Thursday, May 11, 2017

மூச்சை வெளிவிடும்போது புன்னகைக்கிறோம்




திஹ் நட் ஹன்

(இன்றைய ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘ஆனந்த ஜோதி’ இணைப்பிதழில் என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)

ஓய்வெடுப்பது குறித்தும் மனஅமைதியுடன் இருக்க வேண்டியது குறித்தும் நமக்கு நாமே அவ்வப்போது நினைவூட்டிக்கொள்வோம். இதற்காக, அமைதியான இடமொன்றுக்குச் செல்ல வேண்டி கொஞ்சம் நேரத்தையோ, தற்கணப் பிரக்ஞையுடன் (mindfulness) இருப்பதற்காக ஒரு நாளையோ ஒதுக்க விரும்புவோம். மெதுநடை செல்லவும் புன்னகைக்கவும் நண்பருடன் தேநீர் அருந்தவும், அப்படி ஒன்றாய் இருப்பதால் நாம்தான் இந்த உலகத்திலே மகிழ்ச்சியான மனிதர்கள் என்று குதூகலிக்கவும் நேரம் ஒதுக்க நாம் விரும்புவோம்.
இது தப்பித்தல் அல்ல, மிகவும் உற்சாகத்துடன் பங்குகொள்ளும் ஒரு செயல். நடந்துகொண்டே செய்யும் தியானத்தின்போது, சமையல், தோட்ட வேலைகளின்போது, உட்கார்ந்து செய்யும் தியானத்தின்போது, நாள் முழுவதும் நாம் புன்னகைசெய்வதை மேற்கொள்ளலாம். புன்னகைக்க முயலும்போது நமக்கு முதலில் சிரமம் தோன்றலாம். அப்படி இருந்தால் நாம் அது ஏன் என்று யோசிக்க வேண்டும். புன்னகைத்தல் என்பது நாம்தான் எல்லாம், அதாவது நம்மேல் நமக்கு முழுக் கட்டுப்பாடு உள்ளது, அதாவது நாம் மறதியினுள் மூழ்கிவிடவில்லை என்பது ஆகும். இப்படிப்பட்ட புன்னகையை நாம் புத்தர் மற்றும் போதிசத்துவர்களின் சிலைகளில் காணலாம்.



மூச்சுப்பயிற்சி செய்யும்போதும் புன்னகைக்கும்போதும் அவ்வப்போது நீங்கள் உச்சாடனம் செய்யக் கூடிய வகையில் நான் உங்களுக்கு ஒரு சிறிய கவிதையைச் சொல்ல விரும்புகிறேன்.

மூச்சை உள்ளிழுக்கும்போது, நான் உடலையும் மனத்தையும் 
அமைதியடையச் செய்கிறேன்.
 மூச்சை வெளிவிடும்போது, நான் புன்னகைக்கிறேன்.

இக்கணத்தில் சஞ்சரிக்கும்போது
நான் உணர்கிறேன்
இக்கணத்தைத் தவிர வேறெதுவுமில்லை என்று.

மூச்சை உள்ளிழுக்கும்போது, நான் உடலையும் மனத்தையும் அமைதியடையச் செய்கிறேன்.’ இந்த வரி ஒரு டம்ளர் ஐஸ் தண்ணீர் குடிப்பதைப் போன்றது; அதன் குளிர்ச்சி, புத்துணர்ச்சி உங்கள் உடலில் ஊடுருவுவதை உங்களால் உணர முடியும். நான் மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு இந்த வரியை உச்சரிக்கும்போது, சுவாசம் என் உடலையும் மனத்தையும் அமைதிப்படுத்துவதை நான் உண்மையிலேயே உணர்கிறேன்.

மூச்சை வெளிவிடும்போது, நான் புன்னகைக்கிறேன்.’ உங்களுக்குப் புன்னகையின் வல்லமை தெரியும். ஒரு புன்னகை உங்கள் முகத்திலுள்ள நூற்றுக் கணக்கான தசைநாண்களுக்குப் புத்துணர்வு அளிக்கிறது, கூடவே நரம்பு மண்டலத்துக்கும் புத்துணர்வு அளிக்கிறது. ஒரு புன்னகை உங்களை உங்களின் நிர்வாகியாக ஆக்குகிறது. அதனால்தான் புத்தர் சிலைகளும் போதிசத்துவர் சிலைகளும் எப்போதும் புன்னகைத்தபடியே இருக்கின்றன. நீங்கள் புன்னகைக்கும்போது புன்னகையின் அற்புதத்தை நீங்களே உணர்வீர்கள்.

நான் இங்கே உட்கார்ந்திருக்கிறேன்

இக்கணத்தில் சஞ்சரிக்கும்போதுநான் இங்கே அமர்ந்திருக்கும்போது நான் வேறு ஏதாவதொரு இடத்தைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ கடந்த காலத்தைப் பற்றியோ எண்ணிக்கொண்டிருக்கவில்லை. நான் இங்கே உட்கார்ந்திருக்கிறேன், எனக்குத் தெரியும் நான் எங்கே இருக்கிறேனென்று. இது மிகவும் முக்கியமானது. நாம் எதிர்காலத்தில்தான் வாழ விரும்புகிறோம், இப்போது அல்ல. நாம் சொல்வோம்நான் பள்ளிப்படிப்பை முடித்து முனைவர் பட்டம் வாங்கும்போதுவரை பொறுத்திருங்கள், அப்போது நான் உண்மையாகவே வாழ்வேன்.’ நாம் அதைப் பெறும்போது- பெறுவது எளிதல்லதான்- நாம் சொல்லிக்கொள்வோம்உண்மையிலேயே வாழ வேண்டுமென்றால் வேலை கிடைக்கும்வரை நான் காத்திருக்க வேண்டும்’.

அப்புறம், வேலை கிடைத்த பிறகு, கார். காருக்குப் பிறகு, வீடு. நிகழ்ந்துகொண்டிருக்கும் கணத்தில் வாழும் தகுதி உடையவர்களாக நாம் இல்லை. உயிர் வாழ்வதை நாம் எதிர் காலத்துக்கு, வெகு காலத்துக்கு, அதாவது எப்போதென்று நமக்குத் தெரியாத காலத்துக்கு, பின்னால் தள்ளிப்போட விரும்புகிறோம். தற்போதைய கணம் வாழ்வதற்குரியது அல்ல. என்றால் நம்மால் நம் ஆயுள் முழுவதும் வாழ முடியாமல்கூட போகலாம். எனவே உத்தி என்னவென்றால்---நாம் உத்தியைப் பற்றிப் பேசுவோமானால்---நிகழ்ந்துகொண்டிருக்கும் கணத்தில் இருப்பதும், நாம் இங்கே இப்போது இருக்கிறோம் என்று பிரக்ஞை கொள்வதும்தான், மேலும் வாழ்வதற்கு உரிய ஒரே ஒரு கணம் நிகழ்ந்துகொண்டிருக்கும் தற்போதைய கணம்தான்.

நான் உணர்கிறேன் இக்கணத்தைத் தவிர வேறெதுவுமில்லை என்று.’ உண்மையானது என்றால் இந்த ஒரே ஒரு கணம் மட்டும்தான். இங்கே, இப்போது இருப்பது மற்றும் நிகழ்ந்துகொண்டிருக்கும் கணத்தை அனுபவிப்பது மட்டுமே நமது மிக முக்கியமான வேலை. ‘அமைதிப்படுத்துதல், புன்னகைத்தல், நிகழ்ந்துகொண்டிருக்கும் கணம், ஒரே ஒரு கணம்.’ நீங்கள் இதை முயன்று பார்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

***************************************
திஹ் நட் ஹன்: சிறு அறிமுகம்

வியத்நாமில் 1926-ல் பிறந்த திஹ் நட் ஹன் பதினாறு வயதிலேயே ஜென் துறவியாகும் எண்ணத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். மத்திய வியத்நாமின் பவுத்த கல்வி மையத்தில் பட்டம் பெற்றார். மஹாயான புத்த மரபிலும் வியத்நாமின் தீயென் மரபிலும் பயிற்சி பெற்றார். வியத்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்த சமயத்தில் இரு தரப்புக்கும் நடுநிலையாகச் செயல்பட்டதால் திஹ் நட் ஹன் தன் சொந்த நாட்டினரின் வெறுப்புக்கு உள்ளானார். 1966-ல் வியத்நாம் மக்களின் துயரங்களைப் பற்றி அமெரிக்காவில் பேசச் சென்றவரை நாடு திரும்ப விடாமல் வியத்நாம் தடை செய்ததால் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் அடைந்தார்.
அங்கே 1982-ல் தனது தியான சங்கத்தைத் தொடங்கினார். உலகப் பயணங்கள், பேருரைகள், அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் என்று தற்கால வாழ்வுக்கு மிக அவசியமான பவுத்தத்தைப் பரப்பிக்கொண்டிருக்கிறார். எந்த ஒரு சித்தாந்தத்தையும், அது பவுத்தமாக இருந்தாலும்கூட, விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கக் கூடாது என்ற கருத்தை போதித்துவருபவர் திஹ் நட் ஹன். மதங்கள், சித்தாந்தங்கள் போன்றவை மேலான வாழ்வெனும் இலக்கு நோக்கி நீளும் வழிகளே தவிர அவையே இலக்கல்ல என்பது அவரின் போதனை.
பீயிங் பீஸ்’ (Being Peace) என்ற இவருடைய புத்தகம் நவீன ஆன்மிக கிளாசிக்காகப் புகழ்பெற்றது. இந்தப் புத்தகம் வெளிவந்த 30-வது ஆண்டு இது என்பது இந்தப் புத்தகத்தைத் தற்போது கொண்டாடுவதற்கு மேலும் ஒரு காரணமாகிறது.
-மொழிபெயர்ப்பும் அறிமுகமும்: ஆசை

- நன்றி: ‘தி இந்து’ தமிழ் நாளிதழ்

1 comment:

  1. தற்கணப் பிரக்ஞை என்ற சொல் பயன்பாட்டை அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete