(எனது புதிய கவிதைத் தொகுப்பான ‘ஹே ராவண்’ நூலுக்குப் பேரா. ராஜன் குறை வழங்கிய அணிந்துரை)
தமிழில் எண்ணிப் பார்ப்பது என்றால் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுவதையும் குறிக்கும்; சிந்தித்துப் பார்ப்பதையும் குறிக்கும்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
என்பது குறள். இங்கே எண் என்பது ஆங்கிலத்தில் நம்பர் எனப்பட்டாலும், டிஜிட் என்றும் கூறலாம். எண்ணை முதலில் சொல்லி, எழுத்தை அடுத்து சொல்லியிருப்பது மிகவும் கருதத்தக்கது. இப்போது நான் கணினியில் தட்டச்சு செய்வது டிஜிட்டலாகத்தான் எழுத்தாக மாறுகிறது என்பதைக் கருதாமல் இருக்க முடியவில்லை. வள்ளுவருக்கு டிஜிட்டல் யுகம் பற்றிய முன்னறிதல் இருந்தது என்று பொருளல்ல. ஆனால் ‘எண்ணி’ப் ‘பார்ப்பது’ என்பதில் எண்ணும், கண்ணும் இணைந்திருப்பதும் அதுவே எழுத்தாவதும் தமிழ் சிந்தனை மரபில் பதிவாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
எண்ணிப் பார்க்கும்போது சிந்தனை அலகுகளாகப் பிரிகிறது. அந்த அலகுகளின் பல்வேறு தொகுப்புகள் நமக்குள் புதிய பார்வைகளை உருவாக்குகின்றன. எனவேதான் ஆசை காந்தி, ராமனை எண்ணிப் பார்க்கிறார் என்றும் எழுதிப் பார்க்கிறார் என்றும் கூறுகிறேன்.காந்தி இந்தியாவின் மகத்தான லட்சியம். லட்சியங்களின் உருவகம். காந்தி நிகழ்ந்திராவிட்டால் அவரை யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. அவர் நிகழ்ந்ததால் மிகத் துரிதமாக அவர் எளிய இந்தியர்களின் கற்பனைகளில் இடம்பெற்றார். காலங்காலமாகக் கற்பனை செய்யப்பட்ட மகானாக, இறையருள் பெற்றவராக, அற்புதங்களை நிகழ்த்தக்கூடிய புனிதராக மக்கள் அவரை உருவகித்தார்கள். ஷாஹித் அமின் என்ற வரலாற்றாசிரியர் 1922ஆம் ஆண்டு செளரி செளராவில் கிளர்ச்சியாளர்களான கிராம மக்கள், காவல் நிலையத்தை எரித்தபோது இருபத்திரண்டு காவலர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை ஆராயும்போது, அதற்கு முன்னால் உள்ளூர் பத்திரிகைகளில் எப்படியெல்லாம் மக்கள் காந்தியின் தெய்வீக சக்திகளைப் பற்றி கற்பனை செய்தார்கள் என்பதன் பதிவுகளைத் தொகுத்துக் கூறியுள்ளார். உதாரணமாக காந்தியை இகழ்ந்தவர் வீட்டின் கூரையில் இரவில் கல்மாரி பொழியும். காந்தியைப் போற்றுபவருக்குப் புதையல் கிடைக்கும் என்பதுபோல பல கதைகள் பரவின. அந்த எளிய மக்கள் கற்பனை செய்த அற்புதங்களை விட ஒரு அதிசயத்தை காந்தி அந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்த பிறகு செய்தார். நாடு தழுவிய ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திவிட்டார். சுதந்திரத்துக்கான இயக்கத்தில் வன்முறைக்குச் சிறிதும் இடம் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். அவரை தெய்வீக சக்தி கொண்டவராகக் கற்பனை செய்வது எளிது. ஆனால் அகிம்சை என்ற லட்சியத்துக்காக நாடு தழுவிய ஒரு இயக்கத்தை நிறுத்துவதை கற்பனை செய்வது கடினம். இது போன்ற காரணங்களால்தான் காந்தி நிகழ்ந்திராவிட்டால் அவரைக் கற்பனை செய்திருக்க முடியாது என்று நினைக்கிறேன். அதனால்தான் ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் இப்படி ஒருவர் பூமியில் வாழ்ந்தார் என்பதை எதிர்கால சந்ததியினர் நம்ப மாட்டார்கள் என்று கூறினார்.
ஒரு லட்சிய உருவகம் என்று வந்தாலே அதில் முரண்பாடுகள் நிச்சயம் நிறைந்திருக்கும். முரண்பாடுகளையும் எண்ணிப் பார்த்தால்தான் லட்சியம் துலக்கமாகும் என்பதை உணர்ந்திருக்கிறார் ஆசை. இன்னும் சொல்லப்போனால் முரண்பாடுகளே லட்சியங்களை அர்த்தப்படுத்துவதாகவும் நினைக்கிறார் என்றும் தோன்றுகிறது. பூக்களைச் சுற்றி முள் இருப்பது போல, லட்சியங்களின் தனித்துவம் அதனைச் சூழ்ந்த முரண்பாடுகளால் காக்கப்படுகிறது. நாம் முரண்பாடுகளை மறந்துவிட்டு லட்சியங்களை மட்டும் கவனித்தால் ஒன்றும் விளங்காது.
காந்தி ஒரு லட்சிய உருவகம் என்றால், இந்தியாவின் இன்னொரு லட்சிய உருவகம் ராமன். அது மட்டுமல்ல. ராமன் காந்தியின் லட்சிய உருவகம் கூட. அவனது தந்தை தசரதனைப் போல அறுபதினாயிரம் மனைவிகளை, அல்லது நாம் நன்கு அறிந்த அளவில் மூன்று மனைவிகளைக் கூட மணக்காமல், ஏகபத்தினி விரதனாக இருந்தவன் ராமன். அந்த மனைவியையும் குடிமக்கள் ஐயத்துக்கு அப்பால் இருக்க வேண்டும் என்பதற்காக கர்ப்பமாக இருக்கும்போது காட்டுக்கு அனுப்பிவிடுகிறான். முடிசூட இருந்தவன் தந்தையின் ஆணையைக் கேள்வியின்றி ஏற்றுக் காட்டுக்குச் செல்கிறான். இப்படி லட்சியங்களையே முன்வைத்து வாழ்ந்ததால் ராமன் காந்திக்கு லட்சிய உருவகமானான். காந்தியின் அன்பர்களோ காந்தியையும் ராமனையும் இணைத்தே பார்த்தனர்.
பிரச்சினை என்னவென்றால் சாவர்க்கருக்கும் ராமன் ஒரு லட்சிய உருவகம்தான். சாவர்க்கர் பார்வையில் இந்திய நிலப்பரப்பு முழுவதையும் வென்று இந்து அரசை உருவாக்கிய வரலாற்று நாயகன் ராமன். அதனால் அவர் உருவாக்க விரும்பிய இந்துத்துவ அரசுக்கு, இந்து ராஷ்டிரத்துக்கு, ராமனே முக்கிய உருவகம். இந்துத்துவ ராமன் மாவீரன். வில் என்ற கொலைக்கருவியைத் திறம்பட பயன்படுத்துபவன். எதிரிகளைக் கொன்றொழிப்பவன்.
இந்த வகையில் காந்தியின் முரண் ராமனிடத்திலிருந்தே துவங்குகிறது. அதனால் ஆசையும் அந்த முரணை மையப்படுத்தியே துவங்குகிறார். இரண்டு ராமராஜ்யங்களை வர்ணிக்கிறார். ராமனின் முரண்களைப் பேசுகிறார். ராமன் கணையால் வீழ்த்தப்பட்ட மரங்களை எண்ணுகிறார். சம்புகனைக் குறிப்பிடுகிறார். ராமனின் குணாதிசயங்களையும் இரண்டு பட்டியலாக எண்ணுகிறார். எளிமையான, கூர்மையான வார்த்தைகளால் முரண்களை உருவகம் செய்கிறார்.
இரண்டு ராமராஜ்யங்கள் தொடக்கக் கவிதையாக இருப்பது தற்செயல் அல்ல. இந்திய தேசியத்தின் உருவக வரலாறு அது என்று கூறலாம். அங்கதமும் துல்லியமும் நிறைந்த சொற்களால் அந்த முரணை எண்ணிப் பார்க்கிறார் ஆசை. ஒரு ராமராஜ்யத்தில் ஒரே ஒரு ராமன்; இன்னொன்றில் எல்லோருமே ராமன் என்று அவர் கூறும்போது புதிய வெளிச்சம் கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒரு ராமராஜ்யத்தில் எல்லோரும் மார்பைப் பிளந்து “சீதையற்ற” ராமன் படத்தை காட்ட வேண்டும். மற்றொன்றில் ராமர்கள் தங்கள் நெஞ்சை பிளந்து அதில் ராவணன், வாலி, சூர்ப்பனகை உள்பட அனைவரையும் காட்டுவார்கள். உருவக லட்சியம் ஆசையின் வார்த்தைகளில் பெரும் விரிவு கொள்கிறது. லட்சிய உருவகத்தை சிதைத்து சிந்தியெடுத்து சிந்தித்துப் பரவுகிறது. இதையெல்லாம் விட வன்முறை நிரம்பிய ராமராஜ்யம் சீதையின் கற்பைத் தலைநகராகக் கொண்டது என்றும் மற்றொரு ராமராஜ்யம் சீதையின் துயரைத் தலைநகராகக் கொண்டது என்றுதான் கவிதையை துவங்குகிறார். லட்சியங்களின் முரணை இப்படித்தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்த முரண்களின் உச்ச நிகழ்வு ஒரு கொலை. காந்தியின் மீது பாய்ந்த தோட்டாக்கள். ஆசையின் முதல் கவிதை அதில் முடிவதுடன், மீண்டும் மீண்டும் அவர் அந்த நிகழ்வைப் பல்வேறு வார்த்தைகளில், உருவகங்களில் எண்ணிப் பார்க்கிறார். நாமும் யோசித்துப் பார்த்தால் உலக வரலாற்றிலேயே லட்சியங்களின் உச்சகட்ட மோதலில் இப்படி ஒரு கொலை நடந்திருக்குமா என்று வியப்பாகத்தான் இருக்கிறது. தலைவர்கள் பலர் எதிரிகளால் பழிவாங்கும் நோக்கில் கொல்லப்பட்டுள்ளார்கள். இனம் புரியாத சதிச் செயல்களால் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆனால், காந்தி கொலையைப் போல தேசத்தின் இருவேறு வரையறைகளின் தத்துவார்த்த முரணின் வெளிப்பாடாக ஒரு கொலை நடந்திருக்குமா என்று சொல்ல முடியாது. அந்தக் கொலையை வெவ்வேறு வகையில் சரியாகப் புரிந்துகொண்ட இருவரை ஆசை குறிப்பிடுகிறார். ஒருவர் ஆஷிஸ் நந்தி. மற்றொருவர் பெரியார். அந்த நிகழ்வை, தருணத்தை மீண்டும் மீண்டும் எண்ணி, எழுதிப் பார்க்கிறார்.
லட்சியங்களில் பலவீனங்களையும், பலவீனங்களில் லட்சியங்களையும் பார்க்கத் தயங்காத ஆசையின் எண்ணத்தில் ராவணனும் ராமனுமே இடம் பெயர்கிறார்கள். ராவணனை ஒற்றைத்தலையனாக்கி இடம்பெயர்கிறான் ராமன். மற்றொரு அண்டத்தில் ராவணன் மனைவியை கடத்துகிறான் ராமன். தன் தலைகளைக் கொய்து அண்டத்தை கலைக்கிறான் ராவணன். ராம ராவண முரணைக் கடந்து பயணிக்கத் துடிக்கிறது லட்சிய உருவகம்.
அம்பேத்கரிடம் மன்றாடுகிறார் காந்தி. கஸ்தூர் பாவுக்கு ஈடாகாமல் தவிக்கிறார். காந்திய லட்சியத்தின் அபத்த விளிம்பில் சிக்கிக்கொண்ட மனு காந்தியின் குமறல் காந்தியைத் தாயாக்கி மறுகுகிறது. தன் அனைத்து உள், வெளி முரண்பாடுகளுடனும் எண்ணப்படுகிறது காந்தி என்ற லட்சிய உருவகம். இருபதாம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த தனித்துவ நிகழ்வாகிய காந்தியின் அபூர்வத்தன்மையை வேறெப்படியும் பரிசீலிக்க முடியாது.
காந்தி, காந்தியுடன் பிணைந்த ராமன் ஆகிய லட்சிய உருவகங்களை எண்ணிப் பார்க்காமல், எழுதிப்பார்க்காமல் இந்தியாவின் வரலாற்று ஆன்மாவின் முரண்களை உணர முடியாது. அதன் விகசிப்பை சாத்தியமாக்க முடியாது. அந்த வகையில் ஆசையின் வரிகள் தங்கள் அலைதலை ஓயாது நிகழ்த்த முயல்கின்றன.
ஓவியர் ஆதிமூலம் காந்தியின் உருவத்தை மீண்டும், மீண்டும் கோட்டோவியங்களாக வரைந்தார். காந்தியின் சித்தரிப்பில் பல கோணங்களை உணர்ந்து உணர்த்த முயற்சித்தார். ஆதிமூலத்தின் கோடுகள் போன்றவையே ஆசையின் வரிகளும். ஆதிமூலம் வரைந்து பார்த்ததை, எண்ணியும் எழுதியும் பார்க்கின்றன. லட்சியங்களின் தாகத்தைத் தனக்குள் தேக்கிய படிமமும் உருவகமுமான காந்தியைத் தொலைத்துவிட முடியாது என்பதையே இந்த செயல்பாடுகள் உணர்த்துகின்றன.
ஆசையின் வரிகளும் கூட ராமனின் அம்புகள் போலத்தான் ஆனாலும் மரங்களை வீழ்த்தாமல் எண்ணங்களை விதைக்க முயல்கின்றன. பறக்கும் வரிகள் (lines of flight) என்று கூறுவார் பிரெஞ்சு தத்துவ அறிஞர் தெல்யூஸ். ஏதோ நகரத்தில், சிறு நகரத்தில், கிராமத்தில் ஏதோவொரு இளம் மனதில் தைக்கும் ஆசையின் வரிகள் அங்கே விதைத்துக்கொண்டு பெருக்கும் எண்ணங்களின் பயணங்களை எதிர்நோக்க முடிகிறது. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் என்பார்கள். கோட்சேவின் தோட்டாக்களை விதைகளாக்குகிறார் ஆசை.
-ராஜன் குறை
(பொருத்தமானதொரு அணிந்துரையை வழங்கிய பேரா. ராஜன் குறைக்கு நன்றி!)
**
ஹே ராவண்!
(கவிதைகள்)
ஆசை
எதிர் வெளியீடு
விலை: ரூ.200
சென்னை புத்தகக் காட்சியில் எதிர் வெளியீடு அரங்கு எண்: F-43
No comments:
Post a Comment