Tuesday, February 14, 2017

உன் பெயரை



ஒளியால் நிறைக்கிறேன்
உன் பெயரை

தானியங்களிலிருந்து பொறுக்கியெடுக்கிறேன்
உன் பெயரை

தவறி மிதித்துவிடுகிறேன்
உன் பெயரை

கோழிகளுக்கு இறைக்கிறேன்
உன் பெயரை

பனியில் நடுங்கவிடுகிறேன்
உன் பெயரை

குழந்தையின் கைகளில் கொடுக்கிறேன்
உன் பெயரை

ஒழுகுமிடத்தில் எடுத்து வைக்கிறேன்
உன் பெயரை

சிணுங்கவைக்கிறேன்
உன் பெயரை

பறவையின் கூட்டிலிருந்து திருடுகிறேன்
உன் பெயரை

ரயிலில் ஏற்றிவிடுகிறேன்
உன் பெயரை

மழைநீரில் மிதக்க விடுகிறேன்
உன் பெயரை

மரத்திலிருந்து உலுக்குகிறேன்
உன் பெயரை

திருவிழாவிற்குக் கூட்டிச்செல்கிறேன்
உன் பெயரை

அம்மாவிடம் கொடுத்து வைக்கிறேன்
உன் பெயரை

விட்டுவிட்டு ஓடுகிறேன்
உன் பெயரை

உமி நீக்குகிறேன்
உன் பெயரை

அடையில் முட்டைகளுடன் வைக்கிறேன்
உன் பெயரை

தலை துவட்டிவிடுகிறேன்
உன் பெயரை

இல்லாமல் ஆக்குகிறேன்
உன் பெயரை
 - 04.04.2003

No comments:

Post a Comment