Monday, January 8, 2024

தாமதமாக வந்தவள் (எழுதிக்கொண்டிருக்கும் ‘திருவயிற்றின் கனி’ நூலிலிருந்து...)


(பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகளை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தபோது ‘திருவயிற்றின் கனி’ கவிதை நூலின் ஒரு பகுதியாக எழுதிய கவிதை. இப்போது உச்ச நீதிமன்றம் அந்த விடுதலையை ரத்துசெய்திருக்கிறது. கவிதையை மறுபடியும் பகிர்ந்துகொள்கிறேன்.)

வேறு தேசத்திலிருந்தும்
வேற்றினத்திலிருந்தும்
வேறு காலத்திலிருந்தும்
வந்திருக்கிறேன்
ஏசுவே

உம்மை வந்து அடைவதற்குக்
கால இயந்திரம் வேண்டும்
கால இயந்திரம் வேண்டும்
என்று நான்
கெஞ்சாத ஆள் இல்லை

பின்னொரு நாள்
’வலியைவிடச் சிறந்த
கால இயந்திரம் இல்லை
என்று உனக்கு மெய்யாகவே சொல்கிறேன்’ 
என்று என் கனவில் வந்து 
நீர் உரைத்தீர்

முறை வைத்து
என் அக்கம்பக்கத்தார் வன்புணர்ந்த
என் யோனியிலிருந்தும்
ஓங்கியடித்துக் கொல்லப்பட்ட
என் குழந்தையின் ஓலம்
எதிரொலித்த
என் கருப்பையிலிருந்தும்
வெளிப்பட வாய்ப்பின்றிக்
குமைந்த வலி ஒன்றுதான்
எனக்கு எஞ்சுவது

அதை என் மேல்
ஏவியவர்களை
நீதிமான்கள்
ஆசிர்வதித்து வழியனுப்ப
மன்னர்களும் தளபதிகளும்
அவர்களுக்கு அணிவகுப்பு செலுத்த
அவர்களின் கெக்கெலிப்பில்
திரும்பத் திரும்பத்
தலைமோதிச் சாகிறாள் என் குழந்தை

காணவும்
கேட்கவும் சகியாமல்
என் வலி மீதேறி
வந்துவிட்டேன்

ஆனாலும்
இது தாமதம்  ஏசுவே

முன்பே வந்திருந்தால்
உம் மலைப்பிரசங்கம்
எனக்குச் சிறிது வருடிக் கொடுத்திருக்கலாம்

நீர் அளித்த
அற்புத திராட்சை ரசம்
சிறிது என் வயிற்றைக் குளிர வைத்திருக்கலாம்

இன்னும் இன்னும் முன்பு வந்திருந்தால்
மாட்டுத் தொழுவத்தில் பிறந்த
உமது தூய ஒளியில்
சிதறலுக்கு முந்தைய
என் சிசுவின்
தூய ஒளியைக் கண்டிருக்கலாம்

ஆனாலும்
இது தாமதம் ஏசுவே

வந்து பார்த்தால்தான்
தெரிகிறது
என்னைப் போலவே
கைவிடப்பட்டவர்
நீர் என்று

உம் அன்னை
உம் சகோதர சகோதரிகள்
உம் அன்பர்கள்
உம் தேசத்தவர்  
அனைவர் கண்முன்னே
நீதியின் பெயரால்
நீர் அந்தரத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறீர்
ஆணியடித்து

சிறிதே சிறிது உயிர்
உம்மிடம் இருப்பதை
உணர்கிறேன் ஏசுவே

இவ்வளவு தூரம் வந்துவிட்டேன்
திரும்பிச் சென்றால்
இறங்குவதற்கு
எனக்கு இடமளிக்கும்
நீதிதேசம் எங்கும் இல்லை

இறுதியாய் ஒரே ஒரு முறை
கண் திறந்து பாருங்கள்
உம் வலியோடு ஒன்றாய்
என் வலியும் சேர்த்துவிடுவேன்

ஏதும் செய்ய முடியவில்லையென்றாலும்
ஒரு வலிக்குத் துணையாய்
இன்னொரு வலி
இருப்பதன்றோ நீதி
          -ஆசை


No comments:

Post a Comment