Thursday, March 2, 2017

என்றும் காந்தி! 21. நடை நிகழ்த்திய அற்புதங்கள்


ஆசை

காந்தி தென்னாப்பிரிக்காவிலேயே உடல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தன் நடையால் பலன்பெற்றார். 1913-ல் காந்தியும் அவரது சகாக்களும் தென்னாப்பிரிக்க இந்தியர்களும் நடத்தியமாபெரும் அணிவகுப்புஎத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். இந்தியாவிலும் அவருக்கு நடை கைகொடுத்தது, மக்களுடன் உறாவாடவும் அரசியல் ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்தவும். இந்தியாவுக்கு வந்த பிறகும் கூடுமான வரை பல இடங்களுக்கும் காந்தி நடந்தே சென்றார். சம்பாரண் சத்தியாகிரகத்தின்போது பல இடங்களுக்கும் நடந்தே சென்று அவுரி விவசாயிகளிடம் கலந்துரையாடினார். எனினும் காந்தியின் நடையின் சக்தியை உலகமே கண்டுகொண்டது உப்பு சத்தியாகிரகத்தின் போதுதான்!

உப்பு நடை

சபர்மதி ஆசிரமத்துக்கும் தண்டிக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 280 கி.மீ. உப்பு சத்தியாகிரகத்துக்கான யாத்திரையைத் தனது 78 சீடர்களுடன் தொடங்கிய காந்திக்கு அப்போது வயது 60. 1930, மார்ச் 12-ல் தொடங்கிய யாத்திரை ஏப்ரல் 5 அன்று தண்டி கடற்கரையில் காந்தி தனது கையில் உப்பை ஏந்துவதுடன் முடிவுக்கு வந்தது. மொத்தம் 24 நாட்கள் நீடித்த யாத்திரை அது. அநேகமாக அவருடன் நடந்தவர்கள் அனைவரையும்விட வயதில் மூத்தவர் அவரே. எனினும் அவரது நடை வேகத்துக்கு ஈடுகொடுக்க அவர்களில் யாராலும் முடியவில்லை. இத்தனைக்கும் அப்போது காலில் மூட்டு சம்பந்தமான பிரச்சினையால் அவதிப்பட்டவர் காந்தி. உப்பு சத்தியாகிரகத்தைப் பற்றி உலக நாளேடுகள் பலவும் எழுதியதால் இந்தியர்களின் போராட்டத்துக்கு உலகளாவிய ஆதரவும் கிடைத்தது. ஒரு நடை, இந்தியாவில் ஆங்கிலேய அரசாங்கத்தின் அஸ்திவாரத்தை இப்படியாக அசைத்துப்போட்டது. (உப்பு சத்தியாகிரகத்தைப் பற்றிப் பிறகு தனி அத்தியாயங்களில் பார்க்கவிருக்கிறோம்.)

காந்தி படத்தில் சுவையான காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். காந்தியின் யாத்திரையைப் பின்தொடர்ந்து ஒரு பத்திரிகையாளர் வந்துகொண்டிருப்பார். படத்தில் அவர் பெயர் வின்செண்ட் வாக்கர் (உப்பு சத்தியாகிரகத்தைப் பற்றி பத்திரிகையில் எழுதி அதை உலகமெங்கும் அறியச் செய்த வெப் மில்லரின் பாத்திரத்துக்குச் சூட்டிய கற்பனைப் பெயர்தான் அது.) வாக்கரிடம் காந்தி கேட்பார், ‘செய்திக் கட்டுரைக்காக மொத்த தூரமும் நடப்பதென்று முடிவுசெய்துவிட்டீர்களா?’. அதற்கு வாக்கர், ‘செய்திகட்டுரை கிடைப்பதற்கு எனக்குள்ள ஒரே வழி அதுதான். அதுமட்டுமல்லாமல் என் பெயர் வாக்கர் (நடப்பவர்)’ என்கிறார். காந்தி அதற்குநானும் வாக்கர்தான்என்று பதிலளிப்பார். இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் வின்செண்ட் வாக்கர், ‘ என் பெயர் வாக்கர், தமிழில் சொல்வதென்றால் நடராஜன்என்பார். அதற்கு காந்தி, ‘நானும் நடராஜன்தான்என்பார்.

ஹரிஜன் யாத்திரை

அதேபோல் காந்தியின் ஹரிஜன் யாத்திரையும் மிக முக்கியமான ஒன்று. 1933 நவம்பர் 7-ல் தொடங்கி அடுத்த பத்து மாதங்கள் இந்தியாவின் பல இடங்களும் நீண்ட யாத்திரை அது. பல இடங்களுக்கு காந்தி நடந்தே சென்றார். இடையில் ஜனவரி 1934-ல் பிஹாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகள் பலவற்றுக்கும் காந்தி நடந்தே சென்றார். ஒருமுறை, “நீங்கள் கடைப்பிடிக்கும் தீண்டாமை என்ற கொடும் பாவத்தின் காரணமாகத்தான் நிலநடுக்கம் ஏற்பட்டதுஎன்று காந்தி சொல்லிவிட அது பெரிய சர்ச்சைக்குள்ளானது.

ஹரிஜன் யாத்திரையின்போது பல இடங்களில் ஆதிக்க சாதியினரின் கடும் எதிர்ப்பை காந்தி சந்தித்தார். எனினும் தாழ்த்தப்பட்ட மக்கள் பல இடங்களில் மலர்தூவி காந்தியை வரவேற்றார்கள். இந்த யாத்திரையின் போதுதான் காந்தியின் மீதான முதல் கொலைமுயற்சி மேற்கொள்ளப்பட்டுத் தோல்வியில் முடிந்தது.

நவகாளி யாத்திரை

உப்பு சத்தியாகிரகத்தைப் போலவே மிக முக்கியமானதொரு நடை என்றால் அது நவகாளி யாத்திரைதான். 1946-ல் ஜின்னா நேரடி நடவடிக்கையை அறிவித்த பிறகு வங்காளத்தில் பெரும் மதக் கலவரம் வெடித்தது. முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இந்துக்குள் பெருமளவில் கொன்றுகுவிக்கப்பட்டனர். அதேபோல் பிஹாரில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் முஸ்லீம்கள் கொன்றுகுவிக்கப்பட்டனர். இருதரப்பினருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் எங்கெங்கும் கலவரம் மூண்டது. ஆங்கிலேய அரசின் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

தன் வாழ்நாள் முழுவதும் இந்து-முஸ்லீம் ஒற்றுமையைத் தன் உயிர்போல் கருதிவந்த காந்திக்கு இந்தக் கலவரங்கள் பெரும் துயரத்தை அளித்தன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக 1946, நவம்பர் 7 அன்று காந்தி (அப்போது 78 வயது) நவகாளிக்குப் புறப்பட்டார். அங்கு ஒவ்வொரு கிராமமாக நடந்துசென்று இந்து-முஸ்லீம்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்தினார். காந்தி நடந்துசென்ற வழிகள் பலவற்றில் நரகல் வீசப்பட்டது. அதையெல்லாம் அகற்றியபடி காந்தி முன்சென்றார். தீயாய் எரிந்துகொண்டிருந்த மதக் கலவரங்களை அணைக்க முடியவில்லை என்றாலும் கணிசமான அளவுக்கு நிலைமையை காந்தியும் அவரது தொண்டர்களும் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.

நவகாளியை முடித்துவிட்டு, முஸ்லீம்கள் பெருமளவில் பாதிக்கப்பட்ட பிஹார் பகுதிக்கும் சென்ற காந்தி கிராமம் கிராமமாக நடந்து அங்குள்ள இந்துக்களிடம் இறைஞ்சினார். இஸ்லாமியருக்கு இழைத்த கொடுமைகளுக்குப் பரிகாரம் தேடுங்கள் என்று வலியுறுத்தினார். வீடுவாசல் இழந்த இஸ்லாமியருக்காக நிதி திரட்டினார். ஏராளமான பெண்கள், காந்தி கேட்டார் என்பதற்காகத் தங்கள் நகைகளை அப்படியே கழற்றிக் கொடுத்த நிகழ்வுகளும் அரங்கேறின. ஒரு நடை என்ன செய்யும் என்ற கேள்வி நமக்கு எழலாம். அதற்கான பதிலாக காந்தியின் நவகாளி யாத்திரையையும் பிஹார் யாத்திரையையும் உதாரணம் காட்டலாம். அந்த அளவுக்கு அற்புதங்களை நிகழ்த்திய நடை காந்தியின் நடை!

மோட்டார் காரை வெறுத்த காந்தி

நீண்ட தூரப் பயணங்களுக்கு மட்டுமே ரயிலையும் மிக மிக அரிதாக காரையும் காந்தி தேர்ந்தெடுத்தார். ரு முறை காந்தியை அழைத்துச் சென்ற கார், பதம்சிங் என்ற மனிதர் மீது மோதிவிட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இறக்கும் தருவாயில் இருந்த பதம்சிங்கை காந்தி பார்க்கச் சென்றார். “ நான் இறந்துவிட்டால் உங்கள் ஆசிர்வாதம் என் மகனுக்குக் கிடைக்க வேண்டும்என்று அவர் காந்தியைக் கேட்டுக்கொண்டார். “உங்கள் மகனை எனது ஆசிரமத்துக்குக் கொண்டுசென்று நான் பராமரிக்கிறேன்என்றார் காந்தி. “இல்லையில்லை, உங்கள் ஆசிர்வாதம் இருந்தால் மட்டும் போதும்என்று பதம்சிங் சொல்லிவிட்டார். பாவம், அவர் உயிர்பிழைக்கவில்லை. இந்த மரணத்தைப் பற்றி காந்தி தனதுயங் இந்தியாஇதழில் எழுதியபோது, “பதம்சிங்கின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து நான் மீளவே இல்லை. நடந்தே போகலாம் என்றோ, கூட்டம் கலையும்வரை நடைவேகத்திலேயே மோட்டார் கார் செல்ல வேண்டும் என்றோ நான் வலியுறுத்தியிருக்க வேண்டும். தொடர்ச்சியான மோட்டார் பயணம் என்னையும் கடுமையாக ஆக்கிவிட்டதுவாகனங்களில் செல்லக் கூடாது என்று சொன்னாலும் அதை என்னால் சீராகக் கடைப்பிடிக்க முடியவில்லைதான். எனினும், வாகனங்கள் எவ்வளவு சாதகமாக இருந்தாலும் அது இயல்பற்ற போக்குவரத்து முறை என்றே நான் கருதுகிறேன். ஆகவே, வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள்வேகமே வாழ்வின் உச்சபட்ச லட்சியம்என்று கருதாமல் மெதுவாகவே செல்ல வேண்டும். கடைசியில், வேகத்தால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை.”

உலகமே வேகத்தை இறுதி இலக்காகக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும்போது காந்தியின் நடை நமது நிதானமின்மையை நமக்கு நினைவுறுத்துகிறது. நடை என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறை மறைமுகமாகவே நேரடியாகவோ ஒரு பெரும் அரசியல் செயல்பாடாகவும் உருவெடுக்கிறது. அந்த அரசியல் செயல்பாட்டின் உச்சபட்ச உதாரணமாக மனித குல வரலாற்றில் ஒருவரைச் சொல்ல வேண்டும் என்றால் நிச்சயம் அவர் காந்தியாகத்தான் இருக்க வேண்டும்!

- (நாளை…)
- நன்றி: ‘தி இந்து’ (https://goo.gl/p0D63l

No comments:

Post a Comment