Monday, April 19, 2021

ஸ்பைடர்மேனால் வரையப்பட்டவன் – மகிழ் உலகத்துக்கு ஓர் அறிமுகம்

 


ஆசை

நான் வெகுகாலமாகக் குழந்தைகளின் மொழியைக்  கவனித்துக்கொண்டுவருகிறேன். மொழியை அவர்கள் வெளிப்படுத்தும் விதத்தில் அறியாமையும் அழகும் ஒன்றுசேர்ந்து வெளிப்படும். கவிதைக்கேயுரிய அதர்க்கம் அவர்களின் மொழியில் வெளிப்படுவதை நாம் காணலாம். 

மகிழ் ஆதன் 2012-ல் பிறந்தான். அவன் ‘அம்மா’, ‘அப்பா’ சொல்ல ஆரம்பித்ததிலிருந்து மொழியை எப்படி உள்வாங்குகிறான், மொழி அவனிடமிருந்து எப்படி வெளிப்படுகிறது என்பதையெல்லாம் நெருக்கமாக கவனித்துக்கொண்டிருந்தோம். உலகத்தை அவன் புதிதாகத் தெரிந்துகொள்ள ஆரம்பித்த நாட்கள் என்பதால் அழகான, ஆனால் நாம் பதில் சொல்ல முடியாத கேள்விகளை, எல்லாக் குழந்தைகளையும் போலவே, கேட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு 4 வயது இருக்கும்போது அவனுக்கும் எனக்கும் பின்வரும் உரையாடல் நிகழ்ந்தது:

எனக்கு ஏசப்பா ரொம்பப் பிடிக்கும்

ஆனா அம்மா என்னை ஏசப்பா கோயிலுக்கு அடிக்கடி அழைச்சுட்டுப் போக மாட்டேங்கிறா.

(ஏசப்பா உன்னோட பேசினாரா?)

அவர் எப்படிப் பேசுவாரு? 

அவரு நிஜம் இல்லை. வரைஞ்சது.

நாமளும் வரைஞ்சதுதான்.

நம்மளை யாரோ வரைஞ்சு அனுப்பியிருக்காங்க.

(யாரு?)

ஸ்பைடர்மேன்.

அவன் பேசியதைக் கேட்டதும் மௌனியின் ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’ எனக்கு நினைவுக்கு வந்தது. ‘கவிதை மாதிரியே பேசுறியே’ என்று அள்ளி அணைத்துக்கொண்டேன். அடுத்ததாகச் சில நாட்கள் கழித்து ஒன்றைச் சொன்னான். அதுவும் அப்படித்தான் இருந்தது. கவிதை என்பதற்கான வரையறை தெரியாவிட்டாலும் எந்தக் கவிதையையும் அவனுக்கு நாங்கள் சொல்லித்தராவிட்டாலும் ‘கவிதை மாதிரியே பேசுறியே’ என்று சொன்னதிலிருந்து இதுதான் கவிதை என்று பிடித்துக்கொண்டுவிட்டான் போல. ஆரம்பத்தில் அவ்வப்போது சொல்லிக்கொண்டுவந்தவன் ஒரு கட்டத்தில் மழையாய்க் கொட்ட ஆரம்பித்துவிட்டான். சொந்த ஊருக்குத் தன் அம்மாவுடன் அவன் சென்றிருந்தபோது விளையாடிக்கொண்டிருந்தபோதெல்லாம் வந்துவந்து கவிதை சொல்லியிருக்கிறான். இரண்டே நாளில் 20-க்கும் மேற்பட்ட கவிதைகள். தொடக்கத்தில் என் மனைவியிடம்தான் அதிகக் கவிதைகளைச் சொல்லியிருக்கிறான். எழுதவோ படிக்கவோ பழக்கப்படாத சமயம் அது. இப்போதுகூட எழுதுவதில் அவனுக்குத் தேர்ச்சி வரவில்லை. ஆகவே, அவன் கவிதை சொல்லச்சொல்ல அவன் கவிதைக்கென்றே வைத்திருக்கும் நோட்டில் எழுதிக்கொள்வோம். நோட்டு கையில் இல்லாத சமயத்தில் கைபேசியில் பதிவுசெய்துகொள்வோம். இப்படியாக இன்று வரை சுமார் 300 கவிதைகள் சொல்லிவிட்டான். அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து ஒரு 80 கவிதைகளை இந்தத் தொகுப்பில் வெளியிடுகிறோம். தற்போது 9 வயதைத் தொடும் மகிழ், 6 வயதுக்குள் ஒரு தொகுப்புக்குத் தேவையான அளவுக்குக் கவிதைகள் சொல்லிவிட்டான்.


குழந்தையிடம் மொழி வெளிப்படுவதைப் பார்ப்பது ஆற்றின் தோற்றுவாயில் உள்ள ஊற்றை அள்ளிக்குடிப்பது போல என்பதை நாங்கள் கண்டுவருகிறோம். அவனே பல சொற்களை உருவாக்கியிருக்கிறான். பல சொற்களுக்கு அவனே அர்த்தம் கொடுத்திருக்கிறான். ‘என் பாடல் சனம் பாடல்’ என்ற வரியில் வரும் ‘சனம்’ என்ற சொல்லுக்கு நாம் அறிந்த பொருள் ’மக்கள்’ (ஜனம்). ஆனால், அவனுக்கு அந்தப் பொருளில் ‘சனம்’ என்ற சொல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதி அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டபோது, ‘காக்கா மாதிரி குயில் மாதிரி கத்துறது’ என்றான். ஆக, மிமிக்ரி என்ற பொருளில் அதைப் பயன்படுத்தியிருக்கிறான். அந்தந்தத் தருணத்துக்குத் தோன்றும் சொல்லும் பொருளும் கூட அவனுடைய கவிதைகளில் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு கவிதையில் ‘தேவகதை’ என்ற சொல்லைக் கூறியிருந்தான். அதன் அர்த்தம் என்ன என்று நாங்கள் கேட்டதற்கு அவன் கூறிய விளக்கத்தை வைத்துப் பார்த்தபோது ‘தேவதை’ என்பதைத்தான் அப்படிக் கூறுகிறான் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. 


இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சில இடங்களில் ‘நம்மள்’, ’பளிச்சின்னு’ என்று பேச்சு நடையில் கவிதை சொல்பவன் சில இடங்களில் ’என் காற்றும் என்னை நேசிக்கும்’ என்று இலக்கிய நடையில் சொல்லியிருக்கிறான். பேச்சு வழக்கு-எழுத்து வழக்கு என்ற இரட்டைப் பண்பு தமிழ், அரபி போன்ற மொழிகளுக்கே உரிய தனித்துவம். அதை மகிழும் பிரதிபலிப்பது வியப்பே. மகிழ் எப்படிக் கூறினானோ அப்படியே நாங்கள் கவிதைகளைப் பதிவுசெய்திருக்கிறோம். நடையையோ மொழியையோ மாற்றவில்லை. எழுத்தில் பதிவுசெய்யும்போது தேவையான இடங்களில் ஒற்று மட்டும் போட்டிருக்கிறோம். அவன் கவிதையைச் சொல்லும்போது கொடுக்கும் இடைவெளிகளுக்கு ஏற்ப வரிகளைக் கூடுமானவரை உடைத்திருக்கிறோம். நிறுத்தற்குறி எதையும் கிட்டத்தட்ட இடவில்லை.  


மகிழின் கவிதைகள் சிலவற்றை என் நண்பர்களும் வழிகாட்டிகளுமான க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன், மருத்துவர் சீதா  ஆகியோரிடம் அனுப்பிக் கேட்டபோது ‘இந்தக் குழந்தையிடம் அசாத்தியத் திறமை இருக்கிறது’ என்று சொன்னதுடன் மகிழைப் பற்றிக் கவலை கொள்ளவும் ஆரம்பித்தார்கள். மழலை மேதைமை என்பது ஒரு சுமை என்றும் வெளியுலகம் அவர்களுக்கு நிறைய ஆபத்துகளை வைத்திருக்கும் என்றும் அந்தச் சுமையை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் கருதினார்கள். அவனுடைய கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டுவர வேண்டும் என்று கேட்டபோது அவர்கள் அப்படிச் செய்யக் கூடாது என்றுதான் கூறினார்கள். இதன் பின்னர் மகிழ் கவிதைகளைப் புத்தகமாக்க வேண்டும் என்ற என் ஆசையை நான் நிறுத்திக்கொண்டுவிட்டேன். ஆனால், ஆண்டுகள் செல்லச்செல்ல, அவன் அதிகமாகக் கவிதைகள் சொல்லச்சொல்ல, என் பிடி தளர்ந்தது. “நம்முடைய அபிப்பிராயங்களின் அடிப்படையில் ஒருவருடைய பணியை மறைக்கக் கூடாது. மகிழை வெறுமனே குழந்தையாக நீ பாவிக்கிறாய். அப்படிச் சுருக்கிப் பார்க்கக் கூடாது” என்று நண்பர் சமஸ் சொன்னார். இதனால் என்னுடைய எண்ணத்தில் மாற்றம் உருவானது. சிறு வயதில் தனக்கு நிகழ்ந்திருக்கக் கூடிய நல்ல விஷயம் ஒன்று தவறிப்போய்விட்டிருக்கிறதே என்று அவன் இளைஞனாக ஆன பிறகு வருந்தக் கூடும் என்பதாலும், உண்மையிலேயே மகிழின் கவிதைகள் ஒரு ‘நிகழ்வு’ என்று நானும் என் மனைவியும் கருதியதாலும்தான் புத்தகம் கொண்டுவர முடிவெடுத்தோம். ஆயினும் இப்போதும் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. 


மகிழ் தனக்குத் தோன்றும்போது கவிதை சொல்வான். சில வரிகள் நன்றாக இல்லை, வேறு சொல் என்றால் யோசித்துச் சொல்வான். அப்போதும் சரியில்லை என்றால் விட்டுவிடுவோம். சினிமா பாடல்களைத் தவிர கவிதைகளின் பரிச்சயம் அவனுக்கு இல்லை. நல்ல கவிதைகள் படித்துக்காட்டலாம் என்று நினைத்து பாரதியாரில் தொடங்கினோம். ‘காக்கைச் சிறகினிலே’, ‘சின்னஞ்சிறு கிளியே’ தவிர ஏதும் பிடிக்காமலும் அவன் வயதுக்குப் பிடிபடாமலும் போனதால் அத்துடன் நிறுத்திக்கொண்டோம். மிகச் சிறு வயதிலேயே பறவைகள் அறிமுகம், அடிக்கடி மாடிக்குச் சென்று வானத்தைப் பார்த்தல் போன்ற பழக்கங்கள் அவனுக்கு ஏற்படுத்திக்கொடுத்தோம். கவிதை சொல்லச் சொல்லி வற்புறுத்தாமல் இருக்கவும் எங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டோம். சில சமயம் மாதக் கணக்கில் கவிதை சொல்லாமல் இருப்பான்; சில சமயம் ஒரே நாளில் 5, 6 என்று தினந்தோறும் கவிதைகள் சொல்லுவான். அவன் போக்கில் விட்டுவிட்டோம். 


தற்போது கூடுவாஞ்சேரியில் அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மகிழ் தமிழ்வழிக் கல்வி கற்கிறான். கதை சொல்வதில் மிகுந்த ஈடுபாடு உடையவன். யோசித்துச்  சொல்லாமல் தோன்றியதைச் சொல்லிக்கொண்டே இருப்பான். அவற்றுள் அழகிய பல கதைகள் இருக்கின்றன. ஸ்பைடர்மேன், விஜய், ஜாக்கிசான் ஆகியோரின் தீவிர ரசிகன். குறிப்பாக, ‘டோராவின் பயணங்கள்’, ‘வருத்தப்படாத கரடி சங்கம்’ போன்ற குழந்தைகள் தொடர்களின் தீவிர ரசிகன்.


இந்தத் தொகுப்பு வெளிவரும்போது க்ரியா ராமகிருஷ்ணன் எங்களுடன் இல்லாமல் போனது எங்களுக்குப் பெரும் இழப்பு. மகிழ் கவிதைகளைப் பற்றி எப்போதும் வியந்துகொண்டே இருப்பார். அவருக்கு எங்கள் நன்றி. மகிழைப் பற்றி எப்போதும் கவலைப்படும் மருத்துவர் சீதாவுக்கும் நன்றி. மகிழை எங்கள் கையில் பத்திரமாகத் தந்த மருத்துவர் கீதா அர்ஜூனுக்கும் நன்றி. மகிழ் கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டுவர வேண்டும் என்று ஆதரவளித்த சமஸுக்கு நன்றி. இந்தப் புத்தகத்தை அழகுற வெளியிடும் ‘நூல்வனம்’ மணிகண்டனுக்கு நன்றி. அவரிடம் ஆற்றுப்படுத்திய தம்பி ராஜனுக்கு நன்றி. பொருத்தமான பின்னட்டை வாசகம் எழுதிக்கொடுத்தவரும், தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரும், மகிழ் கவிதைகளின் ரசிகருமான பா.வெங்கடேசனுக்கும் நன்றி.  


மகிழின் கவித்துவத்தில் எப்போதும் பூரித்திருக்கும் அவனுடைய அம்மா சிந்துவுக்கு என் அன்பு. மகிழுக்கும் அவனுடைய குட்டித் தம்பி நீரனுக்கும் முத்தங்கள்.

நூல் விவரங்கள்:

நான்தான் உலகத்தை வரைந்தேன்
(கவிதைகள்)

மகிழ் ஆதன்

வானம் பதிப்பகம் வெளியீடு

விலை: ரூ.50

புத்தகத்தை வாங்குவதற்கு: மணிகண்டன் - 9176549991

                                                            ஆசைத்தம்பி - 9962292137 

1 comment:

  1. உங்கள் மகனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளை என் சார்பாகவும், எங்கள் குடும்பத்தார் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன். மகிழ் ஆதனின் இந்த வெற்றியை ஒரு நல்ல ஆரம்பமாகக் கருதுகிறேன். நீங்கள் தருகின்ற ஊக்கமும், மகிழ் ஆதனின் ஈடுபாடும் இதற்குக் காரணம் ஆகும். இதனை வாசிக்கின்ற குழந்தைகள் மகிழ் ஆதனை முன்னுதாரணமாகக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete