Tuesday, January 16, 2024

வாழ்த்துகள்! நன்றி! வேண்டுகோள்!

 


நவீனக் கவிதைகளுக்குப் பொது வெளியில் இதுபோன்ற முன்னெடுப்புகள் சமீப காலமாக செய்யப்பட்டுவருவது மிகவும் வரவேற்புக்குரியது. கலந்துகொள்ளும் அத்தனை கவிஞர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துகள். 

நவீனக் கவிதைக்கு  உள்ளே நான் வரும்போது காலச்சுவட்டில்தான் என் முதல் கவிதை வெளியானது. அதற்கு மனுஷ்ய புத்திரன் பிரதான காரணம். அந்தக் கவிதை வெளியாகி இந்த ஆண்டுடன் 25ஆம் ஆண்டு. அப்போதிலிருந்து இதுவரை எந்தக் கவியரங்கத்துக்கும் நான்  அழைக்கப்படாததும் ஒரு சாதனை. நூறு கவிஞர்களின் கவியரங்கமாக இருந்தாலும் சரி, லட்சம் கவிஞர்களின் கவியரங்கமாக இருந்தாலும் சரி. முன்பெல்லாம் இதை ஒரு வகை இலக்கியத் தீண்டாமையோ என்று நினைத்தது உண்டு. தாங்கள் ஒதுக்கப்படுகிறோம், புறக்கணிக்கப்படுகிறோம், தமக்கெதிராக சதி வேலை நடக்கின்றது என்று புலம்பும் பலரும் தங்களுக்கு இடமும் வாய்ப்பும் கிடைக்கும் போதெல்லாம் எப்படியெல்லாம் நடந்துகொள்வார்கள் என்பதில் ரகசியம் ஏதுமில்லை. 

போன ஆண்டு நடந்த கவியரங்கத்தின் போது நண்பர் ஒருவர் என் கைபேசி எண்ணுக்கு அழைத்து வருத்தப்பட்டார். அவரவருக்கு ஒரு ரசனை, அவரவருக்கு ஒரு தெரிவு இருக்கும். இதில் வருத்தப்பட ஏதுமில்லை என்றேன். ஆனால் இந்த Benefit of the doubtஐ நாம் மற்றவருக்கு வழங்க மாட்டோம். என்னை யாரும் எந்தக் கவியரங்கத்துக்கும் அழைத்ததில்லை. ஒருவேளை என் கவிதைகள் நன்றாக இல்லாமல் இருக்கலாம், அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அவ்வளவுதான்.

இதுவரை அழைக்காதவர்களுக்கு உண்மையில் மனமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன். இனிமேலும் அப்படி அழைக்கவே வேண்டாம் என்றும் மனதார வேண்டுகோள் விடுக்கிறேன். 

சமீபத்திய எனது பதிவொன்றுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறிய ஜீரோ டிகிரி காயத்ரி 'cause some hurricanes' என்று கூறினார்.  அதை நான் பிரேக்கிங் பேட் பாணியில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்:  'I will not cause any hurricanes. I'll be the hurricane. If that is not possible I'll not put on any airs❤❤❤'

No comments:

Post a Comment