Wednesday, October 21, 2015

வெங்கட் சாமிநாதனுக்கு நன்றிக்கடன் பட்டவனின் அஞ்சலிக்குறிப்பு


ஆசை

தமிழின் மூத்த விமர்சகர்களுள் ஒருவரான வெங்கட் சாமிநாதன் இன்று (21-10-2015) காலமானார். தனிப்பட்ட முறையில் எனக்குப் பெரிய இழப்பு இது.

வெங்கட் சாமிநாதனின் எழுத்துக்களை மிகக் குறைந்த அளவிலேயே படித்திருக்கிறேன் என்ற முறையில் அவரது எழுத்துலகச் சாதனைகளைப் பற்றி எழுதுவதற்குச் சிறிதும் தகுதியில்லாதவன் நான். எனினும் இலக்கிய உலகில் அவருக்கு இருக்கும் மதிப்பைக் குறித்து நான் அறிவேன்.

இந்த அஞ்சலிக் குறிப்பு அவருக்கு நான் பட்டிருக்கும் நன்றிக்கடனை வெளிப்படுத்துவதற்கானது. தமிழின் மூத்த விமர்சகர்களுள் ஒருவர் வெங்கட் சாமிநாதன். நானோ அப்போது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கும் ஒரு கவிஞன் (‘சித்து’ என்ற கவிதைத் தொகுப்பு, வெளியீடு: க்ரியா, ஆண்டு: 2006). முதல் தொகுப்பு என்ற வகையில் அமெச்சூர்த்தனமாகவும் முன்னோடிக் கவிஞர்களின் பாதிப்புடனும் அந்தத் தொகுப்பு இருந்தது மிகவும் இயல்பானதே. ஆகவே, அந்தத் தொகுப்பைப் பொருட்படுத்தி விமர்சிக்கக்கூட யாருக்கும் பொறுமையில்லை. தொடங்கும்போதே யாரும் பாரதியாகவோ பிரமிளாகவோ தொடங்குவதில்லையே! முதல் தொகுப்பை வெளியிடும் எல்லாக் கவிஞர்களைப் போலவும் மிகுந்த கனவுடன் இருந்தேன். தொகுப்பு வந்த பிறகு என் கனவுகளெல்லாம் நொறுங்கித்தான் போயின. ‘கொஞ்சம் டிரை பண்ணு தம்பி. உனக்குக் கவிதை வரும்’ என்று சொல்லக்கூட ஆளில்லை. அப்போது வெங்கட் சாமிநாதன் எனது தொகுப்பைப் பொருட்படுத்தி எழுதிய இந்த மதிப்புரைதான் எனக்கு ஆசுவாசத்தை அளித்தது.
அந்த மதிப்புரைக்கான இணைப்பு: http://writerasai.blogspot.in/2013/05/blog-post_10.html.

அந்த மதிப்புரையைப் படித்துவிட்டு அவருக்கு நன்றி தெரிவித்தேன். வெங்கட் சாமிநாதனைத் தவிர எனது முதல் தொகுப்பைப் பொருட்படுத்திய இன்னொரு மூத்த எழுத்தாளர் சி. மணி. அவரை நான் நேரில் பார்ப்பதற்குள் மரணமடைந்துவிட்டார். நல்லவேளை வெங்கட் சாமிநாதனை நான் இரண்டு முறை பார்த்துவிட்டேன். முதல் முறை, க்ரியா அகராதியின் விரிவாக்கிய இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டபோது (20-05-2008). அடுத்த முறை, பாத்ரூமில் வழுக்கி விழுந்து கால் உடைந்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது. அப்போது எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பும் வெளியாகி அதைப் பற்றியும் அவர் மிகுந்த பாராட்டுணர்வுடன் விமர்சனம் எழுதியிருந்தார். அந்த சமயத்தில் அவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். உடல் உபாதையையெல்லாம் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல் கிண்டலடித்துப் பேசிக்கொண்டிருந்தார் அப்போது. சமீபத்தில் ஏதாவது எழுதினீர்களா என்று அவரை நான் கேட்டபோது அவருக்கு முகம் சுண்டிப்போய்விட்டது. ‘ஏன்யா கேட்க மாட்டே? உன்னோட புஸ்தகத்தையெல்லாம் க்ரியா போட்டிருக்குல்லே. அதான் பரமசிவன் கழுத்தில இருந்துகிட்டு கருடா சவுக்கியமான்னு கேட்கிற. ராமகிருஷ்ணன் எனக்கு 45 வருஷத்துக்கும் மேலே பழக்கம். ஆனால், என்னோட புத்தகத்தை ஒன்று கூட அவர் போட்டதில்லே’ என்றார். நான் கேட்ட கேள்வியின் தொனி சரியில்லை என்பதை உணர்ந்துகொண்டு பேச்சை மாற்றினேன்.

க்ரியா ராமகிருஷ்ணனிடம் சாமிநாதனின் மனக்குமுறலை வெளியிட்டேன். ‘வெங்கட் சாமிநாதன் எனக்கு வாழ்க்கையில் முக்கியமானவர்களில் ஒருத்தர்தான். அவருடைய பாலையும் வாழையும் மிக முக்கியமான புத்தகம். ஆனால், அவருடைய எழுத்தில் ஒழுங்கு இருக்காது. என்னோடு சேர்ந்து பிரதியைச் செப்பனிடுவதற்கு அவருக்குப் பொறுமையும் கிடையாது. அதனால்தான் அவருடைய புத்தகம் எதையும் நான் போடவில்லை. இதனால் எங்கள் நட்புக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதுதான் இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம்’ என்றார். வெங்கட் சாமிநாதனின் மனதில் சிறு வருத்தம் இருந்தபோதும் அதன் காரணமாக அவர்களுடைய நட்பில் விரிசல் ஏற்படவில்லை. ‘என் புத்தகத்தைப் போடுய்யா’ என்று அவரும் கேட்டதேயில்லை. கடைசிவரையில் அவருக்கு உடல் நலத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் ராமகிருஷ்ணன் ஓடோடிச் சென்று வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வது வழக்கம். அது ஒரு விசித்திரமான நட்பு.

எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு கொண்டலாத்திக்குப் பிறகு தங்க. ஜெயராமனுடன் சேர்ந்து நான் மொழிபெயர்த்திருந்த ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’ கவிதை நூலுக்கும் உற்சாகமளிக்கும் ஒரு மதிப்புரை எழுதியிருந்தார். (இந்த மதிப்புரைக்கான இணைப்பு: http://writerasai.blogspot.in/2015/10/blog-post_21.html). ஆக, திரும்பத் திரும்ப எனது புத்தகங்களை அவர் பாராட்டி எழுதிக்கொண்டே இருந்தார். பதிலுக்கு ஒரு நன்றி மட்டும்தான் என்னிடமிருந்து. அவர் என புத்தகங்களைத் தொடர்ந்து படித்துக்கொண்டும் பாராட்டிக்கொண்டும் இருந்தாலும் அவருடைய புத்தகங்களை நான் படித்ததே இல்லை. ஆயினும் அவர் இதுவரை ‘என்னய்யா, என் புத்தகம் எதையாவது படித்திருக்கிறாயா?’ என்று கேட்டதே இல்லை. அவர் அதை எதிர்பார்க்கவுமில்லை. அவரைப் பொருத்தவரை இளம் எழுத்தாளன் ஒருவனை அவனது குறைகளைப் பொருட்படுத்தாமல் ஊக்குவிப்பதுதான் முதல் கடமை. இதற்காக நான் அவருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர் வாழ்ந்த காலத்தில் அவரிடம் உரக்க நான் சொல்லாத ‘நன்றி’யை இப்போது மிகுந்த வேதனையுடன் சொல்லிக்கொள்கிறேன். அன்புக்குரிய வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு ‘நன்றி, நன்றி, நன்றி!’

என்னைப் போல சில்லறைக் கவிஞர்களுக்கு மட்டுமல்லாமல் பிரமிள் போன்ற பெரும் கவிஞர்களுக்கும் வெங்கட் சாமிநாதன் அளப்பரிய ஊக்கம் அளித்திருக்கிறார். பின்னாளில் வெங்கட் சாமிநாதனும் பிரமிளும் கடுமையாகச் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். ‘நீங்கள் நண்பர்களாக இருந்த காலத்தில் வெங்கட் சாமிநாதன் உங்களை எப்படிப் பார்த்துக்கொண்டார்’ என்று யாரோ பிரமிளிடம் கேட்டிருக்கிறார்கள். பிரமிள் எதிர்மறையாக ஏதோ சொல்வார் என்று எதிர்பார்த்தேன். அதற்குப் பிரமிளோ, ‘இரண்டு கைகளிலும் வைத்துத் தாங்கு தாங்கு என்று தாங்கினான் சாமிநாதன்’ என்று பதில் சொன்னார். (இதைப் பற்றி எங்கே படித்தேன் என்று தெரியவில்லை. நினைவிலிருந்தே எழுதுகிறேன். ஆனாலும், பிரமிள் அப்படிச் சொன்னது என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.)

காந்தியை நோக்கி நான் திரும்புவதற்கு வெங்கட் சாமிநாதனுடன் தொடர்புடைய தருணம் ஒன்று இருக்கிறது. க்ரியா ராமகிருஷ்ணன் (2008 அல்லது 2009 வாக்கில்) என்னிடம் பகிர்ந்துகொண்ட விஷயம் இது. அப்போது காந்தி நூற்றாண்டு விழா (1969). புதுடெல்லியில் வேலை பார்த்து வந்த ராமகிருஷ்ணனை வெங்கட் சாமிநாதன் காந்தி புகைப்படக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். காந்தி மீது அதுவரை பெரிதாக எந்த அபிமானமும் கொண்டிராத ராமகிருஷ்ணன் சாமிநாதனுடன் சென்றிருக்கிறார். சாமிநாதனுடன் காந்தி புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டுக்கொண்டே நடந்த ராமகிருஷ்ணனுக்குப் பாதி வழியில் கண்களில் பொலபொலவென்று கண்ணீர் இடைவிடாமல் பொழிய ஆரம்பித்திருக்கிறது. ஏன் என்று அவருக்கும் தெரியவேயில்லை. இந்த சம்பவத்தை எனக்கு ராமகிருஷ்ணன் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. அந்தக் கண்ணீருக்கு அடிப்படையான (காந்தியின்) ஆன்ம வல்லமை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்ற ஆர்வம் அப்போதுதான் எனக்கு அதிகமாக ஏற்பட்டது. அதற்கு முன்னதாக எனக்கும் காந்தி மீது அவ்வளவாக அபிமானம் இருந்ததில்லைதான். அதற்குப் பிறகுதான் காந்தியை நோக்கி நான் நகர்ந்தேன்.

சுற்றிவளைத்துப் பார்க்கும்போது நான் காந்தி நோக்கி நகர்வதற்கான காரணங்களில் ஒன்றாக வெங்கட் சாமிநாதன் இருந்திருந்தாலும் அவர் காந்தியை விட்டு விலகித்தான் சென்றார். சமீப காலமாக இந்துத்துவர்களிடம் அவர் நெருங்கியதும் இஸ்லாமிய வெறுப்பை அவர் வளர்த்துக்கொண்டதும் அவரிடமிருந்து நான் விலகுவதற்குக் காரணமாகின. எனது ‘கொண்டலாத்தி’ தொகுப்புக்கு விமர்சனம் எழுதியபோது அதில் இப்படி ஒரு பத்தி எழுதியிருந்தார்: “பறவைத் தேடல் (Bird watching) நம்மில் ஒருசிலருக்கு அவர்தம் வாழ்க்கையின் தேடலேயாயிருக்கிறது. சலீம் அலி போன்றோருக்கு. வேத கால ரிஷிகளைப் போல அவர்கள் தம்மைச் சுற்றிய இயற்கையை ஆராதித்தவர்கள். அதுவும் ஒரு தவமேதான். சலீம் அலியும் ஒரு ரிஷிதான். இதைச் சுட்டுச் சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று ஒருபோதும் அவர் அராபிய ஷேக்குகளைப் போல நினைத்தும் பார்த்திருக்க மாட்டார் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.” 

ரொம்பவும் வருத்தமாக இருந்தது. இந்தியர்கள், இந்துக்கள் யாரும் பறவைகளைச் சாப்பிட்டதே இல்லையா? ஏன், என் சிறுவயதில் நானே சிட்டுக்குருவி, காடை, மடையான் போன்றவற்றையெல்லாம் சாப்பிட்டிருக்கிறேன். நம் விருப்பத்துக்குரிய ஒருவர் இப்படி ஆகிவிட்டாரே என்ற வருத்தம் இன்று வரை இருக்கிறது. ஆயினும் அந்த வருத்தத்தையெல்லாம் மீறி அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அதைச் சரியாக இதுவரை அவரிடம் வெளிப்படுத்தவில்லையே என்பதை எண்ணி வருந்துகிறேன்.


வெங்கட் சாமிநாதனின் ஆன்மா சாந்தியடைவதாக! 

No comments:

Post a Comment