Friday, April 15, 2016

இயற்கை எனும் பிரம்மாண்டத்தின் முன்: லைஃப் ஆஃப் பை



ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில் 15-04-2016 அன்று வெளியான கட்டுரை. புத்தக மாதமான ஏப்ரலை முன்னிட்டு ‘திரைப்படமாகிய நாவல்’ என்ற கட்டுரைத் தொடர் வரிசையின் கட்டுரைகளுள் ஒன்றாக இது எழுதப்பட்டிருக்கிறது.)

ஒரு நாவல் படமாகும்போது அதன் ஆசிரியரைத் திருப்திப்படுத்துவதென்பது ரொம்பவும் சிரமம். ‘நாவல் போல படம் இல்லை. நாவலின் ஜீவனைப் படத்தில் கொண்டுவர முடியவில்லைஎன்று வாசகர்களும் சொல்வார்கள். இதற்கு நேர்மாறாக, ஆசிரியர்-வாசகர் என அனைத்துத் தரப்பையும் ஆட்கொண்ட படங்கள் மிகவும் குறைவே. அந்த வரிசையில்லைஃப் ஆஃப் பைமிகவும் முக்கியமானது.
பிஸின் மோலிடோர் பட்டேல் என்ற வித்தியாசமான பெயரைக் கொண்டபைதான் இந்தக் கதையின் நாயகன். அவனது தந்தை, புதுச்சேரியில் விலங்குக் காட்சி சாலை வைத்திருக்கிறார். அங்குள்ளரிச்சர்ட் பார்க்கர்என்னும் பெயருள்ள புலியிடம் நட்பு ஏற்படுத்திக்கொள்ள பைக்கு ஆசை ஏற்படுகிறது. விலங்குகளுக்கும்கூட ஆன்மா இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளவன் பை. புலிக்கு பை உணவு கொடுக்கப் போகும்போது அவனது தந்தைக்கு அது தெரிந்துவிடுகிறது. புலிக்கு ஆன்மாவெல்லாம் கிடையாது என்பதை நிரூபிக்க அவன் கண் முன்னாலேயே ஒரு ஆட்டைப் புலிக்கு இரையாக நீட்ட, அது கவ்விக்கொண்டு போய்விடுகிறது.

தன்னிடம் உள்ள விலங்குகளை கனடாவுக்குக் கொண்டுசென்று விற்றுவிட்டு, அங்கேயே வேறு ஒரு தொழில் செய்யும் முடிவுக்கு பையின் தந்தை வருகிறார். அதையடுத்து அவர்கள் குடும்பம் விலங்குகளுடன் கப்பலில் பயணிக்கிறது. புயலில் சிக்கிக்கொள்கிறது கப்பல். பை தப்பித்துக்கொள்ள அவனது குடும்பத்தினர் உட்பட பயணிகள் அனைவரும் கப்பலோடு மூழ்கிவிடுகிறார்கள். லைஃப் போட் ஒன்றில் பை தஞ்சம் புகுந்துகொள்ள வரிக்குதிரையும் கழுதைப்புலியும் ஓராங் ஊத்தானும் அதில் வந்து ஒண்டிக்கொள்கின்றன. கூடவே, புலியும் ஏறிக்கொள்கிறது. புலி ஏறிக்கொண்டதும் மிதவை ஒன்றைச் செய்துகொண்டு படகுக்கு அருகிலேயே மிதக்கிறான் பை. படகில் வரிக்குதிரையையும் ஓராங் ஊத்தானையும் கழுதைப் புலி கொன்றுவிட, கழுதைப்புலியைப் புலி கொன்றுவிடுகிறது.
இதற்குப் பிறகு படகில் புலியும் படகோடு மிதக்கும் மிதவையில் பையுமாக இரண்டு கதாபாத்திரங்களோடு பயணிக்கிறது படம். புலிக்கு பயந்துகொண்டிருந்தால் தொடர்ந்து உயிர்வாழ முடியாது என்ற முடிவுக்கு வரும் பை அதை அடக்கியாண்டு, தான்தான் அதன் எஜமானன் என்ற உணர்வை அதற்கு ஏற்படுத்தி, அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுகிறான். இப்படிப் போகும் கதையில் இனி சக பயணிகளாக இருவரும் கடலின் அழகுகளை, விசித்திரங்களை, மூர்க்கத்தை, இயற்கையின் பிரம்மாண்டத்தை எதிர்கொள்கிறார்கள்.
மிதக்கும் தீவு ஒன்றில் படகு ஒதுங்குகிறது. அங்கே நன்னீர் குட்டை ஒன்று இருக்கிறது. அந்தத் தீவு முழுவதும் மீர்கேட் என்னும் கீரிவகை விலங்குகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அவற்றையெல்லாம் தன் இஷ்டத்துக்குப் புகுந்து தின்றுகொண்டிருக்கிறது புலி. இரவு நேரம் நெருங்கியதும் எல்லாக் கீரிகளும் அலறியடித்துக்கொண்டு மரங்களில் ஏறுகின்றன. பையும் மரமொன்றில் ஏறிப் படுத்துக்கொள்கிறான். மரத்தின் பூவொன்றைப் பிய்த்துப் பார்த்தால் அதில் மனிதப் பல் இருக்கிறது. அந்தத் தீவே ஒரு ஊனுண்ணித் தீவு என்பதை அறிகிறான் பை. பகலில் நன்னீராகவும் இரவில் அமிலமாகவும் அந்தக் குளத்து நீர் மாறிவிடுகிறது. மறுநாள் புலியுடன் படகில் தப்பிச் செல்கிறான். சில நாட்களில் மெக்ஸிகோவின் கரையில் படகு ஒதுங்குகிறது. பை பார்த்துக்கொண்டே இருக்க, திரும்பிப் பார்க்காமல் புலி அங்குள்ள புதரொன்றில் புகுந்து காட்டுக்குள் போய்விடுகிறது.
புயலில் சிக்கிய கப்பலிலிருந்து உயிர்பிழைத்த ஒரே நபர் பை என்பதால் ஜப்பானிய காப்பீட்டு நிறுவனம் ஒன்று, என்ன நடந்தது என்று தெரிந்துகொள்வதற்காக இருவரை அனுப்புகிறது. மருத்துவமனையில் இருக்கும் பை, தனக்கு நடந்ததை அவர்களிடம் சொல்கிறான். அவர்கள் அதை நம்புவதுபோல் தெரியவில்லை. அதனால் அந்தக் கதையையே மாற்றிச் சொல்கிறான். அதையும் காப்பீட்டு நிறுவனம் நம்பவில்லை. வளர்ந்து நடுத்தர வயதில் இருக்கும் பை இவை எல்லாவற்றையும் எழுத்தாளர் ஒருவரிடம் சொல்லிக்கொண்டிருக்க, கதை முடிவுக்கு வருகிறது.
இப்படிப்பட்ட அற்புதமான கதைக்களம் காப்ரியல் கார்சியா மார்க்கேஸ் போன்ற ஓர் எழுத்தாளரிடம் அகப்பட்டிருந்தால் மாபெரும் காவியமாக ஆகியிருக்கும். கதைக்களத்தையும் சுவாரசியத்தையும் தகவல்களையும் மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு கலைப் படைப்பை உருவாக்க நினைத்ததால் நாவல் உயரே எழ முடியாமல் சற்றுத் தாழ்வாகவே பறக்கிறது. ஆன்மிகத்தைப் பற்றிய கேள்விகள் இருந்தால் மட்டும் போதாது, அவையெல்லாம் அனுபவமாக மாற வேண்டும்.
யான் மார்ட்டெல் எங்கே தோல்வியடைந்தாரோ அங்கே ஆங் லீ வெற்றி பெறுகிறார். இயற்கையின் விரிவை, பிரம்மாண்டத்தை இந்த அளவுக்குக் காட்சிப்படுத்தியவர்கள் குறைவு. நாவலை விடப் படம் ஏன் சிறந்தது என்பதை நிரூபிக்க, பல உதாரணங்களைப் படத்திலிருந்து காட்டலாம். நடுக் கடலின்மேல் மின்னலையும் மழையையும் பொழியும் வானத்தைப் பார்த்து, கடவுள் படைப்பின் பிரம்மாண்டத்தை உணர்ந்து பை ஆனந்தக் கூச்சலிடும் காட்சியும் முக்கியமானது. சரம்சரமாய்ப் பறந்துவரும் கோலா மீன்கள், பைட்டோபிளாங்க்டன் என்னும் பாசியால் அற்புத விளக்காய் ஒளிரும் கடல் பரப்பு, கடலிலும் வானிலும் ஒளிர்ந்துகொண்டிருக்கும் நட்சத்திரங்கள், அவற்றைப் பளிங்குக் கண்களுடன் பார்த்துக்கொண்டு மனதில் உள்ளதைப் பிடிகொடுக்காத புலி என்று அசாதாரணமான அழகு கொண்ட காட்சிகளூடாக மிக மிக ஆழமான அசைவை நம் ஆழ்மனதில் ஏற்படுத்திவிடுகிறார் ஆங் லீ.

லைஃப் ஆஃப் பைபடமாக்கப்பட்டுக்கொண்டிருந்தபோதே ஆங் லீயை நோக்கி நிறைய அவநம்பிக்கைக் கணைகள் வீசப்பட்டன. இந்த நாவலை எப்படிப் படம் எடுக்கப்போகிறார் என்றும், அப்படியே படம் வெளிவந்தாலும் படுதோல்விதான் அடையும் என்றும் கணிப்புகள் முன்வைக்கப்பட்டன. எல்லாவற்றையும் தகர்த்து இந்தப் படம் உலகெங்கும் மாபெரும் வெற்றியடைந்தது மட்டுமல்லாமல் இயக்குநர் ஆங் லீக்கு இரண்டாவது ஆஸ்கரையும் பெற்றுத்தந்தது.

கடவுள் நம்பிக்கை மட்டுமே ஆன்மிகம் அல்ல, இயற்கையை உணர்தல், இயற்கையில் தன்னுடைய இடத்தை உணர்தல் போன்றவையும் ஆன்மிகம்தான். ஆகவே, உலகின் தலைசிறந்த ஆன்மிகப் படங்களுள் ஒன்றாகலைஃப் ஆஃப் பையை நாம் கருதலாம்.
 - நன்றி: ‘தி இந்து’, ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/5tVi03

No comments:

Post a Comment