Tuesday, June 30, 2015

தேவதைப் பூ




ஆசை
( ‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர் இணைப்பிதழில் 12-03-2014 அன்று வெளியான கதை)


"அப்பா, பூக்கள்லாம் எப்படிப்பா இருக்கும்?" என்று கேட்டாள் குழலி.
"பூக்கள்லாம் அழகா இருக்கும்" என்றார் அப்பா.
"அப்படின்னா நம்ம வீட்டுப் பூனைக்குட்டியும் பூவாப்பா?" என்று விடாமல் கேட்டாள் குழலி.
"பூக்கள்லாம் வண்ணவண்ணமா இருக்கும்" என்றார் அப்பா.
"அப்படின்னா வானவில்தான் பூவாப்பா?" என்று கேட்டாள் குழலி.
பூக்கள் பூக்காத நாட்டில் உள்ள குழந்தைக்கு என்ன பதில் சொல்ல முடியும் அந்த அப்பாவால்?


ஆம், குழந்தைகளே அந்த நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் பூக்கள் பூப்பது திடீரென்று நின்றுபோனது. இதனால் அப்போது குழந்தைகளாக இருந்தவர்களெல்லாம் மிகவும் துயரமடைந்தார்கள். அவர்களுடைய கனவுகளில்கூட விதவிதமாகப் பூக்கள் பூத்தன. அதுவரை பார்த்திராத பூக்களையெல்லாம் கனவுகளில் அவர்கள் பார்த்தார்கள்.


அப்புறம் பிறந்த குழந்தைகளுக்கெல்லாம் பூக்கள் என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விட்டது. பூக்கள் பூத்த காலத்தில் குழந்தைகளாக இருந்தவர்கள் அப்போது சிறுவர்களாக வளர்ந்துவிட்டார்கள். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குப் பூக்களைப் பற்றி அந்தச் சிறுவர்கள்தான் விளக்கிச் சொன்னார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விளக்கினார்கள்.
பூக்களெல்லாம் செடிகளில் பூக்கும் பறவைகள் என்று ஒரு சிறுமி சொன்னாள். பூக்களெல்லாம் தேவதைகளின் கனவுகள் என்று ஒரு சிறுவன் சொன்னான். கடவுள் மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்த தினமும் பூக்கள் வடிவத்தில்தான் பூமிக்கு வருவார் என்று இன்னொரு சிறுமி சொன்னாள்.

"கடவுளே, எங்களுக்குப் பூக்களை மறுபடியும் கொடுங்கள்" என்று எல்லாக் குழந்தைகளும் ஒன்றுசேர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டார்கள். ஒருநாள் குழந்தைகள் நிறைய பேர் ஒன்றாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது, வானத்திலிருந்து ஒரு குரல் வந்தது. "குழந்தைகளே, பயப்படாதீங்க. மனுசங்களுக்குப் பூக்களோட மதிப்பும் இயற்கையோட மதிப்பும் தெரியாமப் போனதுனாலதான் எல்லாப் பூக்களயும் பூக்க விடாம நான் நிப்பாட்டினேன். குழந்தைகள் நீங்கள்லாம் பூக்கள இவ்வளவு நேசிக்கிறீங்க. அதனால நிச்சயம் மறுபடியும் பூக்கள்லாம் பூக்கும். ஒரு தேவதை இந்த ஊருல பொறந்து பூக்கள உங்களுக்கு மீட்டுத்தருவா?" என்று அந்தக் குரல் சொன்னது.


அதே நேரத்தில் அந்த ஊரில் உள்ள ஒரு ஏழை விவசாயிக்கு அதிசயக் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தையின் கண்கள் வைரம்போல் ஒளிர்ந்தன. குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் அந்த வீட்டைச் சுற்றி வானத்தில் பறவைகள் கூட்டம் வந்துசேர்ந்தது. எல்லா பறவைகளும் அந்த வீட்டை வட்டமடித்தபடியே இனிமையாகப் பாட ஆரம்பித்தன. காடுகளிலிருந்து கூட்டம்கூட்டமாக வந்த முயல்கள் எல்லாம் கைகோத்து ஆடின. குழந்தையோ சிரித்துக்கொண்டே இருந்தாள். இந்த விஷயம் நாடு முழுவதும் உடனடியாகப் பரவியது. பூக்களை மீட்கப்போகும் தேவதை இவள்தான் என்பது குழந்தைகளுக்குப் புரிந்தது. அந்த வீட்டை நோக்கிக் குழந்தைகள் படையெடுத்தார்கள். அங்கே வந்து அந்த அதிசயக் காட்சியைக் கண்டு மலைத்துநின்றார்கள்.


ஒரு கட்டிலின் மேல் அந்தக் குழந்தை நிலவைப் போல ஒளிவீசிக்கொண்டிருந்தது. மேலே பறவைகள் பாடியபடி வட்டமடித்தன; கீழே முயல்கள் நடனமாடின. மேலிருந்து பறவைகளின் இறகுகள் மழைபோல் பொழிந்துகொண்டிருந்தன. "பூக்கள்லாம் இப்படித்தான் இருக்கும்" என்று ஒரு சிறுவன் கத்தினான்.


நாட்கள் செல்லச் செல்ல தேவதை வளர்ந்துகொண்டே வந்தாள். தன் பெண்ணை எண்ணி விவசாயிக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தேவதை வந்த பிறகு குழந்தைகளெல்லாம் பூக்களை மறந்துபோனார்கள். இருந்தாலும் ஒரு சில சிறுவர்கள் பூக்களை பற்றிய நம்பிக்கையோடு இருந்தார்கள். தேவதை அவர்கள் எல்லோரையும் எல்லா விலங்குகளுக்கும் நண்பர்களாக்கினாள். பறவைகளின் விசித்திர இருப்பிடங்களுக்கெல்லாம் எல்லோரையும் தேவதை அழைத்துச்சென்றாள்.


தேவதைக்குத் திருமண வயது வந்தது. விவசாயிக்குக் கவலை வந்தது. அவளை ஒரு ராஜகுமாரனுக்குக் கட்டிவைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். குழந்தைகளுடன் தேவதையை அதற்குப் பிறகு அனுப்ப மறுத்துவிட்டார். இதனால் குழந்தைகளுக்கு தேவதைக்கும் மிகுந்த வருத்தம்.

தேவதைக்கென்று ஒரு சுயம்வரத்தை விவசாயி ஏற்பாடு செய்தார். தேவதையைப் பற்றிக் கேள்விப்பட்ட சூனியக்காரியொருத்தி அழகிய ராஜகுமாரனைப் போல் உருவெடுத்து அந்த சுயம்வரத்துக்கு வந்தாள். தன்னுடைய மந்திரசக்தியால் ஏராளமான பொன் நகைகளையும் வைரங்களையும் கொண்டுவந்து விவசாயியின் காலடியில் கொட்டினாள். சூனியக்காரியின் வலையில் விழுந்த விவசாயி திருமணத்துக்கு நாள் குறித்தார். தேவதையும் குழந்தைகளும் பறவைகளும் சோகத்தில் ஆழ்ந்தார்கள்.



ஒரு நாள் அந்திப் பொழுதில் தேவதை தன் வீட்டுத் தோட்டத்துக்குச் சென்று ஒரு செடியிடம் நின்றாள். பல ஆண்டுகளாகப் பூக்காமல் இருந்த மொட்டுகளில் ஒன்றுக்கு புன்னகையுடன் முத்தம் கொடுத்தாள். மறுநாள் நாடெங்கும் எல்லாச் செடிகொடிகளும் விதவிதமாகப் பூக்க ஆரம்பித்தன. அதுவரைக்கும் பூக்களைக் கனவில் மட்டுமே பார்த்துவந்திருந்த குழந்தைகள் இந்த அதிசயத்தைக் கொண்டாட ஆரம்பித்தனர். பெரியவர்களெல்லாம் இவைதான் பூக்கள் என்று குழந்தைகளுக்குச் சொன்னார்கள். தேவதைதான் தங்களுக்குப் பூக்களை மீட்டுத்தந்திருக்கிறாள் என்பதை உணர்ந்த குழந்தைகள் தேவதையின் வீட்டை நோக்கி ஓடிவர ஆரம்பித்தார்கள்.

அங்கே தேவதை இல்லை. எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தார்கள். தோட்டத்தில் சென்று தேடிப்பார்த்தார்கள் அங்கும் இல்லை. ஆனால், ஒரு செடியின் ஒரு பூவிலிருந்து மட்டும் ஒளி வீசிக்கொண்டிருந்ததைக் குழந்தைகள் கண்டு அதை நோக்கி ஓடிவந்தார்கள். தேவதைதான் அந்தப் பூவாக மாறியிருக்கிறார்கள் என்று அந்தப் பூவுக்குத் தேவதைப் பூ என்று பெயர்வைத்தார்கள். பூக்கள் மறுபடியும் கிடைத்தாலும் தேவதை போய்விட்டாளே என்று குழந்தைகள் அழுதார்கள். ஆனாலும், தங்களுடன் தேவதைப் பூ இருப்பதை நினைத்து ஆறுதல் அடைந்தார்கள்.




அதற்குப் பிறகு தினம்தினம் புதிதுபுதிதாகப் பூக்கள் பூத்தன; உதிர்ந்தன. ஆனால், தேவதைப் பூ மட்டும் அதற்குப் பிறகு உதிரவே இல்லை. அதிலிருந்து ஒளிவீசுவது நிற்கவும் இல்லை.
 - நன்றி: ‘தி இந்து’
 - ‘தி இந்து’ நாளிதழில் இந்தக் கதையைப் படிக்க: தேவதைப் பூ


No comments:

Post a Comment