Thursday, February 9, 2017

சிசிடிவி பெண்


தன் தோழியின்
உடைமாற்றும் வீடியோ
பார்த்த அன்றுதான்
நோய்த் தொற்று ஏற்பட்டது
என்று சொல்லலாம்

வீட்டை விட்டு வெளியே வந்தாலே
எங்கும் துழாவ ஆரம்பிக்கும்
அவள் கண்கள்

மால்களில் திரையரங்குகளில்
கல்லூரி வகுப்பறையில்
திருமண நிகழ்ச்சிகளில்
கடற்கரைகளில்
ரயில் நிலையங்களில்
எல்லா சிசிடிவிகளும்
கைபேசிகளும்
தன்னை ஊடுருவிக்கொண்டிருப்பதை
அவள் எப்படியும் கண்டுபிடித்துவிடுவாள்

சாத்தியமில்லை என்று நினைக்கும்
இடங்களிலும்
சிசிடிவியைக் கண்டுபிடிக்கும்
மோப்ப நாயை
அவள் எப்போதும் தன்னுடன்
வைத்துக்கொண்டிருப்பாள்

போகுமிடமெல்லாம் சண்டையிட்டாள்
எதிர் இருப்பவர் கைபேசிகளைப்
பிடுங்கி உடைத்தாள்
புகைப்படக்காரர்களின் கேமராக்களைப்
பறித்துக்கொண்டு
சிப்புகளை உருவிக்
காலில் போட்டு மிதித்தாள்

வீட்டுக்குள்ளும்
மூலை முடுக்குகளெல்லாம்
தேடிப்பார்க்க ஆரம்பித்தாள்
குளியலறைக்கும்
கழிப்பறை செல்வதற்கும் தயங்கினாள்

அவளுக்கு நோய் முற்றிவிட்டது
இப்போது

மின்சார ரயிலில்
கம்பியைப் பிடித்துக்கொண்டு நிற்கும்
உங்களை உற்றுப்பார்த்தபடி
முன்னேறி வருகிறாள்
இலவசமாகக் கிடைத்த பார்வையை
நீங்களும் வீணாக்காமல்
உருட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்

அவள் உங்கள் கண்களுக்குள்
சிசிடிவியைக் கண்டுபிடித்துவிட்டாள் என்பதையும்
இன்னும் ஓரிரு நொடிகளில்
உங்கள் மூக்கு உடைந்து சிதறப்போகிறது
என்பதையும்
பாவம் நீங்கள் அறிய மாட்டீர்கள் 
    09-02-2017




No comments:

Post a Comment