Thursday, May 16, 2013

சென்னை: வாழ்க்கையும் பிழைப்பும்- II

ஆசை
    சென்னை வாழ்க்கையும் பிழைப்பும் என்ற கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்புகுறித்து எனக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை. து எதிர்பார்த்த ஒன்றுதான். சென்னை வாழ்க்கையைச் சற்று விரிவான தளத்திலிருந்து பார்க்க விரும்புகிறேன். சென்னை வாழ்க்கையைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லச் சொன்னால் நான் சொல்வது இதுதான்: அசெளகர்யம்.
      இந்த அசெளகர்யம் வெளியில் ஏற்படுவதல்ல; மனதினுள் ஏற்படுவது. எந்த ஓர்  இடத்தில் இருந்தாலும் அல்லது எந்த ஒரு செயலைச் செய்தாலும் நமக்குள் இரண்டு விதமான உணர்வுகளுள் ஒன்று எழும். ஒன்று திருப்திகரமான உணர்வு; இன்னொன்று அசெளகர்யமான உணர்வு. இந்த அசெளகர்யமான உணர்வானது சென்னையில் எல்லா உணர்வுகளுக்கும் செயல்களுக்கும் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறது. இதனால் வாழ்க்கையை அரக்கபரக்க வாழ்வதுபோல்தான் வாழ முடிகிறது; இன்னும் சரியாகச் சொல்லப் போனால் வாழ்க்கையைத் திருட்டுத்தனமாக வாழ்வதுபோல்தான் வாழ முடிகிறது. 
    சென்னையில் இருக்கும்போது 'ஈஷா யோகா' வகுப்புக்குச் சென்றிருந்தேன். அங்கே இருந்த நூற்றுக் கணக்கான மக்களிடம் யோகா ஆசிரியர் ஒரு கேள்வியைக் கேட்டார்: கடந்த ஆறு மாதத்தில் வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தவர்கள் மட்டும் கையைத் தூக்குங்கள் என்று. நான் யோசித்தேன், நான் வண்ணத்துப் பூச்சியைப் பார்த்திருந்தேன்தான். ஆனால், அது உண்மையில் பார்த்தல் அல்ல (ஆங்கிலத்தில் see என்ற சொல்லுக்கும் look என் சொல்லுக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் அறிவீர்கள்!).
     எனவே நான் கையைத் தூக்கவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தால் ஏழெட்டுப் பேரைத் தவிர யாரும் கையைத் தூக்கவில்லை. அப்போது அந்த ஆசிரியர் ஒரு கேள்வியைக் கேட்டார்: ''ஏன் சென்னையில் வண்ணத்துப் பூச்சியே கிடையாதா?''. 
    சென்னையில் வண்ணத்துப் பூச்சி மட்டுமல்ல; விதவிதமான பறவைகளும் விதவிதமான செடிகொடிகளும் மரங்களும் இருக்கின்றன; வானம்கூட இருக்கிறது, அதில் இரவில் நட்சத்திரங்களும் நிலாவும்கூட தெரியும். ஆனால், மனிதர்களை மட்டு்ம்தான் காணோம். மனிதர்களாகிய நாம் நமக்குள் நாமே மூழ்கிக் காணாமல் போய்விட்டோம். உண்மையில் நமக்கு நம்மைப் பற்றிகூட சிந்தனை கிடையாது. நமது சிந்தனையெல்லாம் சிந்தனையற்ற சிந்தனைதான் (blank thinking). இந்த வெற்றுச் சிந்தனை கொஞ்சம்கொஞ்சமாக நம்மை மழுங்கடித்துவிடுகிறது.
    வண்ணத்துப் பூச்சியையோ பறவைகளையோ நிலாவையோகூட பார்க்க வேண்டாம்; நம்மை நாமே பார்த்தால்கூட போதும். ஆனால், நாம் முதலில் செய்வது நம்மிலிருந்து தப்பித்து ஓடுவதுதான். திக் நட் ஹன் (Thich Nhat Hanh) என்ற வியட்நாமிய புத்தத் துறவி 'Being Peace' என்ற புத்தகத்தில் இப்படிச் சொல்கிறார்: ''நம்முடன் நாம் இருப்பதற்கு நாம் பழக்கப்படவில்லை, நம்மையே நமக்குப் பிடிக்காததுபோன்றும் நம்மிடமிருந்து நாம் தப்பியோட முயல்வதுபோன்றும் நாம் நடந்துகொள்கிறோம்.''
     இதுபோன்று கடைசியாக நிலாவை எப்போது பார்த்தோம், வானத்தை எப்போது பார்த்தோம் என்றெல்லாம் எனக்கு அவ்வப்போது சந்தேகம் வரும். உண்மையில் என் நிலையைக் குறித்து அப்போது மிகுந்த ஆற்றாமை ஏற்படும். வாழ்க்கை என்ற சிம்மாசனத்தில் ராஜா மாதிரி உட்காராமல் பிச்சைக்காரனைப் போன்றல்லவா உட்கார்ந்துகொண்டிருக்கிறோம் என்று தோன்றும்.
     சென்னையில் இப்போது நடந்துகொண்டிருப்பது ஒரு வித அந்நியமாதல் (alienation) என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இரண்டாம் உலகப் போர்க் காலகட்டத்திலும் அதற்குப் பிறகான காலகட்டங்களிலும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்பட்டதுபோன்ற அந்நியமாதல் இங்கும் இப்போது ஆரம்பித்திருக்கிறது. ஒருவர் தன்னுடைய குடும்ப உறவுகள், சமூகம் போன்றவற்றிலிருந்து அந்நியமாவதைவிடத் தன்னிடமிருந்து அந்நியமாகிக்கொண்டிருப்பதே இங்கு அதிகமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இங்கு வரும் யாவருக்கும் நோக்கம் சம்பாதிப்பது மட்டுமே, வாழ்வது அல்ல. பகல் (அல்லது இரவு) முழுக்க வேலை செய்துவிட்டு சாயங்காலம் (அல்லது விடியற்காலையில்) வீடு திரும்பி, அவசரஅவசரமாக எதையாவது செய்து சாப்பிட்டுவிட்டு இல்லையென்றால் ஓட்டலில் எதையாவது வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, தொலைக்காட்சியைப் போட்டுவிட்டு எந்த நோக்கமுமில்லாமல் அலைவரிசைகளை மாற்றிக்கொண்டே இருந்துவிட்டு, பிறகு குளியலறையில் போய் சுயஇன்பம் செய்துவிட்டு (அதையாவது யாரும் அனுபவித்துச் செய்கிறார்களா என்று தெரியவில்லை) பிறகு படுத்துத் தூங்கிவிட்டு காலையில் (அல்லது மாலையில்) எழுந்து குளித்துவிட்டுச் சாப்பிட்டு வேலைக்குச் செல்வது. இப்படித்தான் போகிறது வாழ்க்கை. 
     
சென்னையில் குடும்பம் இருப்பவர்களின் நிலை பரவாயில்லை, அவர்களுக்கென்று கவலைப்பட, அவர்களைப் பார்த்துக்கொள்ள யாராவது இருக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம். வெளியூரிலிருந்தும் வெளி மாநிலத்திலிருந்தும் வருபவர்களின் நிலைதான் இன்னும் மோசம். அவர்களுக்கு அலுவலகத்தில்கூட உண்மையான நண்பர்கள் கிடையாது; இருப்பர்களெல்லாம் போட்டியாளர்கள் மட்டுமே. ஒன்றாக டீ குடிப்பார்கள்; பார்ட்டியில் ஒன்றாக மது அருந்துவார்கள். ஆனால், நண்பர்கள் கிடையாது; போட்டியாளர்கள். ஆம். இப்போது சரியாகச் சொல்லத் தோன்றுகிறது. இந்த நவீன வாழ்க்கை (இந்த இடத்தில் சென்னை வாழ்க்கை) போட்டியாளர்களை மட்டுமே உருவாக்குகிறது. அலுவலகத்தில் பாராட்ட ஆட்கள் கிடையாது; போட்டுக்கொடுக்கவோ நேரம் பார்த்து காலி செய்யவோ மட்டும்தான் ஆட்கள் உண்டு. 
    ஒரு விதத்தில் இது நர மாமிசம் தின்பது போன்றது;  நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு நர மாமிசம் தின்பவர் என்பதைப் பொறுத்து நிச்சயிக்கப்படுகிறது உங்களின் வெற்றி. ஆம்,   ஒவ்வொரு வெற்றியாளரின் கடைவாயிலிருந்தும் ஒழுகும் ரத்தத்தை என்னால் பார்க்க முடிகிறது. உண்மையில் அவர்கள் சொல்லும் தங்களின் வெற்றியின் ரகசியம் எல்லாம் நர மாமிசத்தை வெற்றிகரமாகவும் பிறரைவிட அதிகமாகவும் தின்பதும் எப்படி என்பது மட்டுமே.
    இது போன்ற போட்டியாளர்களாக நர மாமிசம் தின்பவர்களாக ஆகி விடாமல் நம்மை நாம் பார்த்துக்கொள்வதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது: சென்னையை விட்டுத் தப்பிப்பது. ஆனால், பலருக்கும் இது எளிதான வழி அல்ல; புலி வாலைப் பிடித்த கதைதான் அவர்களுடைய கதை. தகவல் தொழில்நுட்பம் படித்துவிட்டுச் சொந்த கிராமத்தில் போய் என்ன செய்வது? (உண்மையில் செய்வதற்கு ஏராளமாக இருக்கிறது என்றாலும்). இங்கே சம்பாதிக்கும் அளவுக்கு அங்கே சம்பாதிக்க முடியுமா? சென்னையில் கிடைக்காத வாழ்க்கை கிராமத்தில் கிடைக்குமா? இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கலாம். இதில் கடைசிக் கேள்விக்குப் பதில் சொல்வது மிகவும் கடினம். மனிதர்கள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், குறைந்தபட்சம் நாம் வாழக் கூடிய சூழல் நகரத்தைவிட கிராமத்தில் ஓரளவுக்குத் தேவலாம் என்றுதான் தோன்றுகிறது.

(2010ஆம் ஆண்டில் 'தமிழ் இன்று' இணைய இதழில் வெளிவந்த கட்டுரை)
இந்தக் கட்டுரையின் முதல் பகுதி: சென்னை: வாழ்க்கையும் பிழைப்பும்- I

2 comments:

  1. /// ஆனால், குறைந்தபட்சம் நாம் வாழக் கூடிய சூழல் நகரத்தைவிட கிராமத்தில் ஓரளவுக்குத் தேவலாம் என்றுதான் தோன்றுகிறது. ///

    வழுவூர் பற்றிய கட்டுரையில் நேர் மாறான சித்திரத்தைத் தந்திருக்கிறூர்களே (கிராமத்தில் சாதிக்கொடுமை)!
    சரவணன்

    ReplyDelete
    Replies
    1. சூழல் என்று நான் சொன்னது இயற்கையை மட்டும்தான். மேலும், சென்னையைப் பற்றிய கட்டுரை எழுதப்பட்டது 2010ஆம் ஆண்டில், வடுவூர் பற்றிய கட்டுரை எழுதப்பட்டது இந்த வருடத்தில். இடைப்பட்ட காலத்தில் கிராமங்களைப் பற்றிய என் கருத்துகள் வெகுவாக மாறிவிட்டன.

      Delete