Saturday, October 3, 2015

காந்தி தாத்தாவ நான் காப்பாத்துவேன்!



ஆசை

(எதிலும் பிரசுரமாகாத புத்தம் புதிய காப்பி)

காலையில் ஆறு மணிக்கு மூன்றரை வயது குழந்தையை எழுப்புவது வன்முறைதான். சத்தியம் திரையரங்கில் காலை 9 மணிக்கு காந்தி தாத்தா படத்துக்குப் போகணும் என்று சொல்லி அவனை எழுப்பிக் குளிப்பாட்டுகிறேன். குளிப்பாட்டும்போது அவன் கேட்கிறான், ‘அது பேய்ப் படமாப்பா?’ பேய்ப்படங்களின் ஜுரம் அவனையும் விட்டுவைக்கவில்லை. ‘ஆமாம்பா பேய்க்கும் காந்தி தாத்தாக்கும் சண்டை நடக்கும். கடைசியில் ஒரு பேய் காந்தி தாத்தாவ சுட்டுக் கொன்னுடும்’. ‘காந்தி தாத்தாவ நான் காப்பாத்துவேன்பா’ என்று சொல்லிவிட்டு என்னை அடிக்கிறான், என்னை என்னவோ அந்தப் ‘பேயாக’ நினைத்துக்கொண்டு.

ஏழரை மணிக்குக் கிளம்பியாயிற்று. வீட்டை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் வழியில் ஒருவர் தென்படுகிறார். ஆஹா, காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தியல்லவா! வண்டியை நிறுத்திவிட்டுக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவரிடம் ஓடுகிறேன். பின்னாலேயே துணைவியும். ‘ஐயா வணக்கம், நீங்கள் கோபால கிருஷ்ண காந்திதானே!’ என்று கேட்டேன். ‘ஆமாம்’ என்றார். காந்தி பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு எங்களை அறிமுகப்படுத்திகொள்கிறோம். மகனுக்கு ஆசிர்வாதம் செய்கிறார். துணைவியிடமும் ஒரு புன்சிரிப்பு. ‘காந்தி படத்துக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறோம்’ என்று சொன்னதும் புன்சிரிப்பு. ஆனால், அவசரமாக விடுபட்டுச் செல்ல முயல்கிறார் என்பதுபோல் தோன்றியது. சரி, அவர் வாக்கிங் செல்ல வேண்டிய நேரத்தில் நாம் ஆக்கிரமித்துக்கொண்டது தவறு என்ற நினைப்புடன் அவரிடம் விடைபெற்றுவிட்டுப் பயணம் தொடர்கிறது. சத்தியத்துக்கு வரும்போது எட்டரை மணி. ‘சத்தியம்’ திரையரங்கில் ‘காந்தி’ படம்! ஒரே கூட்டம். நிஜமாகவே கண்ணீர் எட்டிப்பார்த்துவிட்டது. ‘காந்தி’ படத்துக்கு இவ்வளவு கூட்டமா! ஓரிரு நிமிடங்களிலேயே விஷயம் புரிந்துவிட்டது. அது  ‘புலி’யிடம் அடிவாங்க வந்த கூட்டம்! நம் சமூகத்தைப் பற்றி இனிமேல் தப்பாக நினைக்கக் கூடாது என்று அவர்களுக்காகப் பரிதாபப்பட்டுக்கொண்டே திரையரங்கு செல்கிறோம்.

ஏழெட்டு பேர்தான் இருந்தார்கள். போகப்போகக் கூட்டம் சேரத் தொடங்கியது. அப்படியும் கால்வாசி இருக்கைகள் காலியாகத்தான் இருந்தன. படம் தொடங்கும் முன் ‘மீண்டும் காந்தி’ என்ற தலைப்பில் காந்தி பற்றிய பத்து நிமிடக் குறும்படம் ஒன்றைக் காட்டினார்கள். காந்தியவாதிகள், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், திலகவதி உள்ளிட்ட எழுத்தாளர்கள் காந்தியைப் பற்றிப் பேசினார்கள். அப்புறம் படம் தொடங்கியது. அதுவரை சின்னத்திரையில் மட்டும் அடிக்கடிப் பார்த்திருந்த அந்த அற்புதத்தை முதன்முறையாகப் பெரிய திரையில் பார்க்கும் பரவசம் ஆரம்பத்தில் தொடங்கி இறுதிவரை அப்படியே இருந்தது. ரிச்சர்டு அட்டன்பரோ உயிரோடு, நம் அருகில் இருந்திருந்தால் அப்படியே இறுக்கி அணைத்துக்கொண்டு கண்ணீர் மல்கியிருக்கலாம்.

படம் முடிவதற்கு முன்னாலேயே மகன் தூங்கிவிட்டான். தோளில் சுமந்தபடி, இறுதியில் பெயர் ஓடி முடிந்து திரையை அணைக்கும்வரை நின்று பார்த்துவிட்டு வெளியில் வந்தோம்.
வீட்டுக்கு வந்து மகனிடம் முறையிட்டேன். ‘காந்தி தாத்தாவ காப்பாத்துறேன்னு சொல்லிட்டுக் கடைசியிலே தூங்கிட்டியே. பாவம், அவர சுட்டுட்டாங்க தெரியுமா?’ என்றேன். ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்ற உணர்வுடன் முகத்தை வைத்திருந்துவிட்டு இப்படிச் சொன்னான், “அடுத்த தடவ காப்பாத்துறேன்.’

எச்சரிக்கை கோட்சே, அடுத்த முறை நீ வைக்கப்போகும் குறி அதன் இலக்கைப் போய் நிச்சயம் சேராது!

    

3 comments:

  1. சரியான இலக்கை நோக்கிய பதிவு.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. காந்தியை பற்றி அவதூறு பரப்பும் பலரும் பள்ளி பருவ மாணவர்களே குறிவைத்து அவர்கள் மனதில் காந்தியை ஒரு தவறான மனிதராகவே அறிமுகம் செய்கிறார்கள்(எனக்கு முதலில் அறிமுகம் செய்யப்பட்ட காந்தி அப்படியே ). காந்தியை நாம் அதற்கு முன்பே குழந்தைகளுக்கு உண்மையான காந்தியை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

    அஹிம்சையை சரியாக குழந்தைகளுக்கு புரியும் படி சொல்லி கொடுக்க வேண்டும் அவதூறு பரப்புவர்களுக்கு அஹிம்சை என்பது அடங்கி போதல் என்றே தெரியும்

    அஹிம்சைக்கும் அடங்கி போதலுக்கும்மான வேறுபாட்டை தெளிவாக இந்த தலைமுறைக்கு விளக்க வேண்டும் அப்படி செய்தால்

    "எச்சரிக்கை கோட்சே அடுத்த முறை நீ வைக்கப்போகும் குறி அதன் இலக்கைப் போய் நிச்சயம் சேராது"

    நிச்சயம் சாத்தியமே

    ReplyDelete