Tuesday, February 25, 2025

மன்னார்குடி உங்களை வரவேற்கிறது ஞானக்கூத்தன்! - மாயக்குடமுருட்டி காவியத்திலிருந்து...


ஆசை

வணக்கம் ஞானக்கூத்தன்
மன்னார்குடி உங்களை வரவேற்கிறது

நீங்கள் பிறந்த திருஇந்தளூர் சென்றுவிட்டு
கும்பகோணம் வழியே
மன்னார்குடி வந்திருக்கிறீர்கள்
நன்றி

பாரம்பரிய மிக்க ஊர் இது

ஒரு காலத்தில் பத்து வாத்தியங்கள் ஒலித்த
ஒரே ஊர்

ராஜகோபாலசுவாமி தரிசனம் செய்துவிட்டு
இரவு சென்னை திரும்புவது
உங்கள் திட்டம்

எல்லோருக்கும் பிடித்த கோயில் அது

கொஞ்சம் பொறுங்கள்
சுவாமி தரிசனம் முடித்துவிட்டு
ஒரு அலங்கோல தரிசனமும்
பெற்றுச் செல்லுங்கள்

கோயிலுக்கு அருகேதான்
கட்சிக் கூட்டம் ஒன்று
நடக்கிறது

போனால்
உங்கள் கவிதை
திரும்பத் திரும்பத் தன்னை
நிகழ்த்திக்கொண்டிருப்பதைக் காணலாம்

அட
சொன்னபடியே இங்கே வந்தும்விட்டீர்களே
மிக்க நன்றி
இதோ கூட்டம் தொடங்கிவிடும்

நான்காவது வரிசையில்
அப்பா மடியில்
ஒரு சிறுவன் உட்கார்ந்திருக்கிறான்
அவனை மட்டும்
கொஞ்சம் பார்த்து வைத்துக்கொள்ளுங்கள்
எதிர்காலத்தில்
உங்கள் கவிதைகளின் தீவிர வாசகன்
கோபம் கொண்டாலும்
மாற மாட்டான்
உங்களுக்கு ரசிகப்பிள்ளை சம்பவம்
அவனே செய்வான்
அவனை மன்னியுங்கள்

உங்களைப் போலவே
அவன் அப்பாவுக்கும் தமிழ்தான் மூச்சு
வெங்கனல் உமிழப் பிறர் வரும்போது
அது தணிக்க
வேறு வழியில்லாமல்
அவர் மீதெல்லாம்
அவர் விடத்தான் செய்வார்
அவரை மன்னியுங்கள்

ஆஹா இதோ கூட்டம் தொடங்கிவிட்டது
வரவேற்புரை நிகழ்த்துபவர்
மேலவாசல் அண்ணாத்துரை
முதல் முறையாக மேடையேறுகிறார்
‘தலைவரார்களேங்’ என்று தொடங்கவில்லை
ஆனால் கிட்டத்தட்ட அவர் பேச்சு
அப்படித்தான் இருக்கும்
அவரை மன்னியுங்கள்
அவர் பிள்ளை மேடை ஏற மாட்டான்
மேற்படிப்புக்குப் பட்டணம் போய்விடுவான்

‘தொண்ணூறு வாட்டம்’ கொண்ட
ஊரில்லை இது
மன்னிக்கவும்
அதனால் அவரை இடைமறித்து
பதிமூன்றாம் வட்டத்தின் சார்பில்
இந்த மலர்மாலையை
அண்ணனுக்கு மணிமாலையாய்
குறுக்கே ஒருவர் சார்த்த வருகிறார்
அவரையும் மன்னிக்கவும்

அவர்கள் ‘வாழ்க வாழ்க’ எனும்போதும் சரி
அவர்கள் ‘ஒழிக ஒழிக’ எனும்போதும் சரி
கேட்கச் சகிக்கவில்லைதான்
தங்களுக்குக் குரல் வந்ததை
இப்படித்தான் அறிவிக்கத் தெரிகிறது
அவர்களுக்கு
அவர்களை மன்னியுங்கள்

எல்லாச் சடங்குகளுக்கும்
மந்திரமொழி உண்டு
இவர்களுக்கு அது தெரியாது
அது தெரிந்திருந்தால்
உங்கள் கவிதைக்குள்
இவர்களுக்கு
அவப்பெயர் கிடைக்காமல்
போயிருந்திருக்கும்
மன்னியுங்கள்

ஆனால்
வரலாற்றை நீங்கள்
சாஸ்வதப்படுத்திவிட்டீர்கள்
மேடையில் நிற்பவர்கள்
அந்த நயத்தைக் கற்கத்தான் வேண்டும்
அவர்களை மன்னியுங்கள்

கூட்டம் கலைவதற்கு முன்னே
பேச்சாளர் இன்னும் ‘யிருகூட்டம்
பேசயிருப்பதால் வொடய்’ பெறும் முன்னே
மேடையமைத்த
பந்தல்செட் பன்னீருக்கும் மாலை
இப்படி அலங்கோலப் பேச்சுகளை
எட்டுத்திக்கும் அதிரவிட்ட
மைக்செட் முனியாண்டிக்கும் மாலை
அவர்களை மன்னியுங்கள்

இடையே பெயர்வைக்க வேண்டி
தன் கைக்குழந்தையுடன் மேடையேறிய
வடுவூர் ராஜமாணிக்கம் குழந்தைக்குப்
‘பூங்கொடி’
சேரங்குளம் ஜெயபால் குழந்தைக்கு ‘முரசொலி’
என்னென்ன கூத்துக்கள்
அவர்களை மன்னியுங்கள்

மேடை கருவறையல்ல
அதுதான் யார் யாரோ ஏறிவிட்டார்கள்
அதையே சாதனையாகவும்
பேசிக்கொள்கிறார்கள்
அவர்களை மன்னியுங்கள்

தாங்கள் மேடைக்கு வருவதற்குள்
காலம் எங்கோ சென்றதை
அறியாதவர்கள்
ஆனால் மேடையில் இருந்துகொண்டு
காலத்தைத் தங்கள் பின்னே வரவைக்கும்
வித்தை அவர்களையே அறியாமல்
அவர்களிடம் உண்டு
அவர்களை மன்னியுங்கள்

உங்களுக்கு நேரம் ஆகிவிட்டதென்று
எனக்குத் தெரியும்
கலைந்து செல்லும் கூட்டமும்
கூட்டம் சென்ற பின்
வெறிச்சோடும் திடலும்
திரைப்படங்களில் கவித்துவமிக்கதாக
இருக்கலாம்
இங்கே அப்படி இருக்காது
மன்னியுங்கள்

இதனாலெல்லாம் மன்னார்குடிக்குத்
திரும்பவும் வராமல்
இருந்துவிடாதீர்கள்

மன்னார்குடி உங்களை
எப்போதும் வரவேற்கும்

வாய்ப்புக்கு நன்றி கூறி
என் உரையை
இத்துடன் முடித்துக்கொள்கிறேன்
பிழையாகவோ
உங்கள் மனம் புண்படும்படியோ
பேசியிருந்தால்
மன்னியுங்கள்

    - எனது ‘மாயக்குடமுருட்டி’ (2025, எதிர் வெளியீடு) காவியத்திலிருந்து

   (திராவிட இயக்கத்தினரின் மேடைப் பேச்சைப் பகடிசெய்து ஞானக்கூத்தன் எழுதிய 'தலைவரார்களேங்' என்று தொடங்கும் 'காலவழுவமைதி'  கவிதையைக் காண்க) 

No comments:

Post a Comment