Saturday, May 18, 2013

ஜோஸெ சரமாகு (1922 - 2010): கடவுளின் ஸ்தானத்திலிருந்து...


ஆசை 
தொலைபேசியின் ஒலிதான் இன்று என்னை எழுப்பியது; அழைத்தது என்னுடைய நண்பர்; ஜோஸெ சரமாகுவின் மரணச் செய்தியைச் சொல்வதற்காக. எனக்கும் சரி, தொலைபேசியில் அழைத்த நண்பருக்கும் சரி, ஜோஸெ சரமாகு (இலக்கியத்துக்காக 1998இல் நோபல் பரிசைப் பெற்றவர் என்று சொன்னால்தான் மேற்கொண்டு இந்தக் கட்டுரையைப் பலர் படிப்பார்கள்) மிகவும் பிடித்தமான நாவலாசிரியர். அடிக்கடி அவருடைய நடையை நாங்கள் இருவரும் சிலாகிப்பதுண்டு. இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவருடைய 'Blindness' நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். இப்போது அந்த நாவலைத் தொடர்வதில் ஒரு சிக்கல் வந்துவிட்டதைப் போல உணர்கிறேன்.
      என்ன சிக்கல்? சரமாகு தன்னுடைய நாவல்களில் காட்சியையோ கதாபாத்திரங்களையோ அதனதன் போக்கில் போக விட்டு ஒளிப்பதிவாளர் போன்று பதிவுசெய்யும் கதைசொல்லி அல்ல. கதையின் கடிவாளம் அவருடைய கையில் இருக்கும். தோற்பாவைக் கூத்துக் கலைஞன்போல கதாபாத்திரங்களை ஆட விட்டு அவர்தான் கதையைச் சொல்லுவார். உதாரணத்துக்குத் தமிழில் அசோகமித்திரனை எடுத்துக்கொண்டால் அவர் கதையின் போக்கில்  ஆசிரியனுடைய குரலை வெளியிடவே மாட்டார். காட்சிகள், கதாபாத்திரங்கள் மட்டும்தான் பேசும். ஆனால், புதுமைப்பித்தன் அப்படியல்ல; பெரும்பாலும் தான்தான் கதையை வழிநடத்திச்செல்வார். அதுபோலத்தான் சரமாகுவும்.    ஆனால், புதுமைப்பித்தன் கதைகளில் புதுமைப்பித்தன் கதாசிரியனின் ஸ்தானத்தைதான் எடுத்துக்கொண்டவர் என்றால்,  சரமாகுவோ கடவுளின் ஸ்தானத்தை எடுத்துக்கொண்டவர். அவர் கண்களிலிருந்து எதுவும் தப்பிக்காது; யாரும் தப்பிக்கவும்  முடியாது. ஒரு நாய் என்ன நினைக்கிறது என்பதையும் அந்த நாயின் புது முதலாளி என்ன நினைக்கிறார் என்பதையும் ஒரே சமயத்தில் பார்க்கும் கடவுளின் ஸ்தானம் அவருடையது. 'குகை' (The Cave) நாவலில், அந்த நாவலின் நாயகனான ஒரு கிழட்டுக் குயவனின் மகளும் அவளின் கணவரும் உடலுறவுகொண்ட குறிப்பிட்ட அந்தத் தருணத்தைச் சொல்லி அவளுடைய வயிற்றில் கரு அந்த நொடிதான் உருவானது என்று துல்லியமாகச் சொல்வார். நான் படித்த அவருடைய பிற நாவல்களிலும் (The Gospel According to Jesus Christ, All the Names, Balthasar and Blimunda) அப்படித்தான். 
   இதனால், நான் அவருடைய நாவல்களைப் படிக்கும்போது சரமாகு என்னருகில் அமர்ந்துகொண்டு தன்னுடைய குரலில் (அது எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியாவிட்டாலும்கூட) கதையை எனக்குச் சொல்வதாகக் கற்பனை செய்துகொள்வேன். இனி அது சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை. அப்படியே கற்பனை செய்துகொண்டாலும் மனதின் ஓரத்தில் சரமாகு இறந்துவிட்டார் என்ற நினைப்பு தொடர்ந்து இருந்துவந்தால் என்ன செய்வது? எனக்கு யார் கதை சொல்வது? 
    'The Gospel According to Jesus Christ' என்ற தனது நாவலை ஜரோப்பிய இலக்கிய விருதுக்குப் போட்டியிட அனுமதி மறுத்த போர்ச்சுகீசிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் நாட்டைவிட்டு வெளியேறி கனரி தீவில் வசித்துவந்த சரமாகுதான் இறந்துபோய்விட்டார். கதைசொல்லி சரமாகுவோ அப்படியில்லை. அவர் கடவுளின் ஸ்தானத்தை எடுத்துக்கொண்டபோதே தனது கதைகளுக்குள் நுழைந்து தாளிட்டுக்கொண்டு மரணத்திலிருந்து விலக்கு பெற்றுவிட்டார். அதனால் எனக்குப் பிரச்சினை இருக்காது என்றே நினைக்கிறேன்.
    அழிந்துகொண்டிருக்கும் ஒரு இலக்கிய வடிவத்தின் கடைசிப் போராளிகளில் ஒருவர் என்று பிரபல விமர்சகரான ஹெரால்ட் ப்ளூம் இவரைப் பற்றி ஒருமுறை சொன்னார். அப்படி என்ன அதிசயம் இவருடைய எழுத்தில் என்றால், அதிசயம்தான் இவரது எழுத்து என்று சொல்லலாம். வரலாற்றைப் பின்புலமாக வைத்துக்கொண்டு மாய யதார்த்தவாதக் கதை சொல்வது (Balthasar and Blimunda); இயேசுவே தனது சுவிசேஷத்தைச் சொல்வதுபோல எழுதுவது (The Gospel According to Jesus Christ); பிறப்பு, இறப்பைப் பதிவு செய்யும் பதிவகத்தில் உள்ள ஒரு ஊழியன் இறந்துபோன ஒரு பெண்ணைப் பற்றிய தகவல்களை எந்தவிதக் காரணமுமின்றிச் சேமிக்க ஆரம்பித்து பிறகு வெறித்தனமாக அந்தச் செயலில் ஈடுபட அதை அவனுக்கே தெரியாமல் பதிவாளர் (இது கடவுளாகவும் இருக்கலாம் அல்லது சரமாகுவாகவும் இருக்கலாம்) கண்காணித்துவருவது (All the Names); திடீரென்று மரணம் விடுமுறை எடுத்துக்கொள்வது (Death at Intervals) ; திடீரென்று ஒரு நாட்டிலுள்ளோருக்குக் கண் தெரியாமல் போய்விடுவது (Blindness) என்று அவரது கதைகள் எல்லாமே யதார்த்த தளத்திலிருந்து விலகி ஒரு அதீத நிலையிலிருந்து எழுதப்பட்டவை. இதில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அவரின் நடை; தனித்துவமான, அற்புதமான ஒரு நடை. முற்றுப்புள்ளியே இல்லாமல் நீண்டுகொண்டே செல்லும் வாக்கியங்களை நம்முடைய கோணங்கி மாதிரியோ பா. வெங்கடேசன் மாதிரியோ இம்சைப்படுத்தாமல் - பாசாங்கு செய்யாமல் (இப்போது நதிமூலம் தெரிகிறதா?) வெகு இயல்பாகவும் படிப்பதற்கு ஆசையூட்டும் விதத்திலும் எழுதிக்கொண்டு செல்பவர் சரமாகு. இரண்டு பேர் பேசிக்கொண்டால் யார் பேசுகிறார்கள் என்பதையே நாம் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். இருவருடைய பேச்சையும் தனித்தனியாகப் பிரிக்காமல் சேர்த்தே கொடுப்பார். ஒரு காற்புள்ளியை வைத்துதான் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
   எனவே, உண்மையில் கொஞ்சம் நமது உழைப்பைக் கோரும் எழுத்து என்பதுடன் அப்படிப்பட்ட உழைப்பைச் செலுத்திப் படித்தால் அற்புதமான அனுபவத்தைத் தரும் எழுத்து சரமாகுவுடையது. (அப்படிப்பட்ட அற்புத அனுபவம் கிட்டும் என்ற நம்பிக்கையில் கோணங்கியின் 'பாழி' நாவலை நான் நூறு முறைகளுக்கு மேல் எடுத்து இரண்டு வரிகள் படித்துவிட்டு முடியாமல் வைத்துவிடுவதாகவே இருக்கிறேன்; வாழ்க்கையில் நம்பிக்கையை மட்டும் நாம் இழந்துவிடக் கூடாது என்பதைச் சொல்வதற்காகத்தான் இதை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்). 
      இவருடைய 'All the Names' புத்தகத்தின் அட்டையில் பெரிய முத்திரை அளவில் 'Winner Of The Nobel Prize For Literature' என்கிற வாசகங்களைப் படித்துப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு எரிச்சலாக வரும். பதிப்பக முதலாளிகள் 'நோபல் பரி'சால் சரமாகுவுக்குத் தகுதியை ஏற்படுத்திக் காசுபார்க்கிறார்கள். உண்மையில் சரமாகு போன்ற எழுத்தாளர்களால்தானே 'நோபல் பரிசு' தகுதி பெற்றிருக்கிறது. நம்மூர் 'சாகித்ய அகாதெமி' வைரமுத்து, மேத்தா, சிற்பி, புவியரசு, தமிழன்பன் போன்றோருக்கு விருது கொடுப்பதுபோல் 'நோபல் பரிசு'க் குழுவும் கொடுத்திருந்தால் அந்தப் பரிசுக்கு இந்தப் பெருமை வந்திருக்குமா? இது சரமாகு போன்ற பெருங்கலைஞர்களுக்குச் செய்யும் அவமானம்.
       இன்னும் பலமுறை படித்துப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தோடுதான் ஒவ்வொரு முறையும் நான் சரமாகுவின் நாவலை ஆரம்பிக்கிறேன் அல்லது முடிக்கிறேன். அவருடைய எல்லா எழுத்துகளையும் படித்துப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. நாவல் எழுத வேண்டும் என்ற எனது விருப்பத்துக்கு சரமாகுவைப் போன்ற எழுத்தாளர்கள்தான் எப்போதும் தடையாக இருக்கிறார்கள். ஒவ்வொரு விஷயத்துக்கும் சரமாகு மேற்கொண்ட உழைப்பு என்னைப் பிரமிக்க வைக்கும். ஒரு லாரியை எடுத்துக்கொண்டால் அதைப் பற்றிச் சொல்ல எவ்வளவோ இருக்கிறது அவருக்கு; பானைகள் செய்யும் தொழிலைப் பற்றியும் அப்படியே (The Cave). பல சமயங்களில் அவர் கொடுக்கும் பட்டியல் நான்கைந்து பக்கங்களுக்கு நீளும். கல்லறைகளைப் பற்றி 'All the Names' நாவலில் வரும் பட்டியல்; இயேசுவுக்குப் பிறகு அவருடைய சீடர்களும் அவரைப் பின்பற்றுவோரும் எப்படிக் கொல்லப்படப்போகிறார்கள் என்று இயேசுவுக்குக் கடவுள் தரும் பட்டியல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட உழைப்பும் கற்பனைத் திறனும் ஒன்றுசேர்ந்தால்தான் ஒருவர் பெரிய நாவலாசிரியராக ஆக முடியும். நமது உழைப்பு பூஜ்ஜியம்; கற்பனைத் திறனோ பல நூற்றாண்டுகள் பின்தங்கிப்போன ஒன்று. இந்தச் சூழலில் எங்கிருந்து மகத்தான நாவல்களைப் படைப்பது என்று மலைப்பாக இருக்கிறது எனக்கு! 
(தமிழ் இன்று இணைய இதழுக்காக 2010ஆம் ஆண்டு எழுதிய அஞ்சலிக் கட்டுரை)

2 comments:

 1. சரமாகோவை முதலாவதாகப் படிப்பவர்களுக்கு எந்த நாவலை முதலில் படிக்கச் சிபாரிசு செய்வீர்கள்?

  ஒரு சந்தேகம். Jose என்ற பெயரை ஹோசே என்று உச்சரிக்கக் கூடாதா? அமெரிக்க நகர் ஸான் ஹோசேயை அப்படித்தானே உச்சரிக்கிறோம்?

  சரவணன்

  ReplyDelete
  Replies

  1. சரமாகுவின் நாவல்கள் அவ்வளவு எளிதானவை அல்ல, அதாவது அவருடைய நடை ஆரம்பத்தில் சற்று சிரமப்படுத்தும். உள்ளே நுழைந்தால் நம்மைக் கட்டிப்போடும் நடை. Blindness என்ற நாவல் ஓரளவு எளிமையானது. அவருடைய நாவல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது Gospel According to Jesus Christ.

   ஸ்பானிஷ் மொழியைப் பொருத்தவரை Jose என்பதை ஹொசெ என்று உச்சரிக்கலாம். José Saramago என்பது போர்த்துகீசிய பெயர். இந்தப் பெயரை அப்படியே உச்சரிப்பதற்கான ஒலிகள் தமிழில் இல்லை. ஜுஸ செரெமாகு என்று தோராயமாக சொல்லலாம். ஓரளவுக்கு இலகுவாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜோஸெ சரமாகு என்று கொடுத்திருந்தேன். இதுபோல் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. Don Quixote என்னும் பெயரை டான் குயிக்சாட் என்றே சொல்லிவருகிறோம், ஆனால் உண்மையில் டொன் கிஹொடெ என்றுதான் உச்சரிக்க வேண்டும்.

   நட்புக்கு நன்றி!

   Delete