Thursday, November 26, 2015

ஐன்ஸ்டைனைக் கடவுளாக்கிய 1919-ம் ஆண்டு 


ஆசை

(ஐன்ஸ்டைனின் பொதுச்சார்பியல் கோட்பாடு முன்வைக்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் தருணத்தில் எனது இந்தக் கட்டுரையை மீள்பிரசுரம் செய்கிறேன்.)

‘மிகவும் அதிகமான நிறையைக் கடக்கும்போது ஒளி வளையும்’ முதலான கணிப்புகளுடன் பொதுச் சார்பியல் கோட்பாட்டை 1915-ல் ஐன்ஸ்டைன் முன்வைத்தார். எனினும் அந்தக் கோட்பாடு உறுதியாக நிரூபிக்கப்பட்டது 1919-ல் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போதுதான்.
ஐன்ஸ்டைனின் இந்தக் கணிப்பு சரியானதா என்பதை நிரூபிக்க 1917-ல் பிரிட்டனைச் சேர்ந்த வானியலாளர் சர் ஃபிராங்க் வாட்சன் டைசன் ஒரு யோசனையை முன்வைத்தார். 1919-ம் ஆண்டில் மே மாதம் 29-ல் முழுமையான சூரிய கிரகணம் நிகழவிருந்தது. அந்தக் கிரகணத்தின்போது சூரியன், ஹயாடெஸ் விண்மீன் கொத்தை (அதாவது ஹயாடெஸ் விண்மீன் கொத்துக்கும் பூமிக்கும் இடையே) கடந்துசெல்லும் என்று கணிக்கப்பட்டது. சூரியனின் ஈர்ப்புவிசைப் புலத்தை அந்த விண்மீன் கொத்தின் ஒளி கடந்துசெல்லும்போது கிரகணத்தின் காரணமாக அந்த விண்மீன் ஒளி நமக்குப் புலனாகும்; சூரியனின் ஈர்ப்புப் புலத்தைக் கடக்கும்போது ஒளியின் பாதையில் ஏதாவது விலகல் தென்படுகிறதா என்பதைக் கண்டறியலாம் என்றும் யோசனை கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து 1919-ல் பிரிட்டனைச் சேர்ந்த வானியலாளர் எடிங்டன் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்வதென்று முடிவுசெய்யப்பட்டது. கிரகணத்துக்கு முன்னதாக 1919-ம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஹயாடெஸ் விண்மீன்கள் அண்டவெளியில் அமைந்திருக்கும் உண்மையான ஸ்தானங்கள் குறித்துக்கொள்ளப்பட்டன. ஹயாடெஸ் விண்மீன்களின் ஒளி பூமியை நோக்கி வரும் பாதைக்கு அருகே சூரியன் இல்லாத சமயம், அந்த ஒளியில் விலகல் இருக்காது என்பதால் ஒப்பீட்டுக்காக அந்த விண்மீன்களின் உண்மையான ஸ்தானங்களைக் குறித்துவைத்துக்கொண்டார்கள்.
ஐன்ஸ்டைனின் கணிப்பு உண்மையாக இருந்தால், அந்த சூரிய கிரகணத்தின்போது விண்மீன்களின் ஒளி சூரியனைக் கடக்கும் தருணத்தில் விலகல் இருக்குமல்லவா, அதையும் குறித்துக்கொண்டு இரண்டு அளவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெரிந்துவிடுமல்லவா? அதுதான் திட்டம்! (முழுமையான சூரிய கிரகணத்தின்போது நிலா மறைப்பதால் சூரியன் நமக்குத் தெரியாதே தவிர, சூரியன் அந்த இடத்தில்தான் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்).
ஹயாடெஸ் விண்மீன் கொத்து, சூரியன், பூமி இந்தக் கோட்டில் கிரகண நிகழ்வின்போது ஒளிவிலகல் ஏற்படும் என்றால், அதைத் தெளிவாகப் பார்க்கக் கூடிய இடமாக மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையை ஒட்டி இருக்கும் பிரின்சிபி தீவைத் தேர்ந்தெடுத்து, தகுந்த உபகரணங் களோடு எடிங்டன் அங்கே பயணமானார். ஆய்வில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் என்ன செய்வது என்பதற்காக வேறொரு குழுவை பிரேசிலின் சோப்ராலுக்கு எடிங்டன் அனுப்பினார்.
நல்லவேளையாக, தடங்கல் இல்லாமல் சூரிய கிரகணத் தின்போது ஆய்வை மேற்கொண்டு தன் அவதானங்களை எடிங்டன் பதிவுசெய்தார். லண்டனுக்குத் திரும்பியவுடன் அவரது அவதானங்கள் பரிசோதிக்கப்பட்டன. சூரியனின் ஈர்ப்புவிசைப் புலத்தைக் கடக்கும்போது ஒளி மிகச் சிறு அளவில் வளைகிறது என்பது உறுதியானது. நவம்பர் 6, 1919 அன்று தனது ஆய்வின் முடிவை எடிங்டன் உலகத்துக்கு அறிவித்தார். அப்புறமென்ன, மறு நாள் உலகம் முற்றிலுமாக மாறிவிட்டது. ஒரு புதிய கடவுளும் உலகத்துக்குக் கிடைத்துவிட்டார். அவர் பெயர் ஐன்ஸ்டைன்!
-  நன்றி: ‘தி இந்து’
 ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/t7RRgg

1 comment:

  1. ஓர் அறிவியல் நிகழ்வினை அருமையாக மனதில் பதியும் வண்ணம் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete