Friday, January 6, 2017

ரஹ்மான்: தித்திக்கும் தீ! - ஏ.ஆர். ரஹ்மானின் 50-வது பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை



ஆசை
(ஏ.ஆர். ரஹ்மானின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு ‘தி இந்து’ நாளிதழின் ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது.)

தமிழ்த் திரையிசையின் தொடக்க காலம் என்பது கர்னாடக சங்கீதத்தின் நீட்சியாகவே இருந்தது. சற்று மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதமும் எட்டிப்பார்த்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தின் முக்கியமான பிரதிநிதிகள் எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமனாதன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு போன்றோர். 1930-களில் தொடங்கி 1950-களின் தொடக்கம் வரை இந்த மரபு தொடர்ந்தது. அதன் அடுத்த கட்டம் மெல்லிசை. கர்னாடக சங்கீதம், மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதம் ஆகியவற்றை எளிய வடிவில் இனிமையான மெட்டுக்களில் அளித்ததன் மூலம் திரையிசை அனைத்துத் தரப்பு மக்களிடமும் போய்ச் சேர்ந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணை, கே.வி. மகாதேவன் ஆகியோர் இந்தக் காலகட்டத்தின் பிரதான நாயகர்கள். எனினும் மக்களிடம் அதிகச் செல்வாக்கை எம்.எஸ்.விஸ்வநாதன் ஏற்படுத்தினார். இந்தப் பரிணாமத்தில் அடுத்த கட்டத்தில் பல நாயகர்கள் கிடையாது; ஒரே ஒருவர் மட்டுமே. அவர்தான் இளையராஜா. பரந்து விரிந்த ஆலமரத்தின் கீழே பிற தாவரங்கள் ஏதும் முளைக்காது என்பதுபோல இளையராஜாவின் கலைக்கு ஈடுகொடுக்க இன்னொரு போட்டியாளர் இல்லாத காலம். அப்போது வந்த மற்ற இசையமைப்பாளர்களின் ஒருசில நல்ல பாடல்கள் கூட ராஜாவின் இசை என்றே மக்கள் நினைக்கும் அளவுக்கு அவரது தாக்கம் இருந்தது. ‘கண்ணுக்குள் நூறு நிலவா’, ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு’, ‘ஒரு காதல் தேவதை’ போன்றவை உதாரணங்கள். மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதம், நாட்டுப்புற இசை, கர்னாடக சங்கீதம் ஆகியவற்றின் கூறுகள் முந்தைய மெல்லிசை காலகட்டத்தை விட அதிக அளவில் ராஜாவின் இசையில் இடம்பெற்றன.

இப்படிப்பட்ட தமிழ்த் திரையிசை மரபில் ஏ.ஆர். ரஹ்மானின் வரவு முற்றிலும் மாறுபட்டது. அவரது முன்னவர்கள் மேற்கத்திய, இந்திய சாஸ்திரிய மரபுகளையும் இந்திய நாட்டுப்புற மரபுகளையும் திரையிசையில் கலந்து கொடுத்தார்கள் என்றால் சர்வதேச வெகுஜன இசை, சர்வதேச நாட்டார் இசை, சூஃபி இசை போன்றவற்றால் பெற்ற உந்துதல்களையே ரஹ்மான் அதிகமாகத் தனது இசையில் வழங்கியிருப்பார். அதனால்தான், இந்திய இசையில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு முன்பு எவ்வளவோ மேதைகள் (இவர்களில் ஏ.ஆர். ரஹ்மானை விட மிகச் சிறந்தவர்களாகக் கருதப்படும் மேதைகள்) இருந்தாலும் ஏ.ஆர். ரஹ்மானே உலக அளவில் அதிகம் பிரபலமடைந்தார். சர்வதேசத்தவர்களுக்கும் சற்றே பரிச்சயமான இசை வடிவம் ஏதாவது அவரது இசையில் இருக்கும். இந்துஸ்தானி, கர்னாடக இசை போன்றவற்றை வெளிநாட்டினரால் மிகுந்த சிரமத்துடனேயே அணுக முடிவதற்குக் காரணம் அவை அவர்களுக்குப் பரிச்சயமான வடிவத்தில் இல்லை என்பதுதான்.      


தமிழ்த் திரையிசைக்கென்றே ஒரு கிளாஸிக்கல் அந்தஸ்தை ஆரம்ப காலத்திலிருந்து எல்லா இசையமைப்பாளர்களும் வழங்கிவந்தார்கள். அந்த அந்தஸ்தை இளையராஜா இன்னும் உயர்த்தினார். நாட்டுப்புற இசையும் கலந்த ஒரு கிளாஸிக்கல் அந்தஸ்து என்பது இளையராஜாவின் மகத்தான சாதனை. இந்த நேரத்தில் ஏ.ஆர். ரஹ்மான் வருகிறார். ‘ரோஜா’ பாடல்கள் தமிழ்நாடு முழுவதிலும் அல்லாமல் இந்திய அளவிலும் பெருவெற்றி அடைகின்றன. அந்தக் காலகட்டத்தில் ரஹ்மானை ஏற்றுக்கொண்டு பிரபலப்படுத்தியவர்கள் யார் என்று பார்த்தால் பதின்பருவத்தினரும், கல்லூரி மாணவர்களும்தான். மற்றவர்களின் உலகத்தில் எம்.எஸ்.வி., என்ற தெய்வத்தை அல்லது ராஜா என்ற தெய்வத்தைத் தவிர வேறு எந்த தெய்வத்துக்கும் இடம் கிடையாது. ஏ.ஆர். ரஹ்மானின் இசையைக் கேட்டு இளைய தலைமுறை சன்னதம் பிடித்து ஆடிக்கொண்டிருந்தபோது இந்தக் கட்டுரையாளர் உட்பட, பலரும் மெல்லிய புன்னகையுடனே கடந்தோம். ‘இதெல்லாம் ஆறு மாதம் வரைக்குமான இசை. இசை கூட இல்லை சத்தம்’ என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. இன்றும் அப்படி ஏ.ஆர். ரஹ்மானைப் பார்க்கும் பலரும் இருக்கிறார்கள். குரல், இசை, இனிமை என்று ஒருவித மென்மைத்தன்மையுடன் அல்லது உள்ளூர்த்தன்மையுடனே நம் காதுகளும் ரசனையும் பழக்கப்பட்டுவிட்டிருந்தது ஒரு காரணம்.

எம்.எஸ்.வியின் ராஜ்ஜியத்தில் ராஜா நுழைந்தபோது ராஜாவைப் பற்றி எம்.எஸ்.வியிடம் யாரோ விமர்சனம் செய்ததாக ஒரு பேச்சு உண்டு. அப்போது அந்த நபரிடம் எம்.எஸ்.வி., ‘இப்போதுதான் அந்தப் பையன் வந்திருக்கிறான். அவன் முதலில் வரட்டும். அவனை வேலைபார்க்க விடுங்கள்’ என்று கடிந்துகொண்டாராம். ஒவ்வொரு மரபும் மாறும்போது ஒவ்வொரு தலைமுறையும் மாறும்போது நேரிடக் கூடியதுதான் இது. ஆனால், ராஜாவை எம்.எஸ்.வி. எதிர்கொண்டதுபோல் புதியவர்களை மற்ற எல்லோரும் எதிர்கொள்வதில்லை. ஏன், ஏ.ஆர். ரஹ்மானை ஆரம்பத்தில் எம்.எஸ்.வி.யே ‘வெறும் சத்தம்தான்’ என்று விமர்சித்ததாகச் சொல்வார்கள். ஒரு புதுமை இன்னொரு புதுமையை எதிர்கொள்ளும் காலத்தில் மரபாக ஆகிவிட்டிருக்கும். மரபாக ஆகிவிட்ட முன்னாள் புதுமையே சமூகத்தின் இயல்பாகவும் மனநிலையாகவும் மாறிப்போகும்; அப்போது சமூகத்தின் மனநிலையின் கதவுகளை மோதித் திறக்கும் வலு எதற்கு இருக்கிறதோ அதுதான் புதுமைகளின் தொடர்ச்சியில் தன்னை இணைத்துக்கொள்ளும் இன்னொரு புதுமை. எம்.எஸ்.வி., இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் எல்லோரும் அப்படிப்பட்ட புதுமைகள்தான்.

ஏ.ஆர். ரஹ்மான் சத்தம்தான் என்ற எண்ணத்தில் நாம் இருப்போமென்றால் இசை குறித்து மிகவும் குறுகலான ஒரு எண்ணத்துடன் நாம் இருக்கிறோம் என்று அர்த்தம். வீணையும் இசைதான், பறையும் இசைதான். ரயில் செல்லும் சத்தத்தின் தாளகதியை உணர்ந்துகொண்டால் அதுவும் இசைதான். ஆயிரக் கணக்கான ரசிகர்கள் உன்மத்த வெறியில் இருக்கும்போது அந்த உன்மத்தத்தை மேலும் மேலும் கூட்டும் விதத்தில் அரக்கத்தனமாக கித்தார் மீட்டி உச்ச ஒலியில் பாடும் ராக் பாடல்களும் இசைதான். கைதட்டித் தட்டிப் பாடும் கவ்வாலியும் இசைதான். அவரவர் வாழ்க்கைச் சூழலையும் போல்தான் அவரவரின் இசையும் இருக்கும். இசையில் வகைகள்தான் உண்டே ஒழிய ஏற்றத்தாழ்வு கிடையாது. உயிரியலைப் போலச் சமூகத்தைப் போல பன்மைத்தன்மை என்பது இசைக்கும் வளம் சேர்க்கும். குறுகலான, இறுக்கமான வரையறைகள் இசையைப் புனிதமாக்கலாம்; ஆனால் ஜனநாயகப்படுத்தாது, வளம் கூட்டாது. இந்தக் கண்ணோட்டத்தில்தான் ஏ.ஆர். ரஹ்மானை இந்திய, தமிழ்த் திரையிசை மரபில் அணுக வேண்டும்.

ரஹ்மானிடம் மென்மையும் உண்டு. ‘காதல் ரோஜாவே’, ‘நேற்று இல்லாத மாற்றம்’, ‘என் வீட்டுத் தோட்டத்தில்’, ‘என் மேல் விழுந்த மழைத்துளியே’, ‘தொடத் தொட மலர்ந்ததென்ன?’, ‘பச்சைக் கிளிகள் தோளோடு’, ‘வெண்ணிலவே வெண்ணிலவே’, ‘பூங்காற்றிலே’, ‘முன்பே வா என் அன்பே வா’, ‘ நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன்’, ‘இன்னும் கொஞ்ச நேரம்’, ‘மலர்கள் கேட்டேன்’, ‘தீரா உலா’ என்று ஏராளமான உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். நரம்பை இறுக்கிக்கட்டும் வன்மையும் உண்டு. ‘சிக்குபுக்கு ரயிலு’, ‘முக்காபுலா’, ‘கொஞ்சம் நிலவு’ ‘அந்த அரபிக் கடலோரம்’, ‘ரோமியோ ஆட்டம் போட்டால்’, ‘ரங்கீலா’ படத்தின் பல பாடல்கள், ‘தைய தையா’, ‘மாரோ மாரோ’ (பாய்ஸ்), ‘ரங் தே பசந்தி’ என்று இன்னும் ஏராளமாகச் சொல்லிக்கொண்டே போகலாம். ரஹ்மானிடம் இன்னொரு விசித்திரமான வகைமை பாடல்கள் உண்டு. மென்மையும் வன்மையும் கலந்த பாடல்கள் ‘தீ தீ தித்திக்கும் தீ’ (திருடா திருடா), ‘முத்து முத்து முத்தாடுதே’ (மிஸ்டர் ரோமியோ), ‘சந்தோஷக் கண்ணீரே’ இவை போன்ற பாடல்கள் இந்தியத் திரையிசையில் ஏ.ஆர். ரஹ்மானைத் தவிர்த்துப் பிறரிடம் வெகு அரிதாகவே காண முடியும்.        

சூஃபி இசையை முக்கியமாக, கவ்வாலியை இந்தியத் திரையிசையால் மிகவும் பிரபலப்படுத்தியவர் ரஹ்மான். இதனால் திரையிசை மட்டுமல்ல, ஏ.ஆர். ரஹ்மானின் கலையும் உச்சம் பெற்றது. எல்லையற்ற அன்பைப் பேசும் சூஃபி ஞானம் ஏ.ஆர். ரஹ்மானின் இசையை அன்பின் வடிவாக வெளிப்பட வைத்தது. தமிழிலேயே இந்த வகையான பாடல்களை அங்கங்கே ஏ.ஆர். ரஹ்மான் வைத்திருந்தாலும் இந்திக்குச் சென்ற பிறகே அவருக்குள் சூஃபி இசை பிரம்மாண்டம் அடைகிறது. அவரது இருபத்தைந்தாண்டு திரையிசையில் அவரது உச்சபட்ச சாதனைகள் என்று கருதத்தக்க பாடல்களில் பலவும் இதுபோன்ற பாடல்களாக இருக்கும். ‘ஜோதா அக்பர்’ படத்தில் இடம்பெற்ற ‘க்வாஜா மேரே க்வாஜா’, ’ஜேஷன் இ-பஹாரா’ ஆகிய பாடல்களும், ‘மௌலா மௌலா’ (டெல்லி-6), ‘கல்பலி’  (ரங் தே பசந்தி), ‘நூருன்னலா’ (மீனாக்‌ஷி), ‘குன் ஃபயா’ (ராக் ஸ்டார்) ‘ஆருயிரே மன்னிப்பாயா?’ ‘மாண்புமிகு மன்னவரே’ (குரு) உயிரை உருக்குபவை. இவையெல்லாம் முழு முற்றான அன்பை நோக்கி நம்மை எய்பவை என்றால் இன்னொரு வகையான பாடல்கள் எல்லாவற்றிலிருந்து விடுதலை தேடுபவை, கட்டுப்பாடுகளை தகர்ப்பவை, ‘கடமை’ என்ற தலைப்பில் பாரதியின் புகழ்பெற்ற கவிதை ஒன்று உண்டு. அதில் ‘கட்டென்பதனை வெட்டென்போம்’ என்று ஒரு வரி வரும். ரஹ்மானின் இசையில் பல பாடல்கள் அப்படித்தான். ‘ரங் தே பசந்தி’ படத்தின் ‘பாத்சாலா – லூஸ் கண்ட்ரோல்’ என்ற பாடலைப் புரிந்துகொள்ள மொழி ஒரு தடையே இல்லை. முழுக்க முழுக்க ‘கட்டென்பதனை வெட்’டச் சொல்லும் பாடல். நம்மை மூச்சு முட்டச் செய்யும்படி இறுக்கும் வாழ்க்கையை, மரபை, வரலாற்றை உதறித் தள்ளிவிட்டு தர்காவிலிருந்து படபடத்துச் செல்லும் புறாக்கூட்டம் போலப் பறந்துசெல்ல வைப்பவை. அர்த்தம், மேன்மை, மென்மை, அறம், தர்மம், பேரின்பம், இனிமை, நித்தியத்துவம் என்ற பெரிய வார்த்தைகளெல்லாம் வரலாற்றில் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு அலங்கார வார்த்தைகளாக ஆகிவிட்டன. இன்னும் சொல்லப்போனால் பேரழிவுகளெல்லாம் இந்தச் சொற்களைக் காரணம் காட்டியேதான் நிகழ்த்தப்பட்டன. ஆகவே, இந்தப் பெரிய வார்த்தைகளுக்கெல்லாம் எதிராக ஏ.ஆர். ரஹ்மான் போர் தொடுக்கிறார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாகிய ‘ஹிப்பி’ கலாச்சாரத்தினரின் போக்கை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். அர்த்தமற்ற வரிகள், இனிமையில்லாத சத்தங்கள், தொடர்ச்சியின்மை, தற்காலிக சந்தோஷம் இவற்றைக் கொண்டு பாடல்களை உருவாக்குகிறார் ஏ.ஆர். ரஹ்மான். ‘டெல்லி-6’ படத்தின் ‘மசக்கலி மடாக்கலி’ பாடலும் அப்படித்தான். கஜல் பாடகர் ஜக்ஜித் போன்றோரை ‘அர்த்தமே இல்லை. எனக்கு எதுவும் புரியவேயில்லை’ என்று புலம்ப வைத்த பாடல். ஆனால், அது வெளிவந்த ஆண்டில் மிகவும் பிரபலமான பாடல் அதுதான். ‘புர புர்ர புர்ர புர்ர’ என்பதெல்லாம் இசையா என்று கேட்டவர்களைப் பரிகசித்தபடி இன்னும் நம்மைக் குதூகலப்படுத்திக்கொண்டிருக்கிறது அந்தப் பாடல். ‘மசக்கலி’ என்பது ‘டெல்லி-6’ படத்தில் இடம்பெற்ற ஒரு புறாவின் பெயர். எந்த முன்தீர்மானமும் இல்லாமல் அந்தப் பாடலைக் கேட்கும்போது நாம் ‘மசக்கலி’யாகி பழைய டெல்லியின் நெரிசல் மிகுந்த சந்துகளின் மேலாக அல்லது சென்னையில் ரங்கநாதன் தெருவின் மேலாகப் பறந்துசெல்வது போல் இருக்கும். ஒருவரின் காதுகளும் இதயமும் ஏ.ஆர். ரஹ்மானின் இசைக்குத் திறந்துகொண்டனவென்றால் அவை ஏற்படுத்தும் விடுதலை உணர்வும் குதூகலமும் பெரும் போதையைத் தருபவை. ‘பேட்டை ராப்’, ‘முஸ்தஃபா முஸ்தஃபா’, ‘ஊர்வசி ஊர்வசி’, ‘தைய தையா’, ‘‘மன மன மெண்டல் மனதில்’, ‘மடர்கஷ்தி’ (தமாஷா) போன்ற பாடல்களும் இந்த வரிசையில் வருபவையே. எந்தக் கட்டுப்பாடும் இல்லாத தனிப்பாதையை இசையமைப்பாளர்கள் வகுத்துக்கொள்ள முடியும் என்பதை இந்த வகைப் பாடல்களில் ஏ.ஆர். ரஹ்மான் நமக்குக் காண்பித்திருக்கிறார். இந்தத் தனிப்பாதையில்தான் தற்போது இந்தியில் அமித் திரிவேதி போன்றவர்களும் தமிழில் சந்தோஷ் நாராயணன் போன்றவர்களும் ஊர்வலம் போகிறார்கள்.

தமிழ்த் திரையிசையின் தொடக்க காலத்திலிருந்து ராஜா, ஏ.ஆர். ரஹ்மான் வரையிலான காலத்தைப் பார்க்கும்போது தமிழ்த் திரையிசை எவ்வளவு வகைமையும் வளமையும் கொண்டதாகவும் தனித்துவமானதாகவும் கொண்டதாக இருக்கிறது என்பது நமக்குப் புரியும். அதிலும் ஏ.ஆர். ரஹ்மான் என்று வரும்போது தமிழ், இந்தியா என்ற வரையறையைத் தாண்டி உலக அளவிலான ஒரு வீச்சு தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் கிடைத்திருக்கிறது என்பது புரிபடும். தமிழில் பெரும்பாலும் திரையிசை என்ற விவாதம் வரும்போது எம்.எஸ்.வியா இளையராஜாவா? இளையராஜாவா ஏ.ஆர். ரஹ்மானா என்று பெரும் போர்க்களமே உருவாகிவிடுகிறது. இசை மிகவும் பரந்தது அதில் இவர்கள் எல்லோருக்குமே தனியிடம் இருக்கிறது. இன்னொருவருடைய இடத்தைப் பறித்துக்கொண்டு உட்காரும்படி யாரும் யாருக்குமே சளைத்தவர்கள் இல்லை. இவர்கள் எல்லோருமே நம்மை சந்தோஷப்படுத்தியவர்கள், சந்தோஷப்படுத்திக்கொண்டிருப்பவர்கள். இன்பத்தில் ஏது பேரின்பம், சிற்றின்பம்? எல்லாமே இன்பம்தான். கடந்த 25 ஆண்டுகளாக நம்மை சந்தோஷப்படுத்திக்கொண்டிருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 50-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவர் நமக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் ‘சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடலே’.


ஏ.ஆர். ரஹ்மானின் சிறந்த ஆல்பங்கள்-10 (கால வரிசையில்)

தமிழ்

1. ரோஜா

2. திருடா திருடா

3. டூயட்

4. காதலன்

5. மின்சாரக் கனவு

6. ரிதம்

7. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

8. விண்ணைத் தாண்டி வருவாயா

9. மரியான்

10. ஓ காதல் கண்மணி

இந்தி

1. ரங்கீலா

2. வந்தே மாதரம்

3. தில் ஸே (உயிரே)

4. தால் (தாளம்)

5. லகான்

6. சுபைதா

7. ரங் தே பசந்தி

8. ஜோதா அக்பர்

9. டெல்லி-6

10. ராக் ஸ்டார்

இந்தப் பட்டியல் கட்டுரையாளரின் தேர்வு

  நன்றி: ‘தி இந்து’. ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: https://goo.gl/cESuYi


2 comments:

  1. தேர்ந்த கலைஞனுக்கு அருமையான புகழாரம். நன்றி.

    ReplyDelete
  2. அற்புதமான கட்டுரை

    ReplyDelete