Friday, October 2, 2015

இளைஞர்களுக்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம்?


ஆசை
(காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ‘தி இந்து’ நாளிதழின் ‘இளமை புதுமை’ இளைஞர் இணைப்பிதழில் வெளியான கட்டுரையின் முழுவடிவம் இது)

முதலில் ஒரு கேள்வி நம் எல்லோருக்கும் எழலாம். காந்திக்கும் இன்றைய அதிநவீன உலகத்துக்கும், குறிப்பாக காந்திக்கும் இன்றைய இளைஞர்களுக்கும் என்ன சம்பந்தம்? அவர் பழைய காலத்து ஆள் அல்லவா! இயந்திரங்கள், கருவிகள் போன்றவற்றுக்கு எதிரானவர் அல்லவா! நமக்கு எப்படி ஒத்துவருவார்?

நியாயமான கேள்விகளே. 

இதற்குச் சரியான பதில் என்னவென்றால் பல விஷயங்களில் காந்தி முன்னைவிட இப்போது பொருத்தமாக இருக்கிறார் என்பதே. முன்பை விட காந்தி இப்போது மிகவும் தேவைப்படுகிறார் என்பதே.

என்ன காலத்தால் ‘பின்தங்கிய’ ஆடையான அரையாடையை உடுத்திய கிழவர் முன்பைவிட இப்போதுதான் பொருத்தமாக இருக்கிறாரா? விளையாடாதீர்கள்! நாங்கள் வேறு யுகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கும் காந்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறீர்களா?

இருக்கிறது, நிறைய இருக்கிறது.

ஹார்லே டேவிட்சன் பைக்கில் நூறு கிலோ மீட்டர் வேகத்துக்கும் அதிகமாக ஈசிஆரில் போய்க்கொண்டிருக்கிறீர்கள். அப்போது சற்று அருகே கர்ப்பிணிப் பெண் ஒருத்தர் (வெகு நேரமாகச் சாலையைக் கடக்க முயன்றுகொண்டிருந்த பெண் ஒருத்தர்) சாலையின் பாதி அளவுக்கு வந்துவிட்டார். நீங்கள் அதே வேகத்தில் போவதுதான் முக்கியம் என்றால் போய்க்கொண்டிருக்கலாம். அந்தப் பெண்ணின் மீது மோதவோ, அல்லது அவரைத் தடுமாறி விழச்செய்தோ நீங்கள் போய்க்கொண்டே இருக்கலாம். ஆனால், அந்தப் பெண்ணுக்காக வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தாலும் உங்களால் வேகத்தைக் குறைக்க முடியும். மிக அருகில் இல்லை என்பதனால் அது சாத்தியம். இரண்டில் எதை நீங்கள் செய்வீர்கள். நிச்சயமாக இரண்டாவதைதான் என்று நான் நம்புகிறேன். வேகம், வேகம் என்று வேகத்தையே உங்கள் வாழ்க்கையும் பைக்கும் பிரதானப்படுத்தினாலும் உங்களுக்கு அடிப்படையாக கருணையும் பரிவும் இருக்கிறதல்லவா? அந்தக் கருணைக்கும் பரிவுக்கும் உங்கள் வண்டியின் பிரேக் உதவி செய்கிறதல்லவா? அந்த பிரேக்தான் காந்தி. பிரேக்கே இல்லாத வண்டி எதையும் நீங்கள் வாங்கிவிட மாட்டீர்கள். ஏனெனில் பிரேக் என்பது மற்றவர்களுக்கு மட்டுமல்ல உங்கள் உயிருக்கும் முக்கியம்.


நமது வாழ்க்கை கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. திடீரென்று நிறுத்துவதென்பது இயலாத காரியம். ஆனால், வேகத்தைப் படிப்படியாகக் குறைக்க முடியும். அப்படிக் குறைப்பதற்கு நமக்கு உதவி செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் காந்தி.

உங்களுக்குத் தெரியும். இன்றைய உலகம் என்பது உண்மையில் இருவேறு உலகங்களின் தொகுப்பு. ஒரு பக்க உலகம் என்பது அதிநவீன உலகம். இங்கே ஃபேஸ்புக், கூகுள், கணினி, செல்பேசி, பைக், கார், ஏசி, டப்பாக்களிலும் பாக்கெட்களிலும் அடைக்கப்பட்ட உணவு. இவையெல்லாம் இல்லாவிட்டால் ஏதும் செய்ய முடியாது. கூடுதலாக உலக அமைதி என்ற பெயரில் அணு ஆயுதங்கள், அதி நவீனப் போர்க்கருவிகள். இவை அனைத்தும் இருந்தும் இந்த உலகம் நிம்மதியாக இல்லை. முன்பைவிட அதிக மருத்துவமனைகள், மனநல மருத்துவர்கள், யோகா மையங்கள், போர்கள், இனஅழிப்புகள் போன்றவை இதற்குச் சான்று. இன்னொரு உலகம் என்பதற்கு உங்களுக்குக் கரையொதுங்கிய ஆலன் குர்தியின் புகைப்படத்தை நினைவுபடுத்தலாம். சிரியாவில் நடக்கும் போரில் இதுவரை பத்து லட்சம் பேருக்கும் மேல் இறந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் அகதிகளாக ஆகியிருக்கிறார்கள். ஆண்டுதோறும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் சிரியா போன்ற மத்தியகிழக்கு நாடுகளிலிருந்தும் லட்சக் கணக்கான மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குத் தஞ்சம் தேடிப் போகிறார்கள். அப்படிப் போகும்போது நடுக்கடலில் மூழ்கி ஆண்டுதோறும் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கிறார்கள். அவர்களில் ஒருவன்தான் ஆலன் குர்தி. அதாவது வேறொரு உலகத்தைச் சேர்ந்தவன். ஆனால், நம் உலகத்தின் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், கூகுள், கணினி, செல்பேசி, டிவி, பத்திரிகை வழியாகப் பிரபலமடைந்தவன்.

ஆலன் குர்தி இறந்து கரையொதுங்கியதற்கும் இன்னொரு உலகம் அதிநவீனமாக ஆவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்கிறீர்களா? இருக்கிறது. முன்னேறிய நாடுகள் தங்கள் முன்னேற்றத்துக்குப் பகடைக்காய்களாக ஏழை நாடுகளை உருட்டும் விளையாட்டொன்றின் பக்கவிளைவுகளில் ஒன்றுதான் ஆலன் குர்தி கரையொதுங்கியது. நமது வசதிக்காகவும் சொகுசுக்காகவும் அமேசான் காடுகள் ஒவ்வொரு நாளும் நியூயார்க் நகரம் அளவில் அழிக்கப்படுகின்றன. சாக்லேட் தயாரிக்கப் பயன்படுத்தும் கோகோ உற்பத்திக்காக ஆப்பிரிக்க மக்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள். இங்கேதான் காந்தி சொன்னதை நினைத்துப் பார்க்க வேண்டும்.  நவீன கருவிகளையோ இயந்திரங்களையோ பயன்படுத்துவதற்கு எதிரானவர் இல்லை அவர். அவரே, ரயிலில் அதிகம் பயணம் செய்தவர்தான். பெருந்திரள் மக்களைத் தட்டியெழுப்புவதற்காகத் தனது கூட்டங்களில் மைக்குகளைப் பயன்படுத்தியவர்தான். ஆனால், நவீனக் கருவிகளும் சாதனங்களும் கடுமையான உழைப்பிலிருந்து மனிதர்களை விடுவிப்பதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர சொகுசுக்காகப் பயன்படுத்தபடக் கூடாது என்பதை அவர் வலியுறுத்தினார். ஏனெனில் நம்மை சொகுசாக வைத்திருக்க எத்தனை பேர் பட்டினி கிடக்க வேண்டியிருக்கிறது. எத்தனை பேர் சுரங்கங்களில் செத்து மடிய வேண்டியிருக்கிறது. எத்தனை நாடுகள் பெட்ரோலுக்காக அமெரிக்காவால் போர்த் தாக்குதலுக்கு உள்ளாகி சிதைந்து போயிருக்கின்றன என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

காந்தியின் மேற்கோள் ஒன்று உலகப் புகழ் பெற்றது: ‘உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் தேவையைத்தான் இந்தப் பூமியால் பூர்த்திசெய்ய முடியுமே தவிர அனைத்து மனிதர்களின் பேராசையை அல்ல.’

நாம் உண்மையில் புலி வாலைப் பிடித்துவிட்டோம். இந்த சொகுசுகளை உடனடியாக உதறிவிட முடியாது. ஆனால், குறைந்தபட்சம் இந்த சொகுசுகளுக்குக் கொடுக்கப்படும் விலை என்ன என்பதையாவது நாம் உணர வேண்டும்.

இந்த உலகின் போக்கைக் கட்டுப்படுத்த காந்தி பெரிதும் இளைஞர்களையே நம்பியிருந்தார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் மேல் ஈர்ப்பு இருந்த காலத்தில் ஏராளமான இளைஞர்களை தனது அகிம்சை வழிப் போராட்டத்துக்கு இழுத்தவர் அவர். இளைஞர்களிடம் கட்டுப்படுத்த முடியாத அளவில் சக்தி இருப்பதால் ஆயுதப் போராட்டம் அவர்களை எளிதில் ஈர்த்துவிடும் என்று தெரிந்தும் காந்தியால் இதைச் சாதிக்க முடிந்தது என்றால் அவர் இளைஞர்களிடம் பொறுமையாகப் பேசியதுதான் காரணம்.

ஒரு சம்பவத்தை இங்கே உதாரணம் காட்ட வேண்டும். காந்தியின் நெருங்கிய நண்பர் ஒருவரின் மகன் ஸ்ரீமன் நாராயண். பணக்காரக் குடும்பத்தில் பிறந்த பிராமணர். லண்டனில் பொருளியலில் பட்டம் பெற்று இந்தியாவுக்கு சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் திரும்புகிறார். அவருக்குப் பெரிய பெரிய கனவுகள் இருந்தன. இந்தியாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையின் விளைவால் உருவான கனவுகள் அவை. முதலில் காந்தியிடம் வந்து ஆசிபெற்றுக் கொஞ்ச காலம் அவருடன் இருக்கும் திட்டத்தில் வந்தார். காந்தி அவருக்கு ஆசிர்வாதம் செய்து தனது ஆசிரமத்தில் சேர்த்துக்கொண்டார். அந்த ஆசிரமத்தில் வந்துசேரும் யாருக்கும் முதலில் கொடுக்கப்படும் பணி என்ன தெரியுமா? கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது. ஸ்ரீமன் நாராயணன் தனது வீட்டில் கூட அதைச் செய்ததில்லை. ஏராளமான பணியாளர்கள் இருந்தார்கள் அதையெல்லாம் செய்வதற்கு. எனினும் காந்தி சொல்லிவிட்டாரே என்று அதைச் செய்ய ஆரம்பித்தார். ஒரு வாரம் செய்துவிட்டு காந்தியிடம் வந்தார். “பாபுஜி நீங்கள் சொன்னபடி ஒரு வார காலம் கழிப்பறைகளைச் சுத்தம் செய்துவிட்டேன். எனக்கு மற்ற முக்கியமான பணிகளை ஒதுக்குங்கள்” என்று கேட்டிருக்கிறார். காந்தி திரும்பவும் கழிப்பறைகளைச் சுத்தம்செய்யும் பணிக்கே அவரை அனுப்பினார்ஒரு மாதத்துக்குப் பிறகு ஸ்ரீமன் நாராயண் காந்தியிடம் வந்துபாபு நான் லண்டன் பொருளியல் கல்லூரியில் பட்டம் பெற்றவன், என்னால் மகத்தான விஷயங்களை சாதிக்க இயலும், எனது திறமையை இப்படிக் கழிவறை சுத்தப்படுத்துவதிலேயே விரயம் செய்வது ஏனோ?” என்று வாதிட்டார்.

அதற்கு காந்தியின் பதில் இது: நீ வெளிநாட்டில் கற்றவன், பெரிய விஷயங்களை உன்னால் சாதிக்க முடியும் என்பதெல்லாம் எனக்கு தெரியும், ஆனால் சிறிய விஷயங்களைச் செய்வதற்கு உண்டான தகுதி உன்னிடம் இருக்கிறதா என்பதை நான் இன்னும் அறியவில்லை. வறுமை ஒழிப்பு, வளர்ச்சி, கல்வி வழங்குதல் போன்ற பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் என விரும்புவது புரிகிறது. ஆனால், மிகக் கீழான வேலைகளைச் செய்வதற்கான மனப்பக்குவம் இல்லாமல் போனால் உனது தாய்நாட்டைச் சூழ்ந்திருக்கும் உண்மையான பிரச்சினைகளை நீ உணரமால் போய்விடலாம். உண்மையில் ஏதேனும் மாற்றங்களை உண்டாக்க விரும்பினால் நீ உனது அகந்தையை விட்டகல வேண்டும், அப்போதுதான் முக்கியத்துவமற்ற கீழான பணிகளைச் செய்வதற்கு தேவையான பணிவை உணர்ந்துகொள்ள முடியும், அதை கவுரவத்துடனும் மரியாதையுடன் செய்யத் தொடங்கும்போது பெரிய காரியங்கள் எல்லாம் தானாக எளிதில் கைகூடும்.”

அந்த இளைஞரிடம் காந்தி எப்படிப் பேசிப் புரியவைத்தார் பாருங்கள். இன்று இளைஞர்களை எதற்கெடுத்தாலும் குற்றம்சாட்டிக்கொண்டிருக்கிறார்களே தவிர அவர்களுடன் பொறுமையாகப் பேச யாருக்கும் நேரமில்லை. அப்படிப் பொறுமையாகப் பேசிப் புரியவைத்தால் காந்தியின் கீழ் அந்தக் கால இளைஞர்கள் சாதித்ததுப்போல் இன்றைய இளைஞர்களாலும் சாதிக்க முடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.  

  - நன்றி: ‘தி இந்து’
 - ‘தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்தக் கட்டுரையின் சுருக்கமான வடிவத்தைப் படிக்க: http://goo.gl/NC84Nn


1 comment:

  1. இன்றைய தேவை காந்தி. அழகான உத்தியில் பதிந்துள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete