Friday, January 31, 2025

கிழவன்

 


(எனது முதல் கவிதைத் தொகுப்பான ‘சித்து’ 2006-இல் க்ரியா வெளியீடாக வெளியானது. அதிலிருந்து ஒரு கவிதை.)
**
கிழவன்
**
எப்போதும் என்னைப் பின்தொடர்கிறான்
ஒரு கிழவன்
நான் செல்லும் பேருந்தில்
அவனும் வருகிறான்
நான் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு
அருகிலேயே நிற்கிறான்
என்னை வெறித்தவாறே
அவனை உட்காரவைப்பதுதான்
நியாயம் என்றாலும்
எனக்கு விருப்பமில்லை
இடம் கேட்டுவிடுவான் என்று
வெளியில் ஓடும் சுவரொட்டிகள்
எதையும் பார்க்காமல்
எல்லாவற்றையும் பார்க்கிறேன்
எனக்குத் தெரியும்
அவனொன்றும் அவ்வளவு
பொறுமைசாலி அல்லவென்று
நான் எழும் தருணமும்
அவன் உட்காரும் தருணமும்
எப்படி
காண முடியாதவாறு
ஒன்றாகப்போகிறது என்பதை
நினைத்துப்பார்க்கிறேன் எப்போதும்
மிரட்சியுடன்
-ஆசை

Monday, January 27, 2025

இந்தப் பிரபஞ்சத்தின் மையம் தேடி ஒரு வேள்வி



என்றாவது யோசித்ததுண்டா நீங்கள்
உங்கள் மூளை ஏன்
இன்னொருவர் தலையில் இல்லை என்று
உங்கள் தலைக்குள் இருப்பது
இன்னொருவர் மூளையோ என்று
உங்கள் மூளைக்குள் இருப்பது
இன்னொருவர் மனமோ என்று
உங்கள் உடலில் இருப்பது
இன்னொருவர் கைகளோ என்று
உங்கள் புலன்களில் இருப்பது
இன்னொருவர் உணர்வுகளோ என்று
நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று
யாராவது கேட்டால்
என் மூளையை பார்க்கச்
சென்றுகொண்டிருக்கிறேன்
என்று சொன்னதுண்டா
எங்கோ என் மனதை வைத்துவிட்டேன் என்று
நீங்கள் தேடியது உண்டா
உண்மையில் எதுவும்
அதனதன் இடத்தில் இல்லை
அதனால்தான்
தலைக்கு மேல் மயிரிலிருந்து
தலைக்கு உள்ளே மூளையிலிருந்து
அதற்கு உள்ளே மனதிலிருந்து
இன்னும் புலன்கள் உணர்வுகள்
குறி குறிமயிர்
கால்கள்
அனைத்துமே
இந்த நீட்டம் நீட்டுகின்றன
இந்த அலைச்சல் அலைகின்றன
அங்கொன்றும் இங்கொன்றுமாகத்
தட்டுப்படுவதையெல்லாம்
எடுத்து வைத்துக்கொண்டு
தடவித் தடவி
ஆறுதல் கொள்கின்றன
உங்கள் பிரச்சினை
என்னவென்றால்
இதையும் நம்பிவிடுவீர்கள்
அவ்வளவு
சர்வநிச்சயம்
தேவைப்படுகிறது
நான்
அப்படியெல்லாம்
இருக்க மாட்டேன்
அதோ அங்கே போகிறாரே
அவரிடம் உள்ள என் கையைப்
பிடித்து
இதோ இங்கே இருக்கிறானே
இவன் கன்னத்தில்
மாறி மாறி அறையப் போகிறேன்
இந்த உலகம்
எவ்வளவு சிக்கலானது
என்பதைப் பிறர்க்கோ
எனக்கோ நிரூபிக்க
இங்கிருந்தே
தொடங்க வேண்டும்
ஆனால்
அதற்கு முன்னரே
'இங்கு'வையும் 'இதோ'வையும்
சந்தேகிக்க ஆரம்பித்துவிட்டேனே
இங்கிருந்தோ
எங்கிருந்தோ
இவ்வளவு
குழப்பத்துடன்
ஒரு பிரபஞ்சமும் கவிதையும் தேவையா 
-ஆசை