Tuesday, February 7, 2017

என்றும் காந்தி: 6 - சத்தியாகிரகம் என்பது பலவீனர்களின் ஆயுதமல்ல!


ஆசை

தனது போராட்ட வழிமுறையை ‘Passive Resistance’ (சாத்விக எதிர்ப்பு) என்று ஆரம்பத்தில் அழைத்தார் என்பதைக் கடந்த அத்தியாயத்தின் இறுதியில் பார்த்தோம். ஆனால், அந்தப் பெயர் அவ்வளவு பொருத்தமானதாக இல்லை என்று கொஞ்ச காலத்திலேயே  காந்தி உணர ஆரம்பித்தார். அதற்கு இரண்டு முக்கியமானகாரணங்களை காந்தி கூறுகிறார்: 1, ஆங்கிலேயரின் ‘Passive Resistance’ வழிமுறைக்கும் அவரது வழிமுறைக்கும் நிறைய வேறுபாடுகள்இருந்தன. 2, இந்தியர்களின் போராட்டத்துக்கு ஆங்கிலப் பெயர்வைத்தால் பொருத்தமாக இருக்காததுடன், அந்தப் பெயர் இந்தியர்களின் வாயிலும் நுழையாது.

ஆகவே
, தனது போராட்ட வடிவத்துக்கென்றொரு பெயர் வேண்டுமென்றும் சரியான பெயரைப் பரிந்துரைப்பவர்களுக்குப் பரிசு உண்டென்றும் காந்தி தனதுஇந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையில் அறிவிப்பு கொடுத்தார். நிறைய பேரிடமிருந்து பரிந்துரைகள் வந்தன. எனினும், காந்தியின் சகோதர முறை உறவினர் குஷால்சந்த் காந்தியின் மகனாகிய மகன்லால் காந்தியின் பரிந்துரையே இறுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் சதகிரகாஎன்ற சொல்லைப் பரிந்துரைத்திருந்தார். ‘ நல்ல நோக்கமொன்றை உறுதியாகக் கடைப்பிடித்தல்என்பது அந்தச் சொல்லின் பொருள். சாதாரண மக்களுக்கு அந்தச் சொல் வாயில் நுழையாது என்பதால் அந்தச் சொல்லில் சற்றே மாற்றம் செய்து சத்தியாகிரகா’ (சத்தியாகிரகம்) என்ற சொல்லை காந்தி உருவாக்கினார். ‘சத்ய+அக்ரகஎன்ற இரு சொற்களின் இணைவு அது. ‘சத்யஎன்றால் சத்தியம், அதாவது உண்மை. ‘அக்ரகஎன்பது உறுதியாகக் கடைப்பிடித்தல்’. இப்படியாக, உலகின் வலிமை மிக்க போராட்டத்துக்கு ஒரு பெயர் கிடைத்தது.

சாத்விக எதிர்ப்புஎன்ற கருத்தாக்கத்தை எழுத்தாளர் ஹென்றி டேவிட் தொரோவிடமிருந்து காந்தி பெற்றார் என்ற நம்பிக்கை அன்றும் உலவியது, இன்றும் உலவுகிறது. இதை காந்தியே மறுத்தார். சட்ட மறுப்பு பற்றி தொரோ எழுதிய கட்டுரையைப் படிப்பதற்கு முன்பே தென்னாப்பிரிக்காவில் அரசை எதிர்க்கும் உத்தியைத் தொடங்கிவிட்டதாகக் குறிப்பிடுகிறார். அப்போது அந்தப் போராட்ட முறைக்குப் பெயர் இல்லாமல் இருந்தது. தொரோவின் கட்டுரையின் தலைப்பைப் பார்த்த பின்தான் ‘Passive Resistance’ (சாத்விக எதிர்ப்பு) என்ற பெயரைத் தான் சூட்டியதாகவும் காந்தி குறிப்பிட்டிருக்கிறார். ஆக, பெயரை மட்டுமே கடன்வாங்கியிருக்கிறார். அந்தப் பெயரும் குறுகிய காலத்தில் சத்தியாகிரகம்’  என்று மாற்றம் பெற்றது.

இரண்டும் ஒன்றல்ல
ஏற்கெனவே குறிப்பிட்டபடிசாத்விக எதிர்ப்புக்கும் சத்தியாகிரகத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. எனினும், காந்தியின் மீதும் காந்தியின் போராட்டம் மீதும் அனுதாபம்கொண்டிருந்த ஐரோப்பியர்கள் சிலர் அவருடைய போராட்ட வடிவத்தைசாத்விக எதிர்ப்புஎன்றே கருதினார்கள். ஹோஸ்கன் என்றொரு ஐரோப்பியர் காந்தியின் போராட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘ட்ரான்ஸ்வாலில் உள்ள இந்தியர்கள் தங்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுவதற்கு இருந்த எல்லா வழிமுறைகளும் அடைபட்டுப் போனதால்சாத்விக எதிர்ப்பைக் கைக்கொள்ள வேண்டியதாயிற்று. அவர்களுக்கு வாக்குரிமை இல்லை. எண்ணிக்கை ரீதியிலும் அவர்கள் மிகவும் குறைவு. பலவீனமானவர்கள் என்பதுடன் அவர்களிடம் ஆயுதங்களும் கிடையாது. ஆகவே, பலவீனர்களின் ஆயுதமாகியசாத்விக எதிர்ப்பை அவர்கள் மேற்கொள்ள வேண்டியதாயிற்று” என்றிருக்கிறார்.

ஹோஸ்கனின் பார்வையை காந்தி திட்டவட்டமாக மறுக்கிறார்.  ‘சாத்விக எதிர்ப்புக்கும்சத்தியாகிரகத்துக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை விளக்குவதற்காகசாத்விக எதிர்ப்பின் வரலாறு பற்றித் தனதுதென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம்நூலில் சொல்கிறார். ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக இங்கிலாந்தில், ‘சாத்விக எதிர்ப்புபோராட்டங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்து இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்ந்தன. அரசை ஆயுதங்கள் கொண்டோ, எண்ணிக்கை கொண்டோ எதிர்க்க முடியாத பலவீனமான தரப்புகள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்துத் தங்கள் எதிர்ப்பைக் காட்டிக்கொண்டார்கள். அதனால் அவர்களின் எதிர்ப்பு வெறுமனே பதிவுசெய்யப்பட்டதேயொழிய பெரும்பாலும் அந்த எதிர்ப்பினால் மாற்றங்கள் ஏற்படவில்லை. அதைப் போல்சத்தியாகிரகம்என்பது வேறு வழியில்லாமல் ஆயுதப் போக்கைக் கைவிட்டு அமைதி வழியைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட பலவீனர்களின் வழிமுறை  அல்ல; மாபெரும் பலசாலிகளின் வழிமுறை என்று விவரிக்கிறார் காந்தி.

இரண்டு
வழிமுறைகளுக்கும் இடையில் சில முக்கியமான வேறுபாடுகளைப் பட்டியலிடுகிறார். சாத்விக முறை எதிர்ப்பாளர்களைப் பலவீனர்கள் என்று மற்றவர்கள் நம்புவதோடு மட்டுமல்ல அந்த எதிர்ப்பாளர்களும் தங்களைப் பற்றி அப்படியே நம்புகிறார்கள். அதனால் இவ்வகை எதிர்ப்பை மேற்கொள்ளும்போது அது நம்மை உறுதிமிக்கவர்களாகஒருபோதும் ஆக்காது. அதே நேரத்தில் சிறிது வாய்ப்பும் தடுமாற்றமும் வந்தால்கூட நமது எதிர்ப்பைக் கைவிட்டுவிடுவோம்சத்தியாகிரகிகளோ தங்களை மிகவும் உறுதிமிக்கவர்களாகக் கருதிக்கொள்கிறார்கள். இதனால் நமது உறுதி மேலும் வலுப்படுவதுடன் மிகவும் பலனளிக்கக் கூடியதாக ஆகிறது நம் போராட்டம். இவ்வகை உறுதி கொண்டிருப்பதால் போராட்டத்தைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லாமல்  போகிறது.

சாத்விக
எதிர்ப்பில் அன்புக்கு இடமே இல்லைசத்தியாகிரகத்தில் வெறுப்புக்கு இடமே இல்லை. சந்தர்ப்பம் வாய்த்தால் சாத்விக எதிர்ப்பில் ஆயுதம் ஏந்தவும் நேரிடும். எவ்வளவு வாய்ப்பு வந்தாலும் சத்தியாகிரகத்தில் வன்முறைக்கு இடமே கிடையாது. சாத்விக எதிர்ப்பை ஆயுதப் போராட்டத்துக்கான முன்னேற்பாடு போலவே கருதுவார்கள். சத்தியாகிரகத்தை அப்படி நினைத்தே பார்க்க முடியாது. சத்தியாகிரகத்தை ஒருவர் தான் மிகவும் நேசிப்பவர்களிடமும் நண்பர்களிடமும் காட்ட முடியும்; சாத்விக எதிர்ப்பால் அப்படி முடியாது.

நேசத்துக்குரியவர் வெறுப்புக்குரியவராகும்போதுதான்
சாத்விக எதிர்ப்பை அவரிடம் காட்ட முடியும். சாத்விக எதிர்ப்பில் மறுதரப்புக்குக் கஷ்டத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும். ஆனால், சத்தியாகிரகத்தில் எதிர்த் தரப்புக்குக் கஷ்டம் கொடுக்கும் எண்ணம் சிறிதும் இருப்பதில்லை. ஒருவர் தானே இன்னல்களை எதிர்கொள்வதன் மூலம் எதிர்த் தரப்பை வெற்றிகொள்ளும் முறையை சத்தியாகிரகம் முன்வைக்கிறது.

சாத்விகப் போராட்டங்களே
காந்தி பட்டியலிடும் வேறுபாடுகளை இங்கே குறிப்பிட்டிருப்பதில் ஒரு நோக்கம் இருக்கிறது. இந்தியாவிலோ உலகின் பிறபகுதிகளிலோ அமைதி வழியில் நடைபெறும் போராட்டங்கள் பலவற்றையும்காந்தியப் போராட்டம்’, ‘சத்தியாகிரகப் போராட்டம்என்று பெயர் சொல்லி நாம் அழைப்பதுண்டு. காந்தி குறிப்பிட்ட வேறுபாடுகளை வைத்து அளந்துபார்த்தால் இவற்றில் பலவும்சத்தியாகிரகம்எனும் அளவுகோலுக்குள் வருவதில்லை. அந்தப் போராட்டங்களைசாத்விகப் போராட்டங்கள்என்றுதான் அழைக்க வேண்டும். ‘காந்திய வழிபோராட்டம் என்று சொல்லிக்கொண்டு நடைபெறும் பெரும்பாலான போராட்டங்களின் வன்முறை இருப்பதில்லையே தவிர அவை உண்மையில் காந்திய வழி போராட்டங்களாக இருப்பதில்லை. மேலும், அந்தப் போராட்டங்களில் பெரும்பாலும் வன்முறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கூடவே இருக்கும். ஏற்கெனவே பார்த்ததுபோல் சத்தியாகிரகம் என்பது யாரையும் எதிரித் தரப்பாகக் கருதுவதில்லை, எதிர்த் தரப்பாகத்தான் கருதுகிறது. ஆகையால், சத்தியாகிரகப் போராட்டங்களில்இவர் ஒழிக, அவர் ஒழிகஎன்பதுபோன்ற கோஷங்களையோஇந்தியன்டா, இந்திடா, தமிழன்டா, மலையாளிடா, கன்னடிகாடாஎன்பதுபோல் மற்றவர் அகந்தையைச் சீண்டும் பெருமித முழக்கங்களையோ, ’வந்தேறி’, ‘போயேறி’, ‘அடிவருடி’, ‘ஏமாற்றுக்காரா’, ‘திருட்டுக் கும்பல்என்பதுபோல் கண்ணியமற்ற வாசகங்களையோ, இங்கே குறிப்பிடவே முடியாத அளவில் மிகவும் தரக்குறைவாக இருக்கும் வாசகங்களையோ நாம் காண முடியாது. இந்த கோஷங்களாலும் முழக்கங்களாலும், எதிர்த் தரப்பு அழிந்துபோக வேண்டும் என்ற எண்ணத்தாலும் எதிர்த் தரப்புக்கும் போராட்டத் தரப்புக்கும் இடையே ஒன்றுசேரவே முடியாத வகையில் பெரும்பிளவு உண்டாகிறது.

மனதளவிலான
மாற்றமே இலக்கு
போராட்டத் தரப்பு எண்ணிக்கைப் பெரும்பான்மையையும் நாட்டு மக்கள், உலக மக்கள் பேராதரவையும் பெற்றிருக்கும் பட்சத்தில் எதிர்த் தரப்பு அடிபணிந்தாலும் அது மனதளவிலான மாற்றமாக இருக்காது. சத்தியாகிரகத்தின் இலக்கே மனதளவிலான மாற்றம்தான். இன்னும் சொல்லப்போனால் யாருக்கு எதிராக சத்தியாகிரகம் மேற்கொள்கிறோமோ அவருடைய மனமாற்றம் கூட இரண்டாம் பட்சம்தான், தன்னுடைய மனமாற்றம்தான் சத்தியாகிரகியின் முதல் இலக்கு. எதிர்த் தரப்பை கண்ணியத்துடன், ஆனால் மிக மிக உறுதியுடன் எதிர்க்கவும் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அவற்றை இயல்பாக எதிர்கொண்டு தொடர்ந்து போராடவும் ஒரு சத்தியாகிரகியின் மனது முழுமையாகத் தயாராகிவிட்டதென்றால் அதுதான் முழுமையான வெற்றி. இதன் உபவிளைவுகள்தான் எதிர்த் தரப்பின் மனமாற்றம், நம் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுவது போன்றவை. எப்படி சத்தியாகிரகியின் முதல் இலக்கென்பது தன்னுடைய மனமாற்றமோ அதேபோல் சத்தியாகிரகியின் முதன்மையான, பிரம்மாண்டமான போர்க்களம் தனது மனம்தான். காந்தியை மாபெரும் இலக்கியப் படைப்பாளி என்று கருதுவோமென்றால் அவர் கண்டுபிடித்த சத்தியாகிரகம் இலியட், ஒடிசி, மகாபாரதம் போன்ற பெருங்காவியங்களுக்கு இணையானதாகக் கருதலாம்.
 -ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
(நாளை…)
 - நன்றி: ‘தி இந்து’ (https://goo.gl/wReQn1)

1 comment:

  1. தொடர்ந்து வாசிக்கிறேன். மறுமொழி எழுத முடியவில்லை. அருமையான தொடராக அதிகமான செய்திகளைக் கொண்டுள்ளதைப் பார்க்கும்போது காந்தியைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னும் உள்ளது என்பதை உணரமுடிகிறது. வாய்ப்பிருப்பின் இத்தொடரை நீங்கள் ஒரு சிறிய நூலாகக் கொணர முயற்சிக்கலாம். "காந்தியை மாபெரும் இலக்கியப் படைப்பாளி என்று கருதுவோமென்றால் அவர் கண்டுபிடித்த சத்தியாகிரகம் இலியட், ஒடிசி, மகாபாரதம் போன்ற பெருங்காவியங்களுக்கு இணையானதாகக் கருதலாம்" என்று கூறியுள்ளீர்கள். மகாபாரதம், இலியட், ஒடிசி என்ற வரிசையில் வந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete