Wednesday, March 30, 2016

பேருக்கு எவ்வளவு அக்கப்போர்?!



ஆசை

(‘தி இந்துநாளிதழின்இளமை புதுமைநாளிதழில் 25-03-2016 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது)

அடியக்கமங்கலம் என்ற ஊருக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா? அடியக்கமங்கலத்துக்கு ஆரம்பத்தில் வேறு பெயர்தான் இருந்ததாம். அந்த ஊருக்கு வந்த ஒரு ஆங்கிலேயர் அங்கே தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பெண்களிடம் அந்த ஊரின் பெயர் என்ன என்று ஆங்கிலத்தில் கேட்டாராம். அவர் கேட்டது புரியாமல் அங்கே இருந்த ஒரு பெண் மங்கலம் என்ற பேருடைய ஒரு பெண்ணைஅடியக்கா மங்கலம்என்று உதவிக்கு அழைத்திருக்கிறாராம். ‘, அடியக்கமங்கலம், நைஸ் நேம்என்று சொல்லிக்கொண்டு, அதுதான் ஊரின் பெயர் என்று நினைத்துக்கொண்டு அந்த ஆங்கிலேயர் போய்விட்டாராம். இது உண்மைச் சம்பவமல்ல. என்றாலும் ஒரு ஊரின் பெயரை அறிந்துகொள்வதில் இருவேறு மொழிகளைச் சேர்ந்தவர்களிடையே எழும் பிரச்சினையை உணர்த்தும் விதமாக உள்ளது.


வழக்கமாக ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட மேலைநாட்டுக்காரர்களுக்கு நம் நாட்டு ஊர்களின் பெயர்கள் அவ்வளவு எளிதில் வாய்க்குள் சிக்காது. எழும்பூர் எக்மோர் என்றும், தூத்துக்குடி டூட்டிகொரின் என்றும், கொள்ளிடம் கோலிரூனாகவும் சிக்கிச் சின்னாபின்னமாகியிருக்கின்றன. நம்மவர்களும் சும்மா இல்லை. நம் ஊர்களை மென்று தின்றதற்குப் பழிக்குப் பழிவாங்கும் விதமாக பீட்டரை பேதுருவாகவும், சேக்ஸ்பியரை செகப்பிரியராகவும் (நல்லவேளை செக்ஸ்பிரியர் இல்லை) ஆக்கி மகிழ்ந்தனர். ஆனால், இதில் வெற்றி என்னவோ ஆங்கிலேயர்களுக்குதான் அதிகம். எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் சென்னை நகரப் பேருந்து ஒன்றில் ஏறிப்பாருங்கள் தெரிந்துகொள்வீர்கள். ஒரு ட்ரிப்லிகன், ராயப்பேட் ஒண்ணு, சைதாபேட் ஒண்ணு, குரோம்பேட் ரெண்டுஆக, நம் வாய்களில் அவர்களின் குரல்களைத் திணித்துவிட்டுப் போய்விட்டார்கள்.

வெவ்வேறு மொழிகளைப் பேசும் நாடுகளின் பெயர்கள், அந்த நாடுகளைச் சேர்ந்த ஊர்கள், நபர்கள் ஆகிய பெயர்களை வேறு மொழியில் எழுதுவது என்பது ஆரம்ப காலத்திலிருந்தே சிரமமாக இருந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்தால் உலகம் முழுவதும் எளிதாக இணைக்கப்பட்டிருக்கும் இந்தக் காலத்தில் பிற மொழிகளின் பெயர்களை எப்படி இன்னொரு மொழியில் எழுதுவது எப்படி, உச்சரிப்பது எப்படி என்பது பற்றித் தெரிந்துகொள்வது சற்றே எளிதாகியிருக்கிறது. மேலைநாட்டுப் பெயர்களை எப்படி உச்சரிப்பது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு ஹவ்டூப்ரனவுன்ஸ் டாட் காம் (https://www.howtopronounce.com/), ப்ரனவுன்ஸ்நேம்ஸ் டாட் காம் (http://www.pronouncenames.com/), ஹவ்ஜ்சே டாட் காம் (http://howjsay.com/), ஃபோர்வோ டாட் காம் (http://forvo.com/), விக்கிபீடியா போன்ற இணையதளங்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஆக்ஸ்ஃபோர்டு அகராதி (http://www.oxforddictionaries.com) உள்ளிட்ட அகராதிகளின் இணையதளங்களில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் பிரபல மனிதர்கள், இடங்கள் போன்றவற்றின் உச்சரிப்பையும் தெரிந்துகொள்ள முடியும். பிரான்ஸ் அதிபர் Francois Hollande பெயரை எப்படி உச்சரிப்பது என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? இந்த இணையதளங்களுக்குப் போய்ப் பார்த்தால் அவரின் பெயரை ஃபிரான்காய்ஸ் ஹாலந்தே என்றல்ல, ஃப்ரான்ஸ்வா ஒல்லாந் என்று உச்சரிக்க வேண்டும் என்பது தெரியும். மேலைநாட்டு மொழிகளைச் சேர்ந்த பெயர்கள் சரி, இந்திய மொழிகளைச் சேர்ந்த நபர்களின் பெயரைத் தெரிந்துகொள்ள என்ன செய்வது? சிக்கல்தான். அதற்கும் பெரும்பாலும் மேலைநாட்டு மொழிகளுக்கான மேற்கண்ட இணையதளங்களுக்குதான் போய்ப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதிலும் எக்மோர் பிரச்சினைதான். http://pronounce.voanews.com/ என்ற இணையதளத்தில் தமிழ்ப் பெயர் ஒன்றை இப்படி உச்சரித்திருக்கிறார் ஒருஎக்மோர்காரர்: ஜேஅய்ராம் ஜாஅஹ்லஹ்லிடாஹ். யார் பெயர் தெரிகிறதா? சாட்சாத் நம் முதல்வர் ஜெ(யராம்) ஜெயலலிதாவேதான்.

தேவநாகரி லிபியில் எழுதப்படும் மொழிகளைச் சேர்ந்த பெயர்கள் என்றால் இந்தி, சமஸ்கிருதம் தெரிந்த நபர்களைக் கேட்டு விளங்கிக்கொள்ளலாம். ஒரு மணி நேரத்தில் இந்த லிபியை மனப்பாடம் செய்துகொள்ள முடியும். அதை வைத்தும் தேடிப்பார்த்து உச்சரிப்பைக் கண்டுபிடிக்கலாம். உதாரணமாக, தமிழில் கெஜ்ரிவால் என்று பலரும் எழுதுகிறார்கள். இந்தியில் தேடிப்பார்த்தால் केजरीवाल என்று அவரது பெயர் இருக்கும். இந்தியில் அவரது பெயரின் முதல் எழுத்தின் மேல் உள்ள கோடுஎன்ற உயிர் எழுத்தைக் குறிக்கும். இந்தியில் குறில் எழுத்தானகிடையாது. ஆகவே, கேஜ்ரிவால் என்பதுதான் சரி என்பது நமக்குத் தெரியும். இதே முறைப்படி சென்னையைசேன்னைஎன்றுதான் இந்தியில் எழுதுவார்கள். இப்படி ஏதாவது வழிமுறையை வைத்தோ அல்லது வேறு இந்திய மொழிகளைச் சேர்ந்த நண்பர்களின் உதவி பெற்றோ நாம் சரியான உச்சரிப்புகளைக் கண்டுபிடிக்க முடியும். எனினும், மேலைநாட்டு மொழிகளுடன் ஒப்பிடும்போது இந்திய மொழிகளின் பெயர்களுக்குச் சரியான உச்சரிப்பு கிடைப்பதுதான் சிரமமாக இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்திய மொழிகளில் உள்ள பெயர்களின் உச்சரிப்புக்கும் நாம் ஆங்கிலத்தைதான் நம்பியிருக்கிறோம். Narendra Modi என்ற பெயரை நரேந்திர மோடி என்றே தமிழில் உச்சரிக்கிறோம். உண்மையில்மோடிஅல்ல,  ‘மோதிஎன்றே உச்சரிக்க வேண்டும். ஆங்கிலத்தை நம்பியதால் எல்லோரும்மோடிவசப்பட்டுவிட்டோம். இனி அந்தப் பெயரை மாற்றினால் மக்களுக்குப் புரியாது. ‘மேக் இன் இந்தியாஉள்ளிட்ட முழக்கங்களை முன்னெடுத்த மோடிக்கே இந்த நிலைமை, பாவம்! இந்திய இலக்கியங்களை மேலைநாட்டுப் பேராசிரியர்கள் ஏன் மொழிபெயர்க்க வேண்டும் என்று சமீப காலமாக இந்துத்துவ சார்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள் அல்லவா! அவர்களெல்லாம் இது போன்றுஇந்திய மொழிப் பெயர்களின் உச்சரிப்புக்கு எவ்வளவோ செய்யலாமே! செயலை விட்டுவிட்டுக் குரலை மட்டும் உயர்த்திக்கொண்டிருப்பதுதான் பெரும்பாலான இந்தியர்களின் பலவீனம்.


பெட்டிச்செய்தி:
'மேல திருவேங்கடநாதபுரம்' டூ ஃபெடரல் நீதிமன்றம்!

ஒரு பிரெஞ்சுப் பெயரையோ ஸ்பானிஷ் பெயரையோ இல்லை இந்திப் பெயரையோ உச்சரிப்பதற்கு ஆங்கிலத்தைதான் நம்மில் பெரும்பாலானோரும் நம்பியிருக்கிறோம். அதனால் மூலமொழியில் உள்ள உச்சரிப்பு போல இல்லாமல் ஆங்கில உச்சரிப்பு போல் ஆகிவிடும் ஆபத்து பல தடவை ஏற்பட்டுவிடுகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்றவற்றில் கூடியவரை மூலமொழியின் உச்சரிப்பைக் கண்டுபிடிப்பதற்கு முயற்சி செய்வது அவசியம். அப்படி மூலமொழி உச்சரிப்பைக் கண்டுபிடிப்பதற்கு அமெரிக்கப் பத்திரிகையானதி நியூயார்க் டைம்ஸ்காட்டியிருக்கும் அக்கறை, பொறுமை நம்மை வியக்க வைக்கக்கூடியது.

அவர்களை இப்படிச் சிரமப்படுத்திய மூலமொழி வேறு எதுவுமல்ல, நம் தமிழ்தான். ஆம்! அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருந்த அமெரிக்க-வாழ் தமிழரான ஸ்ரீ ஸ்ரீனிவாசன் குறித்த ஒரு செய்திக் கட்டுரைக்காகத்தான் இவ்வளவு சிரமமும். அவரைப் பற்றிய செய்தியை எழுதியநியூயார்க் டைம்ஸ்இதழின் தெற்காசிய செய்திப் பிரிவின் தலைவர் எல்லன் பேரன்  ‘மேல் திருவேங்கடநாதபுரம்என்ற ஸ்ரீனிவாசனின் பூர்விக கிராமத்தின் பெயரை ஆங்கிலத்தில் எப்படி உச்சரிப்பது என்று தெரியவில்லை என்ற குறிப்பையும் சேர்த்து அனுப்பினார். துல்லியத்துக்கென்று கூடுதல் பொறுப்பு எடுத்துக்கொள்ளும் அந்த இதழ் விஷயத்தை அத்துடன் விட்டுவிடவில்லை. அந்த இதழின் வாஷிங்டன் செய்திப் பிரிவின் தலைவர் எலிசபெத் பமிலரின் உதவியை நாடியது. அவர் ஒரு தமிழரைக் கண்டுபிடித்து உதவி கேட்டார். தனது பெயரையும், தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் அந்தத் தமிழர்மேலத் திருவேங்கடநாதபுரம்என்ற பெயரை எப்படி உச்சரிப்பது என்ற குறிப்புகளை மின்னஞ்சலில் அனுப்பினார். அந்தக் குறிப்புகள்:


MELA THIRUVENKATANATHAPURAM = MELA + THIRU + VENKATA + NATHA + PURAM

= Me-la Thi-ru Ven-ka-ta Na-tha Pu-ram

= May-la Thi-ru Wayne-ka-ta Na-tha Pu-ram

If you want to dive deeper:

Mela > May + la as in lamp.

Thiru > Th as in ‘that’ + i + ru as in root.

Venkata > ven as in wayne + ka as in cart + ta as in task

Natha > naa + dha as in ‘that’

Puram > pu as in poor + ram (as in ram for male sheep, not Ram for Hindu god)


இந்தக் குறிப்புகளை மட்டுமல்லாமல் கூடவே, தன் குரலில்மேல திருவேங்கடநாதபுரம்என்ற கிராமத்தின் உச்சரிப்பையும் அவர் அனுப்பியிருந்தார். இதற்கிடையில் எல்லன் பேரன் மேல் திருவேங்கடநாதபுரத்துக்கே சென்றுவிட்டார். இவை எல்லாமே அந்தப் பத்திரிகையின் அர்ப்பணிப்புணர்வுக்குச் சான்று. ஒரு செய்திக்குப் பின்னுள்ள தேடல்கள், உழைப்பு போன்றவை செய்தியாவதில்லை. ஆனால், ‘நியூயார்க் டைம்ஸ்பின்னணிக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்த விஷயத்தைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருப்பது பாராட்டத் தக்கது (லிங்க்: http://goo.gl/A27hwv).

ஸ்ரீஸ்ரீனிவாசனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஒபாமா தேர்ந்தெடுத்திருந்தால் மேல திருவேங்கடநாதபுரமே வாண வேடிக்கையில் குளித்திருக்கும். என்றாலும், இதழியல் வரலாற்றில் ஒரு பாடமாகவே இந்தக் கதை மாறியிருக்கிறது.  
 - நன்றி: ‘தி இந்து’. ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/Ap79RX

No comments:

Post a Comment