Sunday, July 26, 2020
அரை நூற்றாண்டைக் கொண்டாடும் ஸ்டேன்லி குப்ரிக்கின் ‘2001: ஒரு விண்வெளிப் பயணம்’
ஆசை
ஸ்டேன்லி குப்ரிக்கின் ‘2001: ஒரு விண்வெளிப் பயணம்’ (2001: A Space Odyssey) படத்தை முதல் தடவை பார்த்து முடித்தவுடன் இந்தப் படத்தை ஏன் இப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது புரியாமல் விழித்தேன். ஆனால், அடுத்த சில நாட்கள் அந்தப் படம் என் ஆழ்மனதில் ஏதோ ரசவாதம் செய்துகொண்டிருப்பதை உணர முடிந்தது. அதனால் அந்தப் படம் எனக்குப் புரிந்துவிட்டது என்று அர்த்தமல்ல. அதன் வசியத்துக்கு நான் ஆட்பட்டுவிட்டேன் என்பதுதான் உண்மை. எதையுமே விளக்காமல் ஒரு அறிவியல் புனைகதை படத்தை எப்படி ஸ்டேன்லி குப்ரிக் எடுத்தார் என்பதும் பெரும் ஆச்சரியம். அந்தப் படத்தின் வசியத்துக்கு ஆட்பட்டாலும் படத்தின் முக்கியமான விஷயங்கள் பலவும் பிடிபடாத நிலைதான் எனக்கு.
நான் மட்டுமல்ல, 1968-ல் முதன்முறையாக இந்தப் படம் வெளியானபோது பெரும்பாலானோரின் நிலையும் இதுதான். கணிசமானோர் திரையரங்கை விட்டுப் பாதியிலேயே வெளியேறிய சம்பவங்களும் நடந்தன. அது மட்டுமல்ல, படம் வெளியாவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பு திரையிடப்பட்ட சிறப்புக் காட்சியின்போது அந்தப் படத்தைத் தயாரித்த எம்.ஜி.எம். நிறுவனத்தின் அதிகாரிகளே பாதியிலேயே வெளியேறினார்கள். அரங்கில் நிறைய கேலி சத்தங்களும் எழுந்தன. திரையிடலின் தொடக்கத்திலிருந்தே ஸ்டேன்லி குப்ரிக் ஒருவிதப் பதற்றத்துடன் இருந்தார். நான்கு ஆண்டுகள் கண்ட கனவின் பலன் இறுதியில் ஒன்றுமில்லை என்று ஆனால் பதற்றம் ஏற்படாதா, என்ன?
தொடக்கத்தில் படத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துக்கள் அதிகம் பரவின. ‘ரொம்பவும் கொட்டாவி விட வைக்கும் படம்’ என்றெல்லாம் பத்திரிகைகள் எழுதின. ஒருசில நாட்களில் இந்த நிலையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. படம் யாருக்கும் புரியவில்லை என்றாலும் மக்கள் கூட்டம் திரையரங்குக்குப் படையெடுத்தது. இதற்கு ஹிப்பிக்களும் முக்கியக் காரணம். போதை மருந்து உட்கொள்ளும்போது அனுபவிப்பது போன்ற உணர்வுகளை இந்தப் படத்தில் அவர்கள் கண்டுகொண்டார்கள். திரையில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே ‘இதோ கடவுள், இதோ கடவுள்’ என்று கத்தியபடி ஒருவர் ஓடியிருக்கிறார். விளைவு, படம் ‘கல்ட் ஹிட்’!
படத்தைப் பார்ப்பதைவிட கதைச் சுருக்கத்தைச் சொல்லிவிடுவது மிகவும் எளிது. நாற்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் மனிதக் குரங்குகள் கூட்டத்திலிருந்து கதை தொடங்குகிறது. ஒரு சிறிய தண்ணீர்க் குட்டையை யார் உரிமை கொள்வது என்று குரங்குக் கூட்டங்கள் இரண்டுக்கும் இடையிலான போராட்டம். இதற்கிடையே அந்த இடத்தில் கறுப்பாக ஒரு செவ்வகக் கல் ஒன்று நிற்கிறது. (இயற்கையில் சதுரம், செவ்வகம் போன்ற வடிவங்கள் கிடையாது). அந்தச் செவ்வகக் கல்லைச் சுற்றி என்ன செய்வதென்று தெரியாமல் இங்கும் அங்கும் குரங்குகள் சத்தம் போட்டபடி ஓடுகின்றன. அந்தக் கல் ஏதோ ஒரு வகையில் அங்குள்ள குரங்கொன்றிடம் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இறந்து கிடந்த விலங்கொன்றின் எலும்பை ஆயுதமாகப் பயன்படுத்தி எதிரிக் கூட்டத்துக் குரங்கொன்றைக் கொன்று தண்ணீர்க் குட்டையின் உரிமையைக் கைப்பற்றுகிறது குரங்கு. ஆயுதத்தைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டது மனித இனத் தோற்றத்துக்கான பெரும் உந்துதலாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு நாற்பது லட்சம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கி 2001-க்குக் கதை செல்கிறது. அதே போன்றதொரு கல் நிலவில் புதைக்கப்பட்டிருக்கிறது. அதை ஆய்வு செய்வதற்காக விண்கலத்தில் வீரர்கள் பயணம் செய்கிறார்கள். 18 மாதங்கள் கழித்து இன்னொரு விண்கலத்தில் இரண்டு வீரர்களும் உறக்க நிலையில் (hibernation) மூன்று வீரர்களும், ஒட்டுமொத்த விண்கலத்தையும் கட்டுப்படுத்தும் செயற்கையறிவுத் தொழில்நுட்பமான ஹால் கணினியும் வியாழன் கோளுக்கருகில் தென்பட்ட இன்னொரு செவ்வகக் கல்லை ஆய்வு செய்யப் போகிறார்கள். அந்த விண்கலத்தில் உறக்கநிலையில் வைக்கப்பட்டிருக்கும் வீரர்கள் மூன்று பேரைக் கணினி கொன்றுவிடுகிறது. விண்கலத்தை இயக்கிக்கொண்டிருந்த இருவரில் ஒருவரை விண்கலத்துக்கு வெளியே அனுப்பிக் கொன்றுவிடுகிறது. அந்தக் கணினியின் ஆபத்தை உணர்ந்தவரும் இந்தப் படத்தின் பிரதான பாத்திரமான டேவிட் போமேன் (Keir Dullea) அந்தக் கணினியின் மன்றாடலுக்கு இடையே அதனைச் செயலிழக்க வைக்கிறார். பிறகு, அந்தச் செவ்வகக் கல்லை ஆராய்வதற்காக ஒரு கோள வடிவ வாகனத்தில் புறப்பட்டுச் செல்லும்போது மிகவும் விசித்திரமான அனுபவங்கள் ஏற்படுகின்றன. காலம், இடம் போன்றவற்றையெல்லாம் கடந்துசெல்கிறார். விநோதமான ஒரு அறையில் தனது முதிய வயது உருவத்தை அவர் காண்கிறார். அங்கேயும் அந்தச் செவ்வகக் கல் தோன்றுகிறது. அதன் பிறகு கருப்பையில் இருக்கும் குழந்தையாக மாற்றப்பட்டு விண்வெளியில் மிதக்க அனுப்பப்படுகிறார். கருவில் இருக்கும் குழந்தையின் கண்கள் பூமியையே பார்த்துக்கொண்டிருக்கிறது. குரங்காய் இருக்கும்போது மனித இனத்தை நோக்கி நகர்த்திய செவ்வகக் கல் அந்தச் சிசுவை வேறொரு பரிணாமம் அடையப் போகும் உயிரைப் போல நகர்த்தப் போகிறதான் என்ற நம் எதிர்பார்ப்புடனே படம் முடிந்துபோகிறது.
உலகின் புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஆர்த்தர் சி.கிளார்க்கின் ‘த சென்ட்டினெல்’ என்ற சிறுகதைதான் ‘2001: ஒரு விண்வெளிப் பயணம்’ படத்துக்குத் தொடக்கப்புள்ளி. அந்தக் கதையைப் படித்துவிட்டு இயக்குநர் ஸ்டேன்லி குப்ரிக் இலங்கையில் வசித்த கிளார்க்குக்கு 1964-ல் ஒரு கடிதம் எழுதினார். ‘மகத்தான அறிவியல் புனைகதை திரைப்படம் ஒன்றைத் தான் எடுக்க விரும்புவதாக’ குப்ரிக் தனது கடிதத்தில் எழுதியிருந்தார். குப்ரிக்கின் அழைப்பின்பேரில் அமெரிக்கா சென்றார் கிளார்க். ‘தி சென்ட்டினெல்’ சிறுகதையை எடுத்துக்கொண்டு இருவரும் சேர்ந்து விரிவாக்க ஆரம்பித்தார்கள். எடுக்கவிருக்கும் படத்துக்கான கதையை ஒரு நாவலாக எழுதினால் நன்றாக இருக்கும் என்று குப்ரிக் விருப்பம் தெரிவிக்க இருவருடைய உழைப்பில் படத்தின் தலைப்பிலேயே நாவலும் உருவானது. படம் வெளியான பிறகுதான் நாவலை வெளியிட வேண்டும் என்று குப்ரிக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
கதையை உருவாக்கிக்கொண்டிருக்கும்போதே இந்தப் படத்தை முழுக்கவும் காட்சிரீதியிலான படமாக உருவாக்குவது என்ற முடிவில் இருந்தார் குப்ரிக். இந்தப் படத்தைத் தன்னுடைய படமாக மட்டுமல்லாமல் காண்பவர் ஒவ்வொருவருடைய படமாகவும் எடுக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால்தான் புரிந்துகொள்ள மிகவும் கடினமாக இருந்தாலும் இந்தப் படத்தில் விளக்கங்கள் ஏதும் அளிக்கவில்லை குப்ரிக். மாறாக, பார்வையாளர்களை அவர்களுக்கு விருப்பமான விளக்கங்களைக் கொடுத்துக்கொள்ளத் தூண்டினார். ஒரு வகையில் அந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டபோது ‘உருவாக்கப்படவில்லை’; பார்க்கப்பட்டபோதுதான் ‘உருவாக்கப்பட்டது’ என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் இன்றுவரை உலகின் தலைசிறந்த படங்களின் பட்டியலில் முதல் வரிசையில் இந்தப் படம் இருந்துகொண்டிருந்தது.
இந்தப் படத்தின் பிரதானப் புதிர், செவ்வகக் கல்தான். மனித இனமே தோன்றியிராத காலத்தில் அவ்வளவு பளபளப்பாக உருவாக்கப்பட்ட அந்தக் கல்லைக் குரங்குகளிடையே யார் வைத்தது? நிலாவில் யார் வைத்தது? வியாழனுக்கருகே யார் திரிய வைத்தது? இந்தக் கேள்விகளுக்கு இன்றுவரை முழுமையான விடையேதும் இல்லை. படத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட நாவலில் வேற்றுகிரகவாசிகளால் வைக்கப்பட்ட கல் என்ற குறிப்பு வருகிறது. இந்தக் குறிப்பைப் படத்தில் கொடுத்தால் ஒற்றை அர்த்தத்துடன் படம் முடிந்துவிடும் என்று எண்ணிய குப்ரிக், கல்லை வைத்தது யார், எதற்காக வைத்தார்கள் என்பதற்கான குறிப்புகளையும் விடைகளையும் படத்தில் வைக்கவில்லை. ஆகவே, நாவலைக் கொண்டு படத்தை அணுகவே கூடாது.
பரிணாமத்தை உந்தித் தள்ளும் விதத்தில் இந்தப் படத்தில் வரும் செவ்வகக் கல்லைப் போல மற்றுமொரு முக்கியமான விஷயம் மனித உணர்வுள்ள ஹால் கணினி. இன்றும் அந்த அளவுக்கு ஒரு கணினி கண்டுபிடிக்கப்படவில்லையென்றாலும் செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றங்களை நாம் ஏற்கெனவே கண்டிருக்கிறோம். ஆனால், செயற்கை அறிவுத் தொழில்நுட்பம் எனும் துறை துளிர்விடவே ஆரம்பிக்காத காலத்தில் அதனால் மனித குலத்துக்கு ஏற்படவிருக்கும் ஆபத்துக்களைப் பற்றி தீர்க்கமான எச்சரிக்கை விடுத்திருப்பார் குப்ரிக்.
விடுவிக்க முடியாத புதிர் போலவே தன் படத்தை எடுக்க வேண்டும் என்று குப்ரிக் விரும்பினார். தொடக்கத்தில் வேற்றுலகவாசிகளைக் காட்டுவது என்ற யோசனை அவருக்கு இருந்தது. வழக்கமான வேற்றுலகவாசிப் படங்களைப் போல் காட்டுவதில் அவருக்கு ஈடுபாடு இல்லை. இந்தப் படம் மனித அச்சத்தையும் வியப்பையும் பற்றியது என்றால் அதையெல்லாம் பார்வையாளர்களும் உணர என்று முடிவெடுத்து, வேற்றுலகவாசிகளுக்குப் பதிலாகச் செவ்வகக் கற்களை குப்ரிக் தேர்ந்தெடுத்தார். அதனால்தான், படத்தில் அந்தக் கல்லைப் பார்க்கும்போது குரங்குகளுக்கு ஏற்படும் உணர்வு நமக்கும் ஏற்படுகிறது. இங்கேதான் குப்ரிக் என்ற மகாகலைஞர் வெற்றிபெறுகிறார்.
“கடவுளைப் பற்றிய கருத்தாக்கம் இந்தப் படத்தின் மையமாக இருக்கிறது. ஆனால், வழக்கமாகச் சொல்லப்படுவதும் மனித உருவிலானதுமான கடவுள் அல்ல அது” என்கிறார் குப்ரிக். காலத்தைத் தாண்டி, இடத்தைத் தாண்டி நிகழும் எந்த ஒரு பயணமும் இறுதியில் வந்தடையும் இடம்தான் குப்ரிக் காட்ட நினைக்கும் கடவுள், அதாவது காட்டாமல் காட்ட நினைக்கும் கடவுள். அந்தக் கடவுளை நோக்கிய மாபெரும் புதிர்களின் தொகுப்புதான் இந்தப் படம். புதிர்களை அவிழ்ப்பதன் மூலம் அல்ல, புதிர்களின் வழியே பயணிப்பதன் மூலம்தான் அந்தக் கடவுளை நெருங்க முடியும் என்று குப்ரிக் நம்பியிருக்கிறார்.
வழக்கமான அறிவியல் புனைகதை படங்கள் காலத்தை மீறிய தொழில்நுட்பங்களை முன்வைப்பதுண்டு. உரிய காலம் வரும்போது அந்தப் படங்களில் முன்வைக்கப்பட்ட தொழில்நுட்பம் பொய்த்துப்போவதும், காலாவதியாவதும் உண்டு. ஆனால், ஸ்டேன்லி குப்ரிக் உண்மையில் காலத்தைத் தாண்டி கனவு கண்ட படைப்பாளி. 1968-ல் வெளியான இந்தப் படத்தின் பெரும்பாலான கதைக்களன் 2001-ல் நடப்பதால், உண்மையில் 2001-ம் ஆண்டில் இந்தப் படத்தைப் பார்க்கக்கூடியவர்கள் தன்னைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கக் கூடாது என்பதில் குப்ரிக் உறுதியாக இருந்தார். அதனால், திரைப்பட சிறப்பு வடிவமைப்பாளர்களை விடுத்து, உண்மையான அறிவியலாளர்களையும் நாசாவின் தொழில்நுட்பப் பணியாளர்களையும் வேலைக்கு அமர்த்தினார் குப்ரிக். விண்கலம், அதன் உள்ளே இருக்கும் தொழில்நுட்பம், விண்வெளி வீரரின் உடைகள், கணினி என்று எல்லாவற்றிலும் தன் காலத்தை முந்திய சித்தரிப்பைத் தருவதற்காக நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்துத்தான் இந்தப் படத்தை குப்ரிக் எடுத்தார். படம் வெளியான 50 ஆண்டுகள் கழித்துத் திரும்பிப் பார்க்கும்போது நாசாவே குப்ரிக்கிடம் பின் தங்கியிருப்பதை உணர முடிகிறது.
இந்தப் படத்தின் தொழில்நுட்பத் துல்லியம் பற்றி நாசாவே தன் இணையதளத்தில் ஒரு பட்டியல் வெளியிட்டிருக்கிறது. அதன்படி:
பூமியைச் சுற்றிவருவதாகப் படத்தில் காட்டப்படும் விண்வெளி நிலையம் அன்று கற்பனை; இன்று நிஜமாகிவிட்டது. வடிவம் வேறு விதத்தில் இருந்தாலும் அங்கே வீரர்கள் தங்கிப் பணிபுரிவது போன்று காட்டப்பட்டிருப்பது இன்று நிஜமாகிவிட்டது.
2. 1968-ல் தட்டையான திரை கொண்ட கணினிகளைக் கற்பனை செய்தே பார்க்க முடியாது. இன்று அதுவும் நிஜமாகிவிட்டது.
3. விண்கலத்தின் உள்ளே இந்தப் படத்தில் காட்டப்படும் பொழுதுபோக்கு அம்சங்கள் இன்றுள்ள விண்கலங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன.
4. படத்தில், கலத்தின் உள்ளே விண்வெளி வீரர் மித ஓட்டப்பயிற்சியில் (Jogging) ஈடுபட்டிருப்பார். அதைப் போல, 2007-ம் ஆண்டில் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் விண்கலத்தில் இருந்தபடி பூமியில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார்.
5. இந்தப் படத்தில் காட்டப்பட்ட பல்வேறு அம்சங்கள் இன்னும் நிதர்சனமாகவில்லையென்றாலும் கூடிய சீக்கிரம் அவையும் சாத்தியமாகும். எடுத்துக்காட்டாக, நிலவைத் தாண்டி அமையும் மனிதர்கள் பயணிக்கும் விண்வெளிப் பயணம், விண்வெளி நிலையத்தில் இருக்கும் உணவகங்கள் போன்றவற்றைக் கூறலாம்.
ஆக, ‘2001: ஒரு விண்வெளிப் பயணம்’ படம் தன் அரைநூற்றாண்டு பயணத்தை நிறைவுசெய்திருக்கும் தருணத்தில் அது வெறும் படமாக மட்டும் இல்லாமல் ஒரு கலாச்சார, அறிவியல் நிகழ்வாக உருவெடுத்திருப்பதைத் தெளிவாக உணர முடிகிறது. ‘ஸ்டார் வார்ஸ்’ எடுத்த ஜார்ஜ் லூக்காஸ், ஸ்பீல்பெர்க், கிறிஸ்டோபர் நோலன் போன்ற திரையாளுமைகள் மட்டுமல்லாமல் அறிவியல் அறிஞர்கள், ஹிப்பிகள் போன்று பலருக்கும் பிடித்தமான படம்; அவர்களில் பலரது வாழ்க்கையையும் மாற்றியமைத்த படம்.
இந்தப் படத்தின் தொடக்கப் பகுதியில் ஒரு காட்சி வரும். எலும்பை ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றிகண்ட குரங்கு வெறியாட்டத்தில் எலும்பை வான் நோக்கித் தூக்கியெறியும். மேலே சென்று கீழ்நோக்கி வரும்போது அது 40 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக் கலமாக உருவெடுக்கும். மனித இனத்தை உந்தித்தள்ளும் எறிதல் அது. அதுபோன்று திரையுலகத்தை மேல்நோக்கி உந்தித்தள்ளிய மாபெரும் எறிதல் என்றே ‘2001: ஒரு விண்வெளிப் பயணம்’ திரைப்படத்தைச் சொல்லத் தோன்றுகிறது.
(2001 எ ஸ்பேஸ் ஒடிசி திரைப்படத்தின் 50-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘காமதேனு’ இதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது.)
Labels:
ஆளுமைகள்,
தி இந்து,
திரைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment