('தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் 17-02-2017 அன்று வெளியான கவிதை)
எல்லா முக்கியச் செய்திகளுக்கும்
அப்பால் தனித்துப் பறந்துகொண்டிருக்கிறது
இந்த மஞ்சள் வண்ணத்துப்பூச்சி
முக்கியச் செய்தி தேடியும்
முக்கியச் செய்தி ஆகவும்
விரையும் வாகனங்களுக்கிடையில்
ஏதுமறியாத
தான்தோன்றித்தனமான பறத்தல்
சாலையைக் கடந்திருந்தால்
தனக்குத் தானே
ஒரு முக்கியச் செய்தியாக
அது ஆகியிருந்திருக்கலாம்
அதற்குள்ளாக
விரைந்துவரும் முக்கியச் செய்தியொன்றின்
முகப்புக் கண்ணாடியில் மோதல்கொண்டு
சிதைந்து வழிகிறது
பறவையின் எச்சம்போல்
ஒரு நொடிதான்
அப்புறம்
ஒரே வீச்சில்
இருந்த தடம் தெரியாமல்
துடைத்துப் போடுகிறது
ஒரு துடைப்பான்
முன்னாள் மஞ்சள் வண்ணத்துப்பூச்சியை
விட்டிருந்தால் காற்றே
துடைத்துப்போட்டிருக்கும்
இல்லையென்றால் அடுத்த சிக்னலில்
ஒரு பிச்சைச் சிறுமி
துடைத்துவிட்டு
கார் கண்ணாடியைத் தட்டியிருப்பாள்
ஒரு முன்னாள் மஞ்சள் வண்ணத்துப்பூச்சிக்கு
அவ்வளவு முக்கியத்துவம் தந்திருக்க
வேண்டியதில்லைதான்
No comments:
Post a Comment