில் நாவல் முடிகிறது. அதிலும், உபநாவலைப் போல ப்ராம் ஸ்டோக்கரின் ‘டிராகுலா’ நாவலை இணைத்திருப்பது நாவலை அதன் தளத்தைத் தாண்டி வேறொரு தளத்தில் வைத்து சவுகரியமாக வாசித்துக்கொள்வதற்கான கதவைத் திறந்துவிடுகிறது. புதிர்களை அவிழ்க்க வேண்டிய சிரமத்தையும் வாய்ப்பையும் வாசகர்களுக்குத் தராமல் எல்லாவற்றையும் கதைசொல்லியும் ஆசிரியருமே அவிழ்த்துக்கொண்டே போனால் இறுதியில் எல்லா அவிழ்வுகளும் ஒரு பெருமுடிச்சில் போய் முடிகின்றன. நாவலைப் படித்து முடிக்கும் வாசகர்கள் அவிழ்த்துக்கொள்ள வேண்டிய பெரு முடிச்சு அது. ஒருவரில் இன்னொருவர், ஒரு கதையில் இன்னொரு கதை என்று பின்னிப் பிணைந்து விரியும் இந்த நாவல் தமிழ்ப் புனைகதையின் சாத்தியங்களை ஏகமாக விஸ்தரித்திருக்கிறது. அரசியல், காதல் எல்லாவற்றையும் தாண்டி இந்தப் புனைவு சாகசத்துக்காகவே நாவலை வாசிக்கலாம்.   

அடுக்கடுக்காய் இழையும் மொழி
பா. வெங்கடேசனின் ‘ராஜன் மகள்’ புத்தகத்தையோ ‘தாண்டவராயன் கதை’ நாவலையோ படித்திருப்பவர்களுக்கு இந்த நாவல் அவ்வளவு சிரமத்தைத் தராது. ஆனால், புதிதாக நுழைபவருக்கு பா. வெங்கடேசனின் பிரத்யேக மொழிநடை சற்றே சிரமம் தரக்கூடியதாக இருக்கக் கூடும். போர்த்துக்கீசிய நாவலாசிரியர் ஜூஸே சரமாகுவைப் போல் பா. வெங்கடேசனும் நடையிலும் நீண்ட வாக்கியங்கள் எழுதக்கூடியவர். திருகலாக எழுதப்பட்டதுபோல் இருப்பது ஒரு மேல்தோற்றமே. இதுபோன்ற ஒரு கதையை தி. ஜானகிராமன் போல எளிய மொழியில் சொல்வதென்பது சாத்தியமே இல்லை. யதார்த்தத்துக்குள் ஒளிந்திருக்கும் அற்புதங்களின் உள்ளிழைவுகளை வெளிப்படுத்தும் ஒரு மொழியில் சொன்னால்தான் இந்த நாவல் ஒரு இதிகாசம் போல் உருவாகியிருக்கிறது.

ஒரு பக்கத்துக்கும் மேலே நீளக்கூடிய வாக்கியங்களும் நாவலில் உண்டு. உரையாடலை யார் நிகழ்த்துகிறார்கள் என்பதைத் தெரிவிக்கும் தகவல்கள், மேற்கோள் குறி போன்றவையும் இருக்காது. எனினும் வெகுசில இடங்களில் திருகலான வாக்கியங்கள் அலுப்பை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக: ‘(ஓ. விபின், பகிர்ந்துகொள்ள முடியாத அன்பைச் சுமந்துகொண்டு திரிபவர்களின் ஒவ்வொரு நொடியும்தான் எத்தனை ரகசியம் துயரம் மற்றும் அவமானமுறுதல்களின் தாங்கவியலாத கனத்தை இழுத்துக்கொண்டு நகர்வதாயிருக்கிறது)’. சில இடங்கள்தான். மற்றபடி, அவரது நடை ஒரே சமயத்தில் சவாலையும் குதூகலத்தையும் தருவதாக இருக்கிறது. புனைவெழுத்தில் அடைப்புக்குறிகளை அதிகம் பயன்படுத்துபவர் பா. வெங்கடேசனாகத்தான் இருக்கும். இந்த அடைப்புக்குறியே ஒரு குறியோடோ என்று தோன்றுகிறது. ஏனெனில், இந்த நாவலே அடைப்புக்குறிகளுக்குள் சொல்லப்பட்ட கதைபோல்தான் தோன்றுகிறது. அடைப்புக்குறிக்குள் அடைப்புக்குறி என்று நீண்டுகொண்டே போகிறது. அடைப்புக் குறி, அடைப்பதைவிட விரிப்பதுதான் பா. வெங்கடேசனின் மொழியாளுமையின் தனித்துவம். எப்படி, புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா., தி. ஜானகிராமன் போன்றோர் தங்கள் நடையால் தமிழுக்கு வளம் சேர்த்தார்களோ அவர்களைப் போல பா. வெங்கடேசனும் தனது பிரத்யேக நடையால் தமிழ் உரைநடைக்கு வளம் சேர்த்திருக்கிறார். சற்றுப் பொறுமையுடன், வாசிப்பு உழைப்பு செலுத்தினால் கதை உள்ளிழுத்துக்கொள்ளும் வேகத்தில் வாசிப்பு மிகவும் சுலபமாகிவிடும். பொறுத்தாருக்கு அள்ளியள்ளி ரத்தினங்களை பா. வெங்கடேசன் தருகிறார். அவை யாவும் பா. வெங்கடேசனின் படைப்பூக்கத்தின் ஒளியும் வாசகர்களின் கற்பனையொளியும் சேர்ந்தால் குன்றாத ஒளியுடன் தகதகக்கும் ரத்தினங்கள்.  

விவாதத்தின் மொழி

பெரும்பாலான பாத்திரங்கள் நடத்தும் உரையாடல்களும் விவாதங்களும் மிகவும் தத்துவார்த்தமாக, உள்ளிழைவுகளைக் கொண்டவையாக இருக்கின்றன. இவற்றை அந்தப் பாத்திரங்களின் உரையாடல்களாக நம்புவதற்கு ‘suspension of disbelief’ தேவைப்படுகிறது. இதை ஊக்குவிக்கும் விதத்தில் நேரடியான மேற்கோள்குறி ஒரு இடத்தில் கூட இல்லாமல் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. நாவல் முழுவதும் அரங்கநாதன் நம்பி தன் தேடலின் விளைவாகக் கிடைத்த தகவல்களின் இடைவெளிகளை நிரப்பி அதை நாவலாசிரியருக்குச் சொல்ல அவர் நமக்கு வழங்குகிறார். ஆகவே, கதைசொல்லியும் நாவலாசிரியரும் அந்த உரையாடல்களை உள்ளிழைவுகளைக் கொண்டதாக மாற்றுகிறார்கள் என்று ஒரு வகையில் கொள்ளலாம். இன்னொரு வகையில், இந்த உரையாடல்களின் மூலக் கருத்துகள் அந்தப் பாத்திரங்களின் மனதில் இருந்து, அதை இவ்வளவு உள்ளிழைவுகளுடன் மொழியில் வெளிப்படுத்தத் தெரியாத நிலையில் நாவலாசிரியரின் மொழி ஒரு முப்பட்டகமாக அதை அவ்வளவு உள்ளிழைவுகளுடன் பிரதிபலிக்கிறது என்றும் கொள்ளலாம். இந்த சாத்தியங்களை நாவல் தன்னகத்தே கொண்டிராமல் போயிருந்தால், பாத்திரங்கள் அனைத்துமே அறிவுஜீவி மொழியில் பேசுகின்றனவே என்ற ஒவ்வாமை நமக்கு ஏற்பட்டிருக்கும்.



உழைப்பும் படைப்பும்
ஒரு படைப்புக்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் உழைத்திருக்கலாம். அந்த உழைப்பை நியாயப்படுத்தும் விதத்தில் அந்தப் படைப்பு இருக்கிறதா என்பதுதான் முக்கியம். அந்த விதத்தில் ‘பாகீரதியின் மதியம்’, நாவலாசிரியரின் அசாத்திய உழைப்பை கௌரவப்படுத்துகிறது.  மேற்கத்திய இலக்கியங்கள், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், பாரதி, பாரதிதாசன், இந்திய-தமிழக வரலாறு போன்றவற்றில் பா. வெங்கடேசனுக்கு உள்ள ஆழ்ந்த வாசிப்பு நாவலில் துருத்திக்கொள்ளாமல் தெரிகிறது. வாசிப்பை, சூழலுக்கேற்றவாறு பொருத்தத் தெரிந்திருக்கிறது வெங்கடேசனுக்கு. உதாரணமாக, சுருளிநாதன் காதலுக்கு உதவும் விதத்தில் பாரதிதாசனின் வரிகளை மிகப் பொருத்தமாக, எள்ளலுடன், ஆசிரியர் பயன்படுத்தியிருப்பார். இது பாரதிதாசன் மீது ஆசிரியருக்கு உள்ள ஒவ்வாமையைக் காட்டுகிறது என்று சிலர் கூறக்கூடும். படைப்புகளைக் கொள்கை சார்ந்து அணுகுவதில் உள்ள போதாமையைத்தான் வெங்கடேசன் அப்படிப் பகடி செய்திருக்கிறார் என்று நான் எடுத்துக்கொள்கிறேன்.   

புதுமைப்பித்தன், மௌனி, பா. சிங்காரம் போன்ற பெரும் படைப்பாளிகளை மரணத்துக்குப் பிறகு கண்டுகொண்டு தற்போது கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ‘பாகீரதியின் மதியம்’ என்றொரு பெருங்கனவைத் தனது கொடையாக பா. வெங்கடேசன் தமிழுக்குத் தந்திருக்கிறார். தமிழ் வாசகர்களின் கவனத்துக்கு வராத தமிழின் பெரும் படைப்பாளி அவர். அவரையும் யாரும் முன்னிறுத்துவதில்லை, அவரும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக்கொள்வதைப் போலவும் தெரியவில்லை. உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்கள் பலருக்கும் இணையான எழுத்தை அவர் நமக்குத் தந்திருக்கிறார். இந்த நாவல் வெளியாகிப் பத்து மாதங்கள் ஆகியும் மிகச் சிறிய அளவிலான வாசகர் வட்டத்தைத் தாண்டிச் செல்லவில்லை. ஒரு எழுத்தாளர் வேறு என்னதான் செய்தால் அவருடைய படைப்பை இந்தச் சமூகம் கண்டுகொள்ளும் என்று தெரியவில்லை. ‘பாகீரதியின் மதியம்’ போன்ற படைப்புகளை வாசிப்பதென்பது படைப்பாளிக்கு நாம் செய்யும் மரியாதை என்பதைப் போல நமது வாசிப்புத் திறனுக்கும் செய்யும் மரியாதையும் கூட! 
 




4 comments:

  1. நாவல்களை எல்லாம் தொட்டு ஆண்டு பலவாகின்றன. தேவை கருதி பாகீரதியை வாசிக்க வேண்டியுள்ளது. அதற்கு முன் இதை படித்ததும் படிக்க வேண்டிய அவசியம் கூடுதலாயிற்று. உங்களுடைய இந்த நீண்ட கட்டுரையில் ஒரு படைப்பாளனின் பார்வையும் ஒரு பத்திரிகையாளனின் பார்வையும் கலந்தே இருக்கிறது. என்னுடைய பார்வை படித்து விட்டு எழுதுகிறேனே...,

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! அவசியம் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எழுதுங்கள்!
      அன்புடன்
      ஆசை

      Delete
  2. நாவல் யதார்த்தமான கதை நோக்கில் செல்லும்போது ரசிக்க முடிகிறது.உம் :நக்சலடைட் விசாரணை, மனநல மருத்துவர் வாழ்வு,இரயில் வேலைநிறுத்தம்,போன்றவை. இதன் படிமங்கள், தொன்மங்கள், பறப்பவை போன்றவை உங்களைப் போன்றவர்ரகளுக்கு பிடிக்கும் போல.இந்த நாவலை நான் யாருக்கும் முன்வந்து பரிந்துரைக்க மாட்டேன்.

    ReplyDelete
  3. இவ்வளவு பெரிய கருத்துரை இந்த நாவலுக்கு எழுதியிருக்கிறீர்கள்.பாராட்டுகள்.

    ReplyDelete