ஆசை
('தி இந்து’ நாளிதழின் ‘நூல்வெளி’ பகுதியில் உலக புத்தக தினத்தன்று [23-04-2016] மொழிபெயர்ப்புகளைக் கொண்டாடி எழுதப்பட்ட கட்டுரையின் முழு வடிவம் இது)
உலகளாவிய அறிவுப் பகிர்தலுக்குப் பெரும்பாலும் நாம் மொழிபெயர்ப்புகளையே நம்பியிருக்கிறோம். அப்படிப்பட்ட மொழிபெயர்ப்புகளை இந்த உலக புத்தக தினத்தன்று கொண்டாடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஷேக்ஸ்பியர், மிகைல் செர்வாண்டீஸ் போன்ற முக்கியமான உலக எழுத்தாளர்களின் நினைவாகக் கொண்டாடத் தொடங்கப்பட்டதுதான் ‘உலக புத்தக தினம்’. இந்த ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதியன்று மகத்தான அந்த படைப்பாளிகள் இறந்துபோய் 400 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன என்பது இந்த ஆண்டு உலகப் புத்தக தினத்துக்குக் கூடுதல் சிறப்பு. இந்தத் தருணத்தில் உலக மொழிகளிலிருந்தும் இந்திய மொழிகளிலிருந்தும்
தமிழுக்கு வந்த முக்கியமான நூல்களை வாசகர்களுடன் இங்கே கொண்டாடுகிறோம்!
உலகம் ஒரே கிராமமாக ஆனதற்குத் தொழில்நுட்பம் மட்டுமல்ல, மொழிபெயர்ப்புகளும் காரணம். “ஒவ்வொரு மொழியும் ஒரு உலகம். மொழிபெயர்ப்பு என்ற விஷயம் இல்லையென்றால் மவுனத்தை எல்லைகளாகக் கொண்ட வட்டாரங்களில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருப்போம்’ என்று ஜார்ஜ் ஸ்டெய்னர் கூறியிருப்பது மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. மூல மொழிப் புத்தகங்களுக்குச்
செய்யப்பட்ட துரோகங்களாகவே மொழிபெயர்ப்புகளை அறிவுஜீவிகளும் இலக்கியகர்த்தாக்களும் ஏன், சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களும் கருதினாலும் எளிய மக்களைப் பொறுத்தவரை நுட்பங்களைப் பற்றி அவர்கள் அதிகம் கவலைப்படுவதில்லை. மூல நூலின் ஆத்மா எளிய வாசகருக்கும் போய்ச்சேரும் வகையில் இருந்தாலே ஒரு மொழிபெயர்ப்பின் நோக்கம் பெருமளவு வெற்றியடைந்துவிடுகிறது.
மொழிபெயர்ப்பு என்ற வழிமுறைக்கு முன்பு மூல நூலிலிருந்து வழிநூல் உருவாக்குவதுதான்
முன்னோடி. கம்பராமாயணம், வில்லிபாரதம் போன்றவற்றை எடுத்துக்காட்டலாம். மொழிபெயர்ப்பு என்பது ஓரளவு முறையான செயல்பாடாகத் தொடங்கியது கிறிஸ்தவ மிஷனரிகளின் வருகைக்குப் பின்புதான். 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழுக்கு அதிகம் மொழிபெயர்க்கப்பட்டவை மதங்கள் சார்ந்த
நூல்களே. இதில் பாரதியாரின் பகவத் கீதை போன்றவையும் அடங்கும். எனினும் ஜப்பானிய ஹைக்கூ, தாகூரின் படைப்புகள் போன்றவற்றின் மொழிபெயர்ப்புகள் மூலம் நவீனத் தமிழ் மொழிபெயர்ப்புகளின் முன்னோடிகளில் ஒருவராகவும் பாரதி ஆகிறார். தொடர்ந்து புதுமைப்பித்தன் போன்ற படைப்பாளிகளும் உலக இலக்கியத்தைத் தமிழுக்கு முனைப்புடன் கொண்டுவருகிறர்கள். ஆனால், மொழிபெயர்ப்புகளின் பொற்காலம் என்பது வங்க மொழி இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகளிலிருந்தும், ரஷ்ய மொழி இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகளிலிருந்தும் தொடங்குகிறது. வங்க இலக்கிய மொழிபெயர்ப்புகளில்
தா. நா. குமாரசாமி குறிப்பிடத் தகுந்த பங்களிப்பைச் செய்தவர். தமிழ் பதிப்புலகின் முன்னோடிகளுள் ஒருவரான சக்தி வை. கோவிந்தனும் தரமான இந்திய இலக்கியங்களையும்
உலக இலக்கியங்களையும் தமிழில் வெளியிட்டார். ராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் போன்றவை மலிவு விலையில் ரஷ்ய இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டு அறிவுப் புரட்சிக்கு வித்திட்டன. தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் கிராமத்தில் கூட மக்சிம் கார்க்கியின் ‘தாய்’, மார்க்ஸ், லெனினின் எழுத்துக்கள் வாசிக்கப்பட்டது இதற்கு ஓர் உதாரணம்.
எழுத்தாளரும் விமர்சகருமான க.நா.சு. தனி ஒருவராக இருந்து மொழிபெயர்த்துக் குவித்த புத்தகங்களால் இரண்டு மூன்று தலைமுறைகள் உலக இலக்கிய அறிவைப் பெற்றிருக்கின்றன. இதற்கிடையே நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அகாடெமி ஆகியவற்றின் மூலமாக இந்திய இலக்கியங்கள் தமிழ் வாசகர்களின் கைகளுக்கு வந்துசேர்ந்தன. வாசகர் வட்டமும் சில முக்கியமான புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறது.
1970-களில் க்ரியா பதிப்பகத்தின் வரவு மொழிபெயர்ப்புகளைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானதாக அமைகிறது. ஆங்கிலம் அல்லாத மொழிகளிலிருந்து நேரடி மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பைச் செம்மைப்படுத்துவது போன்றவற்றில் க்ரியா முன்னோடியாக அமைந்தது. தொடர்ந்து காலச்சுவடு பதிப்பகம் மலையாளம், கன்னடம் போன்ற இந்திய மொழிகளிலிருந்தும்
உலக மொழிகளிலிருந்தும் முக்கியமான மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. அடையாளம் பதிப்பகத்தால் தமிழில் வெளியிடப்படும் ஆக்ஸ்போர்டின் ‘சுருக்கமான அறிமுக நூல் வரிசைகள்’, மருத்துவ நூல் மொழிபெயர்ப்புகள்
போன்றவை முக்கியமான பங்களிப்புகள். கிழக்கு பதிப்பகம் வரலாறு தொடர்பான நூல்களை மூல நூல்கள் வெளிவந்த உடன் விரைவாக மொழிபெயர்த்து வெளியிடுகிறது. மூன்றாம் உலக நாடுகளின் இலக்கியங்கள், செவ்வியல் இலக்கியங்கள் போன்றவற்றை எதிர் வெளியீடுகள், சந்தியா பதிப்பகம் போன்றவை வெளியிட்டுவருகின்றன. இடதுசாரிச் சித்தாந்தம் தொடர்பான நூல்களின் மொழிபெயர்ப்புகளை சவுத் விஷன் புக்ஸ், விடியல் பதிப்பகம், அலைகள் பதிப்பகம், பாரதி புத்தகாலயம், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் போன்றவை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. மதம், தத்துவம் தொடர்பான மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடுவதில் ராமகிருஷ்ண மடம், நர்மதா பதிப்பகம், கண்ணதாசன் பதிப்பகம் போன்றவை முன்னிலை வகிக்கின்றன.
மகாத்மா காந்தியின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்களின் தொகுதி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்களின் தொகுதி போன்ற பெருந்தொகுதிகளின் சமூக முக்கியத்துவம் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியது.
சிறார் இலக்கியத்தைப் பொறுத்தவரை நேஷனல் புக் டிரஸ்ட்டுக்கு அடுத்ததாகத் தற்போது பாரதி புத்தகாலயத்தின் ‘புக்ஸ் ஃபார் சில்ட்ரன்’ வெளியீடு, என்.சி.பி.எச் போன்ற பதிப்பகங்கள் சிறுவர்களுக்கான புத்தகங்களை நிறைய மொழிபெயர்த்து மலிவாக வெளியிடுகின்றன. தரமான வடிவமைப்பில் நாட்டார் கூறுகளுடன் சிறார் புத்தகங்களை தூலிகா பதிப்பகம், தாரா பதிப்பகம் போன்றவை மொழிபெயர்த்து வெளியிடுகின்றன.
உலக/ இந்திய இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகளில் தமிழ் சிற்றிதழ்களின் பங்கு மிகவும் முக்கியமானது. கசடதபற, நடை, மீட்சி போன்ற இதழ்களிழ் தொடங்கி இன்று காலச்சுவடு, உயிர்மை போன்ற இதழ்கள் வரை கணிசமான அளவில் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டிருக்கின்றன. இந்த இதழ்களில் வெளிவரும் மொழிபெயர்ப்புப் படைப்புகள் தொகுக்கப்பட்டுப் புத்தகங்களாகவும் வெளியிடப்படுகின்றன. மொழிபெயர்ப்புக்காகவே தமிழில் வெளிவரும் ‘திசை எட்டும்’ இதழும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்று.
தற்போது வெளியாகும் மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கையைப் பார்த்து நமக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டாலும் அவற்றின் தரத்தை உற்றுநோக்கும்போது பெரிதும் ஏமாற்றமே ஏற்படுகிறது. பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் காப்புரிமை பெற்றுச் செய்யப்படுகின்றனவா என்பதில் எந்தத் தெளிவும் இல்லை. இரண்டாவதாக, மொழிபெயர்ப்பாளர்களுக்கு உரிய ஊதியம் பெரும்பாலும் வழங்கப்படுவதும் கிடையாது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. எல்லாவற்றையும் விட முக்கியமானது, மொழிபெயர்ப்பைச் செம்மைப்படுத்துவதில் பல மொழிபெயர்ப்பாளர்களும் பதிப்பகங்களும் காட்டும் அசிரத்தைதான். இதனால் நம்பகத்தன்மையை இழந்து, விற்பனையாகாமல் பல நூல்கள் முடங்கிப்போகின்றன.
உடனுக்குடன் கொண்டுவர வேண்டும் என்பதைவிட பொறுப்பாகக் கொண்டுவருவது முக்கியமல்லவா?
கடந்த ஒரு நூற்றாண்டு தமிழ் இலக்கியப் போக்கை உற்றுநோக்கினால் உலக இலக்கியத்துக்கு அது பட்டிருக்கும் நன்றிக்கடன் எவ்வளவு என்பது தெரியும். அதுதான் நம் மொழிபெயர்ப்பாளர்களின் வரலாற்றுப் பங்கு.
மொழிபெயர்ப்புகள்
மூலம் பெரிய வருமானமே புகழோ மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கிடைப்பதில்லைதான்.
தங்களுக்குக் கிடைத்த உலக இலக்கியச் சுவையை நம் மக்கள் அனைவருக்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற பகிர்தல் தாகம்தான் அவர்களை இயக்குகிறது. இந்த தாகத்துடன் திறமையும் செம்மையும் சேர்ந்தால் உலக இலக்கியம் ஆழமும் நயமும் குறையாமல் நம் மொழியில் கிடைப்பது உறுதி!
- நன்றி: ‘தி இந்து’
- ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையின் சுருக்கமான வடிவத்தைப் படிக்க: http://goo.gl/AGaZ1o
ஆங்கில இந்து நாளிதழிலும் மொழிபெயர்ப்பினைப் பற்றி ஒரு கட்டுரையினைப் படித்தேன். தங்களது கட்டுரையை இப்பொழுதுதான் வாசிக்கமுடிந்தது. மொழிபெயர்ப்பு முயற்சியானது அலாதியான தேடலைத் தருவதை என் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். நன்றி.
ReplyDelete