Monday, September 28, 2020

கையில் இருப்பது ஒரே ஒரு புவிக் கோள்


கடந்த இருபதாண்டுகளில் சூழலியலாளர்களிடையே அதிகம் உச்சரிக்கப்பட்ட சொற்கள் புவிவெப்பமாதல், பருவநிலை மாற்றம், பசுங்குடில் விளைவு, கரிம உமிழ்வு போன்றவையாகும். இந்தச் சொற்கள் நம் அன்றாடத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை என்றாலும் அவை குறிப்பிடும் விளைவுகள் நம் அன்றாடத்தை வெகுவாகப் பாதித்துவருகின்றன. எனினும், இதற்கெல்லாம் நான் காரணமில்லை என்பதுபோல்தான் நம் எதிர்வினைகள் இருக்கின்றன. உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வுக்கு நாம் ஒவ்வொருவரும் எந்த அளவுக்குப் பொறுப்பேற்புடனும் அக்கறையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதை கரோனா பெருந்தொற்று நமக்கு உணர்த்தியிருக்கிறது. இதே அக்கறையையும் பொறுப்பேற்பையும் சூழலியல் தொடர்பாகவும் நாம் வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஆக்ஸ்ஃபாம் அமைப்பும் ஸ்டாக்ஹோம் சூழலியல் நிறுவனமும் சேர்ந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையைப் பார்க்கும்போது தோன்றுகிறது.

1990-2015 வரையில் வெளியிடப்பட்ட கார்பன் டையாக்ஸைடு உமிழ்வு தொடர்பான தரவுகளை வைத்து இந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேற்கண்ட 25 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஒட்டுமொத்த கார்பன் டையாக்ஸைடு உமிழ்வுக்கு உலக மக்கள்தொகையின் 50% ஏழைகளைவிட 1% பணக்காரர்கள்தான் இரண்டு மடங்கு பொறுப்பு என்று இந்த அறிக்கை கூறுகிறது. 1990-க்கும் முந்தைய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கார்பன் டையாக்ஸைடைவிட கடந்த 25 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கார்பன் டையாக்ஸைடு 60% அதிகம் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. 50% ஏழைகளைவிட 1% பணக்காரர்கள் வெளியிட்ட கார்பன் டையாக்ஸைடு அதிகரிப்பின் விகிதம் மும்மடங்கு அதிகமாகும்.

நாம் வெகு வேகமாக ‘கரிம பட்ஜெட்’டைத் தீர்த்துக்கொண்டுவருகிறோம் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ‘கரிம பட்ஜெட்’ (கார்பன் பட்ஜெட்) என்பது ஒருவிதக் கணக்கு. இதன்படி, வளிமண்டலத்தில் குறிப்பிட்ட அளவு வரைதான் கார்பன் டையாக்ஸைடை வெளியிட முடியும். அந்த எல்லையைத் தொட்டால் பேரழிவுகள் ஏற்படும். உலகம் தொழில்மயமாவதற்கு முன்பிருந்த வெப்பநிலையைவிட 2 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அதிகமாகும்.

ஏற்கெனவே, உலகின் கணிசமான இடங்கள் 1.5 டிகிரி செல்ஸியஸைத் தாண்டிவிட்டிருக்கின்றன. இதனால், துருவப் பகுதிகளின் பனி உருகி கடல் மட்டம் அதிகரித்துவருகிறது. 1.5 டிகிரி செல்ஸியஸால் 0.1 மீட்டர் அளவுக்குக் கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது. 2 டிகிரி செல்ஸியஸைத் தொடும்போது 0.2 மீட்டர் அளவுக்குக் கடல் மட்டம் அதிகரிக்கும். அதைத் தொடர்ந்து மண் அரிப்பு, கடல் எல்லை அதிகரிப்பு, குடியிருப்புப் பகுதிகளில் கடல்நீர் புகுதல், குடிநீரெல்லாம் உவர்ப்பாதல் போன்ற விளைவுகள் ஏற்படும். நாஸாவின் கணக்குப்படி தற்போதைய விகிதத்தில் சென்றால் நூறிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்குள் கடல் மட்டம் 6 அடி அதிகரிக்கும்.

கார்பன் பட்ஜெட் 1870-ஐத் தொடக்க ஆண்டாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. அதைப் பொறுத்தவரை இதுவரை நாம் வளிமண்டலத்தில் நாம் 2,25,495,78,00,000 டன்கள் கார்பன் டையாக்ஸைடை வெளியிட்டிருக்கிறோம். ஒட்டுமொத்த கார்பன் பட்ஜெட்டில் இது 77.8%. இன்னமும் 64,503,00,00,000 டன்கள் மட்டுமே மீதமிருக்கிறது. அதாவது, 22.2%. தற்போதைய விகிதத்தில் சென்றால் இன்னும் 16 ஆண்டுகள், 97 நாட்களில் வளிமண்டலத்தில் அதிகபட்சம் எவ்வளவு கார்பன் டையாக்ஸைடு வெளியிட முடியுமோ அவ்வளவும் வெளியிடப்பட்டுவிடும். அப்போது உலக வெப்பநிலை அதிகரிப்பு 2 டிகிரி செல்ஸியஸைக் கடந்திருக்கும்.

இந்த பிப்ரவரியில் அண்டார்க்டிகாவின் வெப்பநிலை 20.75 டிகிரி செல்ஸியஸைத் தொட்டது; இதுதான் இதுவரையிலான உச்சம். கடந்த கோடையில் ஆர்க்டிக் கடலின் பனிப்பரப்பின் மட்டம் மிகக் குறைந்த இரண்டாவது அளவைத் தொட்டது. இப்படியே போனால் 2035-ல் ஆர்க்டிக் கடல் தனது பனிப்பாறைகள் முழுவதையும் இழந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆண்டின் கோடைக் காலத்தில் சைபீரியாவின் வெப்பநிலை 10 டிகிரி செல்ஸியஸை எட்டி உச்சம் தொட்டது. கடந்த ஆண்டுதான் ஐரோப்பாவின் மிகுந்த வெப்பமான ஆண்டாகப் பதிவாகியிருக்கிறது. இதுவரையிலான வெப்பம் மிகுந்த 12 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் கடந்த இருபதாண்டுகளுக்குள் பதிவானவையாகும்.

2 டிகிரி செல்ஸியஸைத் தொடுவதற்கு முன்பே நாம் ஏராளமான மோசமான விளைவுகளை அனுபவித்துவருகிறோம். கோடை காலம் முன்பைவிட அதிக வெப்பமாக இருக்கிறது; குளிர்காலம் முன்பைவிட அதிக காலம் நீடிக்கிறது. மழை பெய்ய வேண்டிய சமயங்களில் மழை பெய்வதில்லை; பருவமல்லாத சமயங்களில் அதிகமாகப் பெய்கிறது. தண்ணீர்ப் பஞ்சம், உணவுப் பஞ்சம் போன்றவை அதிகரித்துவருகின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் செல்வந்த நாடுகள்தான் அதிகக் காரணம் என்றாலும் இந்த விளைவுகளை அனுபவித்துவருவது மூன்றாம் உலக நாடுகள்தான்.

கார்பன் உமிழ்வுக்குப் போக்குவரத்தும் நுகர்வும் மிக முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. போக்குவரத்து எனும்போது விமானப் போக்குவரத்தைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் ஒரு பயணத்தில் வெளியாகும் கார்பன் உமிழ்வில் அவ்விமானத்தில் பயணிக்கும் ஒருவருக்கு உள்ள பங்கு, மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆண்டு முழுவதும் வெளியிடும் கார்பனுக்கு இணையானது என்று ஒரு கணக்கு கூறுகிறது.

இந்த நிலையில் வேறு ஒரு பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகிறது. கார்பன் உமிழ்வுக்கும் பருவநிலை மாற்றம், புவிவெப்பமாதல் போன்றவற்றுக்கும் மூன்றாம் உலக நாடுகளில் மக்கள்தொகை அதிகரிப்பதைக் காரணமாகக் கூறித் தங்கள் பொறுப்பைக் கைகழுவ செல்வந்த நாடுகள் முயல்கின்றன. ஒட்டுமொத்த நாட்டின் கார்பன் உமிழ்வு அளவு என்ற வகையில் சீனாவுக்கு முதலிடம், அமெரிக்காவுக்கு இரண்டாமிடம், இந்தியாவுக்கு மூன்றாம் இடம் என்றாலும் தனிநபர் கார்பன் டையாக்ஸைடு உமிழ்வைப் பொறுத்தவரை இந்தியா 13-வது இடத்தில் இருக்கிறது.

முதலாம் இடத்தில் இருப்பது அமெரிக்கா. அது மட்டுமல்லாமல் அடுத்த 11 இடங்களில் ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மன், சீனா உள்ளிட்ட பணக்கார நாடுகளே இருக்கின்றன. மக்கள்தொகை என்பது ஒரு பிரச்சினைதான் என்றாலும் பணக்கார நாடுகளின் நுகர்வு, சுரண்டல் போன்றவைதான் கார்பன் டையாக்ஸைடு உமிழ்வுக்குப் பிரதான காரணங்கள் என்று சூழலியலாளர் ஜார்ஜ் மோன்பியோ குற்றம் சாட்டுகிறார். படிம எரிபொருள் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்து, ஒருகட்டத்தில் முற்றிலுமாக நிறுத்தி, மாற்று வழிமுறைகளை நாம் தேடியாக வேண்டும் என்கிறார் ஜார்ஜ் மோன்பியோ.

கரிம பட்ஜெட்டில் ஊதாரித்தனம்

ஆக, விமானப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவோருக்கு அதிக வரி விதிக்க வேண்டும். கூடுமான வரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். எனினும், பொதுப் போக்குவரத்துக்கு ஆதரவான பிரச்சாரம் சமீப ஆண்டுகளில் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்த வேளையில் கரோனா பெருந்தொற்று அதற்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. மக்கள் பொதுப் போக்குவரத்தைக் கண்டு அஞ்சத் தொடங்கியிருப்பது நல்ல சமிக்ஞை அல்ல. ஆகவே, பொதுப் போக்குவரத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை அரசுகள் மீட்டெடுக்க வேண்டும்.

நம் கையில் இருப்பது இந்தப் புவிக் கோள் மட்டும்தான் எனும் நிலையில் நாம் மிகுந்த பொறுப்புணர்வோடு நடந்துகொண்டிருக்க வேண்டும். குறிப்பாக, உலகத்தின் மிகக் குறைந்த சதவீதமுள்ள பணக்காரர்கள் தங்கள் நுகர்வைக் குறைத்துக்கொண்டாலே அது நீடித்த நல்விளைவுகளை ஏற்படுத்தும். நமது கார்பன் பட்ஜெட்டை ஊதாரித்தனமாக நாம் செலவிட்டு வருவதைப் பார்க்கும்போது நமக்கு அடுத்த தலை முறையில் அல்ல; நம் தலைமுறையிலேயே அதன் தீமைகளை நாம் அனுபவிக்க நேரிடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. கூடுதல் பொறுப்புணர்வும், அக்கறையும் மட்டுமே நாமிருக்கும் இந்தக் கோளைக் காப்பாற்றும்.

(28-09-20 அன்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான கட்டுரை)

1 comment:

  1. நம் தலைமுறையிலேயே அதன் தீமைகளை அனுபவிக்கப்போகிறோம் என்பது உண்மையே.

    ReplyDelete