Friday, September 25, 2015

எனக்கு மரண தண்டனை கொடுங்கள்!


ஆசை

(‘தமிழ் இன்று’ இணைய இதழில் 2010ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதம். இந்தக் கடிதம் இன்று மோடிக்கு அனுப்பினால் இன்னும் பொருத்தமாக இருக்கும். இந்தக் கடிதங்களால் எந்தப் புண்ணியமும் இல்லைதான். ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்டு அந்த கோபத்தில் உடனடியாக எழுதிய கடிதம் இது.)

இந்த நாட்டிலே மிகவும் சக்தியற்றவர்களுள் ஒருவனாகிய நான் என்னை விடவும் சக்தியற்ற பிரதமர் அவர்களுக்கு எழுதும் கடிதம். 'மதிப்புக்குரிய பாரதப் பிரதமர்' அவர்களுக்கு, 'மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு' என்றெல்லாம்தான் இந்தக் கடிதத்தை நான் துவங்க விரும்பினேன். ஆனால், உங்களுக்கு மதிப்போ மாண்போ உண்மையில் இருப்பதாக நீங்களே நினைக்க மாட்டீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.



யாரோ முன்பின் தெரியாத ஒருவன் எழுதும் கடிதம் இது என்று நினைத்துவிடாதீர்கள். என்னை உங்களுக்கு நன்றாகத் தெரியும், ஆனால் எனது பெயர்தான் உங்களுக்குத் தெரியாது. நான் காட்டில் மாவோயிஸ்டுகளோடு போராடும் பழங்குடி மக்களில் ஒருவன்; நந்திகிராமத்தில் மாநில அரசை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த ஒருவன்; போபால் விஷவாயுக் கசிவில் இறந்துபோன, அப்படி இறந்துபோனதால் புகைப்படத்தின் மூலம் பிரபலமான குழந்தையின் தகப்பன் நானேதான்; அரசியல் தலைவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டபோது அவருடைய தொண்டர்களால் கொளுத்தப்பட்ட பேருந்தில் இறந்துபோன பெண்களில் ஒருத்தியின் சகோதரன் நான்; நான் ஒரு சீக்கியர்கூட (உங்களின் உறவினனாகக்கூட இருக்கலாம்)--ஆனால் ஒரு ஆலமரம் விழுந்ததால் ஏற்பட்ட அதிர்வில் பிறரால் கேட்கப்படாமல் கரைந்துபோன ஓலத்தை எழுப்பியவன் நானே; இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
 

ஆனால் எனக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. மாவோயிஸ்டுகளை அழிக்கும் சாக்கில் பழங்குடியினரை அழிப்பதோடு இல்லாமல் பழங்குடியினப் பெண்களைக் கற்பழிப்பவனும் நானே; பேருந்துகளைக் கொளுத்திவிடுபவனும் நானே; குஜராத்தில் ஒரு கர்ப்பிணி வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியில் எடுத்துக் கொளுத்தியவனும் நானே; சீக்கியர்களை ஓட ஓட வெட்டிக்கொன்றதும் நானே; இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் மேற்கண்ட எனது இருமுகங்களும் நான் விரும்பிய முகங்கள் அல்ல என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் பாரதப் பிரதமர் அவர்களே!
 

இன்னும் விஷயத்துக்கு வரவில்லையே என்று நீங்கள் நினைப்பது எனக்குத் தெரிகிறது. மன்னியுங்கள்! விஷயம் இதுதான்: என்னைத் தேசத்துரோகி என்று அறிவித்து மரணதண்டனையோ (எல்லோருக்கும் முன்னால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டாலோ சிரச்சேதம் செய்யப்பட்டாலோ இன்னும் பொருத்தமாக இருக்கும்), தீவாந்தரத் தண்டனையோ கொடுக்க வேண்டும் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அதுதான் இந்தக் கடிதத்தின் நோக்கம்; அதுதான் எனது விண்ணப்பம்.
 

எதற்காக என்று நீங்கள் நினைப்பதும் எனக்குத் தெரிகிறது. பெரிய காரணம் ஒன்றுமில்லை. என்னால் கண்ணியமாக இந்த நாட்டில் வாழ முடியவில்லை, அவ்வளவுதான்! 'இதெல்லாம் ஒரு காரணமா, உன்னைவிட நான் மிகவும் மோசமான நிலையில் இல்லையா?' என்று நீங்கள் என்னைக் கேட்பதும் என் காதில் விழுகிறது.
 

கண்ணியம் என்பது எனக்கு மட்டும் பேருந்தில் இடம் கிடைப்பதற்கு மகிழ்ச்சிகொள்வதல்ல; பிறருக்கும் இடம் கிடைப்பதை உறுதிசெய்துகொள்வது. கண்ணியம் என்பது எனக்கு மட்டும் கழிப்பிடம் கிடைக்கும் நிலையல்ல; பிறருக்கும் கழிப்பிடம் கிடைப்பதை உறுதிசெய்துகொள்வது. கண்ணியம் என்பது எனக்கு மட்டும் உணவு கிடைக்கும் நிலையல்ல; பிறருக்கும் உணவு கிடைப்பதை உறுதிசெய்துகொள்வது. கண்ணியம் என்பது எனக்கு மட்டும் நீதி கிடைப்பதல்ல; பிறருக்கும் நீதி கிடைப்பதை உறுதிசெய்துகொள்வது. கண்ணியம் என்பது தான் மட்டும் கண்ணியமாக இருப்பதல்ல, பிறரும் கண்ணியமாக இருப்பதை உறுதிசெய்துகொள்வது.
 

இப்போது சொல்லுங்கள் பாரதப் பிரதமர் அவர்களே, நீங்களோ நானோ அல்லது வேறு யாரோ கண்ணியமாக வாழ்கிறோமா? காந்தி இப்போது வாழ்ந்தால் அவரும்கூட தான் கண்ணியமாக வாழ்வதாக நினைக்க மாட்டார் என்றே நான் உண்மையில் நினைக்கிறேன்.
 

இதைவிட மோசமான நாடுகள் எவ்வளவோ இருக்கின்றன, சோமாலியா, ஜிம்பாப்வே, பாகிஸ்தான் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் பாரதப் பிரதமர் அவர்களே, நான் பிறந்தது முதல் என் நாட்டை மட்டுமல்ல எனது மாநிலத்தையே தாண்டிப் போனதில்லை. அடுத்த வீட்டின் நிலை மோசமானதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. என் வீட்டின் நிலை மோசமாக இருக்கிறது. தினமும் கூச்சல், குழப்பம், சண்டை என்று இருந்தாலும் திருமணம் செய்துகொண்டாயிற்றே, குழந்தையைப் பெற்றாயிற்றே என்று விவகாரத்து வாங்காமல் தன்னுடைய தாயும் தகப்பனும் சேர்ந்து வாழும் நிலையில் அவர்களுக்கிடையே அகப்பட்ட ஒரு குழந்தையைப் போல்தான் நான் என்னை உணர்கிறேன். மேற்குறிப்பிட்ட உதாரணத்தில் திருமணத்துக்குப் பதிலாக நீங்கள் சுதந்திரம், ஜனநாயகம், தேச ஒற்றுமை, தேச பக்தி போன்ற சொற்களைப் பதிலீடு செய்துகொள்ளலாம்.
 

எப்படிப்பட்ட சூழலில் நாம் இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்களா பிரதமர் அவர்களே? நீங்களும் நானும் எவ்வளவு சக்தியற்றவர்களாக இருக்கிறோம் தெரியுமா?
 

நான் கோழையாக ஆக்கப்பட்டுவிட்டேன் பிரதமர் அவர்களே. உங்களைப் போலவே. இந்தச் சமூகத்தாலும் இந்த நாட்டாலும் இந்த நாட்டின் அரசியல்வாதிகளாலும் என்னை உள்ளிட்ட இந்த நாட்டு மக்களாலும் சுரணையற்ற கோழையாக ஆக்கப்பட்டுவிட்டேன். இந்த ஒரு விஷயத்துக்காகவே நான் வாழ்வதை நானே வெறுக்கிறேன். தயவுசெய்து என்னைத் தேசத் துரோகி என்று அறிவித்து எனக்கு மரண தண்டனையோ தீவாந்தர தண்டனையோ கொடுங்கள். ஏனெனில் கண்ணியமாக வாழ்தல் என்பது மனிதனின் அடிப்படை உரிமை என்று நான் நினைக்கிறேன். அப்படிக் கண்ணியமாக வாழ முடியாத ஒரு நாட்டில் இருப்பதை நான் வெறுக்கிறேன்.

1 comment:

  1. காலங்கள் மாறும், காட்சிகள் மாறும், கதாநாயகர்கள் மாறுவர். ஆனாலும் நிகழ்வில் மாற்றமிருக்காது. 2010இல் எழுதியது இன்றும் பொருந்தும்.

    ReplyDelete