அண்ணா சதுக்கத்திலிருந்து
அந்த இருட்டில்
என்னோடு இணையாகப்
பறக்கிறது ஒரு கூகை
அதுதான் பறக்கிறது
நான் இல்லை
இருட்டைக் கலைக்கும்
நீள் சிறகுகளின் வெண்மை
முன்செல் பைக்கின்
பின்அமர் பெண்ணின்
கண்சென்று தீண்ட
பார்க்கிறாள் பக்கவாட்டில்
அவளைப் போலத் தெரியாமையில் பார்க்க
வாய்க்கவில்லை எனக்கு
மெரினாவின் சிறு மரங்கள்
தவிர்த்துப் போய்
உட்கார்ந்துகொண்டது கூகை
கண்ணகி தலைமேல்
கூகை பார்க்க
சற்று நிற்கிறேன்
அந்த இருளில் கண்ணகியைப் பார்க்க
யாருக்கும் பயமாகத்தான் இருக்கும்
‘தேரா மன்னா’ என்று எக்கணமும்
சொல்லிவிடுவாளோ என்று
உண்மையில் அச்சம் தோன்றியது
தேரா மன்னனோ
கண்ணகியின் தலைமேல் உட்கார்ந்திருந்தான்
ஒரே திசை நோக்கி நீண்டிருந்தன
கண்ணகியின் கையும்
தேரா மன்னனின் பிட்டமும்
No comments:
Post a Comment