ஆசை
காந்தி இந்தியாவுக்கு வந்த பிறகு சத்தியாகிரகப் போராட்டத்துக்கான ஆயத்தங்களில் இருந்தபோதே கிடைத்த இரு வெற்றிகளைப் பற்றி முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம் (விராம்காம் சுங்கப் பிரச்சினை, கொத்தடிமை ஒழிப்பு). அதற்குப் பிறகு அவர் நடத்திய சம்பாரண் சத்தியாகிரகம்தான் இந்தியாவில் அவரது போராட்டங்களின் தொடக்கப்புள்ளி. தற்போதைய 2017-ம் ஆண்டு, சம்பாரண் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு என்பதால் ‘என்றும் காந்தி!’ தொடரின் இந்தப் பகுதி மிகவும் விசேஷமான ஒன்றாகிறது.
1916, டிசம்பர் மாதத்தில் லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின்போது பிஹாரின் சம்பாரண் ஜில்லாவைச் சேர்ந்த ஒரு விவசாயி காந்தியைப் பார்க்க வந்தார். அவர் பெயர் ராஜ்குமார் சுக்லா. கூடவே, பாபு பிரஜ்கிஷோர் பிரசாத் என்ற வழக்கறிஞரையும் அழைத்துவந்திருந்தார். சம்பாரண் அவுரி விவசாயிகள் அனுபவித்துவரும் கொடுமைக்குத் தீர்வு காண காந்தி ஏதாவது வகையில் உதவி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் அவரிடம் வந்தார்கள்.
ரத்தத்தில் தோய்ந்த அவுரி
நேபாளத்துக்கு அருகில் இருந்த சம்பாரண் ஜில்லாவின் நிலச்சுவான்தார்கள் அங்குள்ள அவுரி விவசாயிகளை மிகவும் துன்புறுத்திவந்தார்கள். குத்தகை ஏற்பாட்டில் அவுரி விவசாயம் செய்துவந்த அந்த விவசாயிகள் தங்கள் மகசூலில் பெரும் பங்கை நிலச்சுவான்தார்களுக்குத் தாரை வார்க்க வேண்டியிருந்தது. அந்த நிலச்சுவான்தார்களில் பெரும்பாலானோர் ஆங்கிலேயர் என்பது குறிப்பிடத் தக்கது.
ஐரோப்பியர்களால் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்ட அவுரி என்பது பணப்பயிர். அவுரியிலிருந்து எடுக்கப்படும் சாயம் ஆடைகளுக்கு நிறமூட்டுவதில் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர் இந்தியாவில் பயிர்செய்தவற்றில் அவுரிதான் மிக முக்கியமான பயிர். 1877-லிலிருந்து 1883 வரையிலான ஆண்டுகளின் கணக்குப்படி ஆண்டுக்குச் சராசரியாக அப்போதைய மதிப்பில் 35 லட்சம் பவுண்டுகள் மதிப்பிலான அவுரி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இப்போதைய மதிப்பில் கணக்கிட்டுப் பார்த்தால் அவுரி என்பது அப்போது ஆங்கிலேயருக்கு எவ்வளவு பெரிய வருமானம் என்பது புரியும்.
இந்த வருமானம் முழுக்கவும் சுரண்டலால் பெறப்பட்டது. விவசாயிகள் மீதும் இயற்கையின் மீதும் இந்தியப் பொருளாதாரத்தின் மீதும் நிகழ்த்தப்பட்ட சுரண்டல். பெரும்பாலான விவசாயிகள் உணவுப் பயிரைக் கைவிட்டுவிட்டு அவுரியைப் பயிரிடும்படி வற்புறுத்தப்பட்டார்கள். விளைச்சலில் பெரும் பங்கை நிலச்சுவான்தார்களுக்கே கொடுத்தாக வேண்டும். இதன் விளைவு வறுமை, கடன், பசி, பஞ்சம், மரணங்கள்.
செயற்கை அவுரிச் சாயத்தின் வருகைக்குப் பிறகு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட அவுரியின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் தாங்கள் சந்தித்த இழப்பையும் நிலச்சுவான்தார்கள் விவசாயிகளின் மேலேயே திணித்தார்கள். தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை விவசாயிகளிடமிருந்து வசூலித்தார்கள். விவசாயிகளிடமிருந்து பணத்தைக் கறந்துகொண்டார்கள். பெரும்பாலான விவசாயிகளிடம் பணம் இல்லாததால் வீடுவாசல், நிலங்கள் உள்ளிட்ட இன்னபிற சொத்துக்களையும் அடமானமாகப் பெற்றார்கள். விவசாயிகளின் குழந்தை குட்டிகளையும் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடச் செய்தார்கள்.
அவுரி விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக கண்துடைப்பாக அவ்வப்போது சில கமிட்டிகள் அமைக்கப்பட்டன. 1848-ல் அமைக்கப்பட்ட கமிட்டியில் சிவில் சர்வீஸ் அதிகாரியான ஈ. டீ-லட்டூர் என்பவர் ஃபரீத்பூர் என்ற ஊரில் தான் மாஜிஸ்திரேட்டாக இருந்தபோது நடந்த சம்பவங்களை இப்படிக் கூறுகிறார்: “மனித ரத்தத்தின் கறை படியாமல் ஒரு அவுரிப் பெட்டிகூட இங்கிலாந்துக்குப் போனதில்லை… கத்தியால் குத்திக் கிழிக்கப்பட்ட நிலையில் பல விவசாயிகள், மாஜிஸ்திரேட்டாக இருந்த என்னிடம் வந்திருக்கிறார்கள். ஃபோர்டு என்ற நிலச்சுவான்தாரால் சுடப்பட்ட எத்தனையோ விவசாயிகளைக் கண்டிருக்கிறேன். கத்தியால் குத்தப்பட்டும் பின் கடத்தப்பட்ட பல விவசாயிகளைப் பற்றி நான் ஆவணங்களில் பதிவுசெய்திருக்கிறேன். அவுரி விவசாயத்தில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற வழிமுறையை ரத்தக் காவு வாங்கும் வழிமுறையாகவே நான் கருதுகிறேன்.” (Gandhi And Champaran, D.G. Tendulkar, The
Publication Division, 1957).
காங்கிரஸ் மாநாட்டில் ஒரு ஏழை விவசாயியின் உரை
தங்கள் இன்னல்களுக்குத் தீர்வேதும் கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பில் காங்கிரஸ் மாநாட்டுக்கு வந்த ராஜ்குமார் சுக்லாவும் பாபு பிரஜ்கிஷோர் பிரசாதும் திலகரையும் மாளவியாவையும் சந்தித்து முறையிட்டார்கள். அரசியல் விடுதலையே காங்கிரஸின் தலையாய இலக்கு என்றும் அவுரி விவசாயிகள் பிரச்சினை குறித்துத் தற்போது ஏதும் செய்ய முடியாது என்றும் அவர்கள் சொல்லிவிட்டார்கள். தென்னாப்பிரிக்காவில் காந்தி நடத்திய சத்தியாகிரகம் குறித்துக் கேள்விப்பட்டிருந்த சுக்லா, அவராவது தமக்கு உதவ மாட்டாரா என்ற ஏக்கத்துடன் காந்தியை வந்து சந்தித்து முறையிட்டார். அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்த காங்கிரஸ் மாநாட்டில் சம்பாரண் பிரச்சினை குறித்துத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ராஜ்குமார் சுக்லாவும் பாபு பிரஜ்கிஷோர் பிரசாதும் காந்தியைக் கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட காந்தி, “பிரச்சினை என்ன என்பதை நேரில் என் கண்களால் பார்க்கும்வரை அது குறித்து எந்தக் கருத்தையும் சொல்ல என்னால் முடியாது. இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாநாட்டில் இந்தப் பிரச்சினை குறித்துத் தாராளமாகத் தீர்மானம் நிறைவேற்றிக்கொள்ளுங்கள். தற்போதைக்கு என்னைக் கொஞ்சம் தனியாக இருக்க விடுங்கள்” என்றார்.
காந்தி அனுமதி கொடுத்துவிடவே, மாநாட்டின் இரண்டாம் நாள் சம்பாரண் அவுரி விவசாயிகள் சார்பில் ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டது. விவசாயிகள் அனுபவித்துவரும் இன்னல்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு அதைப் பற்றி விசாரித்துத் தீர்வு காண்பதற்கு அதிகாரிகளும் அதிகாரிகள் அல்லாத மற்ற தரப்புகளும் உள்ளடங்கிய ஒரு கமிட்டியை ஆங்கிலேய அரசு அமைக்க வேண்டும் என்பது அந்தத் தீர்மானத்தின் சாரம். தீர்மானத்தை ஆதரித்து, விவசாயிகளின் பிரதிநிதியாக ராஜ்குமார் சுக்லா உரையாற்றினார்.
1910-களில் காங்கிரஸின் பிரதிநிதிகள் பலரும் மேட்டுக்குடி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும் பாரிஸ்டர்களாகவும் சீமான்களாகவும் இருந்தார்கள் என்பதை நினைவில் கொண்டு பார்க்கும்போது ஒரு ஏழை விவசாயிக்கும் காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்ற வாய்ப்பு கிடைத்தது அந்தக் காலத்தில் பெரிய விஷயம். காந்தி இந்தியாவுக்குத் திரும்பிவந்த பிறகு காங்கிரஸ் அடைந்துகொண்டிருந்த உருமாற்றத்தின் அடையாளமாகவே அதை நாம் கருத முடியும்.
காங்கிரஸ் மாநாட்டில் விவசாயிகளின் குரலையும் இடம்பெறச் செய்ததில் ராஜ்குமார் சுக்லாவுக்கு திருப்தி என்ற போதும் அது மட்டுமே போதாது என்று நினைத்தார். காந்தி நேரடியாக சம்பாரண் வந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் மறுபடியும் காந்தியைச் சந்தித்துத் தங்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவர் சம்பாரண் வர வேண்டும் என்று வலியுறுத்தினார். அடுத்த ஆண்டில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வாக்கில் பிஹாருக்குத் தான் வரப்போவதாகவும் அப்போது சம்பாரணுக்கும் வந்து பார்க்கப்போவதாகவும் காந்தி சுக்லாவுக்கு வாக்குறுதி கொடுத்தார்.
எனினும், காந்தியை இடைவிடாமல் பின்தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தார் சுக்லா. லக்னோவிலிருந்து கான்பூருக்கு காந்தி சென்றார். அங்கும் காந்தியைப் பின்தொடர்ந்து வந்த சுக்லா, “கான்பூரிலிருந்து
சம்பாரண் கொஞ்சம் பக்கம்தான், ஒரு நாள் வந்து பார்த்துவிட்டுப் போங்களேன்” என்று கெஞ்சினார். நேர அட்டவணையில் மிகவும் கண்டிப்பாக இருக்கும் காந்தி சுக்லாவிடம், “இந்த முறை என்னை மன்னியுங்கள். ஆனால், நான் கண்டிப்பாக வருவேன்” என்று உறுதியளித்தார். கான்பூரிலிருந்து தனது அகமதாபாதில் உள்ள தனது சபர்மதி ஆசிரமத்துக்கு காந்தி திரும்பினார். அங்கேயும் சுக்லா இருந்தார். “எப்போது வருவீர்கள் என்று ஒரு நாளை எனக்குக் குறித்துச் சொல்லுங்கள்” என்று சுக்லா கேட்டார். அவரது விடாப்பிடியான முயற்சிகளைக் கண்டு வியந்துபோன காந்தி, “மார்ச் மாதம் கல்கத்தாவுக்கு வருவேன். அங்கிருந்து என்னை அழைத்துச்செல்லுங்கள்” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.
சற்றும் தளராத சுக்லா...
பிப்ரவரி 27,
1917 அன்று காந்திக்கு நினைவூட்டல் கடிதத்தை ராஜ்குமார் சுக்லா எழுதினார். அவருக்கு எழுதிய பதிலில் மார்ச் 7-ம் தேதி தான் கல்கத்தாவில் இருப்பதாகவும் அங்கே வந்து தன்னைச் சந்திக்கலாம் என்றும் காந்தி பதில் எழுதினார். ஆனால், காந்தி எழுதிய கடிதம் சுக்லாவுக்கு உரிய காலத்தில் கிடைக்கவில்லை. கல்கத்தாவுக்கு காந்தி வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு அங்கே போய் சுக்லா பார்த்தார். ஆனால், கல்கத்தாவிலிருந்து காந்தி டெல்லி சென்றுவிட்டதாக அங்கு கூறினார்கள். கடிதம் உரிய காலத்தில் போய்ச் சேராததால் இப்படி ஒரு அசந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டது. எனினும் மனந்தளராமல் காந்திக்கு சுக்லா கடிதம் எழுதினார். தான் கல்கத்தாவுக்குச் செல்லப்போவதாகவும் அங்கு புபேந்திரநாத் பாசு என்பவரின் வீட்டில் தங்கவிருப்பதாகவும் அங்கு வந்து தன்னை அழைத்துச்செல்லும்படியும் சுக்லாவுக்கு காந்தி ஏப்ரல் 3 அன்று ஒரு தந்தியை அனுப்பினார். தன் முயற்சியில் சற்றும் தளராத சுக்லா ஏப்ரல் 7-ம் தேதி காந்தியை வந்து சந்தித்து அவரை அழைத்துக்கொண்டு சம்பாரண் புறப்பட்டார்.
இந்தியாவுக்குத் திரும்பியும் சபர்மதி ஆசிரமத்தை நிறுவியும் சில காலமே ஆன நிலையில் எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரியாமல் சம்பாரணை நோக்கி காந்தி பயணித்தார். அவரது வாழ்நாளில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டை சம்பாரண் ஆக்கிரமித்துக்கொள்ளப் போகிறது என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.
-
(நாளை…)
No comments:
Post a Comment