Tuesday, December 31, 2024

காந்தி, ராமனை எண்ணுதல், எழுதுதல்: ஆசையின் கவிதைகள் - பேரா. ராஜன் குறை


(எனது புதிய கவிதைத் தொகுப்பான ‘ஹே ராவண்’ நூலுக்குப் பேரா. ராஜன் குறை வழங்கிய அணிந்துரை)

தமிழில் எண்ணிப் பார்ப்பது என்றால் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுவதையும் குறிக்கும்; சிந்தித்துப் பார்ப்பதையும் குறிக்கும். 

       எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 

       கண்ணென்ப வாழும் உயிர்க்கு  

என்பது குறள். இங்கே எண் என்பது ஆங்கிலத்தில் நம்பர் எனப்பட்டாலும், டிஜிட் என்றும் கூறலாம். எண்ணை முதலில் சொல்லி, எழுத்தை அடுத்து சொல்லியிருப்பது மிகவும் கருதத்தக்கது. இப்போது நான் கணினியில் தட்டச்சு செய்வது டிஜிட்டலாகத்தான் எழுத்தாக மாறுகிறது என்பதைக் கருதாமல் இருக்க முடியவில்லை. வள்ளுவருக்கு டிஜிட்டல் யுகம் பற்றிய முன்னறிதல் இருந்தது என்று பொருளல்ல. ஆனால் ‘எண்ணி’ப்  ‘பார்ப்பது’ என்பதில் எண்ணும், கண்ணும் இணைந்திருப்பதும் அதுவே எழுத்தாவதும் தமிழ் சிந்தனை மரபில் பதிவாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

Saturday, December 28, 2024

சென்னை புத்தகக் காட்சியில் மகிழ் ஆதனின் கவிதை நூல்கள்

படம்: கோபி

சென்னை புத்தகக் காட்சியில் எங்கள் மகன் மகிழ் ஆதனின் கவிதை நூல்கள் கிடைக்கும் அரங்குகள் பற்றிய விவரங்கள்  இங்கே:

நூல்வனம் (வானம்) அரங்கு எண்: 438

*நான்தான் உலகத்தை வரைந்தேன்

(கவிதைகள்)

விலை: ரூ.50

எதிர் வெளியீடு அரங்கு எண்: F-43

*காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்
(காலத்தைப் பற்றிய கவிதைகள்)

இந்த நூல்கள்  க்ரியா பதிப்பகம் அரங்கு எண் 611-612லும் கிடைக்கும்

இந்தப் புத்தகங்களை வாங்கி குட்டிக் கவிஞனுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்!





Friday, December 27, 2024

சென்னை புத்தகக் காட்சியில் என் புத்தகங்கள்


சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி வெளிவரும் மூன்று புதிய நூல்கள் உட்பட இதுவரை 12 நூல்கள் வெளியிட்டிருக்கிறேன். இவற்றுள் 6 கவிதை நூல்கள் (ஒரு காவியம் உட்பட), மூன்று உரைநடை நூல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் அடங்கும். இவற்றுள் என் முதல் கவிதைத் தொகுப்பான ‘சித்து’ அச்சில் இல்லை. இவை தவிர கிட்டத்தட்ட 20 சிறார் நூல்களை Tulika பதிப்பகத்துக்காக மொழிபெயர்த்திருக்கிறேன். என் நூல்களின் விவரங்களையும் அவை இந்தப் புத்தகக் காட்சியில் கிடைக்கும் அரங்குகள் விவரங்களையும் இங்கே தருகிறேன்.

எதிர் வெளியீடு அரங்கு எண் F-43

*மாயக்குடமுருட்டி

(காவியம்)

விலை: ரூ.350

*ஹே ராவண்!

(கவிதைகள்)

விலை ரூ.200

*உயரத்தில் ஒரு கழுவன்

(சிறுகதைத் தொகுப்பு)

விலை: ரூ.220

க்ரியா பதிப்பக அரங்கு எண்: 611-612

*கொண்டலாத்தி

(பறவைக் கவிதைகள், வண்ணப் படங்களுடன்)

விலை: ரூ.180

ருபாயியத் -ஒமர் கய்யாம்

(மொழிபெயர்ப்புக் கவிதைகள், பேரா.தங்க.ஜெயராமனுடன் இணைந்து)

விலை: ரூ.125

பறவைகள்: அறிமுகக் கையேடு

(ப.ஜெகநாதனுடன் இணைந்து)

அமைதி என்பது நாமே - திக் நியட் ஹான்

(பௌத்த மொழிபெயர்ப்பு நூல்)

விலை: ரூ.180

இந்து தமிழ் திசை அரங்கு எண்கள்: 55-56, 668-669

*என்றும் காந்தி

விலை: ரூ.280

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் அரங்கு எண்கள்:  F-4, 75-76

அண்டங்காளி

(கவிதைகள்)

விலை: ரூ.100

குவாண்டம் செல்ஃபி

(கவிதைகள்)

விலை: ரூ.160

இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்

(கலை, இலக்கியக் கட்டுரைகள்)

விலை: ரூ.330

Tulika - 426

என் சிறார் இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள்

Friday, November 22, 2024

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்: அபத்தத்தைக் கொண்டு அர்த்தத்தை அளவிடும் படைப்பாளி (பிறந்தநாள் மீள்பகிர்வு)


பாலசுப்ரமணியன் பொன்ராஜ் இதுவரை, ‘கனவு மிருகம்’ (பாதரசம் வெளியீடு), ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ (யாவரும் பப்ளிஷர்ஸ்) ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கிறார்.

பாலசுப்ரமணியனின் சிறுகதைகள் பல வகைகளிலும் உற்சாகப்படுத்துகின்றன. கூடவே, நம் மனஅடுக்கின் இயல்பான அமைப்பில் இடையூறும் ஏற்படுத்துகின்றன. உற்சாகப்படுத்துவதற்கு முதன்மையான காரணம், பாலசுப்ரமணியனிடம் வெளிப்படும் சிந்தனை வீச்சு. தத்துவம், அரசியல், உலக இலக்கியம், இசை, அறிவியல் என்ற பல துறைப் பரிச்சயத்தையும் சரியாக உள்வாங்கித் தனது படைப்புகளில் ஆழமான சுயவெளிப்பாடுகளாக வெளியிட்டிருக்கிறார். இதற்கு உதாரணமாக ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பல்’ தொகுப்பில் பல இடங்களையும் காட்ட முடியும்.

Sunday, November 17, 2024

க்ரியா ராமகிருஷ்ணன்: தமிழில் முன்னுதாரணமில்லாத ஒரு எடிட்டர்: நினைவுநாள் பகிர்வு


ஆசை

தமிழில் புத்தகக் கலாச்சாரம் என்பது இல்லை என்பது க்ரியா ராமகிருஷ்ணன் அடிக்கடி வெளிப்படுத்தும் வருத்தங்களுள் ஒன்று. புத்தகக் கலாச்சாரம் என்பது புத்தகங்கள் அதிகம் வெளியாகும் சூழல் அல்ல, புத்தகங்களுக்கு நம் வாழ்க்கையில் நாம் முக்கிய இடம் கொடுப்பதே புத்தகக் கலாச்சாரம். அப்படிப்பட்ட கலாச்சாரம் இல்லாமல் போனதன் விளைவுகளுள் ஒன்றுதான் தமிழில் எடிட்டர்களும்கிட்டத்தட்டஇல்லாமல் போனது. அந்தக் குறையைப் போக்க வந்த முக்கியமான இருவர் – ‘க்ரியாராமகிருஷ்ணன் (2020), நஞ்சுண்டன் (2019) – சமீப ஆண்டுகளில் காலமானது தமிழுக்கும் தமிழ்ப் பதிப்புத் துறைக்கும் பேரிழப்பு.

எடிட்டிங்கை க்ரியா ராமகிருஷ்ணன் எப்படி அணுகினார் என்பதைப் பார்ப்பதற்கு முன்புஎடிட்டிங்என்பதைப் பற்றித் தமிழ்ச் சூழல் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருந்தது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.

Tuesday, June 18, 2024

க்ரியா ராமகிருஷ்ணன் 80வது பிறந்த நாள்

தமிழின் முன்னோடிப் பதிப்பாளர்களுள் ஒருவரும் என் வழிகாட்டியுமான க்ரியா ராமகிருஷ்ணனுக்கு இன்று 80வது பிறந்த நாள் நிறைவு. இருபது ஆண்டுகள் அவருடன் பயணித்திருக்கிறேன். இயற்கை, அறிவியல், கலை, இலக்கிய, சினிமா, இசை ரசனை என்று ஏராளமான விஷயங்களை அவரிடமிருந்து கற்றிருக்கிறேன். எல்லாவற்றையும் விட வாழ்க்கை சார்ந்த தார்மீக நெறிகளை அவரிடம் பெற்றிருக்கிறேன். அவரது இழப்பை ஒவ்வொரு நாளும் உணர்ந்தாலும் ஒரு விதத்தில் அவர் என்னுடன் இருப்பது போலவே உணர்கிறேன். க்ரியா வெளியிட்ட ஒவ்வொரு புத்தகமும் கண்ணில் படும்போதெல்லாம் அவரை நான் பார்க்கிறேன்.

இதையெல்லாம் தாண்டி காலத்துடன் உறவாடிய ஒரு தீர்க்கதரிசனப் பதிப்பாளராகவே அவரை நான் உணர்கிறேன். சமூக ஊடகங்கள் பெரிய அளவில் உருவாகும் முன்பே அவர் வெளியிட்ட பியர் பூர்தியுவின் ‘தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்’, ரே பிராட்பரியின் ‘ஃபாரன்ஹீட் 451’ போன்ற படைப்புகள் முக்கியமானவை. புத்தகங்கள் தடைசெய்யப்படும் காலத்தில் ஆசிரியர்கள் கொல்லப்படும், தாக்கப்படும் காலத்தில் பிராட்பரியின் புத்தகம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னோடியான சுற்றுச்சூழல் புத்தகங்களை வெளியிட்டவர் ராமகிருஷ்ணன். நீர்வளம் குறைந்துகொண்டே வரும் காலகட்டத்தில் ‘தோண்டுகிணறுகளும் அவற்றின் அமைப்புகளும்’ புத்தகத்தை 80களின் தொடக்கத்தில் சி.மணியின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டார். 1986ல் வெளியான ‘இந்தியாவின் சுற்றுச்சூழல்’ ஒரு முன்னோடிப் புத்தகம். அதுமட்டுமல்ல அணுசக்தி பிரச்சினையைப் பேசும் ஜோஷ் வண்டேலூவின் ‘அபாயம்’ குறுநாவல்கள் தொகுப்பு பிரமாதமானது. துரதிர்ஷவசமாக இவையெல்லாம் தூய இலக்கியச் சூழலில் பேசப்படவில்லை.
பாசிசம், நாசிசம் இரண்டும் மறுஎழுச்சி பெறும் காலகட்டத்தில் யூழேன் இயனெஸ்கோவின் ‘காண்டாமிருகம்’, ஸீக்ஃப்ரீட் லென்ஸின் ‘நிரபராதிகளின் காலம்’, காஃப்காவின் ‘விசாரணை’ போன்ற படைப்புகளை வெளியிட அவர் தேர்ந்தெடுத்ததில் வெளிப்படும் தீர்க்கதரிசனம் வியக்க வைக்கிறது.
மரண தண்டனை, போர், வன்முறை, அதீதம் என்ற போன்ற நம் காலத்தின் முக்கியமான பிரச்சினைகளுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட 2500 ஆண்டுகளுக்கும் முந்திய ‘தாவோ தே ஜிங்’ படைப்பை சி.மணியின் மொழிபெயர்ப்பில் அவர் வெளியிட்டார். அதுவே அவர் வெளியிட்ட புத்தகங்களுள் அவருக்கு மிகவும் பிடித்தமானது, எனக்கும் கூட. மேலும் ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’, விக்தோர் ஹ்யூகோவின் ‘மரண தண்டனைக் கைதியின் இறுதிநாள்’ போன்ற படைப்புகளும் மரண தண்டனைக்கு எதிரானவை.
இவை தவிர சாதியத்தின் கொடுமை பற்றிப் பேசும் இமையத்தின் படைப்புகளும் பூமணியின் படைப்புகளும் முக்கியமானவை.
என் 5 நூல்கள் க்ரியாவில் வெளியாகியிருக்கின்றன என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
காலத்துடன் உறவாடிய, காலத்துக்கு முன்பே சிந்தித்த பதிப்பாளர் க்ரியா ராமகிருஷ்ணனின் 80வது பிறந்த நாளில் அவரை வணங்குகிறேன்!

Saturday, June 15, 2024

மாயக்குடமுருட்டிக்கு ஒரு வயது!

முதலில் வெளியான போஸ்டர்

எனது ‘காவிரியம்’ நெடுங்காவியத்தின் முதல் நூலான ‘மாயக்குடமுருட்டி’யை எழுதத் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. நாவலாக எழுத நினைத்து, குறுங்காவியமாக எழுதி ‘அருஞ்சொல்’ மின்னிதழில் வெளியிட்டேன். எழுதி முடித்ததும் அது காவியமாக வளரும் என்று நெருக்கமான நண்பர்கள் கூறினார்கள். அப்படியே விரித்தெடுத்து காவியமாக 13 அத்தியாயங்கள் அருஞ்சொல்லில் 13 வாரங்கள் வெளியானது. ‘மாயக்குடமுருட்டி’ எழுதி முடித்த தருணத்தில் இது காவியமாகவும் நிறைவடையாது என்றும் தோன்றியது. ஆகவே, அதனை ‘காவிரியம்’ என்ற பொதுத் தலைப்பில் விரித்தெடுத்து முதல் நூலுக்கு ‘மாயக்குடமுருட்டி’ என்ற தலைப்பைத் தக்கவைத்துக்கொண்டேன். 

எழுதி வெளியிடும் முன்னே தமிழின் தலைசிறந்த காவியங்களுள் ஒன்றாக இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டேன். மாயக்குடமுருட்டி நிறைவடையும்போது அதனை மூத்த எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள், வாசகர்கள் பலரும் உறுதிப்படுத்தினார்கள். மாயக்குடமுருட்டியின் முதல் அத்தியாயம் வெளியான அன்று மட்டும் கிட்டத்தட்ட 2,000 பேர் அருஞ்சொல் மின்னிதழில் அதனைப் படித்திருக்கிறார்கள். கவிதையை அதுவும் நெடுங்கவிதையைப் பொறுத்தவரை அது பெரும் சாதனை. என் நெடுங்காவியத்துக்கு ஆதரவளித்த எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள், பேராசிரியர் தங்க. ஜெயராமன், தினமணி சிவக்குமார், பெரு. விஷ்ணுகுமார், அருஞ்சொல் மின்னிதழின் சமஸ், தம்பி சிவசங்கர், ஓவியர்கள் ஜோ.விஜயகுமார், இரா. தியானேஷ்வரன் உள்ளிட்டோருக்கு மிக்க நன்றி. தொடரின் விளம்பர போஸ்டருக்காகத் தங்கள் கருத்துகளைக் கொடுத்துதவிய கவிஞர் அபி, தியடோர் பாஸ்கரன், பேரா.டேவிட் ஷுல்மன் ஆகியோருக்கு நன்றி! பலரின் கருத்துகளையும் அறிந்துகொள்ள இந்தக் காவியத்தைக் கொடுத்திருந்தேன். பெருந்தேவி, ஆனந்த், கண்டராதித்தன், தூயன், பொன்முகலி, வே.நி.சூர்யா, முத்துராசா குமார் உள்ளிட்டோர் முழுவதும் படித்துவிட்டுப் பிரதியை மேம்படுத்தும் விதத்தில் தங்கள் கருத்துகளைக் கூறியிருந்தார்கள். பிரதியின் மீதான என் நம்பிக்கையையும் இவர்கள் உறுதிப்படுத்தினார்கள். அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

எழுதத் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறும் இந்நாளில் எடிட்டிங்குக்காக ‘மாயக்குடமுருட்டி’யை மறுபடியும் தொடுகிறேன். இந்த இடைவெளியில் என் கவிதைகள் வேறு வேறு திசையில் சென்று பெரும் ஆட்டம் ஆடிவிட்டன. இந்த இடைவெளி ஒரு பிரதிக்குத் தேவையும் கூட. கூடிய விரைவில் ‘மாயக்குடமுருட்டி’யை புத்தகமாக உங்கள் கண்முன் கொண்டுவருகிறேன். 2,500 ஆண்டுகால தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு ஆற்றை இந்த அளவுக்குக் கொண்டாடும் இன்னொரு கவிதைப் படைப்பு இல்லை என்பதை மீண்டும் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். அதைத்தான் நண்பர்கள், வாசகர்கள் பலரும் என்னிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

‘காவிரியம்’ நெடுங்காவியத்தின் முதல் பகுதியான ‘மாயக்குடமுருட்டி’யின் அனைத்து அத்தியாயங்களும் ஓரிடத்தில், ‘அருஞ்சொல்’ மின்னிதழில்:

https://www.arunchol.com/asai-poem-maya-kudamurutti-all-links

Sunday, May 5, 2024

21-ம் நூற்றாண்டுக்கு மார்க்ஸ் என்ன சொல்கிறார்? - மார்க்ஸ் பிறந்த நாள் பகிர்வு


யானிஸ் வரூஃபக்கீஸ்

(தமிழில்: ஆசை)

ஒரு அரசியல் அறிக்கை வெற்றிபெற வேண்டுமென்றால் அது ஒரு கவிதையைப் போல நம் இதயத்துடன் பேச வேண்டும். அதே நேரத்தில் நம் மனதில் அசாதாரணமான புதிய படிமங்களையும் கருத்துக்களையும் விதைக்க வேண்டும். நம்மைச் சுற்றி நிகழும் குழப்பம் நிறைந்த, வருத்தமளிக்கக்கூடிய, பரவசமான மாற்றங்களின் உண்மைக் காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளும் வகையில் நம் கண்களை அது திறக்க வேண்டும்.

கூடவே, நம் தற்போதைய சூழல் தன்னுள் கருக்கொண்டிருக்கும் சாத்தியங்களையும் அது வெளிக்காட்ட வேண்டும். இந்த உண்மைகளை நாமே அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போய்விட்டதே என்று நம் இயலாமையை நினைத்து நம்மை வருத்தப்பட வைக்க வேண்டும்.

Friday, April 26, 2024

ராஜா... ரஹ்மான்: க்ளிஷே சமூகமாக ஆகிவிட்டோமா?



நான் இளையராஜா ரசிகனாக (வெறியனாக) மட்டும் இருந்தபோது உலகிலேயே சிறந்த இசையமைப்பாளர் அவர் மட்டுமே என்ற அசைக்க முடியாத எண்ணத்தில் இருந்தேன். (வேறு யாரையும் கேட்டதில்லை). அந்த எண்ணத்தில் எனக்குள் முதல் முறையாக மாற்றம் ஏற்பட்டது என் 19 வயதில்.
அப்போது மன்னார்குடி கல்லூரியில் இரண்டு நாள் ரோட்டரி நிகழ்வு ஒன்று நடைபெற்றது. வீடு மன்னார்குடி என்றாலும் அங்கேயேதான் இரண்டு நாள் இருக்க வேண்டும். அந்த நிகழ்வில் விக்டர் என்ற மூத்த ரொட்டேரியன் தன் வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

Monday, April 22, 2024

புத்தக வாரத்தில் ஒரு சிறப்பு அறிவிப்பு!

புத்தக வாரத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு அறிவிப்பு. என் கவிதை நூல்களும் குட்டிக் கவிஞன் மகிழ் ஆதனின் கவிதை நூல்களும் 50% சிறப்பு விலையில் கிடைக்கும். இச்சலுகை இன்று தொடங்கி ஏப்ரல் 30 வரை. அனைவரும் வழக்கம்போல் பேராதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். விவரங்கள் இப்பதிவில் உள்ள படத்தில்.

Tuesday, April 16, 2024

மகிழ் ஆதன் 12வது பிறந்த நாள்!


மகனும் கவிஞனுமாகிய மகிழ் ஆதனுக்கு இன்று 12வது பிறந்த நாள். மகிழ் ஆதனின் கவிதைகள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அதற்கு முன் சில குறிப்புகள்.

பெற்றோர்களாகிய எங்களின் விருப்பமும் திணிப்பும் இன்றி அவனாகவே 4 வயதில் கவிதை சொல்ல ஆரம்பித்தான். நான் கவிஞனாக இருப்பதுதான் அவன் கவிதை எழுதுவதற்குக் காரணம் என்று கூறினால் அது அவனது இயல்பான மேதமையைச் சிறுமைப்படுத்துவதாகும் என்றே கருதுகிறேன். 

மகிழ் ஆதனின் முதல் கவிதைத் தொகுப்பான ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ வானம் (நூல்வனம்) வெளியீடாக 2021ல் வெளியானது.

Friday, March 29, 2024

திருவயிற்றின் கனி - புனித வெள்ளி சிறப்புக் கவிதைகள்



1. புனித வெள்ளியின் உதிரத் துளி

இவ்வெள்ளியின்
தரையில்
ஆழ ஊன்றியிருக்கிறது
ஒரு புனித மனம்

அசைவாடா கிளைபோல
தொய்ந்திருக்கும் தலை

களைப்பு நிரம்ப
இனி
இடமில்லா உடல்

கீழிறங்கும்
ஒவ்வொரு சொட்டும்
தரையின் ஆழத்துக்குள்
மேலும் மேலும்
ஒரு அடி என
இறுதிச் சொட்டு
பூமியின் மையத்தை

Wednesday, March 27, 2024

ஒரு ஓட்டு சுந்தரேசன் - சிறுகதை


ஆசை

'நான் இந்த எலக்ஷன்ல நிக்கப்போறன் மாப்புள்ள' என்று குண்டைத் தூக்கிப்போட்டார் சுந்தரேசன் மாமா.

'நெசமாத்தான் சொல்றீங்களா மாமா, இல்ல ஒங்களுக்குக் கிறுக்கு எதுவும் புடிச்சிப்போச்சா?'

'நெசமாத்தான் சொல்றன் மாப்புள்ள. இந்தத் தேர்தல்ல நான் நிக்கப்போறன், சுயேச்சை வேட்பாளரா' என்றார் மாமா.

'அத்தைக்குத் தெரிஞ்சிச்சுன்னா ஒங்கள வுட்டுட்டுத் தேடாதே மாமா. அத வுடுங்க அய்யாவுக்குத் தெரிஞ்சிச்சின்னா என்னல்ல ஒதைக்கப் போறாரு'

'மாப்புள்ள, நான் ஒரு சுதந்திர ஜீவி ஒன் அத்தயால எல்லாம் என்ன ஒன்னும் பண்ண முடியாது. என்ன சொன்ன ஒன் அய்யாவா' என்று சொல்லிவிட்டு 'ஹா ஹா'என்று சிரித்துவிட்டுப் பின் தொடர்ந்தார்

Monday, March 25, 2024

வெற்றோட்டம் - கவிதை

அந்த நாய்க்கு
நான்காம் கால்
தொடையோடு
துண்டிக்கப்பட்டிருந்தது
துண்டிப்பைப்
பொறுத்தவரை
அது முதலாம் காலாகவும்
இருக்கலாம்
துண்டித்த கால்
உட்பக்கமாய்
ஊன்றியிருந்தது
அது துடிதுடித்து
வெற்றிடமாய்
வெளிப்பக்கமாய் ஓடிக்கொண்டிருந்தது 
-ஆசை

Saturday, March 23, 2024

ஊரூரில் ஓர் சமத்துவக் கொண்டாட்டம்! - மேல்தட்டினரின் திணிப்பா?


கர்னாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து சில நாட்களாக சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. கர்னாடக சங்கீத உலகின் வலதுசாரிகள் பெரும்பாலானோர் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பதற்கு, கிருஷ்ணா பெரியாரைப் பற்றிப் பாடியது உட்பட பல குற்றச்சாட்டுகளைக் கூறி, எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இன்னொரு தரப்பும் டி.எம். கிருஷ்ணாவுக்கு அவர் ஒரு போலி முற்போக்கு என்று கூறி எதிர்ப்பு தெரிவிக்கிறது. உண்மையில் டி.எம். கிருஷ்ணா முன்னெடுத்த ‘ஊரூர் ஆல்காட் குப்பம் திருவிழா’வில் என்ன நடக்கிறது? சில ஆண்டுகளுக்கு முன் அந்த நிகழ்வைப் பார்த்த அனுபவத்தை எழுதினேன். அதன் மீள்பகிர்வு இங்கே: 

ஊரூர் ஆல்காட் குப்பத்துக்கும் ஆழ்வார்பேட்டைக்கும் இடையில் எவ்வளவு தூரம் இருக்கும்? 7 கி.மீ. என்கிறது ‘கூகுள்’. ஆனால், இந்த இரண்டு பகுதிகளின் வாழ்க்கை முறைக்கும் கலாச்சாரத்துக்கும் இடையேயுள்ள இடைவெளி இதைவிட பல மடங்கு அதிகம்.

Friday, March 22, 2024

காஃப்காவின் முன் இரு சிறுமிகள் - காஃப்கா நினைவு நூற்றாண்டு சிறப்புச் சிறுகதை


ஆசை

1. சர்வீஸ் சாலை

அந்த நெடுஞ்சாலை மிகவும் பெரியது என்றாலும் அதன் ஓரம் நடப்பதற்கு நிறைய இடம் இருக்கிறது என்றாலும் அந்த சாலையில் செல்லும் மிக நீண்டதும் ஏராளமான சக்கரங்களைக் கொண்டதுமான லாரிகளையும் கண்டெய்னர்களையும் பார்க்க எனக்கு அச்சமாக இருந்ததால் அந்த நெடுஞ்சாலையின் இடது பக்கம் இருந்த சர்வீஸ் சாலை என்று சொல்விவிட முடியாத ஆனால் இணையாகச் செல்லும் மண்ணும் தார்ச் சாலையும் கலந்த அந்த சாலையில் குறுக்காக இறங்கி நடக்க ஆரம்பித்தேன். எங்கும் புழுதி மயம். நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்வதால் அங்கே ஓரத்தில் இருந்த புழுதி கிளம்புகிறது என்றால் இந்த சர்வீஸ் சாலையில் ஏன் இந்த அளவுக்குப் புழுதி என்று எனக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் காற்றே இல்லாத புழுக்கமான பகல் பொழுது இது. இந்தப் புழுதிக் காட்டில் சர்வீஸ் சாலையின் ஓரத்தில் வழக்கமாக நெடுஞ்சாலைகளில் இருப்பது போன்று டீக்கடை, பிஸ்கெட் சிகரெட் விற்கும் தண்ணீர் போன்றவை விற்கும் கடைகளும் இருந்தன.

Thursday, March 21, 2024

மகிழ் ஆதன் கவிதைகள்: உலகக் கவிதைகள் தினத்தை முன்னிட்டுச் சிறப்புப் பகிர்வு



உலகக் கவிதை தினத்தை முன்னிட்டு என் மகன் மகிழ் ஆதனின் கவிதைகள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெற்றோர்களாகிய எங்களின் விருப்பமும் திணிப்பும் இன்றி அவனாகவே 4 வயதில் கவிதை சொல்ல ஆரம்பித்தான். அவனது முதல் கவிதைத் தொகுப்பான ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ வானம் (நூல்வனம்) வெளியீடாக 2021ல் வெளியானது. அதுவரையிலான கவிதைகள் அவன் சொல்லச் சொல்ல நாங்கள் எழுதிக்கொண்டவை, அல்லது கைபேசியில் பதிவுசெய்துகொண்டவை. அதற்குப் பிறகு எழுத்துப் பிழைகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவனாகவே எழுதும்படி ஊக்குவித்தோம். 

“காலம்னா என்னப்பா?” என்று ஒரு நாள் மகிழ் கேள்வி கேட்டான். அதற்கு என்னால் சரியான விளக்கம் தர முடியாததை அடுத்து “நீ உன் கவிதை மூலமா பதில் கண்டுபிடிக்க முயற்சி செய்யலாமே” என்று கூறியதை எடுத்து மகிழ் காலத்தைப் பற்றி தொடர்ச்சியாகக் கவிதைகள் எழுத ஆரம்பித்தான். காலத்தைப் பற்றிய அவனது 51 கவிதைகளின் தொகுப்பு ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’ என்ற தலைப்பில் எதிர் வெளியீடாக 2022-ல் வெளியானது. புத்தக ஆக்கம் பெற்றவை, ஆக்கம் பெறாதவை என்று இதுவரை 500-க்கும் மேற்பட்ட கவிதைகளை மகிழ் ஆதன் எழுதியிருக்கிறான். இவற்றுள் ‘இறந்த டைனோசார்’ என்ற, ஓராண்டுக்கும் மேல் அவன் எழுதிய நெடுங்கவிதையும் உள்ளடக்கம். மகிழ் ஆதனுக்குத் தற்போது வயது 11. ஏழாம் வகுப்பு படித்துவருகிறான். மகிழ் ஆதன் உலகத்தைப் பற்றி அறிந்துகொள்ள இந்தப் பதிவின் கீழ் நான் கொடுத்திருக்கும் கட்டுரைகள், அறிமுகங்கள் போன்றவற்றின் இணைப்புகளுக்குச் சென்று படித்துப் பார்க்கலாம்.

Sunday, March 17, 2024

அபிராமிக்காக என் ‘அண்டங்காளி’ கவிதைகள்...



எனது ‘அண்டங்காளி’ (2021, டிஸ்கவரி வெளியீடு) கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் இங்கே. குணா திரைப்படத்தின் அபிராமி நினைவாக...

1.
அம்பாளுக்கு வயது
எப்போதுமே
பதினாறுதான்
அவளைக் காதலால்தான்
கும்பிட முடியும் 

2.
காளியவள் களிநடனம்
காட்டி விட்டாள்

ஆழிதனை ஊஞ்சலென
ஆட்டி விட்டாள்

ஊழிமனக் காட்சிதனை
நாட்டி விட்டாள்

பாழிருளைப் படம்பிடித்து
மாட்டி விட்டாள்

Saturday, March 16, 2024

நம்மாழ்வார் எல்லோருக்கும் உரியவர்: மொழிபெயர்ப்பாளர் அர்ச்சனா வெங்கடேசன் பேட்டி


ஆசை

(இன்று அர்ச்சனா வெங்கடேசன் பிறந்தநாள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் எடுத்த பேட்டியின் மறுபகிர்வு) 

ஆண்டாளையும் நம்மாழ்வாரையும் அழகான ஆங்கிலத்துக்குக் கொண்டுசென்றிருப்பவர் அர்ச்சனா வெங்கடேசன். ஏ.கே.ராமானுஜனின் தொடர்ச்சி. நம்மாழ்வாரின் ‘திருவாய்மொழி’ அர்ச்சனாவின் மொழிபெயர்ப்பில் ‘எண்ட்லெஸ் சாங்’ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த மொழிபெயர்ப்புக்காக ‘லூஸியன் ஸ்ட்ரைக் ஏசியன் ட்ரான்ஸ்லேஷன் பிரைஸ்’ என்ற விருது அர்ச்சனாவுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (டேவிஸ்) மதங்கள் சார்ந்த ஆய்வுகளுக்கும் ஒப்பிலக்கியத்துக்குமான இணைப் பேராசிரியராக இருக்கும் அர்ச்சனாவுடன் உரையாடியதிலிருந்து…

தமிழ் இலக்கியத்தின் பக்கம் எப்படி வந்தீர்கள்?

சென்னை பெசன்ட் நகரில் பிறந்து வளர்ந்தவள் நான். 12-ம் வகுப்பு வரை ஆங்கில வழி என்பதால், சென்னையில் இருக்கும் வரை தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது. பேசுவேன் அவ்வளவுதான். ஆனால், சிறு வயதில் ஆங்கில இலக்கியத்தின் மீது விருப்பம் அதிகம். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (பெர்க்லி) ஆங்கில இலக்கியம் படிக்கும்போது, என் அறைத்தோழி ஜார்ஜ் எல்.ஹார்ட்டின் வகுப்புக்கு என்னைக் கூப்பிட்டுச் சென்றார்.

Thursday, March 14, 2024

ஸ்டீவன் ஹாக்கிங் ஏன் நமக்கு முக்கியமானவர்?


ஆசை

(இன்று ஸ்டீவன் ஹாக்கிங் நினைவு நாள். 2018ல் அவர் மறைந்தபோது எழுதிய கட்டுரை இது)

 'மரணத்தின் குகைவாயில் கண்ணுக்குத் தெரியும்போது, எழுத்தில் ஒளி ஊடுருவுகிறது' என்று சுந்தர ராமசாமி ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலின் தொடக்கத்தில் எழுதியிருப்பார். அது ஸ்டீவனுக்கும் பொருந்தும்! ஆனால், அருகில் தெரிந்த குகைவாயிலைத் தனது அசாத்தியக் கற்பனையின் எரிபொருள் தந்த உத்வேகத்தின் மூலம் நெடியதாக்கி, இரண்டு ஆண்டுகளை 55 ஆண்டுகளாக ஆக்கி, இறுதியில் காலத்தின் குகைவாயில் என்ற கருந்துளைக்குள் போய் மறைந்தார்.

மரணத்தை வாழ்க்கை வென்ற தன் கதையைப் பற்றி ஸ்டீவன் கூறும்போது, “அகால மரணம் என்ற சாத்தியத்தை எதிர்கொண்டிருக்கும்போதுதான் இந்த வாழ்க்கையானது வாழத் தகுந்தது என்றும், நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளமாக இருக்கின்றன என்றும் உங்களுக்குப் புரிபடும்” என்றார். 

ஹாக்கிங்கால் எழுதவோ பேசவோகூட முடியாது. இருந்த ஒரே சாதனம் அவரது மூளைதான். மூளையின் அவரது ஆய்வகம். கற்பனைதான் அவரது கருவி.

ஐன்ஸ்டைனை ஜொலிக்க வைத்த கிரகணம்


 ஆசை

(இன்று ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனின் 145வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு மறுபகிர்வு.)

சூரிய கிரகணங்களைப் பற்றி ஒவ்வொரு கலாச்சாரத்திலும் வெவ்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. சூரிய கிரகணங்கள் அழிவைக் கொண்டுவரும் என்றெல்லாம் நம்பிக்கைகள் நிலவுகின்றன. இவற்றில் எந்த வித உண்மையும் இல்லை. இந்த நம்பிக்கைகளுக்கெல்லாம் மாறாக 1919-ல் ஒரு சூரிய கிரகணம் ஏற்பட்டது.  அழிவையல்ல, மனித குலத்துக்கு ஒரு மகத்தான ஒரு விஞ்ஞானியைத்தான் அந்த கிரகணம் பரிசாகத் தந்தது. அவர் வேறு யாருமல்ல, ஐன்ஸ்டைன்தான்.

 சிறப்புச் சார்பியல் கோட்பாடு

1905-ம் ஆண்டு ஐன்ஸ்டைன் உருவாக்கிய முக்கியமான கோட்பாடு ‘சிறப்புச் சார்பியல் கோட்பாடு’.

Wednesday, March 13, 2024

மர்ரே ராஜமும் பொக்கிஷப் பதிப்புகளும்!


ஆசை

(மர்ரே-ராஜம் நினைவு நாளை முன்னிட்டு மீள்பகிர்வு)

மர்ரே-ராஜம் என்றழைக்கப்பட்ட ராஜம் (பிறப்பு: 22-11-1904, இறப்பு: 13-03-1986) தன்னலம் கருதாமல் தமிழுக்காக உழைத்தவர்களுள் ஒருவர்! கூடவே, தமிழர்களின் மறதியால் விழுங்கப்பட்ட மாமனிதர்களுள் ஒருவர். பழந்தமிழ் இலக்கியங்களை சந்தி பிரித்து, மலிவு விலையில் அவர் பதிப்பித்த நூல்கள் தமிழின் சமீப வரலாற்றின் சாதனைகளுள் ஒன்று. 1986-ல் ராஜம் மறைவுக்குப் பிறகு அவர் உருவாக்கிய பதிப்பு வளங்கள் கிட்டத்தட்ட முடங்கிப் போன நிலை! இந்த நிலையில் பழந்தமிழ் இலக்கியத்தை வெளியிடுவதற்காக 60-களில் ராஜம் ஏற்படுத்திய சாந்தி சாதனா அறக்கட்டளைக்கு அவரது நண்பரின் மகனும் ராஜத்தின் பங்குதாரருமான ஸ்ரீவத்ஸா 2001-ல் புத்துயிர் கொடுக்கிறார். அதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே பணிகள் முடிக்கப்பட்டுக் கைப்பிரதியாக இருந்த நூல்களெல்லாம் ஒன்றொன்றாக வெளிவரத் தொடங்கின. ‘தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி’, ‘வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி’போன்ற அகராதிகளும் ‘பெருங்காதை’, ‘வார்த்தாமாலை’, ‘ஸ்ரீதேசிகப் பிரபந்தம்’ போன்ற நூல்களும் வெளியாகின.

சாந்தி சாதனாவின் தற்போதைய அறங்காவலர்களுள் ஒருவரான சகுந்தலாவைச் சந்தித்தபோது ராஜத்தின் நினைவுகளில் மூழ்கினார்.

பச்சையின் ஆயிரம் வண்ணங்கள் - புதிய சிறுகதை


ஆசை

1. உலகம் கறுப்பு வெள்ளையாய் இருந்தபோது…

“கால்வின், கால்வின்! இன்னைக்கு உன் அப்பாகிட்ட என்ன கேட்டே?”

“‘பழைய படம் எல்லாம் ஏன் கறுப்பு வெள்ளையில இருக்கு? அப்போல்லாம் கலர் ஃபிலிம்கள் கிடையாதா அப்பா?’ன்னு கேட்டேன்”

“அவர் என்ன சொன்னார்?”

“‘இருந்துச்சி. உண்மையில அந்த பழைய படங்கள்லாம் கலர் படங்கள்தான். ஆனா, உலகம் அப்போ கறுப்பு வெள்ளை கலர்ல மட்டும்தான் இருந்துச்சு’ அப்படின்னார்.”

“அப்படியா சொன்னார்?”

“ஆமாம்! ‘1930கள் வரைக்கும் உலகம் கலரா ஆகலை. அதுக்கு அப்பறம்தான் கலரா மாறுனுச்சு. ஆனாலும் கொஞ்சம் மங்கலான கலர்தான்’ அப்படின்னார்.”

“விநோதமா இருக்கே?”

“நானும் இதேதான் அப்பாகிட்ட கேட்டேன். ‘உண்மைங்கிறது கதைகள்ல வர்றத விட விநோதமா இருக்கும்’னு அவர் சொன்னார்.”

“நீ அத்தோட விட மாட்டியே?”

“ஆமாம் காவிரி. ‘அப்புறம் பழைய கால ஓவியர்கள் வரைஞ்ச ஓவியங்கள் மட்டும் ஏன் கலர்ல இருக்கு?

Tuesday, March 12, 2024

உப்பு சத்தியாகிரகம்: காந்தியின் வரலாற்று நடைப்பயணம்


ஆசை
“தாக்குங்கள் என்று திடீரென்று உத்தரவு வரவே, ஏராளமான போலீஸ்காரர்கள் முன்னே செல்கிறார்கள். உப்பு ஆலையை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் சத்தியாகிரகிகளின் தலை மீது லத்தியால் தாக்குகிறார்கள். சத்தியாகிரகிகளில் ஒருவர்கூட அடியைத் தடுப்பதற்குக் கையை உயர்த்தவில்லை. மண்டை உடைந்து ரத்தம் தெறிக்க அப்படியே சரிகிறார்கள். அடுத்து வரும் வரிசைக்கும் தெரியும் தாங்கள் தாக்கப்படுவோமென்று. அவர்களும் முன்னே செல்ல, தாக்கப்பட்டு வீழ்கிறார்கள். உதவிக்கென்று நின்றிருக்கும் சத்தியாகிரகிகள் கீழே வீழ்ந்தவர்களைத் தூக்கிச் செல்கிறார்கள். எந்தக் கைகலப்பும் இல்லை, போராட்டமும் இல்லை” என்று எழுதுகிறார் அமெரிக்கப் பத்திரிகையாளர் வெப் மில்லர்.

அது 1930-ம் ஆண்டு. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக உள்ளுக்குள் பொருமிக்கொண்டே இருந்தார்கள். பூரண சுதந்திரம் என்ற பேச்சு பல ஆண்டுகளாக இருந்தபோதிலும் இன்னும் அது கிடைத்தபாடில்லை.

Monday, March 11, 2024

வார்ஸன் ஷைர்: வீடென்பது சுறாமீனின் வாயானால்...



ஆசை
(அறிமுகமும் கவிதைகளின் மொழிபெயர்ப்பும்)

சம காலத்தின் முக்கியமான இளம் பெண்கவிஞர்களுள் ஒருவர் வார்ஸன் ஷைர் (Warsan Shire). சோமாலியப் பெற்றோருக்கு கென்யாவில் 1988-ல் பிறந்தவர் வார்ஸன் ஷைர். சிறு வயதிலேயே இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்த வார்ஸன் ஷைர் லண்டன்வாசியானார். பிரிட்டனைத் தாயகமாக்கிக்கொண்டாலும் அங்கே ஒரு அந்நியராகவே வார்ஸன் ஷைர் தன்னை உணர்கிறார்.

தனது பூர்வீக நாடான சோமாலியாவுக்கு வார்ஸன் ஷைர் போனதே இல்லை என்றாலும் தனது எழுத்துகளின் வாயிலாக ஆப்பிரிக்கக் கலாச்சாரம், ஆப்பிரிக்கர்களின் வலி, அகதி வாழ்க்கையின் துயரம், குறிப்பாக அகதிப் பெண்களின் துயரம் போன்றவற்றை வார்ஸன் ஷைர் தொடர்ந்து பதிவுசெய்கிறார்.

Saturday, March 9, 2024

புரட்சி அக்காவின் கதை - சிறுகதை

 


ஆசை  

(இது முழுக்க முழுக்க கற்பனைக் கதை. அதே போல் மேலே உள்ள படமும் சித்தரிப்பு நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கதைக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இந்தக் கதை தற்செயலாக எதையாவது யாரையாவது நினைவுபடுத்தினால் மன்னிப்பு கோருகிறேன்)

    நேத்து நடந்த நேர்காணலப் பத்தியா கேக்கற, அது பெரிய கூத்து மாமா. நான் சின்னப்புள்ளயா இருக்கறப்பலருந்தே வாத்தியாரோட ரசிகன். எனக்குப் பத்து வயசா இருந்தப்ப கணக்குக் கேட்டாருன்னு அவரக் கட்சிய உட்டுத் தூக்குனாங்க. வெவரம் புரியாத அந்த வயசிலேயே எங்கப்பாவோட சேர்ந்துகிட்டு 'குள்ளநரி குருசாமியே கணக்குக் காட்டு கணக்குக் காட்டு'ன்னு கோஷம் போட்டுட்டுப் போனேன். கட்சி உறுப்பினரா முப்பது வருஷத்துக்கு மேல இருக்கன் மாமா, நானும் எவ்வளவோ தலையாலத் தண்ணி குடுச்சுப் பாத்துட்டன், கட்சில நல்ல நல்ல பதவியல்லாம் நம்ம கைல மாட்டாம போயிட்டே இருக்கு.

Friday, March 8, 2024

மகளிர் தினத்தில் காந்தியையும் ஏன் நினைவுகூர வேண்டும்?


ஆசை

பகுதி-1

இன்று 'உலக மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது. வரலாறு படைத்த பெண்கள், வரலாற்றால் மறைக்கப்பட்ட பெண்கள் போன்றோரை இன்று நினைவுகூர்வது வழக்கம். பெண்ணுரிமை வரலாற்றில் பெண்களின் பங்கை முதன்மையாகச் சொல்ல வேண்டியது முக்கியம். அதே நேரத்தில் பெண் முன்னேற்றத்துக்காக ஒரு வகையிலோ பல வகைகளிலோ போராடிய ஆண்களையும் நினைவுகூர்வது அவசியம். இந்திய வரலாற்றில் புத்தரில் தொடங்கி பிற்காலத்தில் ராஜாராம் மோகன்ராய், ஜோதிராவ் பூலே, காந்தி, அம்பேத்கர், பெரியார் முதலான பல ஆண் தலைவர்கள் பெண்களின் முன்னேற்றத்துக்குப் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். பெண்கள் முன்னேற்றத்துக்கு காந்தி ஆற்றிய பணிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

தன் தாயார் புத்தலிபாய், மனைவி கஸ்தூர்பாயில் தொடங்கி கடைசியில் காந்தி சுட்டுக்கொல்லப்படும்போது அவருடைய ஊன்றுகோல் போல் கூட நடந்துவந்த மனு, ஆபா போன்றோர் வரை காந்தி வாழ்வில் இடம்பெற்ற பெண்கள் ஏராளமானோர். காந்தியைப் போல் பெண்களை ஈர்த்த தலைவர்கள் இந்திய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் வெகு குறைவு. எனினும், இளமைப் பருவத்தில் காந்தி வழக்கமான இந்திய ஆண் போலவே பெண் குறித்த பார்வையைக் கொண்டிருந்தார். 13 வயதிலேயே காந்திக்குத் திருமணம் செய்யப்படுகிறது. தன் மனைவி கஸ்தூர்பாவை ஒரு போகப் பொருளாகவே காந்தி ஆரம்பத்தில் கருதி வந்திருக்கிறார். காமமும் சந்தேக உணர்ச்சியும் அவரை ஆரம்பத்தில் வாட்டிவதைத்தன.

தமிழ்ச் சமூகம் என்ற simulacrum - சாரு நிவேதிதா


(என்னுடைய ‘
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ கதை குறித்து சாரு நிவேதிதா தன் தளத்தில் எழுதிய அறிமுகம் இது. அவருக்கு என் மனமார்ந்த நன்றி - ஆசை)


Simulacrum என்ற கோட்பாடு ஃப்ரெஞ்ச் பின்நவீனத்துவத் தத்துவவாதியான Jean Baudrillard (உச்சரிப்பு: ஜான் பொத்ரியா) மூலமாகப் பிரபலம் ஆயிற்று.

சிருஷ்டிகரத்துவத்தைப் போலவே எனக்குத் தத்துவமும் முக்கியம். நீட்ஷே, ஜார்ஜ் பத்தாய், ரொலாந் பார்த், மிஷல் ஃபூக்கோ என்ற தத்துவவாதிகள் இல்லையேல் என் எழுத்து இல்லை. நானும் சுந்தர ராமசாமியின் எழுத்தில் மயங்கிக் கிடந்திருப்பேன். தத்துவம் என்பது எனக்கு உடலும் உயிரும் போல. சிருஷ்டி பாதி, தத்துவம் பாதி. இந்தப் பிரபஞ்சத்தையும் இதில் வாழும் உயிர்களின் ஓட்டத்தையும் புரிந்து கொள்ள தத்துவம் எனக்குக் கிடைத்த ஒரு ஆதாரமான கருவி. தத்துவம் இல்லையேல் நான் ஒரு வெட்டி எழுத்தாளனாக ஆகியிருப்பேன்.

ஆனால் தத்துவத்தின் துணையின்றியே சிருஷ்டிகரத்துவத்தின் உச்சம் தொட்ட போர்ஹேஸ் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் நான் மறக்க மாட்டேன்.

Thursday, March 7, 2024

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - புதிய சிறுகதை

நன்றி: wiki commons, வடிவமைப்பு: கே.சதீஷ்

ந்தக் கதையில் வரும் மனிதரை நான் சந்தித்தது 23 ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது இந்தக் கதையை நான் எழுதியிருந்தால் அந்த அனுபவத்தின் மீதான, அந்த மனிதரின் மீதான, என் நினைவு மீதான நம்பிக்கை எனக்கு முழுதாக இருந்திருக்கும். இப்போது எனக்கு வெறும் குழப்பம் மட்டுமே மிஞ்சுவதால், தெளிவையல்ல குழப்பத்தையே என் வாசகர்களுக்கு நான் தர விரும்புவதால் இப்போது, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இதனை எழுதுவதுதான் பொருத்தமாக இருக்கும். எந்த அளவுக்கு நீங்கள் என்னை நம்பவில்லையோ அந்த அளவுக்கு எனக்கு மகிழ்ச்சி.

என்னை அறிந்த பலருக்கும் தெரியும், மன்னார்குடியிலிருந்து சென்னைக்குப் படிக்க வந்தவன் நான். இங்கே வந்த ஆண்டு 2001. அப்போது சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கிலம் முதுகலை படித்துக்கொண்டிருந்தேன். அந்தக் கல்லூரியில் ஏதும் நான் பெற்றுக்கொள்ளவில்லை என்றாலும் வகுப்பு நடக்கும்போது ஆசிரியரைக் கவனிக்காமல், தெளிவாகத் தெரியும் வங்காள விரிகுடாவை அங்கிருந்தே பார்த்துக்கொண்டிருப்பது அவ்வளவு மகிழ்ச்சியைத் தரும். கூடுதலாக, அருகிலுள்ள விக்டோரியா விடுதியிலிருந்தும் காலையோ மாலையோ கடற்கரைக்கு வந்து சிறிது உலவலாம், உட்கார்ந்து காற்றுவாங்கலாம். மாநிலக் கல்லூரி, விக்டோரியா விடுதி இரண்டும் ஆங்கிலேயர் காலத்துக் கட்டிடங்கள் என்பதால் அங்கே நடப்பதெல்லாம் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் என்றும் நான் ஷேக்ஸ்பியர் காலத்துப் பார்வையாளன் என்றும் கற்பனை செய்துகொள்வேன்.

அப்படித்தான் ஒருநாள் ஷேக்ஸ்பியர் நாடகத்திலிருந்து வெளியேறி விடுதிக்குச் சென்று ஓய்வெடுத்துவிட்டு மாலையில் கடற்கரை சென்றேன்.

Tuesday, March 5, 2024

மூர்த்தி கிளாசிக்கல் லைப்ரரியில் என்ன நடக்கிறது?

இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி பெரும் கனவுடன் ஆரம்பித்தது மூர்த்தி கிளாசிக்கல் லைப்ரரி ஆஃப் இந்தியா (MCLI). இதற்காகவே நாராயண மூர்த்தியை மன்னித்துவிடலாம் என்று தோன்றும். அந்த வெளியீட்டின் புத்தகங்களையெல்லாம் இன்றுவரை கொத்துக்கொத்தாக வாங்கிக்கொண்டிருக்கிறேன். இப்போது பெரும் குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் மூர்த்தி லைப்ரரி எதிர்கொண்டிருக்கிறது என்பதை நேற்று அர்ச்சனா வெங்கடேசனின் பதிவின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

பதவிநீக்கம் செய்யப்பட்டோரின் அறிக்கை மேலே கொடுக்கப்பட்டிருக்கிறது


முன்பு இந்த லைப்ரரியின் முதன்மை ஆசிரியராக இருந்த ஷெல்டன் போலக் பதவிக் காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். புதிய முதன்மை ஆசிரியராகப் பதவியேற்றிருக்கும் பேராசிரியர் பரிமள் பட்டீல் மற்ற மொழிபெயர்ப்பாளர்கள், ஆசிரியர்களுடன் எந்தத் தொடர்பிலும் இருப்பதில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. தற்போது எந்தக் காரணமும் மூர்த்தி கிளாசிக்கல் லைப்ரரியின் ஏனைய எடிட்டர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

2016ல் நம் சக்கவர்த்தியின் படையினர் மூர்த்தி கிளாசிக்கல் லைப்ரரிக்கு எதிராகவும் அதன் அப்போதைய தலைவர் ஷெல்டன் போலக்குக்கும் எதிராகவும் போர்தொடுத்தபோது ஷெல்டன் போலக்குக்குத் துணைநின்ற ரோஹன் மூர்த்தியின் நிலைப்பாடு இப்போது என்ன என்பது தெரியவில்லை. தற்போது மூர்த்தி லைப்ரரிக்கு முதன்மை ஆசிரியராக ஒரு இந்தியர் ஆகியிருக்கிறார். அவருக்கு என்ன நெருக்கடியோ தெரியவில்லை. இனி இந்த லைப்ரரிக்கு என்னவாகும், பாதிவரை மொழிபெயர்த்த நூல்களுக்கு என்னவாகும் என்பதெல்லாமும் தெரியவில்லை.

2016ல் ஷெல்டன் போலக்குக்கும் மூர்த்தி கிளாசிக்கல் லைப்ரரிக்கும் நம் சக்கரவர்த்தியின் அறிஞர்கள் நெருக்கடி கொடுத்தபோது இந்து தமிழ் நாளிதழில் நான் ஒரு கட்டுரை எழுதினேன். அநேகமாக தமிழ் வெகுஜன ஊடகத்தில் அப்போது அந்த விவகாரம் குறித்து எழுதப்பட்ட ஒரே கட்டுரையாக இது இருக்கலாம். அதே போல் இந்த லைப்ரரி வெளியிட்ட முதல் தொகுப்புகளுக்கு இந்து நாளிதழில் 2015லேயே சுருக்கமான ஒரு அறிமுகம் எழுதினேன். தமிழில் வேறெந்த பெரும் பத்திரிகையிலோ சிறுபத்திரிகைகளிலோ எனக்குத் தெரிந்து இந்த நூல்களுக்கு விமர்சனங்கள் வெளியானதில்லை (சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்). ஷெல்டன் போலக் விவகாரம் குறித்த என் கட்டுரையின் சுட்டியும் இந்தத் திட்டத்தின் கீழ் வெளியான முதல் புத்தகங்கள் குறித்த என் அறிமுகமும் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.