Sunday, February 12, 2017

இனியொரு சதி செய்வோம்



நம்பிக்கைகளின் காலம் முடிந்துபோயிற்று
இது சதிகளின் பொற்காலம்

அமெரிக்கச் சதி
இந்தியச் சதி
பாகிஸ்தான் சதி
யூதச் சதி
இந்துத்துவச் சதி
கிறிஸ்துவச் சதி
இஸ்லாமியச் சதி
ஏகாதிபத்திய சதி
பெருநிறுவனச் சதி
பெட்ரோலியச் சதி
ஊடகச் சதி
பன்னாட்டுச் சதி
பேரினவாதச் சதி
சிறுபான்மையினச் சதி
ஜனநாயகச் சதி

அப்புறம் பழைய பார்ப்பனிய-பனியா சதி
காந்தி சதி
நேரு சதி
அம்பேத்கர் சதி
ஜின்னா சதி
இடது சதி வலது சதி நடு சதி
நடுஇடது சதி நடுவலது சதி நடு நடு சதி
ஆங்கிலேய சதி
ஆரியச் சதி
திராவிடச் சதி
ஆளுங்கட்சி சதி
எதிர்க்கட்சி சதி
உட்கட்சி சதி
சாதிச் சதி
வகையறா சதி
மொழிச் சதி
காதல் சதி
காமச் சதி

சுவர்களில்
இணைய ஊடகச் சுவர்களில்
கைபேசிகளில்
எங்கிருந்தும் வந்து கொட்டுகின்றன சதிகள்

சதிகளின் சந்தாதாரர் ஆகாதவர்
யாருமில்லை எனும்போது
உன் உழைப்பின்றி உன் வசம்
இவ்வளவு சதிகள் கொட்டுகின்றன எனும்போது
காலந்தோறும் உண்மையேற்கும் வடிவங்களுள் ஒன்றாய்
தற்போதைய சதி எனும்போது
எல்லா அநீதிகளுக்கும் முழு முற்றான
தோற்றுவாய்களையும்
இலக்குகளையும் காட்டி
ஆசுவாசம் தருவது சதி ஒன்றே எனும்போது
ஒரே அடியில் எதிராளியை ஒழித்துக்கட்ட
இதைவிட வேறு ஆயுதம் இல்லை எனும்போது
சதியளவு ஜனநாயகப்பட்டிருப்பது
வேறேதும் இல்லை எனும்போது
சதியொன்றைக் கைக்கொள்ள
உனக்கேன் தயக்கம் நண்பா?

ஆளுக்கொரு சதிசெய்து
ஆனந்த வாழ்வுகொள்வோம்
சதியை எடு
கொண்டாடு
நண்பா

No comments:

Post a Comment