Thursday, March 9, 2017

என்றும் காந்தி!- 25: மகளிர் தினத்தில் காந்தியையும் ஏன் நினைவுகூர வேண்டும்? (பகுதி: 2)


ஆசை

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களைப் போலவே பெண்களின் நிலையும் காணப்பட்டதை காந்தி கண்டார். இதில் பிராமணப் பெண்களும் விதிவிலக்கில்லை. ஆகவே, பெண்களுக்கெதிரான கொடுமைகளைப் பற்றித் தனது கூட்டங்களில் தொடர்ந்து பேசிவந்தார். பெண்களின் பிரச்சினைகள் குறித்துத் தொடர்ந்து எழுதியும் வந்தார். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் உயிர்நாடியாகப் பெண்விடுதலை, தீண்டாமை ஒழிப்பு, இந்து-முஸ்லீம் ஒற்றுமை ஆகியவற்றை ஒன்றாகக் கருதினார் காந்தி.

குழந்தைத் திருமணம்

13 வயதிலேயே 14 வயது கஸ்தூர்பாவுடன் திருமணம் செய்துவிக்கப்பட்டவர் காந்தி. கஸ்தூர்பாவை ஆரம்ப நாட்களில் தான் கொடுமைப்படுத்தியதை நினைத்துப் பின்னாட்களில் அவர் வருந்தினார். குழந்தைத் திருமணத்தின் தீவிர எதிர்ப்பாளராக காந்தி மாறினார். ”குழந்தைத் திருமணத்தின் பலிகடாக்கள் பெண் குழந்தைகள்தான். இதனால் 12 வயதுக்குள்ளேயே ஆயிரக் கணக்கான பெண் குழந்தைகள் நம் பார்வையிலிருந்து மறைந்துபோகிறார்கள். மனைவிகளாக மாற்றி வீட்டுக்குள்ளேயே அடைத்துவைக்கப்படுகிறார்கள்என்றார் காந்தி. மேலும், “15 வயது பெண் என்பவள் குழந்தை பெற்றுக்கொள்ளத் தகுதியானவளே அல்ல. அப்படிப்பட்ட பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தை மிகவும் நோஞ்சானாக இருக்கும். அவர்களை வளர்ப்பதே பெரும் வேலையாகிவிடும். இதன் விளைவாகப் பிறந்த ஒரு ஆண்டுக்குள் பல குழந்தைகள் இறந்துவிடுகின்றன. இதுபோன்ற குழந்தை மரணங்களுக்குக் குழந்தைத் திருமணமும் பொருந்தாத் திருமணமும்தான் (குறைந்த வயதுடைய பெண்ணுக்கும் கிழவருக்கும் இடையில் நடக்கும் திருமணங்கள் போன்று) காரணம்என்கிறார் காந்தி. இந்து மத சாஸ்திரங்களைக் காரணம் காட்டி இந்தப் பழக்கங்களைப் பின்பற்றுவதையும் கடுமையாக இப்படிச் சாடுகிறார்: ““சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் சமஸ்கிருத நூல்களை மேற்கோள் காட்டி இந்த அநீதியான வழக்கத்தைப் புனிதப்படுத்த முடியாது. சிறு வயதில் தாய்களான பல குழந்தைகளின் ஆரோக்கியம் கெட்டழிந்து போவதை நான் பார்த்திருக்கிறேன். இந்தக் குழந்தைப் பருவத் திருமணத்தின் கொடுமைகளோடு, குழந்தைப் பருவ விதவை நிலையும் சேரும்போது இந்தச் சோகம் முழுமையாகிறது.” (யங் இந்தியா பத்திரிகை).

பெண்களின் திருமண வயது

காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தபோது, பெண்கள், ஆண்கள் இருவரின் திருமண வயதை உயர்த்துவது குறித்த மசோதாவைக் கொண்டுவருவதற்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பாடுபட்டுக்கொண்டிருந்ததை அறிந்தார். காந்தியும் வெகு நாட்களாகக் குழந்தைத் திருமணத்தை எதிர்த்துப் பேசிவந்தவராதலால் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் முயற்சிகளுக்கு முழு ஆதரவை அளித்தார். மூன்று வயதிலேயே பல குழந்தைகளுக்குத் திருமணம் ஆகிவிடுவதால் பெண்ணின் திருமண வயதை 14-ஆக உயர்த்திச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று காந்தி வலியுறுத்திவந்தார். ஆனால், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி இந்த வயதை 16-ஆக உயர்த்துவதற்காகப் போராடிக்கொண்டிருந்தார். தான் நிர்ணயித்த வயதைவிட இதுதான் சரியானது என்று காந்தி உணர்ந்தார். டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் முயற்சியில் கொண்டுவரப்பட்ட மசோதாவைப் பற்றி காந்தி பேசும்போது, “மசோதாவைப் பற்றிய என்னுடைய அறியாமையைப் பற்றி நான் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் சம்மதம் அளிக்கும் வயதை உயர்த்துவதை நான் பலமாக ஆதரிக்கிறேன். 14 வயது என்று மட்டுமல்லாது 16 வயதென்று உயர்த்தட்டும். மசோதாவின் உள்ளடக்கத்தைப் பற்றி என்னால் எதுவும் கூற இயலாது. ஆனால் ஒன்றுமறியாத, வயதுவராத குழந்தைகளை மனிதனின் பேராசையிலிருந்து காப்பாற்றும் நோக்கம் கொண்ட எந்த இயக்கத்தையும் மனதார வரவேற்கிறேன்ஆனால் பொதுமக்களின் இசைவு இல்லாததால் ஏற்கெனவே இருக்கும் சட்டம்கூடத் தடையாக இருப்பதை நான் துக்கத்துடன் அறிவேன். எனவே, ஒரு சீர்திருத்தவாதியின் செயல்பாடு மற்ற தொழில்களைப் போல மிகவும் கடினமானது. விடாமல் தொடர்ந்து போராடுவது மூலம்தான் இந்து மதத்தைச் சார்ந்த பொதுமக்களிடம் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இந்தியப் பெண்கள் உரிய காலத்திற்கு முன்பாகவே மூப்படைந்து, இறக்கும் இந்த நிலையிலிருந்து காப்பாற்ற உயரிய வேலையில் முனைந்து செயல்படுபவர்களுக்கு வெற்றி கிட்ட வாழ்த்துகிறேன். இதனால் இந்து மதம் கேடு கெட்ட நலிந்தவர்களை உண்டாக்கும் பொறுப்பிலிருந்தும் விடுபடும்” (யங் இந்தியா பத்திரிகை) என்றார்.

விதவை மறுமணம்

அப்போதல்லாம் வீட்டுக்கு நான்கைந்து விதவைப் பெண்களைக் காண்பது வெகு எளிது. இதில் கொடுமை எதுவென்றால் இவர்களில் பலரும் குழந்தைகள். இந்த நிலைக்கு எதிராக காந்தி தொடர்ந்து குரல் கொடுத்தது மட்டுமல்லாமல் மாற்றங்களை ஏற்படுத்தும் விதத்திலும் செயல்பட்டிருக்கிறார். “மதத்தின் பெயராலும் மரபின் பெயராலும் பெண்கள் மீது விதவை நிலையானது பெண்கள் மீது திணிக்கப்படுகிறது. இதனால் குடும்பம் மட்டுமல்லாமல் மதமும்தான் சீர்கேடு அடைகிறது. இந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் இப்படித் திணிக்கப்பட்ட விதவை நிலையானது ஒழிக்கப்பட வேண்டும். குழந்தை விதவையர்களுக்கு அவர்கள் வளர்ந்த பிறகு முறையாகவும் நல்ல விதத்திலும் திருமணம் செய்ய வேண்டுமே தவிர மறுமணம் செய்யக்கூடாது. ஏனெனில், அவர்கள் அதற்கு முன்பு உண்மையில் திருமணம் செய்துவிக்கப்படவேயில்லைஎன்று கைம்மை நிலையைக் குறித்துக் கடுமையாகச் சாடியிருக்கிறார். மறுமணம் என்பதை கணவரை இழந்த பெண்ணுக்கே அவர் பரிந்துரைத்தார் தவிர மனைவியை இழந்த கணவருக்கு அவர் அவ்வளவாகப் பரிந்துரைக்கவில்லை. காந்தியின் மூத்த மகன் ஹரிலாலின் மனைவி இறந்தபிறகு ஹரிலால் மறுமணம் செய்துகொள்ள விரும்புகிறார். காந்தி முதலில் அதற்கு அனுமதிக்கவில்லை. பிறகு, விதவைப் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். ஆனால், அதற்குள் ஹரிலால் மீட்க முடியாத அளவுக்குச் சீரழிவை அடைகிறார்.

தேவதாசி ஒழிப்பு

தேவதாசி முறைக்கு எதிராகத் தமிழகத்தில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பெரும் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது அதற்கு காந்தி முழு ஆதரவு தந்தார். காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தபோது முத்துலெட்சுமி ரெட்டி அவரைச் சந்தித்து ஆதரவு கோரினார். அதன் விளைவாக அந்தச் சுற்றுப்பயணத்தில் எல்லா இடங்களிலும் தேவதாசி முறைக்கு எதிராகத் தீவிரமாக உரையாற்றினார் காந்தி. “தேவதாசி வழக்கம் ஒரு பெருங்குற்றம். இந்தக் குறையை நீக்கப் பெண்கள் வேலை செய்தாலே தவிர, என்னைப் போன்ற ஆண்கள் அதை ஒழிக்க முயல்வதுகூட வீண்தான். நாம் நமது சகோதரிகளைக் கொடிய வேட்கைக்குப் பயன்படுத்திவிட்டு அதற்குக் கடவுள் பெயரை வைப்பது நாம் இழைக்கும் இரட்டைக் குற்றம். சமூகத்தின் வேரையே இதைப் போன்ற கொடுமைகள் அரித்துவிடும்என்று காந்தி மயிலாடுதுறையில் உரையாற்றினார். (’டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை’, வெளியீடு: அவ்வை இல்லம் - ராஜலட்சுமி அறக்கட்டளை, சென்னை).

அப்போது மதறாஸ் சட்டமன்ற உறுப்பினராக முத்துலெட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி நடத்திக்கொண்டிருந்தார். அதனால் பலரும் அரசாங்கப் பொறுப்புகளை உதறித் தள்ளிவிட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றனர். எனினும், தேவதாசி பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்காக முத்துலெட்சுமி அவசியம் சட்டசபைக்குப் போக வேண்டும் என்று காந்தி அனுமதி கொடுத்தார்.

(வரதட்சிணை, பெண் சிசுக் கொலை, சாஸ்திரங்கள், பர்தா, பெண்கல்வி போன்றவை குறித்து நாளைய அத்தியாயத்தில் பார்க்கலாம்)

(நாளை…)

- நன்றி: ‘தி இந்து’ (https://goo.gl/QLpRgx

1 comment:

  1. இத்தொடரின் சில பகுதிகளைப் பார்த்தபோதும், படித்தபோதும் ஒரு தேர்ந்த ஆய்வுக்கட்டுரையை வாசிக்கும் உணர்வு ஏற்பட்டது. அதிகமான செய்திகள், ஆங்காங்கே சான்றுகள். அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete