ஜெய்னெப் டூஃபெக்ஸி
(‘தி இந்து’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் 29-09-2015 அன்று எனது சுருக்கமான மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)
கடந்த ஆறு ஆண்டுகளாக ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தார் ஒரு பொய்யைத் தொடர்ந்து விளம்பரப்படுத்திக்கொண்டிருந்தார்கள்: “உயர்தரமான, சுத்தமான டீசல்” கார்கள். அதுமட்டுமல்லாமல் எரிபொருள் திறன் மிக்க, புகைவெளியீடு அதிகம் இல்லாத கார்கள் என்றெல்லாம் விளம்பரம் வேறு. இப்போதல்லவா தெரிகிறது ஃபோக்ஸ்வாகன் கார்களெல்லாம் எந்த அளவுக்குச் சுத்தமான டீசல் கார்கள் என்று! நம்மையெல்லாம் ஏமாற்றியிருக்கிறார்கள். மாசுக்கட்டுப்பாட்டு ஆய்வுகளில் மட்டும் யோக்கியமாக நடந்துகொள்வதைப் போன்ற ஒரு மென்பொருளை அவர்கள் கார்களில் பொருத்தியிருக்கிறார்கள்.
ஆனால், ஆய்வுக்குட்படுத்தப்படும் நேரங்களைத் தவிர மற்ற நேரத்தில் அளவுக்கு அதிகமான புகையை வெளியிட்டு இந்தக் கார்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. எந்த அளவுக்கு என்றால், அனுமதிக்கப்பட்ட அளவை விட 40 மடங்கு அதிகம் நைட்ரஜன் ஆக்ஸைடை வெளியிடுகின்றன; அதாவது ஆய்வு நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில். சுற்றுச்சூழலுக்கு உகந்த கார்கள் என்று இப்படி மாறுவேஷம் போடும் கார்களை வாங்குவதற்காகக் கார்களின் உரிமையாளர்களுக்கு 5 கோடியே 10 லட்சம் டாலர் (ரூ. 337,43,35,950) அளவுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றால் பாருங்களேன்.
புதிய புதிய தளங்களில்
(கணினி) மென்பொருள்களால் இயங்கும் இந்த உலகில் இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களைப் பிடிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடித்தாக வேண்டும். இதில் நல்ல செய்தி என்னவென்றால் மென்பொருட்களின் யோக்கியதையைக் கண்டறிவதற்கான நல்ல வழிமுறைகள் இருக்கின்றன என்பதுதான். ஆனால், இதில் கெட்ட செய்தி என்னவென்றால் இதுபோன்ற புத்திசாலித்தனமான அமைப்புகளைப் பொறிவைத்துப் பிடிப்பதற்கான வழிமுறைகளுக்குப் போதிய அளவு நிதி உலகெங்கும் செலவிடப்படுவதில்லை. இதற்கான தேவையைக் கூட இன்னும் பெரிதளவில் யாரும் உணரவில்லை. ஃபோக்ஸ்வாகன் பிரச்சினையில் நாமெல்லாம் சினம்கொள்வது சரியே. ஆனால், இன்னொரு விஷயத்தை நாம் மறந்துவிட்டோம்.
மென்பொருட்களுக்கு நம் அன்றாட வாழ்க்கையில் வானளாவிய அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறோம். அது நம் கைபேசியாக இருந்தாலும் சரி, காராக இருந்தாலும் சரி. இவ்வளவு அதிகாரத்தைக் கொடுத்த நாம் அவற்றின் மீது ஒரு கண் வைக்க மறந்துவிட்டோம். ஹேக்கர்களைப் பற்றியும் தரவுகள் கசிவதைப் பற்றியும் நமக்குக் கவலை இருந்தாலும் கொஞ்சம் கூடப் பின்விளைவுகளைப் பற்றி யோசித்துப்பார்க்காமல் நம் வாழ்க்கையின் புதிய புதிய தளங்களில் மென்பொருட்களை நுழைத்துக்கொண்டிருக்கிறோமே!
கார்ப்பரேட் ஏமாற்றுவேலை என்பது நமக்குப் புதிய விஷயமில்லை. இதனால்தான், பெயிண்டுகளில் காரீயத்திலிருந்து, உணவில் பூச்சிக்கொல்லிப் படிவு வரை பல்வேறு விஷயங்களையும் கண்காணிப்பதற்கு அமைப்புகளை உருவாக்கியிருக்கிறோம். இதுபோன்ற கண்காணிப்பு, கட்டுப்பாடு அமைப்புகளை மென்பொருள்சார் பொருட்களுக்கும் ஏற்படுத்தவில்லையென்றால் ஃபோக்ஸ்வாகன் விஷயம் இதுபோன்ற ஏமாற்று வேலைகளில் முதலாவதாகவோ கடைசியானதாகவோ இருக்காது.
மேலும் தொடரவே செய்யும். அதிலும் தங்கள் தயாரிப்புகளின் செயல்பாட்டை மிகைப்படுத்திக் காட்டுவதும், தரக்கட்டுப்பாட்டு சோதனைகளை ஏமாற்றுவதுமான மென்பொருள்களுக்காகக் கார்ப்பொரேட்டுகள் அதிக அளவில் செலவுசெய்யும் இந்தக் காலகட்டத்தில் கட்டுப்பாட்டு அமைப்புகள் மிகவும் அவசியம். அத்தியாவசியமான தரஅளவீடுகளை ஏமாற்றுவது என்பது ஏதோ சிறு தவறு என்பது போலல்ல என்பதையும் நாம் உணர வேண்டும்.
கட்டுமான விதிமுறைகள்
1999-ல் துருக்கியில் நடந்த பெரும் நிலநடுக்கத்துக்குப் பிறகு அங்கு தாறுமாறாகச் சிதைந்துபோன தெருக்களின் வழியே நடந்துபோனபோது ஒரு விஷயம் தெரிந்தது: சில கட்டிடங்கள் நெளிந்து, வளைந்து சிதைந்து நின்றிருக்க அருகிலுள்ள மற்றக் கட்டிடங்கள் ஏதும் ஆகாமல் நின்றிருந்தன. கட்டுமானப் பொருட்களில், காங்கிரீட்டுகளில் கட்டுநர்கள் ஏமாற்றியிருந்ததால்தான் இந்த நிலை. அதிலும் ஒவ்வொரு தூண்களையும் இணைக்கும் கம்பிகள் அவற்றில் இல்லை. சமீபத்தில் சிலே நாட்டில் சக்தி மிகுந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது.
அங்கே கட்டுமான விஷயத்தில் விதிமுறைகளெல்லாம் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. ஆகவேதான், இந்த நில நடுக்கத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை அங்கே 20-ஐத் தாண்டவில்லை. 1999-ல் துருக்கியில் நிகழ்ந்த நிலநடுக்கத்திலோ 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். காங்கிரீட்டுகள் இடிந்து விழுந்து தூசு கிளப்புவதுபோல ஏமாற்றும் மென்பொருட்கள் தடயம் எதையும் வெளிக்காட்டுவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஃபோக்ஸ்வாகன் கார்கள் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை ஏமாற்றிவந்திருக்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும்.
முதல்முறையல்ல
ஃபோக்ஸ்வாகனின் ஏமாற்று வேலையைக் கடந்த ஆண்டே மேற்கு வர்ஜினியா பல்கலைக்கழகத்தின் ஆய்வகம் கண்டுபிடித்துச்சொல்லியிருக்கிறது. ஆனால், கார் நிறுவனத்தினர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆய்வகத்தின் சோதனைகளில் குறை இருக்கிறது என்றும், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட கார்களெல்லாம் முறையாக ஓட்டப்படவில்லை என்றும் சொன்னார்கள். இப்படியே ஒரு ஆண்டுக்கு ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள். ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் உள்ள இரண்டு சிறிய ஆய்வகங்களைச் சேர்ந்த திறன்மிக்க, விடாப்பிடியான வல்லுநர்கள் மட்டும் இல்லையென்றால் ஃபோக்ஸ்வாகன் மேலும் மேலும் ஏமாற்றிக்கொண்டுதான் இருந்திருப்பார்கள்.
‘ஏமாற்றும் பொறி’யைப் பயன்படுத்தியதற்காகக் கார் நிறுவனமொன்று கையும் களவுமாகப் பிடிபட்டிருப்பது இது முதல்முறையல்ல. ஈகோனோலைன் வேன்கள், ஆய்வுகளின்போது மட்டும் குறைவான அளவு புகையை வெளியிட்டது மட்டுமல்லாமல், நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் செல்லும்போது மாசுபாட்டு உச்சவரம்பைத் தாண்டியதனாலும் ஃபோர்டு நிறுவனத்துக்கு 1998-ல் 78 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 51,60,74,910) அபராதம் விதிக்கப்பட்டது. அதே ஆண்டு ஹோண்டா நிறுவனமும் கையும் களவுமாகப் பிடிபட்டது.
அதிக அளவில் மாசு வெளியீடு இருந்தால் எச்சரிக்கும் பொறியைச் செயலிழக்க வைத்ததற்காக 1 கோடியே 71 லட்சம் டாலர்கள் (ரூ. 113,13,94,995) அபராதம் விதிக்கப்பட்டது. 1995-ல் ஜெனரல் மோட்டாரும் பிடிபட்டது. அதன் காடிலா கார்கள் சிலவற்றில் மாசு வெளிப்பாட்டு உச்சவரம்பை ரகசியமாக மீறுவதற்கு உதவும் ‘ஏமாற்றும் பொறிகள்’ கண்டுபிடிக்கப்பட்டு 1 கோடியே 10 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 77,41,12,365) அபராதம் விதிக்கப்பட்டது.
இதுபோன்ற ஏமாற்றும் பொறிகளுக்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதம் எவ்வளவு தெரியுமா? 8 கோடியே 34 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 551,80,31,663). வாங்கிக்கட்டிக்கொண்ட புண்ணியவான்கள் வேறு யாருமல்ல; கேட்டர்பில்லர், வோல்வோ, ரெனோ மற்றும் சில கார் தயாரிப்பாளர்கள்தான்.
அமெரிக்காவில் தரக்கட்டுப்பாட்டு வழிமுறைகள் திறம்படப் பயன்படுத்தப்படுவது எங்குத் தெரியுமா? கேசினோ என்று அழைக்கப்படும் சூதாட்ட விடுதிகளில்தான். உயிர்காக்கும் மருத்துவத் துறை, உயிரோடு விளையாடும் வாகனத் துறை போன்றவற்றைவிட கேசினோக்களில் சிறந்த தரக்கட்டுப்பாட்டு வழிமுறைகள் பின்பற்றப்படுவது துரதிர்ஷ்டமே. கணினியின் ஆதிக்கம் சமூகத்தில் அசுர வேகத்தில் பரவிக்கொண்டுவரும் வேளையில் நமது கட்டுப்பாட்டு முறைகளையும், ஆய்வு அமைப்புகளையும் முறையாகப் பராமரித்துவருவது அவசியம். அப்போதுதான் காற்றிலிருந்து நம் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் தூய்மையும் பாதுகாப்பும் உத்திரவாதமாகும்.
-ஜெய்னெப் டூஃபெக்ஸி, வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தின்உதவிப் பேராசிரியர்
C ‘தி நியூயார்க் டைம்ஸ்’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை
‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/VFBpH9
இது ஓர் ஆரம்பமே. இவை போன்ற பல நிகழ்வுகளை நாம் எதிர்கொள்ள நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
ReplyDelete