ஆசை
சம்பாரண் ஜில்லாவின் திர்ஹத் சரக கமிஷனர், ‘பிஹார் தோட்ட முதலாளிகள் சங்க’த் தலைவர் ஆகிய இருவரையும் காந்தி சென்று சந்தித்தார். இருவரும் காந்தியை அந்நியராகக் கருதி அவருடன் விரோத பாவத்திலேயே பேசினார்கள். காந்தி, தான் அமைதியான வழியில் தீர்வுகாண்பதற்காக
விசாரணை நடத்தவே வந்திருப்பதாக அவர்களிடம் கூறினார். அப்போதும் அவர்கள் சமாதானமடையவில்லை.
அந்தச் சந்திப்புகளுக்குப் பிறகு காந்தி தனது சகாக்களை எச்சரித்தார். கூடிய சீக்கிரத்தில் தம் நடவடிக்கைகளுக்கு
முட்டுக்கட்டை போடுவதற்கு அரசாங்கமும் தோட்ட முதலாளிகளும் முயல்வார்கள் என்பதால் அதற்கு முன்னதாக நிறைய மக்களைச் சந்தித்து அவர்களின் கூற்றுகளைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்றார்.
முஸாஃபர்பூரிலிருந்து காந்தியும் அவரது சகாக்களும் மோத்திஹரி என்று ஊருக்குச் சென்றார்கள். அங்கு கோரக் பிரசாத் என்ற வழக்கறிஞரின் வீட்டில் காந்தி தங்கினார். அப்போது ஜசௌலிப்பட்டி என்ற ஊரில் ஒரு விவசாயியை முதலாளிகளின் ஆட்கள் அடித்து நொறுக்கியதுடன் அவரின் உடமைகளையும் சேதப்படுத்திவிட்டார்கள் என்ற தகவல் காந்தியை வந்தடைந்தது. அந்த விவசாயியைச் சந்திப்பதற்காக காந்தியும் இன்னொருவரும் அந்தப் பிரதேசத்தின் போக்குவரத்துக்கு ஒரே வாகனமாக இருந்த யானை ஒன்றின்மீது சவாரி செய்தார்கள். போகும் வழியில் இருந்த கிராமங்களின் பரிதாப நிலையை காந்தி பார்த்துக்கொண்டே சென்றார். பாதி வழியில் காந்தியை நோக்கி போலிஸ்காரர் ஒருவர் சைக்கிளில் வந்தார். காந்தியைத் தடுத்து நிறுத்தி அவரது உயர் அதிகாரியிடம் அழைத்துச் சென்றார் அந்த போலீஸ்காரர். அந்த உயர் அதிகாரி காந்தியிடம் ஒரு நோட்டீஸைத் தந்தார். சம்பாரணை விட்டு காந்தி உடனே வெளியேற வேண்டும் என்று அந்த ஜில்லாவின் மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவு அது.
மாஜிஸ்திரேட்டின்
உத்தரவைத் தான் பின்பற்றப் போவதில்லை என்றும் அமைதியான வழியில் விசாரணை நடத்தும் தன்னால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்றும் மாஜிஸ்திரேட்டின் உத்தரவை மீறுவதால் தனக்கு எந்தத் தண்டனை வழங்கினாலும் அதை ஏற்கத் தயார் என்றும் காந்தி பதில் அனுப்பினார். பதிலனுப்பிவிட்டுத் தன் இருப்பிடத்துக்குத்
திரும்பிய காந்தி, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் பண்டித மாளவியா, மஷருல் ஹக், ஆண்ட்ரூஸ் உள்ளிட்டோருக்குத் தகவல் தெரிவித்தார். தன் சகாக்களுக்குத் தேவையான அறிவுரைகளையும் உத்தரவுகளையும் காந்தி வழங்கினார்.
மறுநாள் விவசாயிகளின் கூற்றுகளைப் பதிவுசெய்யும் பணி தொடங்கியது. ஏராளமான விவசாயிகள் முண்டியடித்துக்கொண்டு அங்கு வந்திருந்தார்கள். அந்தப் பணியைக் கண்காணிக்க ஒரு போலீஸ்காரரும் அங்கு வந்திருந்தார். தங்கள் கூற்றுகளைப் பதிவுசெய்யும் விவசாயிகளின் பெயர்களையெல்லாம் அந்த போலீஸ்காரர் குறித்துக்கொண்டிருந்தார்.
இந்தியாவின் பல்வேறு மூலைகளிலிருந்தும் காந்திக்கு ஆதரவுத் தந்திகள் வந்தன. பண்டித மாளவியா தனது இந்துப் பல்கலைக்கழகப் பணிகளை உதறிவிட்டு அங்கு வரத் தயாராக இருந்தார். அதற்குத் தற்போது அவசியமில்லை என்று காந்தி மறுத்துவிட்டார்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து போலக் புறப்பட்டுவிட்டார். மற்ற பலரும் அங்கே காந்திக்குப் பக்கபலமாக இருப்பதற்காக வரத் தொடங்கிவிட்டார்கள்.
கைதுசெய்யப்படுவோம்
என்று எதிர்பார்த்தும் எந்த சம்மனும் வராததால் காந்தி அந்த ஜில்லா மாஜிஸ்திரேட்டுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதினார்: “அரசுத் தரப்புக்குத் தெரியாமல் எதையும் செய்யும் விருப்பம் எனக்கு இல்லாததால் (நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நாளைக்கு சம்மன் ஏதும் வராது என்று கருதிக்கொண்டு) நான் சாம்பூருக்கும் அதைச் சுற்றியுள்ள ஊருக்கும் நாளைக் காலை செல்கிறேன்… நேற்று எங்களை ஒரு போலீஸ்காரர் பின்தொடர்ந்ததை நான் அறிவேன். நாங்கள் எதையும் வெளிப்படையாகவெ செய்வோம் என்பதால் போலீஸ்காரர் எங்களுடன் எப்போதும் இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.” (Gandhi in Champaran, D.G.
Tendulkar)
என்ன ஒரு விசித்திரமான போராட்டக்காரர் காந்தி! மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு அரசாங்கத்தின் கையாள் போன்று செயல்படுபவர் போன்றே தெரியும். ஆனால், ஒரு செயல்பாட்டின் போக்கை எதிராளியிடம் விட்டுவிடாமல் தன் வசமே வைத்திருப்பதற்கான
உத்தி. அது மட்டுமல்லாமல், வெளிப்படைத்தன்மை, எதிராளியின் மீது குறைந்தபட்ச நல்லெண்ணமாவது கொண்டிருப்பது போன்றவற்றால் சமரசத்தை நோக்கி எதிராளியை ஈர்க்கும் உத்தியும் கூட. காந்தியின் இந்த உத்தி குறித்து காந்தி சுடப்பட்டபோது சம்பவ இடத்தில் இருந்த எழுத்தாளர் வின்செண்ட் ஷீன் இப்படி எழுதுகிறார்: “காந்தி தென்னாப்பிரிக்காவில் உருவாக்கி, பின்னர் இந்தியாவில் பெருமளவில் பின்பற்றத் துவங்கிய சத்தியாகிரகத்தின் முக்கிய சகா போன்று கூடவே தொடர்ந்த விஷயம் என்னவென்றால் எதிராளிக்கு விசுவாசமாக இருப்பது என்பதே. நீ என்ன செய்யப்போகிறாய் என்பதை உனது எதிராளியிடம் தெளிவாகக் கூறிவிட வேண்டும்; தவிர, அவ்வாறு கூறியதிலிருந்து சிறிதளவும் பிறழாமல் இருக்க வேண்டும், எதிராளியின் பதில் நடவடிக்கை இப்படித்தான் இருக்கும் என்பதை முன்னமே நீ அறிந்திருப்பதால், மேலும் அதைத் தெரிந்தே, நடவடிக்கையை மேற்கொள்வதால், எதிராளியின் நடவடிக்கை விளைவுகளை ஏற்க வேண்டும். (தன்னுடைய நடவடிக்கைகளுக்கு அதிகபட்ச தண்டனை கேட்பது இந்த வகையைச் சேர்ந்ததுதான்). நீ ஒருபோதும் உன்னுடைய எதிராளியை ஏமாற்றமடையச் செய்யக்கூடாது; அல்லது அவனுடைய நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது. நீ என்ன நினைத்திருக்கிறாய்
என்பதை அவன் எப்பொழுதும், நன்றாக முழுவதும் அறிந்திருக்க வேண்டும்.”
பதக்கத்தைத் திருப்பியளிக்கும் முடிவு!
காந்தியின் கடிதம் கிடைக்கப்பெற்ற மாஜிஸ்திரேட், காந்திக்குத் தான் சம்மன் அனுப்பவிருப்பதாகவும் அதனால் மோத்திஹரியை விட்டு எங்கும் செல்ல வேண்டாம் என்றும் பதில் அனுப்பினார். காந்திக்கு சம்மன் வந்தது. துணைச்சரக அதிகாரியின் முன் மறுநாள் ஆஜராக வேண்டும் என்று சம்மன் வந்தது. ஆகையால், அன்று இரவு முழுவதும் காந்தி முன்தயாரிப்புகளில் ஈடுபட்டார். நீதிமன்றத்தில் தான் வாசிக்க வேண்டிய அறிக்கையைத் தயார்செய்தார். சம்பாரண் விவசாயிகளின் துயர் குறித்து வைஸ்ராய் செம்ஸ்ஃபோர்டுக்குக் கடிதம் எழுதினார். மக்களுக்காகச் சேவை ஆற்றும் தன்னை அரசு நம்பாதது குறித்து அந்தக் கடிதத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது நடந்த போர்களில் மருத்துவக் குழுக்கள் அமைத்து ஆங்கிலேயருக்கு உதவியதற்காக இந்தியா வந்த பிறகு காந்திக்கு அளிக்கப்பட்ட ‘கெய்ஸர்-இ-ஹிந்த்’ என்ற பதக்கத்தைத் தான் திருப்பியளிக்கப்போவதாகவும் காந்தி அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்.
நீதிமன்றத்தில் காந்தியின் அறிக்கை…
மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்குச் சென்ற காந்தியுடன் ஆயிரக் கணக்கான விவசாயிகள் சேர்ந்துகொண்டனர். மாஜிஸ்திரேட்டும் பிற அதிகாரிகளும் அங்கு திரண்ட கூட்டத்தைக் கண்டு மலைத்துப் போனார்கள். ஆயுதம் தாங்கிய போலீஸார் அங்கு திரண்டிருந்த மக்களைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார்கள். நீதிமன்றத்தில் காந்தியிடம், “உங்களுக்கு வழக்காட யாரும் இல்லையா?” என்று மாஜிஸ்திரேட் கேட்க, “யாரும் இல்லை” என்று பதிலளித்தார் காந்தி.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தைத் தொடங்கினார். ஏப்ரல்-16 அன்று இரவுக்குள் சம்பாரணை விட்டு காந்தி வெளியேறும்படி உத்தரவு இடப்பட்டும் அவர் அப்படி வெளியேறாததால் சட்டத்தை மீறியவராகிறார் என்று அரசு வழக்கறிஞர் குற்றச்சாட்டை வைத்தார். அந்த உத்தரவுக்குத் தான் அப்போதே பதிலளித்துவிட்டதாக காந்தி மறுமொழி கூறினார். வழக்கு விசாரணையை ஒத்துவைக்கும்படி மாஜிஸ்திரேட்டை அரசு வழக்கறிஞர் கோரினார். உத்தரவைத் மதிக்காத குற்றத்தைத் தான் ஒப்புக்கொண்டுவிட்டபடியால் விசாரணையை ஒத்திவைக்காமல் தனக்குத் தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொண்ட காந்தி, தான் கொண்டுவந்திருந்த அறிக்கையை நீதிமன்றத்தில் வாசித்தார்.
அரசின் உத்தரவைத் தான் மதிக்காததற்கு என்ன காரணம் என்பதை அந்த அறிக்கையில் வாசித்தார். மானுட சேவையிலும் தேசிய சேவையிலும் ஈடுபடும் நோக்கத்தில்தான் தான் இந்தியாவுக்கு வந்ததாகவும் சம்பாரண் விவசாயிகள் தங்கள் பிரச்சினையை முன்வைத்து அதைத் தீர்க்கும்படி கேட்டுக்கொண்டதால் சம்பாரணுக்குத் தான் வந்ததாகவும் காந்தி கூறினார். விவசாயிகள் தரப்பு, தோட்ட முதலாளிகள் தரப்பு இரண்டையும் கலந்தாலோசித்து சுமுகமான தீர்வை ஏற்படுத்தும் முயற்சியில்தான் தான் ஈடுபட்டேனே ஒழிய அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கம் ஏதும் தனக்குக் கிடையாது என்று காந்தி கூறினார். சட்டத்தை மதிக்கும் குடிமகனாகத் தான் இருந்தாலும் விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு வந்துவிட்டுப் பாதியிலேயே அவர்களைக் கைவிட்டுவிட்டுப் போவதற்குத் தன் மனசாட்சி இடம்கொடுக்கவில்லை என்றும் கூறினார். தனக்கு இடப்பட்ட உத்தரவுக்குத் தான் கீழ்ப்படியாததற்குக் காரணம் சட்டத்தின் அதிகாரத்தை உதாசீனப்படுத்தும் நோக்கம் அல்ல, எல்லா சட்டங்களுக்கும் மேலானதான மனசாட்சியின் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று நோக்கமே காரணம் என்றார்.
காந்தி உரையாற்றிய பிறகு, “குற்றத்தை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று மாஜிஸ்திரேட் கேட்டார். “ஆம்” என்று பதிலளித்தார் காந்தி. சம்பாரணை விட்டு காந்தி வெளியேறுவதற்கு ஒப்புக்கொண்டு, இனி அங்கே திரும்பி வர மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்தால் அவர் மீதான வழக்கு திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும் என்று மாஜிஸ்திரேட் கூறினார். “அது மட்டும் நடக்காது. இந்த முறை அல்ல, எத்தனை முறை என்னைச் சிறையில் இட்டாலும் சிறைவாசம் முடிந்து நான் சம்பாரணுக்குத்தான் செல்வேன். அதுதான் எனது வசிப்பிடம்” என்று அழுத்தம் திருத்தமாக பதில் கூறினார் காந்தி.
மாஜிஸ்திரேட் தனது தீர்ப்பை மூன்று நாட்கள் கழித்து, அதாவது 21-ம் தேதி, வழங்கப் போவதாக அறிவித்து, ஜாமீன் தொகையாக ரூ. 100 கட்டினால் அதுவரை காந்தி வெளியில் இருக்கலாம் என்றார். அதற்கு காந்தி ஒப்புக்கொள்ளவில்லை. அந்த மூன்று நாட்கள் மட்டும் வேறு எந்த கிராமத்துக்கும் போகக் கூடாது என்ற நிபந்தனையை மட்டும் ஏற்றுக்கொண்டு காந்தி மோத்திஹரிக்குத் திரும்பினார்.
எதிர்பாராதது…
தன் இருப்பிடத்துக்குத் திரும்பிய காந்தி நீதிமன்ற விசாரணை குறித்துத் தன் நண்பர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் தகவல் அனுப்பினார். போராட்டங்கள் எதிலும் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
ஒருவர் பின் ஒருவராக காந்தியின் நண்பர்களில் பலரும் மோத்திஹரிக்கு வந்துசேர்ந்தார்கள்.
சிறைசெல்லும் படலத்துக்கு ஏற்ப காந்தி அனைவரையும் தயார்படுத்தினார். இருவர் இருவராக அணிபிரித்து ஒவ்வொரு அணியும் ஒன்றன் பின் ஒன்றாகச் சிறைசெல்ல வேண்டும் என்று தயார்படுத்தினார்.
சிறைக்குச் செல்வதற்கு முன்பு வேண்டிய அளவு மக்களின் கூற்றைப் பதிவுசெய்ய வேண்டும் என்று இரவும் பகலுமாக அந்தப் பணியில் எல்லோரும் ஈடுபட்டார்கள். ஆயிரக் கணக்கில் வந்து குவிந்த விவசாயிகளின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. காந்தியை ஒரு சாமியார் போல கருதி அவரது ‘தரிசனம்’ பெற வந்தவர்களின் கூட்டமும் பெரிய பிரச்சினையாக இருந்தது.
எதிர்பார்த்ததற்கு
மாறாக, காந்திக்கு எதிரான வழக்கு 20-ம் தேதி இரவே திரும்பப் பெறப்பட்டது. அதுமட்டுமல்லாமல், எந்தவிதத் தடங்கலும் இன்றி காந்தி தனது விசாரணையை நடத்திக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகளின் உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என்றும் காந்திக்கு உறுதியளிக்கப்பட்டது. இப்படியாக, சம்பாரணில் மட்டுமல்ல, இந்தியா அளவிலும் சத்தியாகிரகப் போராட்டம் ஒன்று முதற்கட்ட வெற்றியைப் பெற்றிருக்கிறது என்று காந்தி கருதினார். முதல் வெற்றியை ருசித்த பிறகு காந்தியும் அவரது சகாக்களும் மேலும் அதிக உத்வேகத்துடன் செயலாற்றத் தொடங்கினார்கள்.
-(திங்கள்கிழமை சந்திப்போம்…)
- நன்றி: ‘தி இந்து’ (https://goo.gl/aqFk0i)
No comments:
Post a Comment